நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

6 விதமான பலா, 15 வாழை ரகங்கள், ஈத்தாமொழி தென்னை... செங்கல்பட்டில் கவனம் ஈர்க்கும் வேளாண் பண்ணை!

பண்ணையில் கிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் கிருஷ்ணன்

மகசூல்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கரும்பூர் கிராமம். இங்கு செழிப்பாகக் காட்சியளித்துக் கவனம் ஈர்க்கிறது, ஓய்வுபெற்ற வேளாண் துறை அலுவலரான கிருஷ்ணனுக்குச் சொந்தமான இயற்கை வேளாண் பண்ணை. 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பண்ணையில் ஈத்தாமொழி நெட்டை நாட்டு ரகத் தென்னை, 15 வாழை, மா, பலா, கொய்யா, சவுக்கு, பாக்கு, மிளகு, காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் விளைவிக்கப்படுகின்றன.

ஒரு காலைப் பொழுதில் இப்பண்ணைக்குச் சென்றோம். மாமரங்களைக் கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று, உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘இப்ப நான் வசிச்சுக்கிட்டு இருக்குறது மறைமலைநகர். என்னோட பூர்வீகம், கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பக்கத்துல உள்ள கிடங்கன் கரைவிளை கிராமம். விவசாயம்தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். நான் வேளாண் பட்டய படிப்பு முடிச்சுட்டு, தமிழ்நாடு வேளாண்மைத்துறையில வேலைக்குச் சேர்ந்தேன். பணி நிமித்தமா, செங்கல்பட்டு மாவட்டத்துல குடியேறி, பல வருஷங்களா இங்கதான் குடும்பத்தோடு வசிச்சுக்கிட்டு இருக்கேன்.

வாழையுடன்
வாழையுடன்

30 வருஷங்களுக்கு முன்ன வாங்கின நிலம். இது. 2016-ம் வருஷம் வரைக்கும் என்னோட மாமியார்தான் இந்தப் பண்ணையை நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு நேரம் கிடைக்கும்போது வந்துட்டுப் போவேன். ஆரம்பத்துல ரசாயன விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருந்தோம். அதுக்கு அதிகமா செலவானதுனாலயும், லாபகரமான மகசூல் கிடைக்காததுனாலயும், இயற்கை விவசாயத்துக்கு மாறினோம். கடந்த 15 வருஷங்களா, இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கோம். 2016-ம் வருஷம் வேளாண்மைத்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, முழுநேரமா இந்தப் பண்ணையைக் கவனிச்சுக்க ஆரம்பிச்சேன்’’ என்று சொன்னவர், இப்பண்ணையில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் குறித்து விவரித்தார்.

பண்ணையில் கிருஷ்ணன்
பண்ணையில் கிருஷ்ணன்

‘‘மொத்தம் 5 ஏக்கர் இருக்கு. தலா ஒரு ஏக்கர்ல தென்னை, மா, சவுக்கு, 70 சென்ட்ல வாழை, 30 சென்ட்ல பாக்கு, மீதி ஒரு ஏக்கர்ல பலா, கொய்யா, காய்கறிகள், கிழங்கு வகைகள் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கோம். இப்போதைக்குத் தென்னை, வாழையிலிருந்து தான் கணிசமான அளவுக்கு லாபம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. காய்கறிகள், கிழங்குகள் எங்களோட வீட்டுத் தேவைக்குப் பயன்படுது.

மா சாகுபடி
மா சாகுபடி

15 விதமான வாழை ரகங்கள்

70 சென்ட் பரப்புல வாழை பயிரிட்டிருக்கிறோம். செவ்வாழை, ஏலக்கி, கற்பூரவள்ளி, நேந்திரன், மட்டி, மலை வாழை, பூவன், மொந்தன், காவேரி, ரஸ்தாலி, பேயன், பச்சை வாழை, பூங்கதலி, பூவில்லா சிங்கன் உள்ளிட்ட 15 விதமன வாழை ரகங்கள் இங்க இருக்கு.

வாழைத்தார்களை, எங்களுக்குச் சொந்தமான நர்சரியில வச்சு, வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம். இயற்கை முறையில விளைவிச்சதுனாலயும், பல விதமான ரகங்கள் இருக்குறதுனாலயும், வாடிக்கையாளர்கள் ரொம்பவே விரும்பி வாங்கிக்கிட்டுப் போறாங்க. தார்கள் மட்டுமில்லாம... வாழையோட பக்க கன்றுகளையும் விற்பனை செய்றோம்.

பலா
பலா

70 சென்ட் பரப்புல 475 வாழை மரங்கள் இருக்கு. அதுல இழப்பு போக 450 தார்கள் கிடைக்கும். ஒரு தார் 200 ரூபாய்னு விற்பனை செய்கிறோம். இதன் மூலம் 90,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. ஒவ்வொரு வாழையில இருந்து சராசரியா நாலு பக்க கன்றுகள் கிடைக்கும். 450 வாழையில இருந்து 1,800 பக்கக் கன்றுகள் கிடைக்கும். ஒரு கன்று 30 ரூபாய்னு விற்பனை செய்றது மூலம் 54,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக, வாழை சாகுபடி மூலம் 1,44,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச் செலவுகளும் போக 84,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

வெங்காயம்
வெங்காயம்

நாட்டு ரகத் தென்ணை

ஒரு ஏக்கர்ல 80 தென்னை மரங்கள் இருக்கு. இதெல்லாம் 25-30 வருஷத்து மரங்கள். அதிக பராமரிப்பு இல்லாமலே, செழிப்பான விளைச்சல் கொடுக்கக்கூடிய, ஈத்தாமொழி நாட்டு ரகத் தென்னை இது. கன்னியாகுமரி மாவட்டத்துல உள்ள விவசாயிகள், இந்தத் தென்னையைத்தான் அதிகமா சாகுபடி செய்வாங்க. பூச்சி, நோய்த்தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் அதிகம். காய்கள் பெரிய அளவுல இருக்கும். சுவையாவும் இருக்கும். இத்தனை மகத்துவம் வாய்ந்த ஈத்தாமொழி தென்னைக்குச் சமீபத்துல புவிசார் குறியீடு வழங்கப்பட்டுருக்கு.

ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்குக் குறைந்தபட்சம் 145 காய்கள் வீதம், 80 மரங்கள்ல இருந்து 11,600 காய்கள் மகசூல் கிடைக்குது. ஒரு காய் 15 ரூபாய்னு நேரடியா விற்பனை செய்றது மூலம் மொத்தம் 1,74,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. பராமரிப்பு, பறிப்புக்கூலி உள்பட எல்லாச் செலவுகளும் போக, 1,32,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

பாக்கு மரங்கள்
பாக்கு மரங்கள்

மொத்த லாபம்

தென்னை, வாழை மூலம் வருஷத்துக்கு மொத்தம் 2,16,000 ரூபாய் லாபம் கிடைக்குது. எங்களோட வீட்டு தேவைக்காகவும் இங்க வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களோட தேவைக்காகவும் வெங்காயம், தக்காளி, கத்திரி, வெண்டைக்காய், மிளகாய், பூசணி உள்ளிட்ட காய்கறிகளையும்... மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு உள்ளிட்ட ஒரு சில கிழங்கு வகைகளையும் இங்க குறைவான அளவுக்குப் பயிர் செஞ்சுக்குறோம். மா, பலா, கொய்யா உள்ளிட்ட பயிர்கள்ல இருந்து இன்னும் சில வருஷங்கள் கழிச்சு வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும்’’ எனச் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, கிருஷ்ணன்,

செல்போன்: 89391 88682.

பலவிதமான மா ரகங்கள்!

‘‘25 வருஷங்களுக்கு முன்ன, ஒரு ஏக்கர் பரப்புல... தலா 30 அடி இடைவெளி விட்டு, 40 மாங்கன்றுகள் நடவு செஞ்சோம். காலப்போக்குல இந்த மா மரங்கள் நல்லா செழிப்பா வளர்ந்து அதிக கிளைகள் பரப்பிப் பெரிய மரங்களா உருவாகி வந்துச்சு. ஆனா, நாங்க எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்கல. மாம்பழங்கள் சுவையாவும் இல்லை. வியாபாரிகள் வாங்க மறுத்துட்டாங்க. இந்த மாமரங்கள்ல வருமானமே கிடைக்கல. மாம்பழங்களைப் பெரும்பாலும் எங்களோட வீட்டுத்தேவைக்கு வச்சுக்குவோம். அதனால இந்த மரங்களோட தண்டுப்பகுதியை 5 அடி உயரத்துக்கு மட்டும் வச்சுகிட்டு, கிளைகள் எல்லாத்தையும் வெட்டி கவாத்து செஞ்சுட்டோம். ஒட்டு கட்டும் முறையில இந்த மா மரங்கள்ல சுவையான பழங்களை விளைவிக்க முடியுமானு முயற்சி செஞ்சுப் பார்க்கலாம்னு இருக்கேன்.

கிழங்கு
கிழங்கு

இது ஒருபக்கம் இருக்க... இரண்டு மாமரங்களுக்கு இடையில, புதுசா மாங்கன்றுகள் நடவு செஞ்சுருக்கோம். இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, பெங்களூரா, காலாப்பாடு, மல்லிகா, நாசிக், மியாசாகி உள்ளிட்ட மா ரகங்கள பயிர் பண்ணியிருக்கோம். இந்தக் கன்றுகள் நடவு செஞ்சு, மூணு வருஷம் ஆன நிலையில, இப்ப பூக்க ஆரம்பிச்சுடுச்சு. கூடிய சீக்கிரத்துல சுவையான மாம்பழங்கள் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்குறேன்’’ என்கிறார் கிருஷ்ணன்.

பலாவின் பல ரகங்கள்...

30 சென்ட் பரப்புல அடர் நடவு முறையில பலா சாகுபடி செஞ்சுருக்கோம். தலா 15 அடி இடைவெளியில 48 கன்றுகள் நடவு செஞ்சுருக்கோம். தேன் பலா, அயனி பலா, வியட்நாம் பலா, சிவப்பு பலா, ஜே 33 ரகப் பலா, பாலூர்-1 ரகப் பலா அப்படினு 6 விதமான ரகங்கள் இங்க இருக்கு. இன்னும் 3-4 வருஷங்கள்ல காய்ப்புக்கு வந்துடும்” என்கிறார் கிருஷ்ணன்.

தரமான பக்க கன்றுகள் தயார் செய்வது எப்படி?

வாழைக்கன்றுகள் விற்பனை மூலம் வருமானம் பார்க்க விரும்பும் விவசாயிகள், வாழை நடவு செய்த 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு தாய் வாழையில் இருந்து பக்க கன்றுகள் வரத் தொடங்கும். அவை 2-3 அடி உயரத்திற்கு வளர்ந்த பிறகு, அவற்றின் மேல் பகுதியை சீவிவிட வேண்டும். 10 நாள்களுக்கு ஓருமுறை இதுபோல் செய்ய வேண்டும். தாய் வாழையில் உள்ள தாரை அறுவடை செய்த பிறகு, அதன் பக்க கன்றுகளில் ஒன்றை மட்டும் மறுதாம்புக்கு வைத்துக்கொண்டு, மீதியுள்ள கன்றுகளை வெட்டி விற்பனை செய்யலாம்.

ஜப்பான் கொய்யா....

‘‘15 சென்ட் பரப்புல, அடர் நடவு முறையில (10 அடி இடைவெளி) 50 கொய்யா கன்றுகள் நடவு செஞ்சுருக்கோம். இந்த ரகத்தோட பேரு, ஜப்பான் கொய்யா. சில வருஷங்களுக்கு முன்ன என்னோட நண்பர் ஓருத்தர் ஒரு கொய்யா பழத்தை என்கிட்ட கொடுத்து, ‘இது ஜப்பான் கொய்யா... சாப்பிட்டுப் பாருங்க’னு சொன்னாரு. அதோட சுவை ரொம்ப அருமையாவும் தனித்துவமாகவும் இருந்துச்சு. அதனாலதான் ரொம்ப ஆர்வமாகி, என்னோட பண்ணையில ஒரு வருஷத்துக்கு முன்ன ஜப்பான் கொய்யா பயிர் பண்ணினேன். இன்னும் ஒரு வருஷத்துக்குக் காய்ப்புக்கு வந்துடும்’’ என்கிறார் கிருஷ்ணன்.

பாக்கு மரங்களில்
ஊடுபயிராக மிளகு...
பாக்கு மரங்களில் ஊடுபயிராக மிளகு...

பாக்கு மரங்களில்
ஊடுபயிராக மிளகு...

‘‘8 வருஷங்களுக்கு முன்ன 30 சென்ட் பரப்புல 200 பாக்கு மரங்கள் பயிர் பண்ணினோம். ஆனா, இதுல இருந்து நாங்க நினைச்ச அளவுக்கு வருமானத்தை ஈட்ட முடியலை. ரொம்பக் குறைவான மகசூல்தான் கிடைக்குது. பாக்கு மரங்களுக்கு இடையில ஊடுபயிரா மிளகு பயிர் பண்ணியிருக்கோம். பன்னீர் மிளகு, கரிமுண்டா மிளகுனு இரண்டு ரகங்கள் இங்க இருக்கு. பாக்கு மரங்கள் தராத வருமானத்தை, மிளகு ஈடு செய்யும்னு உறுதியா நம்புறோம்’’ என்கிறார் கிருஷ்ணன்.

சவுக்கு
சவுக்கு

மண்ணை வளப்படுத்தும் சவுக்கு!

‘‘எங்க நிலத்துல சுமார் ஒரு ஏக்கர் பரப்புக்கு களிப்புத்தன்மை அதிகமா இருக்கு. இதுல பலவிதமான பயிர்களையும் சாகுபடி செஞ்சுப் பார்த்துட்டோம். எதுவுமே சரியா வரலை. கடைசி முயற்சியா சவுக்குப் பயிர் பண்ணினோம். செழிப்பா விளையுது. சவுக்குப் பயிரிட்டு 10 வருஷங்கள் கடந்தும்கூட, அந்த மரங்களை நாங்க அறுவடை செய்யல. காரணம், சவுக்கு மரங்கள்ல இருந்து விழும் சருகுகள், மட்கி மண்ணை வளப்படுத்திக்கிட்டு இருக்கு. அதனால, இன்னும் சில வருஷங்கள் கழிச்சு, சவுக்கு மரங்களை வெட்டி விற்பனை செஞ்சுக்கலாம்னு காத்திருக்கேன்’’ என்கிறார் கிருஷ்ணன்.

படங்கள்: ஷபிக் அகமது