இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சமீபத்தில் நடந்த அகிம்சா சந்தை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 4 நாட்கள் பல்வேறு கருத்தரங்குகளுடன் பெரிய அளவில் நடந்த அகிம்சா சந்தை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதில் பூடான் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு இயற்கை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், காந்திய கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். அதன் நீட்சியாக கடந்த 2-ம் தேதி நடந்த அகிம்சா சந்தை வரவேற்பை பெற்றுள்ளது.
ஆர்கானிக் பொருட்கள், தேங்காய் ஓடுகளால் ஆன கலைப் பொருட்கள், டெராக்கோட்டா களிமண்ணால் ஆன ஆபரணங்கள், மூங்கிலால் செய்யப்பட்ட இயற்கை நாப்கின்கள் எனச் சூழலுக்கு உகந்த பொருட்கள் சந்தையில் வைக்கப்பட்டிருந்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், நெசவாளர்கள், பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள், இதில் சிறு குறு தொழில் செய்வோர் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தியிருந்தனர்.
வந்திருந்த மக்கள் பொருட்களைப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியதோடு, பொருட்களையும் வாங்கிச் சென்றனர். மாலையில் அங்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ஆர்கானிக் நாப்கின் கடை வைத்திருந்த 'அக்கூரா ஹெர்பல்ஸ்'காரர்கள் நம்மிடம் பேசும்போது, "பருத்தி பஞ்சு, கற்றாழை, வேம்பு, வெட்டி வேர் ஆகிய பொருட்களால் நாங்கள் நாப்கின்கள் தயாரிக்கிறோம். இந்த நாப்கின்களில் ஜெல் ஷீட் மற்றும் வேதிப் பொருட்கள் இல்லை. மேலும் இது மற்ற நாப்கின்களைப் போல் அல்லாமல் 3-6 மாதங்களில் மண்ணில் மக்கும் தன்மையுடையது. கேட்பவர்களுக்கு இந்தியா முழுவதும் விற்பனைச் செய்யப்படும்." என்றனர்.
'கோல்டன் நாட்சுரல்ஸ்'-சின் கடையில் தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், தேன், லாவண்டர் எண்ணெய் உட்பட மரச்செக்கில் ஆட்டப்பட்ட ஆறு வகை எண்ணெய்களால் கையால் தயாரிக்கப்பட்ட குளியல் எண்ணெய், சோப்பு , ஷாம்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன.

'பெர்மினோஸ்' என்ற உற்பத்தியாளர்கள், சணலால் தயாரிக்கப்பட்ட ஸ்லிங் பாக் முதல் பர்ஸ் வரை அனைத்து விதமான பைகளையும் இந்த கண்காட்சியில் வைத்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் 'பருத்தி மற்றும் மூங்கில் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் நாப்கின்களும் வைத்திருந்தனர்.
ஆர்கானிக் மற்றும் சிறுதானிய நூடுல்ஸ்கள், உணவுப்பொருட்களும் இடம் பெற்றன. அதோடு இந்த கால டிரெண்டுக்கு ஏற்றார் போல் டெராக்கோட்டா, களிமண்ணால் செய்யப்பட்ட அழகான ஆபரணங்கள், தேங்காய் சிரட்டையால் செய்யப்பட்ட அழகான கலைப்பொருட்கள், மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்களும் இடம்பெற்றிருந்தன.

இயற்கை விவசாயம், ரசாயனம் இல்லாமல், உணவுப்பொருள், ஆடைகள், வீட்டு உபயோகப்பொருள்கள் தயாரிப்பது குறித்தும் விற்பனை செய்வது குறித்தும் ஆலோசனை சொல்லப்பட்டது.
இதுபோன்ற அகிம்சா சந்தையை அனைத்து ஊர்களிலும் நடத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்களும் வந்திருந்த மக்களும் தெரிவித்தனர்.