தற்போது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்கள்கூட இயந்திர வாழ்க்கை வேண்டாம் என்று உதறித்தள்ளிவிட்டு விவசாயத்தில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. அது போன்ற ஒரு தம்பதி மகாராஷ்டிராவில் முருங்கைக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். நாண்டெட் அருகில் பாவ்டேவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குலாப்ராவ். இவரின் மனைவி மஞ்சு. தகவல் தொழில்நுட்ப இன்ஜினீயர்களாக இருவரும் புனே மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் வேலை பார்த்தனர். இருவரும் 15 ஆண்டுகள் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்தனர். லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்தது. ஆனால், அந்த வேலையை இருவரும் விட்டுவிட்டு சொந்த ஊரில் வந்து விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதுவும் 9 ஏக்கரில் முருங்கைக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாய அனுபவம் குறித்து குலாப்ராவ் கூறுகையில், ``கிராமத்தில் என் தந்தைக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டது. உடன் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கிராமத்தில் தங்கி இருந்தபோது சொந்த ஊரில் ஏதாவது செய்யலாம் என்று திட்டமிட்டோம். எங்களுக்கு 10 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதில் அதிகமாக கொய்யாப்பழம் பயிரிட்டு இருந்தனர். நான் ஹைதராபாத்தில் இருந்தபோது முருங்கை சாகுபடியைப் பார்த்திருக்கிறேன். அதிகமானோர் முருங்கைக்காய் பவுடரை அதிக விலை கொடுத்து விருப்பப்பட்டு வாங்கினர்.
எனவே, நாமும் ஏன் முருங்கைக்காய் விவசாயம் செய்யக் கூடாது என்று நினைத்தேன். என் மனைவியும் நானும் சேர்ந்து 2018-ம் ஆண்டு ஆரம்பத்தில் 3 ஏக்கர் மட்டும் முருங்கை சாகுபடி செய்தோம். ஆனால், இப்போது 9 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்துள்ளோம். எங்களுக்கு இதில் போதிய அனுபவம் இல்லாததால் மற்றவர்களின் முருங்கை தோட்டத்துக்குச் சென்று பார்வையிட்டு தெரிந்துகொண்டோம். நாங்கள் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் செய்கிறோம். முருங்கைக்கு தேவையான ஜீவாமிர்தத்தை எங்கள் வீட்டில் உள்ள மாடுகள் மூலம் தயாரித்துக்கொள்கிறோம். முருங்கை விளைச்சல் வர ஆரம்பித்தாலும் சில நேரங்களில் அவற்றின் விலை மிகவும் சரிந்துவிடுகிறது.

எனவே, இதற்கு மாற்று வழியைக் கண்டுபிடிக்க முயன்றேன். முருங்கையை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடிவு செய்தேன். இதன் படி நாங்களே சொந்தமாக முருங்கை இலைப் பொடியை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்கிறோம். முருங்கை இலை பவுடரை மிகவும் சுத்தமாக இயற்கையான முறையில் தயாரிக்க முடிவு செய்தோம். அதை உள்ளூரில் இருந்துகொண்டு விற்பனை செய்ய முடியாது என்பதால் என் மனைவி அவற்றை விற்பனை செய்ய டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டார்.
கடந்த ஓர் ஆண்டாக முருங்கை இலை பொடி உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். முருங்கையை நட்டு மூன்று மாதத்தில் இலையைப் பிடுங்க ஆரம்பிப்போம். நானும் என் மனைவியும் சேர்ந்து தினமும் இரண்டு குவிண்டால் முருங்கை இலைகளைப் பறித்து வருவோம். அதில் எந்தப் பூச்சியும் இருக்கக் கூடாது என்பதற்காக உப்பு மற்றும் வேப்பிலை கலந்த கரைசலில் முருங்கை இலைகளை முக்கி எடுப்போம். அதன் பிறகு, மிதமான வெப்பத்தில் மூன்று நாள்கள் காயவைப்போம். அதை அரைப்பதற்காக சிறிய கிரைண்டர் வாங்கி இருக்கிறோம்.

ஒரு குவிண்டால் முருங்கை இலையில் 10 கிலோ பவுடர் கிடைக்கும். தினமும் 20 கிலோ முருங்கை இலை பவுடர் உற்பத்தி செய்கிறோம். தேவைக்குத் தக்கபடி கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவில் பேக்கிங் செய்கிறோம். ஒரு கிலோ முருங்கை பவுடர் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். சமீபத்தில் ஒரு கிலோ 3,800 ரூபாய் வீதம் 50 கிலோ பவுடர் ஏற்றுமதி ஆர்டர் கிடைத்திருக்கிறது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.