வேர்கள், கிழங்குகள் எல்லாம் இயற்கை நமக்கு இலவசமாகத் தரும் சொத்துகள். ஆனால், பலருக்கும் அது குறித்த விழிப்புணர்வு குறைந்துகொண்டே வருகிறது. இதைத்தொடர்ந்து, நாளை ஏப்ரல் 16 (ஞாயிறு) தக்கர் பாபா வித்யாலயா, சென்னை தி நகரில், நிலைத்த நீடித்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு (ASHA-TN), ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (OFM), சஹாஜா விதைகள் மற்றும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு (SFA) இணைந்து `வேர்கள் மற்றும் கிழங்குகள் திருவிழா' நடத்துகின்றன.

விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் அனந்து பேசும்போது,
``இத்திருவிழாவுக்காக Purple yam என்கிற ராசவள்ளி கிழங்கு, வெற்றிலை வள்ளிக் கிழங்கு, கூகை கிழங்கு, வெள்ளை ராசவள்ளி கிழங்கு மற்றும் பல அரிய வகை கிழங்கு வகைகள் சென்னைக்கு வரவுள்ளன.
இயற்கையில் இருந்து நமக்குக் கிடைக்கும் உணவு வகைகளில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. வேர் காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாகவும் இருப்பதால் அது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
எனவே, வேர்கள், கிழங்குகள் மற்றும் பல்வேறு பாரம்பர்ய நெல் வகைகள், மற்றும் பாதுகாப்பான உணவு ஆகியவை குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியும், விவசாயிகளுக்கு இவற்றின் நன்மைகளைக் கூறி சாகுபடியைப் பெருக்குவதற்கும், இத்திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதில் மிகவும் சுவாரஸ்யமான கிழங்கு சமையல்' போட்டியும் நடைபெற உள்ளது. அங்கு கிழங்குகளிலிருந்து பல தனித்துவமான சமையல் வகைகள் பல சமையல் ஆர்வலர்களால் செய்து காட்டப்படும்.

இவை தவிர இயற்கை உணவு, இயற்கை பருத்தியைக் கொண்டு கையால் செய்யப்பட்ட ஆடைகள், பனை பொருள்கள், ஆரோக்கியமான பழச்சாறுகள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவையும் இங்கு விற்பனை செய்யப்படும்.
மாடித்தோட்டம் வைத்திருப்போர் மற்றும் மாடித் தோட்டம் வைக்க ஆர்வமுடையோர் இருவருக்கும் இடையே விதை பரிமாற்றம் நடக்கும், இதனால், இதில் விதைகள் மட்டுமன்றி தாங்கள் அனுபவம், அறிவுரை, மகிழ்ச்சியை என அனைத்தையும் பகிர்ந்துகொள்ள முடியும்.

இந்த விழாவில், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு பயனுள்ள கருத்துரை வழங்க உள்ளனர். பொதுமக்களும் வருகை தந்து பயன்பெறலாம்'' என்று அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பசுமை விகடன் இதழ் ஊடக ஆதரவு வழங்கியுள்ளது.