
ஒரு நடிகர் உடலை ஆரோக்கியமா வெச்சிருக்கணும்னு நிறைய சாலட், காய்கறிகள், பழங்கள்னு சாப்பிட்டுட்டே இருப்பார். அவருக்கு திடீர்னு நாக்குல புற்றுநோய் வந்துருச்சு.
“நாங்க விவசாயக் குடும்பம்தான். நகரத்து வாழ்க்கை, பரபரப்பான மருத்துவர் வேலையில விவசாயத்தைப் பத்தி யோசிக்கவே நேரம் இல்லை. ஜோதிகா நடிச்ச ‘36 வயதினிலே’ படம் பார்த்த பிறகுதான் மாடித்தோட்டம் வைக்கணும்னு முடிவு பண்ணினேன்”- உந்துதல் ஏற்பட்ட தருணம் பகிர் கிறார் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அதிகாரியாகப் பணியாற்றும் தமிழ்மணி திருநாராயணன்.
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தன் வீட்டில் 2016-ம் ஆண்டிலிருந்து மாடித்தோட்டம் வைத்துப் பராமரித்து வருபவரைச் சந்தித்தோம்... “கொத்தமல்லி, புதினா, கீரைகள், பழங்கள், காய்கறிகள்னு கிட்டத்தட்ட 400 பைகள்ல செடிகள் வெச்சிருக்கேன். மாத்தி மாத்தி செடிகள் வைக்கணும் கிறதுக்காக 50 தொட்டிகளை எப்பவும் ரிசர்வ்ல வெச்சிருப்பேன்” என்பவர் தன் தோட்டத்துக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.
“ஒரு நடிகர் உடலை ஆரோக்கியமா வெச்சிருக்கணும்னு நிறைய சாலட், காய்கறிகள், பழங்கள்னு சாப்பிட்டுட்டே இருப்பார். அவருக்கு திடீர்னு நாக்குல புற்றுநோய் வந்துருச்சு. ரசாயனங்கள் அதிகம் பயன்படுத்தின காய்கறிகளை பச்சையா சாப்பிட்டதால அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதா பேட்டியில சொல்லியிருந்தாரு. அப்பதான் எந்தச் சூழல்லயும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தக்கூடாதுன்ற முடிவுக்கு வந்தேன்.
கிச்சன் கழிவுகள்ல தயாரிக்கிற உரம், வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, மண்புழு உரத்தைத்தான் செடிகளுக்குப் பயன்படுத்துறேன். இலைகள்ல பூச்சித் தாக்குதலைச் சமாளிக்க வேப்பிலை, மஞ்சள், பூண்டு, பச்சைமிளகாயை அரைச்சு தண்ணீர்ல கரைச்சு இலைகளுக்குத் தெளிச்சு விடுவேன். மாடித்தோட்டம் வெச்ச புதுசுல கீரை விதைகள் போட்டிருந்தேன். முளைக்கவே இல்ல. அப்புறம்தான் எறும்பு, விதைகளைச் சாப்பிட்டது தெரிஞ்சுது. சாம்பலோட கீரை விதைகளைக் கலந்து, கலவை மண்ணுல தூவி விட்டு, அதுக்கு மேல மண்போட்டு மூடி, தண்ணி தெளிச்சு கவர் போட்டு மூடிட்டேன். ரெண்டு, மூணு நாள்கள் கழிச்சு விதைகள் முளைக்க ஆரம்பிச்சிருச்சு. இது போல பல விஷயங்களை அனுபவத்துல கத்துக்கிட்டேன். இப்பவும் வாரத்துல மூணு நாள்கள் வீட்ல சமையலுக்கு மாடித்தோட்டத்துல பறிக்கிற கீரைகள்தான்” என்பவர் தன் ஆரோக்கியத்தின் ரகசியமே மாடித்தோட்டம்தான் என்கிறார்.
“எவ்வளவு ஸ்ட்ரெஸ்ஸா இருந்தாலும் மாடித்தோட்டத்துக்கு வந்துட்டா மனசு லேசாகிடும். தினமும் காலைல அரை மணி நேரம், சாயங்கலாம் அரை மணி நேரம் மாடித் தோட்டத்துல செலவழிப்பேன். காலைல மாடித்தோட்டத்துல வேலை பார்க்கும்போது இலவசமாவே வைட்டமின் டி கிடைச்சிடும். மூட்டுவலி, கால்வலி, இடுப்புவலின்ற பிரச்னையே எனக்கு இல்ல. செடிக்குத் தண்ணி ஊத்துறது, குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யுறது நல்ல உடற்பயிற்சி. வீட்டுல விளையுற காய்கறிகளை சாப்பிடுறதால ஆரோக்கியமான உணவும் கிடைக்குது” எனும் தமிழ்மணி, செடிகளுக்குத் தண்ணீருடன் தினமும் இசையையும் கொடுப்பாராம். அதற் கென தோட்டம் முழுவதும் ஸ்பீக்கர் வைத்து பாட்டை இசைக்கவிடுகிறார்.
“இந்த கொய்யா மரம் ரொம்ப நாளா காய்க்கவே இல்ல. இனி அவ்வளவுதான்னு நினைச்சு, எங்க டிரைவர்கிட்ட மரத்தை எடுத்திடலாம்னு சொல்லிட்டேன். அதுக்கு கோபம் வந்துடுச்சுபோல, உடனே காய் வெச்சிடுச்சு. எனக்கு சந்தோஷம் தாங்கல. இப்பக்கூட பிஞ்சு பிடிச்சிருக்கு பாருங்க” - மரத்தை வருடிக்கொடுத்துக்கொண்டே பேசினார்...
“எனக்கு மாடித்தோட்டமும் ஒரு குழந்தை மாதிரிதான். செல்லப்பிராணிகளை வளர்க்குற உணர்வு இதுலயும் கிடைக்கும்” என்பவரின் குடும்பத்தினருக்கும் தோட்ட ஈடுபாடு அதிகம். இவரின் கணவர் திருநாராயணன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அவசர சிகிச்சைத் துறையின் தலைவர். மகன் சென்னை ஐஐடி மாணவர், மகள் சட்டத்துறை மாணவி.
“எனக்கு விடுமுறை இருக்கும்போது முழு நாளும் தோட்டத்துல வேலை செய்வேன். அப்பெல்லாம் என் கணவர்தான் வீட்ல சமைப்பாரு. எனக்கு சாப்பாட்டை மாடிக்கே கொண்டு வந்துடுவாரு. நம்மளே விதைச்சு நம்மளே அறுவடை பண்ணி சாப்பிடுற சந்தோஷம் என்னன்னு எனக்குத் தெரியும். அந்த உணர்வை என் குடும்பத்துக்கும் நண்பர் களுக்கும் ஓரளவு கடத்தியிருக்கேன்னு நினைக்கிறேன். டாக்டர்னு சொல்லிக்கிறதை விட மாடித்தோட்ட விவசாயின்னு சொல்ற துலதான் எனக்குப் பெருமை'' - சோளக்கதிர் களும் அவருடன் சேர்ந்து கையசைக்க விடை பெற்றோம்.
அத்தனையும் ஒரே மாடியில்!
* பூ - ஜாதிமல்லி, மல்லி, கனகாம்பரம், நித்யமல்லி, பாரிஜாதம், செம்பருத்தி, ரோஜா.
* காய்கறி - வெண்டை, பச்சைமிளகாய், தக்காளி, காராமணி, வெள்ளை - சிவப்பு முள்ளங்கி, முருங்கை, பச்சை மிளகாய், காந்தாரி மிளகாய், காலிஃபிளவர், சுண்டைக்காய், அவரை, புடலை, பீர்க்கங்காய், பாகல், வெற்றிலை, பிரண்டை, மஞ்சள், இஞ்சி, பூசணிக்காய்.
* பழங்கள் - வெள்ளை - சிவப்பு கொய்யா, சாத்துக் குடி, சிறிய சைஸ் ஆரஞ்சு, சிறுநெல்லிக்காய், வாழை, மா, சப்போட்டா, மாதுளை, பாதாம்.
* கீரை- சிறுகீரை, அரைக்கீரை, செங்கீரை, முடக்கற்றான், வெந்தயக்கீரை, புளிச்சகீரை, பாலக் கீரை, மணத்தக்காளி, கறிவேப்பிலை, வெங்காயத் தாள், புதினா, கொத்தமல்லி.
* தானியங்கள் - தட்டைப்பயறு, வெள்ளைச்சோளம்.