Published:Updated:

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பெண் விவசாயிகள்... பின்னணியில் உள்ள சோகம்!

இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்

பெண்கள் மாதவிலக்கு நாள்களில் மஞ்சள் பயிரைத் தொட்டால் அழிந்துவிடும் என்ற மூட நம்பிக்கை மராட்டியத்தில் நிலவியது... அத்தகைய சூழலில்தான் இயற்கை விவசாயம் செய்ய பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என போராடியது

Published:Updated:

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பெண் விவசாயிகள்... பின்னணியில் உள்ள சோகம்!

பெண்கள் மாதவிலக்கு நாள்களில் மஞ்சள் பயிரைத் தொட்டால் அழிந்துவிடும் என்ற மூட நம்பிக்கை மராட்டியத்தில் நிலவியது... அத்தகைய சூழலில்தான் இயற்கை விவசாயம் செய்ய பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என போராடியது

இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்

இந்தியாவில், கடந்த 1995 முதல் 2021 வரை சுமார் 3,82,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகத் தேசிய குற்றவியல் ஆவண அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் 87% ஆண்கள் என்பதால் 3,20,000 க்கும் அதிகமான கணவனை இழந்த கைம்பெண்களாக, வாழ்வாதாரம் இன்றி தவித்தனர்.

மராட்டிய மாநிலம் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவிகளுக்கு உதவும் வகையில், `மகிளா கிஸான் அதிகார் மஞ்ச்’ என்னும் அமைப்பு, இயற்கை வேளாண்மை மூலம் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் எனும் நோக்கில் தொடங்கப்பட்டது.

இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்
இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்

பெண்கள் மாதவிலக்கு நாள்களில் மஞ்சள் பயிரைத் தொட்டால் அழிந்துவிடும் என்ற மூட நம்பிக்கை மராட்டியத்தில் உள்ளது. அத்தகைய சூழலில்தான் இயற்கை விவசாயம் செய்ய பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என போராடி செயல்படுத்தியது இந்த அமைப்பு.

விதர்பா மற்றும் மராத்வாடா பகுதியில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் மனைவிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறினார்கள். இதனால் தொடர்ந்து அதிக வருமானத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுள்ளனர்.

இவர்கள் விதைத்த பயிர்கள் செழித்து வளர்ந்தது. சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 2020-21- ல் ஹிங்கோலி பகுதியில் 182 பெண்கள் இயற்கை விவசாயத்துக்கு மாறி மஞ்சள், பருப்பு வகைகள், சோயா, பருத்தி, தினைகள், பசலைக் கீரை, தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றைப் பயிரிட்டனர்.

ஹிங்கோலி பகுதியில் கலாவதி சாவந்த்கர் என்பவரின் கணவர் துளசிராம் வாங்கிய வங்கிக்கடனை அடைக்க முடியாமல் 2016-ல் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு, 3 ஏக்கர் நிலத்தில் கலாவதி மேற்கொண்ட இயற்கை விவசாயம், அவரது வாழ்க்கையை மாற்றியது. விவசாயத்தில் விளைச்சல் நல்ல லாபத்தைக் கொடுத்தது. இயற்கை உணவுகளை உட்கொண்டதால் அவரது குடும்ப ஆரோக்கியமும் மேம்பட்டது. இயற்கை முறையில் பயிரிட்ட மஞ்சள், குவிண்டாலுக்கு ரூ 4000 - ரூ 6000 வரை வருமானம் ஈட்டித் தந்துள்ளது.

மகிளா கிஸான் அதிகார் மஞ்ச் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சீமா குல்கர்னி கூறுகையில், ``இரு பிராந்தியங்கள் உள்ள விவசாயிகள் சோயா மற்றும் பருத்தி உள்ளிட்ட பணப் பயிர்களைப் பயிரிடுகின்றனர். வீடுகளில் சாப்பிடுவதற்கு உணவு இல்லாத நிலையில் ஏற்பட்டபோது, கொரானா தொற்று காரணமாகப் பிரச்னையின் தீவிரத்தை பெண் விவசாயிகள் உணர்ந்தனர். அரசு கொடுக்கும் நியாய விலை ரேஷன் உணவுப் பொருள்களை மட்டுமே நம்ப வேண்டிய சூழல் என்பதால் பெண் விவசாயிகள் இந்தப் பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டனர். தற்போது பருப்புகள், தினைகள், காய்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் சோயா அல்லது பருத்தி ஏதேனும் ஒரு பணப்பயிர் உள்பட 15-25 பயிர்களைப் பயிரிடுகின்றனர். இயற்கை விவசாயத்துக்கு பெண்களின் குடும்பங்களே எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் பரிசோதனை முயற்சியாக ஆரம்பத்தில் அரை ஏக்கரில் பயிரிட்டனர்" என்றார்.

மகிளா கிஸான் அதிகார் மஞ்ச்
மகிளா கிஸான் அதிகார் மஞ்ச்

பண்ணை மற்றும் விலங்குகளின் கழிவுகள், மண்புழு உரம் ஆகியவற்றிலிருந்து உரம் தயாரிக்கப் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்தனர். `தசாபர்னா’ எனப்படும் பத்து இலைகள், கோமியம், சாணி ஆகியவற்றைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அரை ஏக்கர் பரிசோதனைக்கு கிடைத்த வெற்றி காரணமாக மற்ற பெண்களும், குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி முழு வீச்சில் பெரிய அளவிலான இயற்கை விவசாயத்தில் இறங்கினர்.

ஆஷா ஷிண்டேவின் கணவர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரில் அரை ஏக்கர் நிலம் உள்ளது. சோயா பீன் உள்ளிட்ட பணப் பயிர்களை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்துக்கு மாற, ஆஷாவின் பிள்ளைகள் தயாராக இல்லை. `முக்கியப் பயிராகத் துவரை மற்றும் ஊடுபயிராகப் பச்சைப் பயிறும், உளுந்தும் பயிரிட்டேன். தீமையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் காராமணி, தினை, சோளம், எள் மற்றும் பாதுகாப்புக்காக எல்லைகளில் ரொசெல்லே (செம்பருத்தி இனம்) செடிகளைப் பயிரிட்டேன்’ என பிள்ளைகளுக்கு விளக்கமளித்துச் சமாதானப்படுத்தினார்.

மகிளா கிஸான் அதிகார் மஞ்ச்
மகிளா கிஸான் அதிகார் மஞ்ச்

`ஊடுபயிர் என்பது ஒன்றையொன்று சார்ந்திருக்கும் பயிர்களுக்கான அறிவியல் ரீதியான விதைப்பாகும். இது மண்ணின் தரத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும். பயிர்களைக் கலந்து பயிரிடுவதால், குறிப்பிட்ட வகைப் பூச்சிகள், பெரிய & நுண்ணுயிர்கள் உருவாகிப், பயிர்களை அழிக்கும் தீமையான பூச்சிகள் மற்றும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.

இயற்கை விவசாயத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க மராட்டிய அரசு ‘பரம்பராகத் க்ரிஷி விகாஸ் யோஜனா’ என்னும் மத்திய அரசுத் திட்டம் மூலம் 41,012 ஹெக்டேர் நிலத்தில் பயிரிட்ட 60,985 விவசாயிகளை உள்ளடக்கிய 1628 குழுக்களுக்குத் தலா ரூ 10 லட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்கியது.

`இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இயற்கை உரம் காரணமாக, மண் வளம், கட்டமைப்பு, தரம் மேம்படுத்துவதுடன், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. மேலும், தண்ணீரைத் தேக்கிக் கொள்ளும் திறன் பெருகுவதுடன், மண்ணிலுள்ள நைட்ரஜன், ஃபாஸ்ஃபரஸ், பொட்டாசியம் ஆகிய ஊட்டச் சத்துக்கள் தாவரம் மற்றும் விலங்கு பல்லுயிர்கள் அதிகரிக்கவும் உதவுகின்றன. இயற்கை விவசாயம் மண்புழுக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகளைப் பெருக்குவதால், மண்ணின் வளம் அதிகரிக்கிறது. மண்புழுக்கள் மண்ணுக்கு உள்ளேயே மேலும் கீழுமாகச் சென்று நுண் துளைகளை ஏற்படுத்திப் பயிர் செழிக்க உதவுகின்றன. பூச்சிக் கொல்லிகளிலுள்ள இரசாயனங்கள் நுண்ணுயிரிகளைக் கொல்வதால், மண்ணிலுள்ள இயற்கைத் தன்மை கெடுகிறது’ என மத்திய அரசின் அறிவியல் & சுற்றுச்சூழல் மையம் அறிக்கை தெரிவிக்கிறது.

இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்
இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்

இயற்கை விவசாயத்தால் இன்னொரு ஆச்சரியமும் நடந்துள்ளது. வழக்கமாகக் `காட்டுத் தாவரங்கள் / காய்கறிகள்’ விவசாயிகள் விதை விதைப்பின்றித் தாமாகவே வளரும் தன்மை கொண்டவை. ஆனால் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் காரணமாக இவை அழிந்தன. தற்போது இயற்கை விவசாயத்துக்கு மாறி இயற்கை உரங்களும், இயற்கைப் பூச்சிக் கொல்லிகளும் பயன்படுத்தத் தொடங்கியதால், மீண்டும் 19 வகை அரிதான காட்டுத் தாவரங்கள் / காய்கறிகள் தங்கள் நிலத்தில் வளரத் தொடங்கி இருப்பதைக் கண்டுபிடித்துள்ளோம். இவற்றுள் பாக்டீரியா எதிர்ப்பு, வீக்கம் எதிர்ப்பு மற்றும் வைட்டமின் இ-சத்து நிறைந்த மருத்துவ குணம்மிக்க காய்களும் அடங்கும்’ என விதர்பா மற்றும் மராத்வாடா பெண் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

இயற்கை விவசாய முறையில் பயிரிட்ட காய்கறிகள், பருப்பு மற்றும் தினை வகைகளால் மற்றுமொரு பயனும் கிடைத்துள்ளது. ஆரோக்கியமான உணவை குடும்பத்தினர் அனைவரும் உட்கொள்வதால் கிடைத்த உடல் வலிமை காரணமாக மருத்துவச் செலவுகள் குறைந்துள்ளன. கோவிட்-19 கொள்ளை நோய்க் காலத்தில் நாங்கள் யாருமே பாதிக்கப்படவில்லை. முன்பெல்லாம் சின்னச் சின்ன வேலைகளைச் சிறிது நேரம் செய்தால் கூட உடல் வலி, முதுகு வலி எடுக்கும். ஆனல இப்போது வயல் வெளிகளில், கடுமையான வேலைகளை, நீண்ட நேரம் செய்தாலும் கூட எந்த வலியும் இல்லை’ என்றார் கலாவதி.

`இயற்கை விவசாயத்தால் நல்ல பயன்கள் ஏற்பட்டாலும் சமூகத்தில் நிலவும் சில மூட நம்பிக்கைகளால் பெண் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். மாதவிலக்கு ஆகும் பெண்கள் மஞ்சள் சாகுபடி செய்யக் கூடாது என ஊர்ப் பஞ்சாயத்து கட்டுப்பாடு விதித்துள்ளது. மாதவிலக்கு ஆகும் பெண்கள் மஞ்சள் பயிரிட்டால் அவை வளராமல் அழிந்துவிடும் என்னும் மூட நம்பிக்கை இன்னும் நிலவுவதே முக்கியக் காரணமாகும். இருப்பினும் தடையை மீறி மூன்று ஆண்டுகளாக மஞ்சள் பயிரிடுகிறோம். எந்தச் சேதாரமும் இல்லாமல் மஞ்சள் நன்கு விளைந்து நல்ல இலாபத்தைத் தந்துள்ளது’ என்கிறார் வைஷாலி.

இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்
இயற்கை விவசாயத்தில் பெண் விவசாயிகள்

மாதவிடாய் தாண்டி இன்னும் பல பிரச்சனைகள் உள்ளன.  தரமான உள்ளூர் விதை வகைகள் கிடைப்பதில்லை. உள்ளூர் காய்கள், பருப்புகள், தினைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. எப்படியோ கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கிறோம். இதைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களுக்கான விதைகளைத் தாங்களே உற்பத்தி செய்யவும் தொடங்கி உள்ளனர்.

இயற்கை விவசாயத்தில் மனிதர்களுக்கு மட்டுமின்றிப் பறவைகள், விலங்குகளுக்கும் தரமான உணவு கிடைப்பதால், அவை உண்பதற்காக அறுவடைக்குத் தயாராக உள்ள பயிர்களைத் தின்று நாசப்படுத்துகின்றன.  பெண்கள் வெயிலிலும், மழையிலும், வயல் வெளிகளில் பாடுபட்டுப் பயிரிட்ட பயிர்களை ஆண்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே சந்தையில் விற்று விடுகின்றனர். மேலும் இரசாயன உரத்தைத் தெளித்து இயற்கை விவசாயத்தைப் பாழடிக்கின்றனர். இயற்கை மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தாண்டிக், குடும்பப் பிரச்சினைகளையும் ஒவ்வொரு பெண் விவசாயியும் சமாளிக்க வேண்டி உள்ளது.

முன்பெல்லாம் பெண் விவசாயிகள் என்றால் ஏளனமாகப் பார்ப்பார்கள். எளிதில் கடன் தரவும் மாட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. சிலர் இயற்கை விவசாயத்தில் முதலீடு செய்யவும் முன்வருகிறார்கள். எங்களைப் பேட்டி எடுக்க செய்தியாளர்களும், சமூக ஆர்வலர்களும் வருவதைக் கண்டு உள்ளூர் மக்கள் எங்களை மதிப்போடும், மரியாதையோடும் அணுகத் தொடங்கி உள்ளனர்’' எனப் பெருமை பொங்கக் கூறுகிறார் ஆஷா ஷிண்டே.

- ஜனனி ரமேஷ்