ஆண்டுக்கு ரூ.5,30,000... நெல், நிலக்கடலை, மரச்செக்கு... இயற்கை விவசாயத்தில் வெற்றிநடைபோடும் இளைஞர்!

மகசூல்
இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடும் இளைஞர்கள், தங்களுடைய விளைபொருள்களைச் சந்தைப்படுத்துவதிலும் திறம்படச் செயல்படு கிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம், குடிசைக்கரை கிராமத்தில் வசிக்கும் தரணிவேந்தன், தான் நடத்தி வரும் இயற்கை விவசாயப் பண்ணையில் நிறைவான லாபம் ஈட்டி வருகிறார். 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவருடைய பண்ணையில் நெல், நிலக்கடலை, காய்கறிகள், கீரைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதோடு மாடுகளும் வளர்க்கப்படுகின்றன. தன்னுடைய பண்ணையில் உற்பத்தி செய்யப் படும் நிலக்கடலையை, எண்ணெயாக ஆட்டி விற்பனை செய்வதற்காக, இவர் மரச்செக்கு நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவருடைய இயற்கை விவசாயம் மற்றும் சந்தைப்படுத்துதல் அனுபவம் குறித்து அறிந்துகொள்ள ஒரு பகல்பொழுதில் இவருடைய பண்ணைக்குச் சென்றோம். அறுவடை செய்யப்பட்ட நெல் மற்றும் நிலக்கடலையை வெயிலில் காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தரணிவேந்தன் மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றார்.

‘‘எங்க குடும்பத்துக்குனு சொந்தமா 3 ஏக்கர் புஞ்சை நிலம் இருக்கு. என்னோட அப்பா அம்மா ரெண்டு பேரும் அதுல விவசாயம் செஞ்சு கிடைக்கிற குறைஞ்ச வருமானத்துலதான் குடும்பத்தைக் காப்பாத் தினாங்க. தினசரி வருமானத்துக்காகக் கீரை சாகுபடி பண்ணினாங்க. குறிப்பா, இந்தப் பகுதி மக்கள் விரும்பி சாப்பிடுற புளிச்சக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை சாகுபடி செய்றதை வழக்கமா வச்சிருந்தாங்க. கிராமங்கள்ல கீரைக்கு ரொம்பக் குறைவான விலைதான் கிடைக்கும். நான் பள்ளிப் படிப்பை முடிச்சதும் குடும்பச் சூழ்நிலை காரணமா, ஸ்ரீபெரும்புதூர்ல இருக்குற என்னோட மாமாவுக்குச் சொந்தமான ஹோட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன்.
அங்க தங்கியிருந்து, வேலை செஞ்சுகிட்டே தொலைதூரக் கல்வி மூலம் இளநிலை வாணிப நிர்வாகம் (பி.பி.ஏ) பட்டப்படிப்புப் படிச்சேன். அந்தச் சூழல்லதான்... நான் வேலைபார்த்த ஹோட்டல்களுக்கு அடிக்கடி வரக்கூடிய பட்டதாரி இளைஞர்கள் சிலர், கூட்டு முயற்சியா விவசாயம் செய்றது பத்தி ரொம்ப ஆர்வமா ஆலோசிச்சுக்கிட்டு இருந்தாங்க. நான் கிராமத்துலருந்து வந்தவன்; அதுவும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்ங்கிறதுனால என்கிட்டேயும் யோசனை கேட்டாங்க. என்னோட அப்பா அம்மா நீண்டகாலமா சாகுபடி செஞ்சுகிட்டு இருக்குற கீரை விவசாயம் பத்தியும், அதுல தினமும் கிடைக்கிற வருமானம் பத்தியும் சொன்னேன். ‘நல்ல ஐடியாவாக இருக்கே! அதையே கூட்டுப் பண்ணையம் முயற்சியில பெருசா பண்ணினா, நல்ல லாபம் எடுக்க முடியும். கீரை எல்லோரும் விரும்பி சாப்பிடுற விளைபொருள்... அதனால முதல்கட்ட முயற்சியா கீரை விவசாயத்துல இறங்கிப் பார்க்கலாம்ங்கற முடிவுக்கு வந்தாங்க. நானும் அவங்களோட சேர்ந்து அதுல ஈடுபட ஆரம்பிச்சேன். பசுமை விகடன்ல வெளிவந்த கட்டுரைகளைப் படிச்சு, இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைக் கத்துக் கிட்டோம்.
கிட்டத்தட்ட 14 ஏக்கர் குத்தகை நிலம் பிடிச்சு, கீரை சாகுபடி செஞ்சு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள்ல பரவலா விற்பனை செஞ்சோம். அது வெற்றிகரமா நடந்ததுனால, அந்த அனுபவத்தைப் பயன் படுத்தி, சொந்த ஊர்ல நான் தனிப்பட்ட முறையில விவசாயத்துல இறங்கலாம்ங்கற முடிவுக்கு வந்தேன்.

அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வந்து, எங்க குடும்பத் துக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்துலயே இயற்கை முறையில புளிச்சக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை, முளைக்கீரை, புதினா, கொத்தமல்லி, பாலக்கீரை, பசலைக்கீரை, வெந்தயம், சிலோன் பசலை, பொன்னாங்கன்னி, சிவப்புப் பொன்னாங் கன்னி உட்பட பலவிதமான கீரைகளைச் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
சென்னையில உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்லல வசிக்கிற மக்களுக்கு வாரத்துக்கு ரெண்டு முறை இங்கயிருந்து கீரை கட்டுகளைப் பேருந்து மூலமா அனுப்பி வெச்சேன். முதல்நாள் சாயந்தரம் கீரைகளைப் பறிச்சு, நல்லா தண்ணியில அலசி சுத்தப்படுத்தி, தனித்தனி கட்டுகளாகப் பிரிச்சு பேக் பண்ணி தயார் நிலையில வச்சிடுவேன்.
அதிகாலையில 3 மணிக்கு அதை பஸ் ஸ்டாண்டுக்கு எடுத்துக்கிட்டு போவேன். எங்க ஊர்லருந்து 3.30 மணிக்கு சென்னைக்கு ஒரு பேருந்து கிளம்புது. அந்தப் பேருந்துல கீரைக் கட்டுகளை அனுப்பிட்டா போதும்... சென்னையில இருக்கிற என்னோட நண்பர், அந்தக் கீரைக் கட்டுகளை எடுத்துக்கிட்டுப் போயி அங்கவுள்ள வாடிக்கையாளர்கிட்ட கொடுத்துடுவார். அதுக்கான பணத்தை, என்னோட வங்கிக் கணக்குல அவர் செலுத்திடுவாரு.

அது நல்ல முறையில போயிக்கிட்டு இருந்துச்சு. விவசாயத்தை விரிவுபடுத்துற துக்காக, அடுத்தகட்டமா, குத்தகைக்கு அஞ்சு ஏக்கர் நிலம் பிடிச்சு... இயற்கை முறையில நிலக்கடலை பயிரிட்டேன். அதுல ஊடுபயிரா... காராமணி, தட்டைப் பயறு, உளுந்து சாகுபடி செஞ்சேன்.
கைகொடுத்த லோடு ஆட்டோ
அந்தப் பொருள்களையும் சென்னையில உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செஞ்சேன். அங்க அனுப்பினது போக மீதியுள்ள பொருள்களை உள்ளூர்ல நேரடியா மக்கள்கிட்ட விற்பனை செய்றதுக்காக லோடு ஆட்டோ வாங்கினேன். மற்ற விவசாயிகள்கிட்டயும் மக்கள்கிட்டயும் விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக... ஆரோக்கியமாக வாழ, இயற்கை விவசாயம் செய்வோங்கிற வாசகத்தை என்னோட ஆட்டோவுல எழுதினேன். கீரை, நிலக்கடலை, காராமணி, உளுந்து எல்லாத்தையும் அந்த ஆட்டோவுல ஏத்திக்கிட்டு நானே ஓட்டிக் கிட்டுப் போய் உள்ளூர்ப் பகுதிகள்ல விற்பனை பண்ணினேன். குறிப்பா, சாயந்தர நேரத்துல இங்க இருக்கிற தனியார் பள்ளிக் கூட வாசல்ல நின்னாலே போதும். கொஞ்ச நேரத்துலயே வேகமா வித்துப்போயிடும்’’ என்று சொன்னவர், நிலக்கடலை மற்றும் நெல் மதிப்புக்கூட்டல் குறித்த அனுபவங்களை விவரித்தார்.

மரச்செக்கு
‘‘நான் உற்பத்தி செய்யக்கூடிய நிலக் கடலையை, அப்படியே விற்பனை செய்ற துக்குப் பதிலா எண்ணெயாக ஆட்டி விற்பனை செஞ்சா, கூடுதலா லாபம் பார்க் கலாம்ங்கற ஒரு யோசனை வந்ததுனால, சொந்தமா ஒரு மரச்செக்கு அமைச்சேன். இயற்கை முறையில உற்பத்தி செஞ்ச மரச்செக்கு எண்ணெய்க்கு மக்கள்கிட்ட அதிக வரவேற்பு இருந்துச்சு. அதனால காய் கறிச் சாகுபடி பரப்பை குறைச்சு, நிலக்கடலை சாகுபடியை 7 ஏக்கருக்கு விரிவுபடுத்தினேன். வருஷத்துக்கு 3,000 கிலோ பருப்பு மகசூல் கிடைக்குது. அதை மரச்செக்குல எண்ணெயா ஆட்டுறது மூலம் 1,000 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டருக்கு 230 ரூபாய் வீதம் 2,30,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. நிலக்கடலை ஆட்டும்போது 2,000 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். ஒரு கிலோ 65 ரூபாய்னு விற்பனை செய்றது மூலம் 1,30,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக 7 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி மூலம் 3,60,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. சாகுபடி செலவு, கடலை பருப்பு உடைச்சு எடுக்குற கூலி உட்பட எல்லாச் செலவுகளும் போக 2,10,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
நெல் சாகுபடி
என்னோட வாடிக்கையாளர்கள்ல பலர், பாரம்பர்ய அரிசி கேட்டதுனால மேற்கொண்டு 7 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து, பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். ஏக்கருக்கு 1,400 கிலோ வீதம் 7 ஏக்கர் நெல் சாகுபடி மூலம் வருஷத்துக்கு 9,800 கிலோ நெல் மகசூல் கிடைக்குது. அதுல 50 சதவிகித நெல்லை தானியமா விற்பனை செஞ்சுடுவேன். ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வீதம் 4,900 கிலோ நெல்லுக்கு 1,47,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மீதியுள்ள 4,900 கிலோ நெல்லை, அரிசி அரைச்சோம்னா 3,000 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 60 ரூபாய் வீதம் 1,80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் 7 ஏக்கர் நெல் சாகுபடி மூலம் வருஷத்துக்கு 3,27,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவுகளும் போக 1,50,000 ரூபாய் லாபமா கிடைக்கும். நெல் சாகுபடி மூலம் கிடைக்குற வைக்கோலையும் தவிடையும் என்னோட மாடுகளுக்குப் பயன்படுத்திக்குறேன்.

மாடு வளர்ப்பு
4 நாட்டு மாடுகளும், 4 கலப்பின மாடுகளும் வளர்க்குறேன். இதனால போதுமான அளவுக்கு எரு கிடைச்சுடுது. என்னோட பண்ணையில வளரக்கூடிய களைச்செடிகள், புற்களை அறுத்து, மாடுகளுக்குப் பசுந்தீவனமா கொடுக்குறேன். இதுதவிர, போதுமான அளவுக்கு வைக்கோலும் தவிடும் கொடுக் குறதுனால, இங்கவுள்ள மாடுகள் நல்லா ஊட்டமா வளருது. பால் விற்பனை மூலம் வருஷத்துக்கு 1,10,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. பணம் கொடுத்து வெளியில தீவனம் வாங்காததுனால, இந்தத் தொகை முழுவதும் லாபமா நிக்குது.
காய்கறி, கீரை
முன்ன 3 ஏக்கர்ல கீரை சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தேன். அதுல சில சிரமங்கள் இருந்ததுனால, கீரை சாகுபடி பரப்பை பெருமளவு குறைச்சுட்டேன். அரை ஏக்கர்ல கீரைகள், காய்கறிகள் சாகுபடி செய்றேன். செலவுகள் போக வருஷத்துக்கு 60,000 ரூபாய் லாபம் கிடைக்குது.
இயற்கை அங்காடிகள்
என்னோட பண்ணையில உற்பத்தி செய்ற விளைபொருள்களை... சென்னை, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங் கள்ல உள்ள 30-க்கும் மேற்பட்ட இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புறேன். இதுமட்டு மல்லாம, பல மாவட்டங்கள்ல எனக்கு நேரடியான வாடிக்கையாளர்கள் இருக்காங்க. அவங்களுக்கும் என்னோட விளைபொருள் களை அனுப்புறேன். விவசாயம், உணவு தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சி, எங்க நடந்தாலும் அதுல போயி கலந்துக்குவேன். அங்க வரக்கூடிய மக்களைச் சந்திச்சு, என்னோட விளைபொருள்களை அறிமுகப் படுத்துறது மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் எனக்கு நிறைய வாடிக்கை யாளர்கள் கிடைச்சுக்கிட்டே இருக்காங்க. அதுதவிர நண்பர்கள், உறவினர்கள் மூலமாகவும் நிறைய தொடர்புகள் கிடைக்குது.
இடுபொருள்கள்
நெல், நிலக்கடலை, காய்கறி, கீரை உள்ளிட்ட பயிர்கள் நல்லா செழிப்பா வளர... அடியுரமா எரு, புங்கன் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு கொடுக்குறேன். மேலுரமா பஞ்சகவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல் தெளிக் குறேன். பூச்சித் தாக்குதல் ஏற்பட்டா மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பேன்.
மொத்த லாபம்
7 ஏக்கர் நிலக்கடலை சாகுபடி மூலம், 2,10,000 ரூபாய், 7 ஏக்கர் நெல் சாகுபடி 1,50,000 ரூபாய், மாடுகள் வளர்ப்பு மூலம் 1,10,000 ரூபாய், காய்கறி, கீரை சாகுபடி மூலம் 60,000 ரூபாய்.... ஆக மொத்தம் என்னோட இயற்கை விவசாயப் பண்ணையம் மூலம் வருஷத்துக்கு 5,30,000 ரூபாய் லாபம் கிடைக்குது’’ என மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு, தரணிவேந்தன்,
செல்போன்: 88838 99935.

கீரை சாகுபடிக்கு கைகொடுக்கும் தெளிப்புநீர்ப் பாசனம்
‘‘கீரை சாகுபடிக்குத் தெளிப்பு நீர் பாசனம் ரொம்பவே உறுதுணையா இருக்கு. இது என்னோட நேரடி அனுபவம். கீரைகள் மேல நேரடியா, நல்லா வேகமா தண்ணீர் தெளிக்குறதுனால பூச்சிகள் வர்றதில்ல. பாசன நீரும் மிச்சமாகுது. மண் அரிப்பும் ஏற்படுறதில்ல. பாத்தியும் சேதம் அடையாது’’ என்கிறார் தரணிவேந்தன்.
மீன் குளம்!
‘‘10 சென்ட் பரப்புல சின்னதா ஒரு குளம் அமைச்சுருக்கேன். மீன் அமிலம் தேவைக்காக, இதுல மீன்கள் வளர்க்குறேன். எங்களோட வீட்டுத் தேவைக்கும் இதுல மீன்கள் கிடைச்சுடுது’’ என்கிறார் தரணி வேந்தன்.