ஆசிரியர் பக்கம்
மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

ஒரு ஏக்கர்... 110 நாள்கள்... ரூ.69,000 வருமானம்! குஷியான வருமானம் கொடுக்கும் குள்ளக்கார்!

வயலில் முருகேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வயலில் முருகேசன்

மகசூல்

யற்கை விவசாயம் செய்யுறது மட்டுமல்லாம, நாம எத்தனை பேரை இயற்கை விவசாயத்துக்கு மாத்த முடியுமோ மாத்தணும். அதுதான் இயற்கை விவசாயத்துல நாம வெற்றி பெற்றதுக்கு அடையாளம்” என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகேசன். அறுவடை செய்த நெல்லை, விதை நெல்லாக விற்பனை செய்து வருகிறார்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப் பட்டி – கூந்தன்குளம் சாலையில், மூலக்கரைப் பட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் இருக்கிறது கடம்பன்குளம். ஊர் எல்லையிலேயே உள்ளது முருகேசனின் நெல் வயல். அமுதக்கரைசல் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

‘‘நெல், வாழை, நிலக்கடலைதான் எங்களோட முக்கிய விவசாயம். 9-ம் வகுப்பு வரைதான் படிச்சேன். அதுக்குப் பிறகு அப்பாவோடு சேர்ந்து விவசாய வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். எங்க தாத்தா காலம் வரைக்கும் எந்த ரசாயன உரத்தையோ, பூச்சிக்கொல்லி மருந்தையோ பயன் படுத்துனதில்ல. ‘மண்ணுக்கு உரத்தைத் தூவி, அதைச் சாகடிச்சு கிடைக்குற மகசூலை விட, இயற்கையா ஒரு படி கிடைச்சாக்கூடப் போதும்’னு அடிக்கடி சொல்வார். பசுமைப் புரட்சிக்குப் பிறகுதான் ஊருல எல்லா விவசாயிங்களும் ரசாயன விவசாயத்துக்கு மாறினாங்க. எங்க அப்பாவும், தாத்தா பேச்சைக் கேட்காம ரசாயன உரத்தை இஷ்டத்துக்கும் தூவுனாரு.

வயலின் அருகே முருகேசன்
வயலின் அருகே முருகேசன்


ரசாயனத்தால் பாதிப்புக்குள்ளான நெல் வயல்ல, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி நாத்தம் வீசுச்சு. வேற வழியில்லாம மூக்குல துண்டைக் கட்டிக்கிட்டு, நானும் அந்த விஷத்தைக் கையில அள்ளி வீச ஆரம்பிச்சேன். ரசாயன விவசாயத்துமேல விருப்பம் இல்லாம, மும்பையில 4 வருஷம் தனியார் பஸ்ஸுல கண்டக்டரா வேலை பார்த்தேன். விடுமுறையில ஊருக்கு வந்தப்போ, ஆரம்பத்துல கிடைச்ச மகசூல், அப்படியே படிப்படியாக் குறைஞ்சுடுச்சு. ‘ரசாயன உரத்தைப் போட்டதுனால மண்ணு எப்படி ஆயிட்டுதுன்னு பார்த்தீயளா?’ன்னு அப்பாகிட்ட கேட்டேன். ‘நம்ம நிலம் மட்டுமாடா இப்படிக் கிடக்கு. ஊருல எல்லா விவசாயிங்க நிலமும் இப்படித்தானே கிடக்கு. கூட ரெண்டு உழவு அடிச்சா சரியாப் போகும். இந்தத் தடவை வேற கம்பெனி உரம், பூச்சிமருந்தை வாங்கி அடிச்சு பார்ப்போம்’னு சொன்னார். எனக்கு ரசாயன உரத்தைப் பயன்படுத்துறதுல கொஞ்சமும் விருப்பமே இல்லாமத்தான் இருந்துச்சு.

நாலு வருஷத்துக்கு முன்னால, ‘கிராமப்புற மேம்பாட்டு அமைப்பு’ மூலமா எங்க பகுதி விவசாயிகளுக்கு ‘ஒருநாள் இயற்கை விவசாயப் பயிற்சி’ கொடுத்தாங்க. வேளாண்மைத்துறை அதிகாரிகள், முன்னோடி இயற்கை விவசாயிகளும் வந்திருந்தாங்க. ‘இயற்கை விவசாயம் செய்யுங்க. அடியுரம், வளர்ச்சியூக்கி, பூச்சிவிரட்டி என எல்லா இடுபொருளுமே இயற்கை இடுபொருளாவே பயன்படுத்துங்க’னு வேளாண்மைத்துறை அதிகாரிகளே பேசுனதுதான் எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. சத்தியமங்கலம் சுந்தரராமன் ஐயாவோட பண்ணைக்கும் விவசாயிகளை அழைச்சுட்டுப் போனாங்க.

‘‘‘கொழுத்தவனுக்குக் கொள்ளு’ன்னு சொல்ற மாதிரி, இந்தக் குள்ளக்கார் அரிசி சாதத்ததைச் சாப்பிட்டா, உடல் எடை குறையும்னு சொல்றாங்க.’’


இயற்கை வேளாண்மைக்கு அழைத்து வந்த சுந்தரராமன்

மண்புழு உரப்படுகை, மட்கு உரப்பலகை, வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டி, ஊறல் கரைசல்கள் என, உயிர்ம வேளாண்மையை விவரிக்கும் பெரும் விவசாய ஆராய்ச்சிக் கூடமாவே இருந்துச்சு. இனிமேல் இயற்கை விவசாயத்துக்கு மாறணும்னு அங்கேயே முழு மனசோட முடிவெடுத்தேன். ‘உங்க ஊர்ல இயற்கை விவசாயம் செய்துட்டு வர்ற நாலஞ்சு விவசாயிங்களோட தோட்டத்தைப் பார்க்குறது மட்டுமல்லாம, அவங்களோட அனுபவத்தையும் கேட்டுக்கணும். அப்பத்தான் உங்களுக்கு நம்பிக்கை வரும்’னு சுந்தரராமன் ஐயா சொன்னார்.

பணகுடியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சமுத்திரபாண்டி மகேஷ்வரன், சுத்து வட்டாரத்துல உள்ள விவசாயிங்களை இயற்கை விவசாயத்துக்கு மாத்தினதைக் கேள்விப்பட்டு, அவரைச் சந்திச்சேன். அவர்தான் எனக்குப் பசுமை விகடனை அறிமுகப்படுத்தினார். புகழ்ராஜ், மகேந்திரன், காணி ஆகிய என்னோட நண்பர்களும் நான் இயற்கை விவசாயத்துக்கு மாறக் காரணம். எல்லாத்துக்கும் மேல என்னோட மனைவி பானுமதிதான் எனக்குத் தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தினாங்க.

நிலத்துல மூணு தடவை பல தானிய விதைப்பு விதைச்சு, பூப்பூத்த நிலையில மடக்கி உழுதேன். இலைதளைகளை நிலத்துல பரப்பியும், தொழுவுரத்தை போட்டும் மண்ணை வளப்படுத்தினேன். வழக்கமான ஒட்டுரக நெல்லை சாகுபடி செய்யாம, பாரம்பர்ய ரக நெல்லைச் சாகுபடி செய்ய லாம்னு நினைச்சேன். நாலஞ்சு விவசாயி கள்கிட்ட கேட்டப்போ, ‘குள்ளக்கார்’ ரகத்தைச் சாகுபடி செய்யச் சொன்னாங்க. மூணு வருஷமா குள்ளக்கார் சாகுபடி செஞ்சு நல்ல மகசூல் எடுத்துட்டு வர்றேன். இப்போ ஒரு ஏக்கர்ல ஆத்தூர் கிச்சலிச் சம்பாவும், ஒன்றரை ஏக்கர்ல அம்பை-16 ஒட்டு ரகத்தையும் நடவு செஞ்சு ஒரு மாசமாகுது” என்றார்.

இடுபொருளுடன்
இடுபொருளுடன்உடல் எடையைக் குறைக்கும் குள்ளக்கார்

இறுதியாக விற்பனை மற்றும் வருமானம் குறித்துப் பேசியவர், ‘‘இயற்கை விவசாயத்துக்கு மாறினதுல இருந்து நான் சந்திக்கிற விவசாயிங்ககிட்ட இயற்கை விவசாயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லிட்டு வர்றேன். ‘கொழுத்தவனுக்குக் கொள்ளு’ன்னு சொல்ற மாதிரி, இந்தக் குள்ளக்கார் அரிசி சாதத்தைச் சாப்பிட்டா, உடல் எடை குறையும்னு சொல்றாங்க. இந்த ரகம் விவசாயிகள் மத்தியில் விதையா பரவலாக்கம் செய்யணும்னுதான் விதை நெல்லா விற்பனை செய்றேன்.

விதைநெல்லாக விற்பனை

போன போகத்துல ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில குள்ளக்கார் சாகுபடி செஞ்சதுல 1,158 கிலோ நெல்லு கிடைச்சது. ஒரு கிலோ 60 ரூபாய்னு, விதை நெல்லாவே விற்பனை செஞ்சதுல 69,480 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. அதுல, உழவு முதல் அறுவடை வரைக்குமான செலவுகள் மொத்தம் 20,050 ரூபாய் கழிச்சதுல 49,430 ரூபாய் லாபமாக் கிடைச்சது. இயற்கை விவசாயிகளின் தொடர்புகள் இருக்குறதுனால விற்பனைக்கு எந்தச் சிரமமும் இல்ல. அடுத்த போகத்துல அறுவடை செய்யுற நெல்லை பாதி அரிசியாவும், அவலாவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யப் போறேன். அந்த அரிசியையையும், அவலையும் மக்கள் மத்தியில கொண்டு சேர்க்கப் போறேன்” என்றார்.

செலவு, வரவு கணக்கு
செலவு, வரவு கணக்குதொடர்புக்கு, முருகேசன்,

செல்போன்: 63807 63038.


இப்படித்தான் சாகுபடி செய்யணும்

இயற்கை முறையில் ஒரு ஏக்கர் பரப்பில் குள்ளக்கார் நெல் சாகுபடி செய்வது குறித்து முருகேசன் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே:

குள்ளக்கார் ரக நெல் சாகுபடி செய்ய ஐப்பசி, கார்த்திகைப் பட்டம் ஏற்றது. இதன் வயது 100 முதல் 110 நாள்கள். தேர்வு செய்த பட்டத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக மூன்று முறை உழவு செய்ய வேண்டும். டிரம் சீடர் மூலம் விதைப்பதாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைநெல் தேவை. நாற்றாக நடுவதாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 கிலோ விதை நெல் தேவை.

ஒரு பெரிய பாத்திரத்தில் 25 லிட்டர் தண்ணீர் ஊற்றி, 2 கிலோ கல் உப்பைப் போட்டுக் கரைசலாக்கி அதனுள் விதைநெல்லைப் போட்டு அலச வேண்டும். மேலே மிதக்கும் சாவி, பொக்கு, உமி போன்ற தூசிகளை அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் ஒருமுறை தண்ணீரில் அலசி எடுக்க வேண்டும். பிறகு, 25 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து அதில் 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, விதைநெல்லைச் சணல் சாக்கினுள் போட்டுக் கட்டி, 15 நிமிடங்கள் வரை தண்ணீரை வடிய விட வேண்டும். பிறகு, அந்த மூட்டையை ஓர் அறைக்குள் வைத்து இன்னொரு சணல் சாக்கினால் மூடி, அதன்மீது வைக்கோலைப் பரப்ப வேண்டும்.

நெல் வயல்
நெல் வயல்


ஒருநாள் முழுவதும் வைத்தால், நெல்லில் முளைப்பு தெரியும். அதை அப்படியே நாற்றங்காலில் விதைக்க வேண்டும். 20 முதல் 22-ம் நாளில் நாற்றங்காலிலிருந்து எடுத்து வயலில் நடவு செய்துவிட வேண்டும். 25 நாள்களுக்கு மேல் சென்றுவிட்டால், நாற்று முதிர்ச்சி அடைந்துவிடும்.நாற்றுக்கு நாற்று முக்கால் அடி, வரிசைக்கு வரிசை முக்கால் அடி என்ற இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவுக்கு முன்பாக நாற்றைப் பஞ்சகவ்யாவில் விதை நேர்த்தி செய்து நட வேண்டும். (நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்கச்செய்து எடுத்து நட வேண்டும்) இதனால், வேர் சம்பந்தமான நோய்கள் தாக்காது. நடவு செய்த அன்று முதல் நீரும் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வந்தாலே போதும். நடவு செய்த 15, 30 மற்றும் 45-ம் நாளில் களை எடுக்க வேண்டும்.

15 மற்றும் 45-ம் நாளில் களை எடுப்புக்குப் பிறகு, ஒரு ஏக்கருக்கு 300 கிலோ செறிவூட்டப்பட்ட தொழுவுரத்தைப் பரவலாகத் தூவ வேண்டும். (செறிவூட்டப்பட்ட தொழுவுரமாகத் தூவுவதால், மூன்றாவது உழவின்போது அடியுரமாக மட்கிய சாணம் தேவையில்லை. தேவைப்பட்டால் ஏக்கருக்கு 4 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி உழவு செய்யலாம்) 20-ம் நாளிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும். 25-ம் நாளிலிருந்து 15 நாள்கள் இடைவெளியில் மீன் அமிலம் மற்றும் பஞ்சகவ்யாவை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். கதிர் பிடிக்கத் தொடங்கும் நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி தேமோர்க்கரைசல் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

நெல்
நெல்

பாரம்பர்ய நெல் ரகத்தைப் பொறுத்தவரையில் பூச்சி, நோய்த்தாக்குதல்கள் பெரும்பாலும் இருக்காது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 30-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை மூலிகைப்பூச்சிவிரட்டியை (10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி) கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 100 முதல் 110-ம் நாளில் அறுவடை செய்யலாம்.

செறிவூட்டப்பட்ட தொழுவுரம்

ஒரு பிளாஸ்டிக் தாளை விரித்து, அதில், 300 கிலோ தொழுவுரத்தைக் கொட்டி அதில் 2 கிலோ உளுந்துமாவு, 2 கிலோ நாட்டுச்சர்க்கரைத்தூளைக் கலக்க வேண்டும். அதன் மீது 10 லிட்டர் நாட்டுமாட்டுச் சிறுநீரைத் தெளித்துப் புட்டுப் பதத்தில் கிளறி கலவையாக்க வேண்டும். அதை ஒரு வாரம் வரை வைத்திருந்தால் செறிவூட்டப்பட்ட தொழுவுரம் தயார்.