மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

நெல், பால், வெல்லம்.. ஆண்டுக்கு ரூ.3,44,000 லாபம்! ஒய்வு காலத்திலும் உற்சாகமாக உழைக்கும் பொறியாளர்!

நெல் வயல்
பிரீமியம் ஸ்டோரி
News
நெல் வயல்

மகசூல்

படிச்சோம் விதைச்சோம்

“நான் விவசாயத்துல ஈடுபடுறதுக்கு முன்னாடியே பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்சுட்டேன். பணி ஓய்வுக்குப் பிறகு விவசாயம் செய்ய ஆரம்பிச்சதும் இந்தப் புத்தகம்தான் பல வகைகள்லயும் எனக்குப் பக்க பலமா இருந்துகிட்டு இருக்கு. விவசாயம் செய்றது ரொம்பவே சிரமமான காரியம்... இருந்தாலும் கூட இதைப் படிக்குறப்ப உற்சாகமா உழைக்க வைக்குது. இது ஒரு பத்திரிகையாக மட்டும் இல்லாமல்... விவசாயிகளோட தேடல்களுக்கு வழிகாட்டக்கூடிய பல்கலைக்கழகமாகவும், விளைபொருள்களை விக்குறதுக்கு உதவக்கூடிய விற்பனை மையமாகவும், விவசாயிகளை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு குடையாகவும் இருக்கு” என உணர்வுபூர்வமாகப் பேசும் சேகர், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இவர், கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

சேகர்
சேகர்

ஒரு பகல்பொழுதில் இவருடைய பண்ணைக்குச் சென்றோம். பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர், இன்முகத்தோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “என்னோட அப்பா, விவசாயி. நான் பொறியியல் பட்டப் படிப்பு முடிச்சிட்டு 1981-ம் வருஷம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துல பொறியாளரா வேலைக்குச் சேர்ந்து துணை கண்காணிப்பாளரா பதவி உயர்வு பெற்றேன். அடுத்த சில வருஷங்கள் கழிச்சு. அந்த வேலையை ராஜினாமா செஞ்சுட்டு... சிங்கப்பூர் மலேஷியா, சீனா, கத்தார் உள்ளிட்ட நாடுகள்ல 17 வருஷம் பணியாற்றினேன்.

சாஹிவால், மணப்பாறை மாடுகள்

பிள்ளைகளோட படிப்பு, எதிர்காலம் கருதி 2011-ம் வருஷம் சொந்த ஊருக்கு திரும்பி வந்து இங்கவுள்ள ஒரு தனியார் கம்பெனியில வேலைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல தான் எங்க குடும்பத்துக்குச் சொந்தமான விவசாய நிலத்துல 5 ஏக்கரை பிரிச்சு என் பேருல அப்பா எழுதி வச்சாரு. பசுமை விகடன் ஏற்படுத்தின தாக்கத்துனால, இயற்கை விவசாயம் செய்யணும்ங்கற ஆசை இருந்தாலும் கூட, ஏதோ ஒருவித தயக்கத்துனால, மத்த விவசாயிங்க மாதிரி நானும் ஆரம்பத்துல ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வீரிய ஒட்டு நெல் ரகங்கள் தான் சாகுபடி செஞ்சேன். நெல் சாகுபடியில நான் எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கல. எருவுக்காகவும், பால் உற்பத்திக்காகவும் ரெண்டு கலப்பின சீமை மாடுகள் வாங்கினேன். அந்த மாடுகளோட பசுந்தீவன தேவைக்காக, ஒரு ஏக்கர்ல கோ-5, சூப்பர் நேப்பியர் தீவனப்புல் சாகுபடி செஞ்சேன்.

மாடு வளர்க்க ஆரம்பிச்சதுனால, போதுமான அளவுக்குச் சாணம் கிடைச்சுது. நெல் சாகுபடிக்கு... அடியுரமா எருவோடு வேப்பம் புண்ணாக்கு கலந்து போட்டேன். அதனால் ஏற்பட்ட பலன்களைக் கண்கூடா உணர முடிஞ்சுது. அதனால, முழுமையா இயற்கை விவசாயத்துக்கு மாறி பசுமை விகடனோட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிச்சி பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கரும்பு உள்ளிட்ட மற்ற பயிர்களையும் இயற்கை முறையில சாகுபடி செஞ்சேன். கலப்பின சீமை மாடுகளோட சாணத்தை விட, நாட்டுமாடுகளோட சாணத்துலதான் நுண்ணுயிரிகள் அதிகம்... மண்ணைச் சீக்கிரம் வளப்படுத்தும்னு பசுமை விகடன்ல படிச்சதுனால, நாட்டு மாடுகள் வாங்க முடிவெடுத்தேன். 75 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து சாஹிவால் பசு ஒண்ணும், 32 ஆயிரம் ரூபாய் விலை கொடுத்து மணப்பாறை பசு ஒண்ணும் வாங்கினேன்.

பண்ணையில் கறவை மாடுகள்
பண்ணையில் கறவை மாடுகள்

தொழுவத்துல நாட்டு மாடுகளை ஒரு இடத்துலயும் கலப்பின சீமை மாடுகளை வேற இடத்துலயும் தனிதனியா கட்டிப்போட்டு பரமாரிக்குறேன். நாட்டு மாடுகளோட கழிவுகளைத்தான் இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்திக்குறேன். பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம் கிடைக்குற வைக்கோலை மாடுகளுக்கு உலர் தீவனமா பயன்படுத்திக்குறேன்.

மாடுகளைப் பராமரிக்க வேலையாள்கள் இருக்காங்க. மாடுகளைக் குளிப்பாட்டுறது, தொழுவத்தைச் சுத்தம் செய்றது, மாடுகளுக்குத் தினமும் ரெண்டு வேளை தீவனம் கொடுக்குறது, உடல் நலக்குறைவு ஏற்பட்டா, அதுங்களுக்கு மருந்து கொடுக்குறதுனு எல்லா வேலைகளையும் அவங்க ரொம்ப சரியா செய்றாங்க. அதனால என் பண்ணையில உள்ள மாடுகள், முறையான கவனிப்போடு நல்ல ஆரோக்கியமா வளர்ந்துக்கிட்டு இருக்கு. பால் கறக்குறதுக்கு நவீன எந்திரம் வச்சிருக்கோம். அதனால ரொம்ப எளிதா பால் கறக்க முடியுது. கறக்குற பாலை அக்கம் பக்கத்துல உள்ள வீடுகளுக்கும் டீக்கடைகளுக்கும் விற்பனை செய்றேன். உபரியாக உள்ள பாலை தனியார் பால் நிறுவனத்துக்கு விற்பனை செய்றேன்.

பாரம்பர்ய நெல் ரகங்கள்

இந்தப் பண்ணையோட மொத்த பரப்பு 5 ஏக்கர். இதுல மூன்றரை ஏக்கர்ல கறுப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, தங்கச் சம்பா, தூயமல்லி உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்கள் சாகுபடி செய்றேன். நாட்டு மாடுகளோட கழிவுகளைப் பயன்படுத்தித் தயார் செய்ற ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா உள்ளிட்ட இடுபொருள்கள் கொடுக்குறதுனால, பயிர்கள் நல்லா செழிப்பா விளையுது. பயிர் வளர்ச்சி ஊக்கியா மீன் அமிலமும் பயன்படுத்திட்டு வர்றேன். பூச்சி, நோய்த்தாக்குதல்களைக் கட்டுப்படுத்த பத்திலைக்கரைசல், அக்னி அஸ்திரம் கொடுக்குறேன். ஓவ்வொரு வருஷமும் நெல் சாகுபடியை தொடங்குறதுக்கு முன்னாடி, நாற்றங்கால்லயும், சாகுபடி நிலத்துலயும் பசுந்தாள் விதைப்பு செய்றதை வழக்கமா வச்சிருக்கேன். அடியுரமா போதுமான அளவுக்கு எருவும், இலைதழைகளும் கொடுக்குறேன். அரை ஏக்கர்ல கரும்பு உற்பத்தி செஞ்சு. அதுல வெல்லமும் நாட்டுசர்க்கரையும் தயார் பண்ணி விற்பனை செய்றேன்’’ என்று சொன்னவர் மகசூல் மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பண்ணையில் கறவை மாடுகளுடன்
பண்ணையில் கறவை மாடுகளுடன்

வருமானம்

பாரம்பர்ய நெல் சாகுபடியில ஒரு ஏக்கருக்கு 25-30 மூட்டை (60 கிலோ) நெல் மகசூல் கிடைக்குது. மூன்றரை ஏக்கர் நெல் சாகுபடி மூலம் குறைந்தபட்சம் 5,250 கிலோ நெல் உற்பத்தி செய்றேன். இதை அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். பட்டை தீட்டப்படாத அரிசியா அரைக்கும்போது 60 சதவிதம் அரிசி கிடைக்குது. 5,250 கிலோ நெல்லுல இருந்து 3,307 கிலோ அரிசி கிடைக்குது. ஒரு கிலோவுக்குச் சராசரியா 80 ரூபாய் வீதம் விலை கிடைக்குது. 3,307 கிலோ அரிசி விற்பனை மூலம் மொத்தம் 2,64,560 ரூபாய் வருமானம் கிடைக்கும். மூன்றரை ஏக்கர் நெல் சாகுபடி மூலம் கிடைக்குற 200 வைக்கோல் கட்டுகளோட விலை மதிப்பு 20,000 ரூபாய். அரிசி அரைக்கும்போது கிடைக்குற குருணை தவிடோட மொத்த விலை மதிப்பு 15,000 ரூபாய். ஆக, மூன்றரை ஏக்கர் நெல் சாகுபடி மூலம் எனக்கு 2,99,560 ரூபாய் வருமானம் கிடைக்குது.

மூன்றரை ஏக்கர் நெல் சாகுபடி செய்ய... பசுந்தாள் விதைப்பு, உழவு, நாற்று உற்பத்தி, நாற்றுப்பறிப்பு, நடவு, இயற்கை இடுபொருள்கள், களையெடுப்பு, அறுவடை உள்பட மொத்தம் 1,00,000 ரூபாய் செலவாகுது. அரிசி அரைக்கக் கூலி, போக்குவரத்து செலவுகளையும் சேர்த்து கணக்கு பண்ணினா, மொத்தம் 1,30,000 ரூபாய் செலவாகும். இந்தச் செலவை கழிச்சோம்னா... மூன்றரை ஏக்கர் பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம், 1,69,560 லாபம் கிடைக்குது.

கரும்புத் தோட்டம்
கரும்புத் தோட்டம்

கரும்பு

அரை ஏக்கர்ல கரும்பு உற்பத்தி செஞ்சு, வெல்லமாவும், நாட்டுச்சர்க்கரையாவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். இந்த ரெண்டுலயும் வருஷத்துக்கு மொத்தம் 1,600 கிலோ விற்பனை செய்றேன். ஒரு கிலோவுக்கு 110 ரூபாய் வீதம் 1,76,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. கரும்பு சாகுபடி செய்றதுக்கான செலவு, வெல்லம், நாட்டுச்சர்க்கரை உற்பத்தி செய்றதுக்கான செலவு எல்லாம் போக 70,000 ரூபாய் நிகர லாபமா கிடைக்குது.

பால்

இப்ப என்னோட பண்ணையில மொத்தம் 10 பசுமாடுகள் இருக்கு. இதுல ஏதாவது 3-4 மாடுகள் மூலம் வருஷம் முழுக்கப் பால் கிடைக்குது. தினமும் சராசரியா 11 லிட்டர் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் 40 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதுமூலமா வருஷத்துக்கு 1,60,600 ரூபாய் வருமானம் கிடைக்குது. அடர் தீவனம், வேலையாள்கள் சம்பளம், மாட்டுக்கொட்டகைகான மின்சாரக் கட்டணம் எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு மொத்தம் 55,700 ரூபாய் செலவு போக, மீதி 1,04,900 ரூபாய் நிகரலாபமா கிடைக்குது. மாடுகள் ஈனும் காளைக்கன்றுகளை விற்பனைச் செய்றது மூலமா கூடுதல் வருமானம் கிடைக்குது.

மொத்த வருமானம்

பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம் 1,69,560 ரூபாய், கரும்பு சாகுபடி மூலம் 70,000 ரூபாய், மாடுகள் வளர்ப்பு மூலம் 1,04,900 ரூபாய்... ஆக இந்த 5 ஏக்கர் பண்ணை மூலம் எனக்கு வருஷத்துக்கு 3,44,460 ரூபாய் லாபம் கிடைக்குது. இந்த லாபம் குறைவுதான். காரணம் எல்லா வேலைகளுக்கும் ஆட்களை வெச்சுதான் செய்றேன். ஆள்கூலி செலவுதான் லாபத்துல பெருமளவு போயிடுது. கரும்புல இப்பதான் வெல்லமாக்குற முயற்சியில இறங்கியிருக்கேன். அதனால செலவு கூடுதலா இருக்கு. அதேநேரம் குடும்ப ஆட்கள வெச்சு செய்யும்போது விவசாயத்துல லாபம் அதிகரிக்கும். அதனால இனிவரும் காலங்கள்ல ஆள்கூலி குறைச்சு லாபத்த அதிகமாக்குற முயற்சிகள்ல இறங்கப்போறேன்’’எனத் தெரிவித்தார்.

தொடர்புக்கு: வை.சேகர்,

செல்போன்: 94434 25750

தங்கமாக மின்னும் நெற்கதிர்கள்
தங்கமாக மின்னும் நெற்கதிர்கள்

உடனே அரைச்சிடமாட்டேன்!

‘‘அறுவடை செய்ற நெல்லை உடனே அரைச்சிடமாட்டேன். ஆறு மாசம் வரைக்கும் சணல் சாக்குல கட்டி வச்சிருந்து, அதுக்குப் பிறகு செமி பாலிஷ் அரிசியா அரைச்சு விற்பனை செய்றேன். தூயமல்லி, தங்கச்சம்பா அரிசியைக் கிலோ 80 ரூபாய்க்கும், கறுப்பு கவுனி அரிசியை 150 ரூபாய்க்கும், மாப்பிள்ளைச் சம்பா அரிசியைக் கிலோ 100 ரூபாய்க்கும், கருங்குறுவை அரிசி கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன்’’என்கிறார் சேகர்.

இயற்கை சேவை!

‘‘வயல் வரப்புகள்ல அப்பா காலத்திலேயே தேக்கு மரங்கள் நடப்பட்டு வளர்ந்திருச்சு. வரப்பை அகலப்படுத்தி... ரெண்டு வரிசைகளாகத் தேக்கு, மகோகனி மரக்கன்றுகளை நட்டுருக்கேன். வாழையும் பயிர் பண்ணிக்கிட்டு இருக்கேன். தேக்கு மரங்களைச் சுத்திலும் மிளகு பயிர் பண்ணி தேக்கு மரங்கள்ல ஏத்திவிடலாம்ங்கற ஒரு யோசனையில இருக்கேன். நாட்டுக்கோழி பண்ணை அமைக்கவும் திட்டமிட்டிருக்கேன். இயற்கை விவசாயம் செய்றதுங்கறது, இந்த நாட்டு மக்களுக்கும், இயற்கைக்கும் செய்ற சேவை. அதனால என்னோட பண்ணைக்கு ‘இயற்கை சேவை பண்ணை’னு பெயர் வெச்சிருக்கேன்” என்கிறார் சேகர்.

இரா.நெடுஞ்செழியன்