
நெல் ரகங்கள் மட்டுமல்லாது மரங்கள், செடிகள், மிளகு போன்றவற்றையும் பயிரிட்டும், வளர்த்தும் வருகிறார் ராமன்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பில் அதிக கவனம் பெற்றவர் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சேகரித்து, பரவலாக்கிவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி விவசாயி ராமன். வயநாடு மாவட்டத்தில் உள்ள செறுவயல் கிராமத்தைச் சேர்ந்த இவர், ‘குறிச்சியாஸ்’ என்ற பழங்குடி இனத்தவர். தன்னுடைய 10 வயதிலேயே விவசாயம் செய்யத் தொடங்கியவருக்கு, இப்போது 75 வயது. இவருக்குச் சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த 3 ஏக்கர் நிலமும் நெல் பாதுகாப்புப் பெட்டகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அங்கு பாரம்பர்ய நெல் வகைகளைக் காத்து, வளர்த்துவருகிறார்.
2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் பாரம்பர்ய நெல் சேகரிப்புப் பணிகளைத் தொடங்கிய ராமன் 2006-07-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ‘நமது நெல்லைக் காப்போம்’ இயக்கத்தின் மூலம் பல ரகங்களை மீட்டெடுத்தார். கேரளாவில் நெல் சாகுபடியில் தனித்த அடையாளம் பெற்ற வயநாடு மாவட்டத்தில் மறைந்துபோன மண்ணு வெளியன், செம்பாகம், தொண்டி, சென்னாதொண்டி, செட்டுவெளியன், பால்வெளியன், கனலி, கந்தகசாலா, ஜீரகசாலா மற்றும் கயமா உள்ளிட்ட 55 ரகங்களை மீட்டெடுத்தார். அந்த நெல் ரகங்களைத் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து மற்ற விவசாயிகளுக்கும் வழங்கினார். 2021-ம் ஆண்டு வரை 60 வகையான நெல் ரகங்களைப் பயிர் செய்துள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் ரகங்களைப் பாதுகாத்துவரும் ராமன், விவசாயிகளிடம் மட்டுமல்லாது பள்ளிகள், கல்லூரிகள் எனப் பல தரப்பினரிடமும் பாரம்பர்ய நெல் ரகங்களின் முக்கியத்துவத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார். கேரள அரசு இவருடைய பாரம்பர்ய நெல் ரகங்கள் குறித்த அறிவை மற்றவர்களும் அறிந்துகொள்ளும் வண்ணம் `ஃபார்ம் டூரிஸம்’ முறையில் இவருடைய பண்ணைக்கு விவசாயிகளை அழைத்துச் சென்றிருக்கிறது.

“நம் நாட்டின் மரபார்ந்த விதைகளை ‘பசுமைப் புரட்சி’ அழித்துவிட்டது என்றாலும், நம்மால் ஓரளவுக்கு அவற்றை மீட்டெடுக்க முடியும் என்று நம்பினேன். ‘தணல்’ உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் எனக்குப் பக்கபலமாக இருந்தன. நான் பாரம்பர்ய நெல் ரக சேகரிப்புக்கு வருவதற்கு முன் வீரிய விதைகளும், நவீன நெல் ரகங்களுமே வயநாட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தன. இன்று வயநாட்டில் மட்டுமல்ல, கேரளாவின் பல பகுதிகளிலும் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்வதற்கு நான் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி...” எனும் ராமனை கேரள மக்கள் ‘நெல் அச்சன்’ (நெல் தந்தை) என்றே அழைக்கிறார்கள்.

நெல் ரகங்கள் மட்டுமல்லாது மரங்கள், செடிகள், மிளகு போன்றவற்றையும் பயிரிட்டும், வளர்த்தும் வருகிறார் ராமன். அவர் வயலுக்கு இந்தியா முழுக்க உள்ள விவசாயிகள், மாணவர்கள், ஆய்வாளர்கள் அனைவரையும் இயற்கை விவசாயத்தைக் கற்றுக்கொள்ள அழைக்கிறார். விதைகளை விற்பதில்லை என்று முடிவுடன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு 1 கிலோ, 2 கிலோ என்ற அளவில் விதைப்பெருக்கம் முறையில் கொடுக்கிறார். அவர்கள் அதைப் பயிர் செய்து கொடுக்க வேண்டும். “விதை ஒரு பண்டம் என்பதைவிட, அது ஒரு நேசம். அதனால் என்னால் அதை விற்க முடியாது” என்கிறார் இந்த பத்ம விவசாயி.
பாரம்பர்ய நெல் ரகங்கள் குறித்த கவனம் பரவலாகிவரும் இந்நேரத்தில், ராமனுக்கு பத்ம அறிவிக்கப்பட்டிருப்பது மரபு விதைகளைப் பாதுகாப்போருக்கும், பரவலாக்குவோருக்கும் உந்துசக்தியைக் கொடுத்துள்ளது!