நாட்டு நடப்பு
Published:Updated:

பகீர் கிளப்பும் கலப்பட பதநீர்... பதறும் பனைத் தொழிலாளர்கள்!

பதநீர் இறக்குதல்
பிரீமியம் ஸ்டோரி
News
பதநீர் இறக்குதல்

கலப்படம்

பனையிலிருந்து கிடைக்கும் இயற்கை பானமான பதநீர், உடலுக்குத் தேவையான குளிர்ச்சியையும், பலவிதமான சத்துகளையும் கொடுக்கிறது. இதன் தனித்துவமான சுவையின் காரணமாகவும் பலரும் பதநீரை மிகவும் விரும்பி அருந்துகிறார்கள். இந்த நிலையில்தான் அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கும் வியாபாரிகள், ரசாயன சுவையூட் டியைக் கலந்து கலப்பட பதநீர் விற்பனை செய்வதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்த உண்மை நிலையையும், இயல் பான அசல் பதநீர் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கினோம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஶ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், புத்தூர், தளவாய்புரம், சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பனை சார்ந்த தொழில்கள் அதிக அளவில் நடை பெற்று வருகின்றன. ஒருநாள் அதிகாலைப் பொழுதில் இந்தப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டோம்.

பனை மரம் ஏறுதல்
பனை மரம் ஏறுதல்

புத்தூரில் உள்ள பனை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்... பனைமரம் ஏறி, பதநீர் இறக்குவதற்குத் தேவைப் படக்கூடிய உபகரணங்களான சுண்ணாம்பு, கொட்டான், மட்டை, முறுக்குத்தடி, குச்சிக்கொம்பு, அரிவாள், கால்கட்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார்கள். இவர்களுடன் நாமும் சென்றோம். புத்தூரைச் சேர்ந்த பனை ஏறி பசியாப் பழம், தன்னுடைய தோட்டத்தில் உள்ள பனை மரத்தை வணங்கிவிட்டு, அதில் ஏற ஆயத்தமானார். இவரிடம் நாம் பேச்சு கொடுத்தபோது, “எங்க குடும்பத்தோட வாழ்வாதாரமே இதுதான். இந்தப் பகுதியில, என்னை மாதிரி இன்னும் பல விவசாயிகள், பனை மரங்களை சார்ந்து தான் ஜீவனம் நடத்திக்கிட்டு இருக்காங்க. தினமும் 50 மரத்துக்கு குறையாமல் ஏறி இறங்கினால்தான் கருப்பட்டி காய்ச்சுறதுக்குத் தேவையான பதநீர் இறக்க முடியும். எல்லாரும் நினைக்குற மாதிரி... நாங்க பதநீர் இறக்குறது அதை மட்டும் தனியே விற்பனை செய்றதுக் காக இல்ல. பெரும்பாலும் கருப்பட்டி காய்ச்சி விக்கிறதுக்காகத்தான் பதநீர் இறக்குறோம்.

பசியாப் பழம்
பசியாப் பழம்

பதநீர் இறக்குன சமயத்துல, வியாபாரிகள் யாராவது கேட்டால், ரொம்ப குறைவான அளவு மட்டும் பதநீர் விற்பனை செய்வோம். தினமும் காலையிலயும் சாயந்தரமும் ரெண்டு முறை பனைமரம் ஏறி, குருத்துகளை சீவினாதான் பதநீர் சுரந்து சரியா, கலையத்துக்கு வந்து சேரும். ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் வரைக்கும் பதநீர் சீஸன் இருக்கும். காற்று அதிகமா இருந்தா, பதநீர் வரத்து குறைஞ்சுடும். கருப்பட்டி காய்ச்சுறதுக்கு எங்களுக்கே அது போதுமானதா இருக்காது. வியாபாரிகளுக்கு குறைவான அளவுகூட பதநீர் விற்பனை செய்றது சிரமம். அதுமாதிரி யான சமயங்கள்லதான், வியாபாரிகள், கலப்பட பதநீர் அதிகமா விற்பனை செய்றாங்க. பதநீர் வரத்து ஓரளவுக்கு நல்லா இருக்குற சமயங்கள்லயும் கலப்பட பதநீர் விற்பனை செய்யப் படுது. அதிக லாபம் பார்க்கணும்ங்கற நோக்கத்துல அதுமாதிரி செய்றாங்க’’ எனத் தெரிவித்தார்.

பதநீர்
பதநீர்

விருதுநகர் மாவட்ட பனை தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம். “விருது நகர் மாவட்டத்துல சுமார் 1,000 குடும்பங்கள் பனைத் தொழிலை நம்பி இருக்கு. கருப்பட்டி, பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனம்பழம், ஓலைக் கொட்டான் முடை தல்னு பனையை சார்ந்து பலவிதமான தொழில்கள் நடந்துகிட்டு இருக்கு. பெரும்பாலும் பனை விவசாயிகள், மக்கள்கிட்ட நேரடியா பதநீர் விற்பனையில ஈடுபடுறதில்லை. பனை தொழிலாளர்களைப் பொறுத்தவரைக்கும், மரத்துல ஏறி, பதநீர் இறக்குறது நுங்கு வெட்டிக் கொடுக்குறதுனு அந்த வேலைகளை செஞ்சு கொடுத்துட்டு, அதுக்கான கூலியை வாங்கிக்கிட்டு போயிடுவாங்க. ஆனா, இப்ப பொது இடங்கள்ல விற்பனை செய்யப்படுற கலப்பட பதநீரால, பனை விவசாயிகளுக்கும் பனை தொழிலாளர்களுக்கும் கெட்டப் பேரு ஏற்பட்டுக் கிட்டு இருக்கு.

பதநீர் இறக்குதல்
பதநீர் இறக்குதல்

இயல்பான அசல் பதநீர் எது, கலப்பட பதநீர் எதுனு பொதுமக்களால அவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிக்க முடியுறதில்லை. கலப்பட பதநீரை குடிக்குற மக்கள், உடல் உபாதைகளுக்கு ஆளாகுறாங்க. வியாபாரிகள் சிலர், லாபத்துக்காக பதநீரோடு, அதிக அளவு தண்ணீர் கலந்து, அதோடு ரசாயன பொருளான சாக்ரீன் (Saccharine)சேர்க்குறாங்க. நிறத்துக்காக, சுண்ணாம்பும் சேர்க்குறாங்க. கலப்படம் செய்யப்பட்ட பதநீர்ல, வாசனைக்காக பனை ஓலை, வெட்டிவேர் போடுறாங்க. தொடர்ந்து பல வருஷங்களா, பதநீர் குடிச்சுக்கிட்டு இருக்குறவங்களே கண்டுபிடிக்க முடியாதபடி, ஓலைக் கொட்டான்ல கலப்பட பதநீரை ஊத்தி, அதுல நுங்கு கலந்து கொடுத்துடுறாங்க. நுங்கை, கலப்பட பதநீரோடு சேர்த்து சாப்பிடும்போது எந்தவித வித்தியாசமும் தெரியாது. ஆஹா, ஒரிஜினல் பதநீர் குடிச்சுட்டோம்னு நினைச்சு மக்கள் ரொம்ப திருப்தியடைவாங்க.

பாளை சீவும் பணி
பாளை சீவும் பணி

கலப்பட்ட பதநீர் ரொம்பவே கெடுதலானது. இந்த முறைகேடு நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருக்கு. இதை மக்கள்தான் தரம் பார்த்து கண்டறிய தெரிஞ்சுக் கணும். ஒரிஜினல் பதநீர் குடிச்சா, ரொம்ப நேரத்துக்கு அதோட சுவை, நம்ம நாக்குல நீடிச்சுருக்குறதை உணர முடியும். கலப்பட பதநீருனா, அப்படியிருக்காது. இப்ப பல இடங்கள்ல நுரை பொங்க பானையில பதநீர் ஊத்தி வச்சு வியாபாரம் செய்றாங்க. இயற்கையான பதநீர்ல‌ நுரை பொங்கி நிக்காது. ஒரு பாத்திரத்துல இருந்து இன்னொரு பாத்திரத்துக்கு மாற்றும்போது, மேற்பரப்புல சிறிது, சிறிதா தோன்றக்கூடிய நுரை குமிழிகள் உடைஞ்சு, உடனடியா தெளிவாயிடும். இயற்கையான பதநீர் எது, கலப்பட பதநீர் எதுனு தெரிஞ்சுகிட்டு, மக்கள் விழிப்போடு பதநீர் பருகணும்” எனத் தெரிவித்தார்.

பாலசுப்பிரமணியம், சங்குமணி
பாலசுப்பிரமணியம், சங்குமணி

சாக்ரீன் கலந்த கலப்பட பதநீரால் ஏற்படும் விளைவு குறித்து பேசிய, விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி, “சாக்ரின்ங்கறது கலோரிகள் இல்லாத இனிப்புப் பொருள். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தவித பலனும் இல்லை. சாதாரண சர்க்கரையைவிட 550 மடங்கு இனிப்புச்சுவை கொண்டது. இது வேதியியல் ஆய்வின் மூலமாக உருவாக்கப்பட்டது. செயற்கையாக உருவாக்கப்படும் வேதிப் பொருள்கள் அனைத்துமே, பொதுவாக உடல்நலனுக்கு தீங்கானதுதான். அந்த வகையில் சாக்ரினையும் நாம் தவிர்ப்பது நல்லது. ஒரு அவுன்சு உணவுப் பொருளில் அதிகபட்சம் 12 மி.கி மட்டும் சாக்ரின் எடுத்துக்கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அதைத்தாண்டி, அதிக அளவு சாக்ரின் சேர்க்கப்பட்ட உணவுப்பொருளை உட்கொண்டால், மனித உடலில் எதிர்விளைவுகள் ஏற்படக்கூடும். உலக அளவில் சாக்ரின் குறித்து நடைபெற்ற ஆய்வுகளின்படி, சிறுநீரகப் பாதையில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கான நேரடியான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாகவே, வேதிப்பொருள்களை தவிர்ப்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. கலப்படம் செய்ய முடியாத இளநீர், நுங்கு உள்ளிட்ட இயற்கைப் பொருள்களை உட்கொள்வது மிகவும் உகந்தது’’ எனத் தெரிவித்தார்.

புகார் தெரிவிக்கலாம்!

கலப்பட பதநீர் விற்பனை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜனிடம் கேட்டபோது, “ஒவ்வொரு வருடமும் கலப்பட பதநீர் தொடர்பான புகாரின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் கூட கலப்பட பதநீர் விற்பனை குறித்தான புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து கலப்பட பதநீர் விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும் கலப்பட பதநீரையும் பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்தனர். கலப்பட பதநீர் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கலப்படமான உணவுப் பொருள்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்” என்றார்.