
மரத்தடி மாநாடு
மாலை நேரம். வடக்கு மலையிலிருந்து கிளம்பிய தென்றல் மேனியைத் தொட்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்தது. அந்த இதமான மாலைவேளையில் ஊருக்கு வெளியே இருந்த ஆலமரத் திண்ணையில் ஆடு மேய்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வயலிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, ஏரோட்டியை பார்த்ததும் மரத்தடியில் சென்று அமரத் தொடங்கியது மாநாடு.
‘‘இந்த வருஷம் மார்கழி மாசம்தான் அடைமழை அடிச்சு காடெல்லாம் கம்மாய் மாதிரி ஆச்சு. இப்ப தை மாசத்துலயும் மழை வந்திடுச்சே. இப்படியே மாதம் மும்மாரி இல்லைன்னாலும் ஒரு மாரி கிடைச்சாக்கூடப் போதும் வாத்தியாரே... சம்சாரிக வாழ்க்கை சந்தோஷமாயிடும்’’ சிரித்தபடியே சொன்னார் ஏரோட்டி.
‘‘உண்மைதான்யா. ஆனா, அதது கிடைக்குற நேரத்துல கிடைச்சாதான் மரியாதை. பருவநிலை மாற்றத்தால மழை, வெயில், பனி எல்லாம் காலம் மாறி நடக்குது. ‘இந்த வருஷம் வெயிலும் அதிகமா இருக்கும்’னு சொல்றாங்க. என்ன நடக்கப்போகுதோ தெரியல’’ என்றார் வாத்தியார்.
அந்த நேரம் தோட்டத்திலிருந்து காய்கறிகளைப் பறித்துக்கொண்டு, மாட்டைப் பிடித்தபடி வீடு நோக்கி வந்துகொண்டிருந்த ‘காய்கறி’ கண்ணம்மாவும் மாநாட்டில் இணைந்துகொள்ள களைகட்டியது மாநாடு.
‘‘கட்சிக்காரர்களுக்குக் கடன் தள்ளுபடி கிடைச்சிருக்கு. கஷ்டப்படுற என்னை மாதிரி ஆளுங்களுக்குக் கிடைக்கல. எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும்ல. நமக்குத்தான் விளைஞ்சா விலை கிடைக்காது. விலை கிடைச்சா விளையாது. இதுல மட்டும் என்ன நமக்கு நல்லதா நடந்திடப் போகுது’’ பொருமினார் காய்கறி.
‘‘பல ஊர்கள்ல கட்சிக்காரங்கதான் பயிர்க்கடனே வாங்கி இருக்காங்க. அதுவும் பல இடங்கள்ல சொசைட்டி தலைவர்கள், இயக்குநர்களுக்கு லட்சக்கணக்குல தள்ளுபடி ஆகப்போகுதாம்’’ என்றார் ஏரோட்டி.
“ஆமாய்யா... யாருக்குக் கடன் தள்ளுபடி கொடுக்கப்போறீங்கன்னு தகவல் உரிமை சட்டத்துல கேட்டாலும் பதில் தராம இழுத்தடிக்கிறாங்க. தேர்தல் அறிவிப்பு வந்திடுச்சுன்னா, அதுக்கு பிறகு அதைப் பத்தி மக்கள் கண்டுக்கமாட்டாங்கன்னு நினைக்கிறாங்க போல’’ என்றார் வாத்தியார்.
‘‘கொடைக்கானல்ல கறுப்பு நிறத்துல கேரட் விளையுதுன்னு சொல்றாங்களே. உண்மையா வாத்தியாரே’’ ஆர்வமாகக் கேட்டார் காய்கறி.

‘‘பேச்சு பேச்சா இருந்தாலும்... உன்னோட தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்துல ஆர்வமா இருக்கியே’’ கிண்டலடித்தார் ஏரோட்டி.
“ஆமா, கண்ணம்மா. கொடைக்கானல்ல மேல்மலைப்பகுதியில கேரட், உருளைக்கிழங்கு, மலைப்பூண்டுதான் முக்கிய வெள்ளாமை. கொடைக்கானல் பாம்பார்புரத்தைச் சேர்ந்தவரு ஆசிர். கேரட் விவசாயி. அவரு சீனாவுல கறுப்பு நிறத்துல கேரட் விளைய வைக்கிறாங்கன்னு ஆன்லைன்ல பார்த்திருக்காரு. உடனே ஆர்வமாகிட்டாரு. கறுப்பு கேரட் விதையையும் ஆன்லைன் மூலமாகவே வாங்கிட்டாரு. கொடைக்கானல் சீதோஷ்ண நிலையைவிட, சீனாவுல அதிகமான குளிர் பிரதேசத்துலதான் அந்த கேரட் வளருதுங்கிற தகவலையும் தெரிஞ்சுகிட்டாரு. அதனால, இங்க விளையுமோ, விளையாதோனு சந்தேகமாகிடுச்சு. சோதனை அடிப்படையில நடவு பண்ணி பார்க்கலாம்னு முடிவு பண்ணி, 5 சென்ட் நிலத்துல மட்டும் கறுப்பு கேரட் விதையைப் போட்டாரு. வழக்கமா 90 நாள்கள்ல கேரட் அறுவடைக்கு வந்திடும். அதேபோலக் கறுப்பு கேரட்டும் 90 நாள்கள்ல விளைஞ்சி அறுவடைக்கு வந்திடுச்சு. தோண்டி பார்க்கும்போது நல்லா விளைஞ்சதைப் பார்த்துச் சந்தோஷமாகிட்டாரு. கறுப்பு நிறத்துல கேரட் விளைஞ்சிருக்குன்னு தெரிஞ்சதும் வண்டி எடுத்துக்கிட்டெல்லாம் கேரட் விவசாயிக அதைப் பார்க்க வந்திட்டாங்களாம். கறுப்பு நிறத்துல கேரட் விளைய வெச்சதால, ஒரே நாள்ல பிரபலமாகிட்டாரு அந்த விவசாயி’’ விளக்கமாகச் சொன்னார் வாத்தியார்.

“குண்டூசியில இருந்து ஏரோப்ளேன் வரைக்கும் சீனாப் பொருள்கள் நம்ம நாட்டுல குக்குகிராமம் வரைக்கும் நுழைஞ்சிடுச்சு. இப்ப காய்கறி ரூபத்திலயும் சீனாக்காரன் உள்ள நுழைஞ்சிட்டானா? ஏற்கெனவே தமிழ்நாட்டுப் பசங்களுக்கு கவர்மென்ட் வேலை குதிரைக்கொம்பா ஆகிடுச்சு’’ எனத் தனக்குத்தானே புலம்பினார் ஏரோட்டி.
“அட அதுக்கு ஏன்யா பொழம்பி தவிக்குற. இப்பதான் ஆவின்ல நூத்துக்கணக்கான ஆளுங்களை வேலைக்கு எடுக்குறாங்களே. இண்டு இடுக்கெல்லாம் எங்கெங்க ஆளுங்களை எடுக்கணுமோ எடப்பாடி அரசு எடுத்துக்கிட்டுதான இருக்கு’’ என்றார் காய்கறி.
“அட நீ வேற ஏம்மா. ஆவின்ல வேலைக்கு ஆள் எடுக்குறதெல்லாம் கல்லா கட்டுறதுக்குத்தானாம். பால் விவசாயிகளுக்காக உருவான கூட்டுறவு அமைப்பான ஆவின்ல கடைக்கோடி வேலைக்குக்கூட 10 லட்சம் ரூபாய் லஞ்சமா கேக்குறாங்களாம். அதுக்கே அந்தத் தொகையின்னா மத்த வேலைகளுக்கு என்ன தொகை இருக்கும்னு யோசிங்க. இது தெரியாம தேர்வு எழுதுற அப்பாவி பசங்க, காசு கொடுக்க முடியாம கையைப் பிசைஞ்சிகிட்டு நிக்குறாங்க. இதுக்காக மதுரை நீதிமன்றத்துல ஒருத்தர் வழக்கே போட்டிருக்காரு. சிலபேரு நிலத்தை வித்து, காசு கொடுத்திருக்காங்களாம். அடுத்த ஆட்சி வந்து வேலையில இருந்து எடுத்துட்டா என்ன செய்றதுனு பலபேரு புலம்பிகிட்டு இருக்காங்க’’ வேதனையோடு சொன்னார் ஏரோட்டி.
“மத்திய, மாநில அரசு பணிக்காக நடக்குற தேர்வு மேல நம்பிக்கை இல்லைங்கிற மனநிலைக்கு நீதிமன்றமே போயிடுச்சு. வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க அவங்க தாய்மொழி இந்தியில நடக்குற தேர்வுலயே பாஸாக முடியல. ஆனா, தமிழ்நாட்டுல தமிழ் மொழியில நடக்குற தேர்வுல மட்டும் எப்படிப் பாஸாகி வேலை வாங்குறாங்க. ‘பணி தேர்வுகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும்’னு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையே சொல்லியிடுச்சே. அதுலயே தெரியுதே இவங்க லட்சணம்’’ கோபமாகச் சொன்னார் வாத்தியார்.

‘‘என்ன பண்றது போராடித்தான் ஒவ்வொண்ணும் வாங்கணும்போல இருக்கு. ஆமா, டெல்லி விவசாயிகள் போராட்டம் எந்த நிலைமையில இருக்குது’’ கரிசனமாகக் கேட்டார் ஏரோட்டி.
‘‘இப்போ பஞ்சாப்ல அறுவடைக் காலம். விவசாயிக போராட்டத்தை முடிச்சிட்டுப் போயிடுவாங்கனு அரசாங்கம் நினைச்சது. ஆனா, ‘நாங்க அறுவடையும் செய்வோம், அதே நேரம் போராட்டத்தையும் கைவிடமாட்டோம். அவர்கள்(அரசு) எங்களை வற்புறுத்தினால், நாங்க எங்கள் பயிர்களை எரித்துவிடுவோம். எங்கள் போராட்டம் இன்னும் 2 மாதங்களில் முடிந்துவிடும் என்று மத்திய அரசு ஒருபோதும் நினைக்கக் கூடாது’னு சொல்லியிருக்காங்க்விவசாயிகள் போராட்டக் குழுவோட செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாயத்’’ என்றார் வாத்தியார்.
‘‘விவசாயிக வாழ்க்கையை முன்னேத்துறோம்னு ஒவ்வொரு தடவையும் ஓட்டுக்கேட்டு வரும்போது எல்லாக் கட்சியும் சொல்லுது. ஆனா, ஆட்சிக்கு வந்தபிறகு, முதல்ல உலை வைக்கிறதே விவசாயிகளுக்குத்தான். சரி இருட்டுறதுக்குள்ள வீட்டுப் பக்கம் போவோம்’’ சொல்லிக்கொண்டே ஏரோட்டி எழுந்துகொள்ள முடிவுக்கு வந்தது மாநாடு.