நாட்டு நடப்பு
Published:Updated:

அதிக மகசூல் தரும் ரகங்கள்... புயலில் சாயாத ரகங்கள்.... வித விதமான மானியங்கள்...

களப்பயிற்சியில்
பிரீமியம் ஸ்டோரி
News
களப்பயிற்சியில்

லாபத்துக்கு வழிகாட்டிய தென்னை சாகுபடி பயிற்சி!

'லாபகரமான தென்னை சாகுபடி’ என்ற தலைப்பிலான களப்பயிற்சி கடந்த பிப்ரவரி 24-ம் தேதி... சிவகங்கை மாவட்டம், மேலப்பட்டியில் உள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பண்ணையில் நடைபெற்றது. பசுமை விகடன், தென்னை வளர்ச்சி வாரியம், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் இணைந்து நடத்திய இப்பயிற்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ‘‘இளைய ஆதீனமாகப் பதவி ஏற்ற பிறகு கோயிலுக்குச் சென்றுவிட்டு, இந்தப் பண்ணைக்குச் செல்லும்படி மகாசந்நிதானம் தெரிவித்தார். அதன்படி இந்தப் பண்ணையில்தான் நம் ஆதீனம் பணி தொடங்கியது. இந்தப் பண்ணையில் ஒரு வயது தென்னை முதல் 100 வயது வரை தென்னை மரங்கள் உள்ளன. படித்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான். அப்போதெல்லாம், விவசாயத்தில் எந்த அனுபவமும் இல்லை. கிணற்று நீரை, குளத்து நீரை, ஆற்று நீரை எல்லாம் பார்த்ததில்லை. அப்போது குழாய்த் தண்ணீரைத்தான் பார்த்திருக்கிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு குன்றக்குடி ஆதீனத்துக்கு வந்த பிறகுதான், விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக, ஆன்மிகத்தோடு விவசாயம் குறித்தும் நிறையவே கற்றுக்கொண்டோம்.

பயிற்சியில் பேசும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பயிற்சியில் பேசும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ஆன்மிகம், விவசாயம், சமூகப்பணி.. இவை அனைத்துக்கும், சமச்சீராக நேரத்தை ஒதுக்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். விவசாயத்தின் மீது எனக்கு ஈடுபாடு ஏற்படுவதற்கு, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையமும், அங்கு பணியாற்றும் பேராசிரியர் செந்தூர்குமரனும் ஒரு முக்கியக் காரணம். குன்றக்குடியில் 200 ஏக்கர் பரப்பளவில் மானாவரி நிலத்தில் முந்திரி நடவு செய்யப்பட்டிருந்தது. வறட்சியாலும், பராமரிப்பு குறைவாலும் அந்த மரங்கள் எல்லாம் காயத் தொடங்கி விளைச்சல் இல்லாமல் போய்விட்டன. குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளின் ஆலோசனைகளால்தான், அவை மீட்டுரு வாக்கம் செய்யப்பட்டு, இன்று நல்ல விளைச் சலை தந்துகொண்டிருக்கின்றன. முந்திரிக் கொட்டைகளை, இன்று நேரடியாக அறுவடை செய்து, ஏலத்தில் விற்று, கணிச மான லாபம் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

குன்றக்குடி மகாசந்நிதானம் பல தொழில்கள் தொடங்க ஊக்கப்படுத்தி வந்தார். அதில் முக்கியமானது முந்திரி ஓடு தொழில்.

முந்திரிக் கொட்டைகளை இன்று நேரடி யாக அறுவடை செய்து, முந்திரியின் மேல் ஓட்டை உடைத்தால், வரும் பருப்பு விற்பனைக்கு போய்விடும்.

முந்திரியின் மேல் ஓட்டை எரித்தால், ஒரு விதமான ஆயில் கிடைக்கும். `ரெட்டாக்ஸைடு பிரமைர்’ என்ற அந்த ஆயில் தயாரிப்புக்கு முந்திரி ஓடு, ஒரு முக்கியமான மூலப்பொருள். அந்தத் தொழிற்சாலையை நம், குன்றக்குடி மகாசந்நிதானம், தந்தை பெரியார் முந்திரி தொழில் கூட்டுறவு தொழிற்சங்கம் என ஒன்றை ஆரம்பித்தார். இது, இன்றும் வெற்றி கரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பலரும் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொண்டிருக் கின்றனர்’’ என்று சொல்லியபோது, கைத்தட்டல்கள் மூலம் தோப்பு அதிர்ந்தது. மேலும், தொடர்ந்தார் அடிகளார்.

பயிற்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பயிற்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

காலம் மாறும்... கவலை தீரும்...

``1998-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘எக்கனாமிக் இன்ஸ்டெபிலிட்டி ஆ`ப் அக்ரிகல்சர்’ (Economic instability of agriculture) என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. பல்கலைக்கழத்தின் பொருளா தாரத் துறை தலைமைப் பேராசிரியர் நாகநாதன் அந்த நூலை எழுதியிருந்தார். இவர் பின்னாளில் திட்டக்குழு துணைத் தலைவராகவும் இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி யும் கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு நம்மையும் அழைத்திருந்தனர்.

அங்கே உரையாற்றியபோது ‘ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலோட விலை ரூ.30. ஒரு லிட்டர் பாலோட விலை ரூ.10. இனிக்கும் கரும்பை பயிரிட்டவன், கசந்து போய்க் கிடக்கிறான். புத்துணர்வு தரும் தேயிலையைப் பயிரிட்டவன் சோர்ந்து போய்க் கிடக்கிறான். வாழையைப் பயிரிட்டவன், தலைசாய்ந்து கிடக்கிறான். விவசாயப் பொருள்களுக்கு விவசாயிகளேதான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்று அழுத்தமாகப் பதிவு செய்தேன். ‘காலம் மாறும். அப்போது அடிகளாரின் கவலை தீரும்’ என்றார், கருணாநிதி. அதன் பிறகு உழவர் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. அன்று பேசிய உரை, உழவர் சந்தை வருவதற்கு ஒரு காரணியாகவும் இருந்தது.

களப்பயிற்சியில்
களப்பயிற்சியில்

புதுமையை ஏற்றுக்கொண்டு
பழைமையைப் பாதுகாக்க வேண்டும்!


2008-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தோம். அதை நடத்தியவர் ஒரு தகவல் சொன்னார். ‘சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம். பார்க்க அழகாக இருக்கும். ஆனால், குடிக்கத் தண்ணீர் இல்லை. மலேசியாவில் இருந்து பைப் போட்டுத் தண்ணீர் கொண்டு வருகிறோம். ஒரு கோப்பை டீக்கு பல நாடுகளை நம்பி இருக்கிறோம். டென்மார்க் நாட்டிலிருந்து பாலும், இலங்கையிலிருந்து தேயிலையும் வருகிறது. ஆனால் உங்களுடைய இந்திய நாட்டில் எல்லாம் விளைகின்றன என்று சொன்னார். நம் இளைஞர்கள் விவசாயத்தைச் சவாலாக எடுத்துக்கொண்டு அதில் வெற்றி காண வேண்டும்.

ஒரு காலத்தில் இந்த மேலப்பட்டி பகுதியில் எல்லா வளமும் சிறப்பாக இருந்தது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிணறு களில் நீர் இருந்தது. காலப்போக்கில் மழைப் பொழிவு குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, இந்தத் தென்னை மரங் களைக் காப்பாற்றுவது சவாலாகிப்போனது. சொட்டுநீர்ப் பாசனத்தை அறிமுகப்படுத்தித் தென்னைகளைக் காப்பாற்றினோம். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையமும் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையமும் இணைந்து... வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை மரங்களை உருவாக்குவதற்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. புதுமையை ஏற்றுக்கொண்டு அதே, நேரத்தில் பழைமையைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

சசிக்குமார்
சசிக்குமார்

தென்னை சாகுபடிக்கு மானியம்

தென்னை வளர்ச்சி வாரியத்தின் தமிழ்நாடு மண்டல வளர்ச்சி அலுவலர் சசிக்குமார் பேசும்போது, “புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கோடு 1981-ம் ஆண்டு முதல் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்பட்டு வருகிறது. தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது, ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, சந்தை மேம்பாடு, மதிப்புக் கூட்டும் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் விவசாயி களுக்காகச் செயல்படுத்தப்படுகின்றன. தென்னை சாகுபடிக்கான காப்பீடு, மானிய திட்டங்கள் குறித்தும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

4 ஹெக்டேரில் தாய் நெற்று உற்பத்திப் பண்ணை அமைப்பதற்கு, அதிகபட்சம் 6 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான தென்னை நாற்றங்கால் அமைப்பதற்கு... 6,350 தென்னை நாற்றுகள் உற்பத்தி செய்யும் அலகுக்கு அதிகபட்சமாக, 50,000 ரூபாயும், 25,000 நாற்றுகளை உற்பத்தி செய்யும் அலகுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சமும் மானியம் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நெட்டை, கலப்பினம், குட்டை ஆகிய ரகங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. தென்னை தொழில்நுட்ப நிறுவனத்தால், தேங்காய் சிப்ஸ், சாக்லேட், குக்கீஸ், கோகனட் வினிகர், இளநீர் பதப்படுத்துதல், நீராவியிலிருந்து மதிப்புக்கூட்டும் பொருள் தயாரித்தல், தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மரங்கள் எதிர்பாராத விதமாக மடிந்துவிடுவதால், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை சரியான தருணத்தில் ஈடுசெய்வதற்காக, பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது’’ எனத் தெரிவித்தார்.

உப்பு போடுவதைத் தவிர்க்க வேண்டுகோள்

குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத் தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர் குமரன், தென்னை சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குக் களப்பயிற்சி அளித்தார். அவர், “தென்னை, மணல் விரும்பித் தாவரம். இதைக் களிமண்ணில் சாகுபடி செய்தால் வேர் விடும் தன்மை, வேர் வளர்ச்சி, மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுக் குறைவான மகசூல்தான் கிடைக்கும். தென் கிழக்கு ஆசிய கடற்கரையையொட்டிய இந்தோ-மலேயன் பகுதிகளில் தோன்றிய தென்னைப் பயிரானது கடற்கரை மணற் பரப்பில் வேர்பரப்பி 35,000 பி.பி.எம் உப்பு தண்ணீரையும் தாங்கி வளர்ந்த தாவரம் ஆகும். பல ஆண்டுக்கால விவசாயப் பயன் பாட்டுக்குப் பின்னர், பல நிலை ஆராய்ச்சி களுக்குப் பிறகு, விவசாய நிலங்களிலும் நன்னீரிலும் வளரும் தாவரமாக நிலைபெற்று விட்டது.

தற்போதும் நம்மில் பல விவசாயிகள், தென்னை மரங்களின் தூர்பகுதிகளில் கடல் உப்பை அறியாமல் போட்டு வருகிறார்கள். தற்போது அறிவியல் வளர்ச்சியில் முன்னெடுக் கப்பட்ட தென்னை ரகங்கள் அனைத்துமே நன்னீரில் வளர்ந்து மகசூல் தரவல்லவை. ஆகவே கல் உப்பிடுதல் மகசூல் பின்னடைவுக்கு வகைச் செய்யும். எந்த ரகத்தைப் பயிர் செய்தால், தங்களுக்குச் சாதகமாக இருக்கும், அதிக பலன் கிடைக்கும் என விவசாயிகள் அலசி ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

செந்தூர் குமரன்
செந்தூர் குமரன்

ஒன்றரை ஆண்டிலேயே
பலன் கொடுக்கும் ரகம்


இளநீர்க்கென்று தனி ரகங்கள் இருக் கின்றன. தேங்காய்க்கென்று தனி ரகங்கள் இருக்கின்றன. இளநீர்தான் உங்கள் விருப்ப மாக இருக்கிறது என்றால், குட்டை ரகங்களையே தேர்வு செய்து பயிரிடலாம்.சௌகாட் ஆரஞ்சு குட்டை, மலேயன் ஆரஞ்சு குட்டை போன்ற குட்டை ரகங்கள் இளநீருக்கு உகந்தவை. தேங்காய்க்கு இவை உகந்தவையல்ல. குட்டை ரகங்களைப் பொறுத்தவரை நடவு செய்த ஒன்றரை ஆண்டுகளிலேயே பலன் கொடுக்க ஆரம் பித்து இரண்டாண்டுகளிலிருந்து தொடர் மகசூலைப்பெறலாம். வேர்ப்பகுதியிலிருந்து சுமார் 1 அடி உயரத்திலேயே காய்கள் கிடைக்கும். மாதம் ஒருமுறை அறுவடை செய்யலாம். நன்றாகப் பராமரித்தால் ஒரு மரத்திலிருந்து ஒரு வெட்டுக்கு 25 காய்கள் வரையிலும் எடுக்கலாம். குட்டை ரகங்களைப் பொறுத்தவரை, அதிகபட்சம் 40 வருடங்கள் வரையிலும் நல்ல காய்ப்பு இருக்கும். 40 வருடங்களுக்குப் பிறகு, அடுத்தடுத்த வருடங்களில் காய்ப்புப் படிப்படியாகக் குறைந்துவிடும்.

நெட்டை ரகங்கள் 65 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கும். 80 - 100 ஆண்டுகள் வரை உயிர்ப்போடு இருக்கும். நெட்டை ரகங்களைப் பொறுத்தவரை கிழக்கு கடற்கரை நெட்டை, மேற்கு கடற்கரை நெட்டை ரகங்கள் இருக்கின்றன. கஜா புயல் நேரத்தில், டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது. கஜா புயல் நேரத்தில், பசுமை விகடனோடு, சேர்ந்து டெல்டா மாவட்டங் களில் ஒரு வாரம் தங்கியிருந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பேசினோம். அப்போது, பெரும்பாலும் அவர்கள் மேற்குக் கடற்கரை நெட்டை ரகங்களைத்தான் பயிரிட்டிருந்தனர். இந்த ரக மரங்களின் காய்கள் பெரியதாக இருக்கும். கேரளா பகுதிக்கு இந்த வகை மரங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். ஆனால், டெல்டாவில் கஜா புயலில் மேற்குக் கடற்கரை நெட்டை ரகங்கள்தான் அதிகமாக வேரோடு சாய்ந்துபோயின. அதே நேரத்தில், கிழக்குக் கடற்கரை நெட்டை ரக மரங்கள் புயலையும் சமாளித்துச் சரிந்து விழாமல் நிற்கின்றன. ஆகவே, புயலை எதிர்கொள்ளும் திறன்கொண்ட கிழக்குக் கடற்கரை நெட்டை ரகங்கள் பொதுவாகவே குறைந்த பராமரிப்பில் நிறைந்த லாபம் கொடுக்கும். தமிழகத்தில் குட்டை × நெட்டை அல்லது நெட்டை × குட்டை போன்ற கலப்பின ரகங்கள் உருவாக் கத்துக்குக் கிழக்குக் கடற்கரை நெட்டை ரகம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. புயல் போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்கத் தென்னை மரத்தின் தரமிகு சல்லி வேர்கள் நங்கூரமாக இருக்கின்றன.

பூமிக்கு கீழே பார்த்தால், ஒரு தென்னை மரத்தில், சுமார் 3,500 முதல் 4,500 வேர்கள் வரையிலும் இருக்கும். தென்னை மரத்துக்கு ஆணி வேர் எல்லாம் கிடையாது. சல்லி வேர்கள் மட்டும்தான். இவை அதிகபட்சமாக 1 மீட்டர் முதல் 1.5 மீட்டர் ஆழத்தில்தான் இருக்கும். குறைந்த பராமரிப்பில் வருஷத் துக்குக் கிழக்குக் கடற்கரை நெட்டை ரகங்கள் 150 முதல் 200 காய்கள் வரையிலும் தரவல்லவை’’ என்று பயனுள்ள பலவித தகவல்களையும் பகிர்ந்த பேராசிரியர் செந்தூர்குமரன், ‘நல்ல மகசூல் கிடைப்பதற்கு விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய நுட்பங்களை’ அள்ளிவழங்கினார். அந்தத் தொழில்நுட்பங்களையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் அனுபவங்களையும்
அடுத்த இதழில் பார்ப்போம்.