நாட்டு நடப்பு
Published:Updated:

தென்னைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் தர வேண்டும்? வண்டுகளை எப்படி எளிதாகக் கட்டுப்படுத்தலாம்?

தென்னங்கன்றை காட்டி பயிற்சியளிக்கும் செந்தூர்குமரன்
பிரீமியம் ஸ்டோரி
News
தென்னங்கன்றை காட்டி பயிற்சியளிக்கும் செந்தூர்குமரன்

வழிகாட்டிய களப்பயிற்சி!

பயிற்சி

சிவகங்கை மாவட்டம், மேலப்பட்டியில் உள்ள குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பண்ணையில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி நடைபெற்ற ‘லாபகரமான தென்னை சாகுபடி களப்பயிற்சி’ குறித்து, கடந்த இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். பசுமை விகடன், தென்னை வளர்ச்சி வாரியம், குன்றக்குடி திருவண்ணா மலை ஆதீனம் இணைந்து நடத்திய அப்பயிற்சியில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், தென்னை வளர்ச்சி வாரிய அலுவலர் சசிகுமார் ஆற்றிய உரைகள் மற்றும் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் முனைவர் செந்தூர்குமரன் அளித்த தொழில்நுட்ப ஆலோசனைகளின் சில அம்சங்கள் அக்கட்டுரையில் இடம்பெற்றன. அதன் தொடர்ச்சி இந்த இதழில் இடம்பெறுகிறது.

ரகங்கள் தேர்வு மற்றும் கன்றுகள் நடவு செய்யும் முறைகள் குறித்துப் பேசிய முனைவர் செந்தூர்குமரன், ‘‘நெட்டை × குட்டை என்ற கலப்பின ரகம் ஆண்டுக்குச் சராசரியாக 200 - 250 காய்கள் வரை மகசூல் கொடுக்கும். மற்றொரு கலப்பின ரகமான குட்டை × நெட்டை 250 - 300 காய்கள் வரை மகசூல் கொடுக்கும். அந்தளவுக்கு அதிக மகசூல் கிடைக்க வேண்டுமென்றால்... ஒரு மரத்துக்குத் தினமும் 80 லிட்டர் வீதம் தண்ணீரும் 6 மாதங்களுக்கு ஒரு முறை உரமும் கொடுக்க வேண்டும். தென்னங்கன்றுகள் விற்பனை செய்யும் அரசுப் பண்ணைகளில் நெட்டை× குட்டை மற்றும் குட்டை × நெட்டை கலப்பின கன்றுகள் விலைக்கு வாங்கலாம்.

பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்

கன்றுகள் உற்பத்தி

நெட்டை ரகங்களைப் பொறுத்தவரை... விவசாயிகள் விலை கொடுத்து தென்னங் கன்றுகளை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தென்னங்கன்று உற்பத்தி செய்வதற்கு, குறைந்தபட்சம் 25 வருடங்களைத் தாண்டிய மரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மரத்தின் நெற்றுகனை எடுத்து வந்து 20 - 30 நாள்கள் வரை வெயில் படாத இடத்தில் போட்டு வைக்க வேண்டும். தேங்காய் மட்டைமேல் இருக்கும் பச்சை நிறம் மாறியவுடன்... சுமார் 100 நெற்றுகள் பதியம்போடும் வகையில் பள்ளம் தோண்டி, அதில் ஆற்று மணலைப் போட்டு நிரப்ப வேண்டும். அதன் மேல் நெற்றுகளை வரிசையாக அடுக்கி, அவற்றின் மூக்கு மட்டும் வெளியில் தெரியும் அளவில் வைத்து விட்டு, அதன்மேல் மணலைப் பரப்பிவிட வேண்டும். 20 நாள்கள் வரையிலும் தண்ணீர் ஊற்றக் கூடாது. மணலில் நீர்ச்சத்துக் குறையத் தொடங்கியதும், தேங்காய் மட்டை களிலிருந்து ஈரப்பதத்தை மணல் சுண்டி இழுக்கும். அதனால் நெற்றுகள் உயிர்த் தன்மையை இழக்கும் நேரத்தில், அதாவது சரியாக 20 நாள்கள் கழித்து தண்ணீர் விட்டால், உள்ளே இருக்கும் பருப்பு முளைக்கத் தொடங்கும். மூன்றாவது மாதத்தில், கன்று தயாராகிவிடும். ஓர் அடி உயரத்துக்கு வளர்த்தவுடன், அது நடவுக்குத் தயாராகிவிடும். கன்றுகள் உற்பத்திக்கான காய்கள் சேகரிக்க... மிகவும் கவனத்துடன் அதற்கான தாய் மரத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த மரம், வளைந்து நெளிந்து இருக்கக் கூடாது. அதே சமயம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மரத்தின் உச்சியில் அடுக்கி வைத்தது போல, 33-க்கும் அதிகமான மட்டைகளைக் கொண்டதாக அந்தத் தாய் மரம் இருக்க வேண்டும்.

பயிற்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பயிற்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

கன்று நடவு செய்ய... 3 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்ட குழி எடுக்க வேண்டும். குழியின் உள்ளே அரை அடி உயரத்துக்கு மணல் பரப்ப வேண்டும். குழியின் எஞ்சியுள்ள பகுதியில்... 2:2:1 என்ற விகிதத்தில் செம்மண், மணல், எரு கலந்து நிரப்ப வேண்டும். குழிக்குள் இருந்து ஏற்கெனவே எடுத்த மண்ணைப் போட்டு, குழியின் மேற்பகுதியை மூட வேண்டும். இந்தக் குழியின் மையப்பகுதியில் அரை அடி ஆழத்துக்குக் குழி தேண்டி, தென்னங்கன்றை நடவு செய்ய வேண்டும். கன்றுக்கு கன்று 25 அடி, வரிசைக்கு வரிசை 25 அடி இடை வெளி விட்டுக் கன்றுகள் நடவு செய்வது அவசியம்.

சரியான, நடவு முறையைக் கையாண்டிருந் தால், ஒரு ஆரோக்கியமான நெட்டை ரகத் தென்னை மரம், அதன் அடி பெருத்து வளரும். தென்னை மரத்தின் அடியில் அமர்ந்து இரு கைகளாலும் அணைத்தால்... அதைக் கட்டி அணைக்க முடியாத அளவுக்கு அடி பெருத்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் 3,500 - 4,000 வேர்களை அந்த மரம் உருவாக்க முடியும். அதிக எண்ணிக்கையிலான வேர்கள் இருந்தால் தான்... அந்த மரம், மண்ணில் நிலை கொள்ளும் தன்மை அதிகமாக இருக்கும். பெரும்புயல் போன்ற இயற்கை சீற்றங்களில் சாயாமல் நிலைத்து நிற்கும். அதிக எண்ணிக்கையால வேர்களின் மூலம் அதிக அளவிலான சத்துக்களை உறிஞ்சும். அதனால் அந்த மரம் அதிக மகசூலும் கொடுக்கும். கன்றுகள் நட்டதில் இருந்து ஒரு வருடம் வரை ரசாயன உரங்கள் பயன்படுத்தக் கூடாது. மண்புழு உரம் அல்லது எருவுடன்... எருக்கு, சணப்பு, கொழிஞ்சி இவற்றின் ஏதாவது ஒன்றின் இலையைக் கலந்த உரம் வைக்க வேண்டும்.

பயிற்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
பயிற்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

உரமிடுவதற்கான குழி

தென்னை மரத்தின் நுனி வேர்கள் உள்ள இடத்தில்தான் உரம் வைக்க வேண்டும். அப்போதுதான் சத்துக்களை மரம் இழுத்துக் கொள்ளும். இந்த நுனி வேர்களை அறிய எளிய வழி உண்டு. தென்னை மரத்தில் உள்ள நுனி ஓலை எங்கு முடிகின்றதோ, அதற்கு நேராக உள்ள தரையில்தான் நுனி வேர்கள் இருக்கும். அந்த இடத்திலிருந்து ஓர் அடி உட்புறமாக தள்ளி அரை வட்டமாக குழி வேண்டும். அந்தக் குழியை உற்று நோக்கினால், அறுபட்ட வேர்கள் தென்படும். அக்குழியில் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட சணப்பு அல்லது கொழிஞ்சி இலைகளைப் பரப்ப வேண்டும். அதன் மேல் மண்புழுவுரம் அல்லது எரு போட்டு மூடவேண்டும்.சணப்பு, கொழிஞ்சியை மட்க வைக்கவும் எருவில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களை பெருக்கவும் 2 லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி வீதம் இ.எம் கரைசல் கலந்து பரவலாகத் தெளிக்க வேண்டும்.

அதன் மேல் வெட்டப்பட்ட எருக்கு இலைகளைப் போட வேண்டும். இது ஓர் அடுக்கு ஆகும். இதேபோல் கொழிஞ்சி இலை, மாட்டு எரு அல்லது மண்புழு உரம், இ.எம் கரைசல் என இரண்டாம் அடுக்கு அமைக்க வேண்டும். அதன் மேல் ஏற்கெனவே சொன்னதுபோல் இலை, எரு அல்லது மண்புழுவுரம், இ.எம். கரைசல் ஆகியவை கொண்டு மூன்றாம் அடுக்கு அமைக்க வேண்டும். மொத்தம் மூன்று அடுக்குகள் அமைத்த பிறகு... தோட்டத்தின் மேல் மண்ணைக் கொண்டு குழியை மூடி விட வேண்டும். அடுத்த ஆறு மாதத்தில் இதே போல் எதிர்புறம் அரை வட்டத்தில் மேற்சொன்னவாறு குழி எடுத்து உரமிட வேண்டும். இந்த உரமிட்ட பகுதிகள் நனையுமாறு தினமும் நீர் பாய்ச்ச வேண்டும். வருடம் முழுவதும் நீரும், ஆறு மதங்களுக்கு ஒருமுறை உரமும் இட்டு வந்தால் தென்னை மரங்கள் தொடர்ச்சியாக நல்ல மகசூல் கொடுக்கும்.

தென்னங்கன்றை காட்டி பயிற்சியளிக்கும் செந்தூர்குமரன்
தென்னங்கன்றை காட்டி பயிற்சியளிக்கும் செந்தூர்குமரன்

80 லிட்டர் தண்ணீர்

தண்ணீரைப் பொறுத்தவரை ஒரு மரத்துக்கு ஒரு நாளைக்கு 80 லிட்டர் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. அன்றாடம் தேவையான அளவுக்கு இது போல் தண்ணீர் கொடுத்தாலே போதுமானது. மடை திறந்த வெள்ளம் போல் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய தேவை இல்லை. தண்ணீரை சிக்கனப்படுத்துவது மிகவும் அவசியம். சொட்டுநீர்ப் பாசனம் அமைப்பது சிறப்பானது.

வண்டுத் தாக்குதல்களை எளிதாகக் கட்டுப்படுத்தலாம்

தென்னை மரத்தைப் பொறுத்தவரை... சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வண்டுகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். தூய்மையாக இல்லாத தென்னந் தோட்டத்தில்தான் இந்த வண்டுகள் அதிகமாக இனப்பெருக்கமடைகின்றன. தென்னை மரத்தின் கடைசி மட்டைக்கு அடுத்துள்ள மட்டையில் சிவப்பு கூன்வண்டு முட்டைபோடும். காண்டமிருக வண்டுகளைப் பொறுத்தவரை... குருத்திலும் அதற்குக் கீழ் உள்ள மட்டையிலும் முட்டையிடும். அந்த முட்டைகளில் இருந்து புழுக்கள் உருவாகி, வண்டுகளாக மாறும். இந்த வண்டுகளால் தென்னை மரம் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே, தென்னந்தோட்டத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, தரையில் ஆங்காங்கே மட்டைகளைப் போட்டு வைக்கக் கூடாது. மட்டைகளைத் தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்துவது சிரமம் என்றால்... 2 ஏக்கருக்கு ஒரு உரக்குழி வீதம் அமைத்து அதில் மட்டைகளைப் போட்டு, இ.எம் கரைசல் தெளித்து மட்க வைக்கலாம். 5 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழத்துக்கு உரக்குழி அமைக்கலாம். உரக்குழியில் வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்காததால், அங்கு வண்டுகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடு வதற்கான வாய்ப்புகள் குறைவு.

தென்னங்கன்றை காட்டி பயிற்சியளிக்கும் செந்தூர்குமரன்
தென்னங்கன்றை காட்டி பயிற்சியளிக்கும் செந்தூர்குமரன்தென்னை மரங்களில் சிவப்புக் கூன்வண்டுகள், காண்டாமிருக வண்டுகள் தென்பட்டால்... இயற்கை முறையிலேயே இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். பஞ்ச கவ்யா அல்லது மீன்அமிலத்தைக் குருத்துக்குள் ஊற்ற வேண்டும். ஒவ்வாத வாடையின் காரணமாக, வண்டுகள் வெளியில் வரத் தொடங்கும். அடுத்த நாள் ஆற்றுமணலை குருத்தில் இட வேண்டும். அதனால் காண்டாமிருக வண்டுகளின் கழுத்துப்பகுதி புண்ணாகிவிடும். உணவெடுக்காத நிலை ஏற்பட்டு, அந்த வண்டுகள் விரைவிலேயே இறந்துபோகும். இதுதவிர, காண்டாமிருக வண்டுக்குத் தேவையான லூர் (Lure) எனப்படும் இனக்கவர்ச்சிப் பொறியையும் வைத்து ஆண் வண்டுகளைக் கவர்ந்து இழுத்து அழிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் ஆமணக்குச்சாறு, வெல்லக்கரைசல், புளித்த தயிர் ஆகிவற்றை சம விகிதத்தில் கலந்து ஊற்றி வைத்தால், வண்டுகள் கவரப்பட்டு அக்கரைசலில் விழுந்து அழிந்துவிடும். இனக்கவர்ச்சிப்பொறி மூலம் வண்டுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென நினைத்தால்... காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்புக் கூண்வண்டுக்கெனப் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள தனித்தனி இனக்கவர்ச்சிப் பொறிகளைப் பயன்படுத்த வேண்டும்.

வெள்ளை சுருள் ஈக்களும் தென்னை விவசாயத்தில் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்தச் சுருள் ஈக்கள், ஆரம்ப நிலையில் தென்னை இலையின் அடிப்புறத்தில் தோன்றும். 3 - 4 நாள்கள் இடைவெளியில் அதிகாலைப் பொழுதில் குளிர்ந்த நீரை தெளித்து சுருள் ஈக்களின் பரவல் வேகத்தைச் செயல் இழக்கச் செய்யலாம். வெள்ளை சுருள் ஈக்களின் அறிகுறிகள் வேகமெடுத் திருந்தால் மிக எளிமையாக, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஒருவேளை அவ்வாறு கட்டுப்படுத்தாமல் தவறவிட்டோம் என்றால், இந்த வெள்ளைச்சுருள் ஈக்களின் எச்ச வெளிப்படு திறனால் தென்னை இலைகளின் மேற்பரப்பில் தேன் போன்ற பிசின் உருவாகும். இந்தத் தேன் திரவத்தில் கேப்னோடியம் பூஞ்சைகள் வளர்ந்து இலைப்பரப்பு முழுவதும் கருமையாகி ஒளிச்சேர்க்கை தடைபட்டு மகசூல் குறைய நேரிடும்.

உரமிடுவதற்கான குழி தயாரிப்பு
உரமிடுவதற்கான குழி தயாரிப்பு

இந்த இலைக்கருமையைப் போக்க... 5 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ மைதா மாவு கலந்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, கஞ்சி போல் ஆக்கி அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். இளஞ்சூட்டில் இதனுடன் 20 லிட்டர் தண்ணீர் கலந்து கருமை படர்ந்த இலைகளில் தெளிக்க வேண்டும். தென்னை சாகுபடியில் விவசாயிகள் நிறைவான மகசூல் எடுக்க... தோட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதும், தினமும் தண்ணீர் கொடுப்பதும், குறிப்பிட்ட இடைவெளியில் உரம் கொடுப்பதும் மிகவும்’’ என ஆலோசனை வழங்கினார்.

நேரடியான செயல் விளக்கத்துக்குப் பிறகு, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டன. மாலை 5 மணிக்கு களப்பயிற்சி இனிதே நிறைவுபெற்றது.

மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, மலர்ச்சி!

இப்பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயி முத்துக்குமரேசன், “சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன். பசுமை விகடனோட தீவிர வாசகர் நான். இந்தப் பயிற்சியில் கலந்துக்கணும்னு ரொம்பவே ஆர்வமா இருந்தேன். நான் எதிர்பார்த்தது மாதிரியே பயனுள்ளதா இருந்துச்சு. விவசாயிகள் நேரடியா பயன் அடையுற மாதிரி, தென்னை வளர்ச்சி வாரியத்துல நிறைய திட்டங்கள் இருக்குங்கற விஷயமே இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன்; மகிழ்ச்சி’’ என்றார்.

விவசாயி முத்துராமன், “நான் புதுக்கோட்டையில இருந்து வந்திருக்கேன். 3 ஏக்கர்ல மா சாகுபடி செஞ்சிருந்தேன். நல்லதான் விளைச்சல் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு. கஜா புயல், மாமரங்களை எல்லாம் வேரோடு கீழ சாய்ச்சிடுச்சு. அந்த நிலத்துல தென்னை சாகுபடி செய்றது சம்பந்தமா ஆலோசனைகள் பெறத்தான் இந்தப் பயிற்சியில கலந்துகிட்டேன். எந்த ரகத்தைத் தேர்வு செய்யணும், எங்க கன்றுகள் வாங்கலாம், எப்படி நடவு செய்யணும்... இப்படி எனக்குள்ள இருந்த பல சந்தேகங்களுக்கும் இங்க எனக்கு விடை சிடச்சது’’ என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

முத்துராமன், முத்துகுமரேசன், சங்கரச் சுப்பிரமணியன், பொன்னையா
முத்துராமன், முத்துகுமரேசன், சங்கரச் சுப்பிரமணியன், பொன்னையா

விவசாயி சங்கர சுப்பிரமணியன், “தென்காசி மாவட்டம், செங்கோட்டைதான் எனக்கு சொந்த ஊரு. எனக்கு 5 ஏக்கர்ல தென்னந்தோப்பு இருக்கு. வண்டுகளையும் ஈக்களையும் கட்டுப்படுத்துறது ரொம்ப சவாலா இருக்கு. அதுக்கான தீர்வை, இந்தப் பயிற்சி மூலம் தெரிஞ்சுகிட்டேன்’’ என்றார்.

விவசாயி பொன்னையா, ‘‘மதுரை மாவட்டத்துல இருந்து வந்திருக்கேன். எனக்கு திண்டுக்கல் மாவட்டத்துல நிலம் இருக்கு. பசுமை விகடன் இதழோட தீவிர வாசகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் போன்ற வேளாண் அறிஞர்களை பசுமை விகடன் மூலம்தான் அறிந்துகொண்டேன். இந்த ஒரு நாள் களப்பயிற்சி மூலம் பல தகவல்களைக் கத்துக்க முடிஞ்சது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் விவசாய அனுபவங்களைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது விவசாயத்தின் மீது நம்பிக்கையும் உள்ளத்தில் மலர்ச்சியும் ஏற்படுகிறது. ஆகையால், தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துங்கள்’’ என்றார்.