நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

யூரியா செலவைக் குறைக்கும் கறுப்பு யூரியா!

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
News
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை - புறா பாண்டி

‘‘கறுப்பு யூரியா பற்றிக் கேள்விப்பட்டோம். கரும்புக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா, இதைப்பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்?’’

கே.வி.சண்முகம், கச்சிராப்பாளையம்.

தமிழ்நாடு கூட்டுறவுச் சர்க்கரை இணையத்தின் செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மைய முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முனைவர் அரு.சோலையப்பன் பதில் சொல்கிறார்.

யூரியா செலவைக் குறைக்கும் கறுப்பு யூரியா!

‘‘ரசாயன யூரியாவுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், கறுப்பு யூரியா பக்கம் விவசாயிகளின் கவனம் திரும்பியுள்ளது. அதனால்தான், பல விவரம் தெரிந்த விவசாயிகள் மூட்டை கணக்கில் வாங்கி வைத்துப் பயன்படுத்தி வருகிறார்கள். யூரியாவை ஒப்பிடும்போது, இதன் விலையும் குறைவு பலனும் அதிகம். இதன் மூலம் பிரேசில் நாட்டில் கரும்புச் சாகுபடியில் ஒரு ஹெக்டேரில் 3 பங்கு அதிகமாக மகசூல் எடுத்து வருகிறார்கள். சாதாரணமாக 60 டன் கிடைத்து வந்த நிலங்களில் 180 டன் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் ‘அசிட்டோ பேக்டர்’ (Acetobacter) என்ற நுண்ணுயிரியிலிருந்து கிடைக்கும் உயிர் உரம்தான்.

புறா பாண்டி
புறா பாண்டி

இதை எங்கள் ஆய்வு மையத்தில் கண்டறிந்தோம். ஆய்வுக்கூடத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் வயல்வெளிகளுக்கும் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்தோம். கரும்பு வயலில் ஏக்கருக்கு எட்டு கிலோ கறுப்பு யூரியா கொடுத்தோம். ரசாயன யூரியாவை முற்றிலும் நிறுத்தினோம். இருந்தும் மகசூல் 20% அளவுக்கு அதிகரித்தது. சோதனை வெற்றி பெற்றதால் தமிழகம் முழுக்க ‘கறுப்பு யூரியா’ பரவியது. இதன் பிறகும் வயல்வெளி சோதனைகள் தொடர்ந்தன. இதன் மூலம் இந்தியாவெங்கும் இதன் பயன்பாடு பரவலானது.

யூரியா செலவைக் குறைக்கும் கறுப்பு யூரியா!

கறுப்பு யூரியாவைக் கரும்புக்கு மட்டு மல்லாமல், நெல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, மலர்கள், சிறுதானியங்கள் என அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால், யூரியா போட வேண்டிய அவசியம் இருக்காது. ரசாயன உரச்செலவு மிச்சமாகும். கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தும் போது, அசோஸ் ஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் உள்ளிட்ட உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது. ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு 6 கிலோ கறுப்பு யூரியாவை மூன்று முறை, தலா 2 கிலோ என்ற விகிதத்தில் பிரித்துப் பயன்படுத்தலாம். நெற்பயிரில் தொண்டைக்கதிர் வரத் தொடங்கிவிட்டால், கறுப்பு யூரியாவைப் பயன்படுத்தக் கூடாது. காரணம், தழைச்சத்து அதிகரித்தால் மகசூல் பாதிக்கப்படும். இந்தக் கறுப்பு யூரியா தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் விற்பனை செய்யப் படுகின்றன. செங்கல்பட்டில் உள்ள உயிரியல் ஆய்வு மையத்திலும், சில தனியார் இயற்கை உர விற்பனையகங்களிலும் கறுப்பு யூரியா விற்பனைச் செய்யப்படுகின்றன. இதன் விலை ஒரு கிலோ ரூ.60 தான். கறுப்பு யூரியா பற்றிப் பசுமை விகடன் இதழில் முன்பே பேசியிருந்தாலும், மீண்டும் மீண்டும் இது போன்ற நல்ல தகவல்களைச் சொல்லும்போது, எனக்கும் உற்சாகம் ஏற்படுகிறது. மேலும், கறுப்பு யூரியா பயன்பாட்டைத் தெரிந்துகொள்ள ‘பசுமை விகடன்’ ஏற்பாடு செய்துள்ள ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அதன் விவரங்களைத் தெரிந்துகொள்ள அடுத்த பக்கத்தைப் பார்க்கவும்.’’

தொடர்புக்கு, முனைவர் அரு.சோலையப்பன், செல்போன்: 94433 31393,

செங்கல்பட்டு உயிரியல் ஆய்வு மையம், தொலைபேசி: 044 27431393.

புறா பாண்டி பகுதிக்கான கேள்விகளை 99400 22128 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் அனுப்பி வைக்கலாம்.

யூரியா செலவைக் குறைக்கும் கறுப்பு யூரியா!

விவசாயம், கால்நடை, மீன்வளம் மற்றும் சுற்றுச்சூழல் என்று பல துறைகள் பற்றி வாசகர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை உரிய நிபுணர்களிடம் பெற்றுத் தருவதற்காகவே ‘புறா பாண்டி’ சும்மா ‘பரபர’த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் கேள்விகளை ‘நீங்கள் கேட்டவை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 என்ற முகவரிக்குத் தபால் மூலமும், pasumai@vikatan.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமும், facebook.com/PasumaiVikatan என்ற முகவரிக்கும், twitter.com PasumaiVikatan என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.