
பயிற்சி
சென்ற இதழ் தொடர்ச்சி...
தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த விவசாயி அந்தோணிசாமி, இயற்கை விவசாயத்திலும் விளைபொருள்கள் மதிப்புக்கூட்டலிலும் நீண்ட அனுபவம் பெற்றவர். 50 ஏக்கரில் கரும்பு, எலுமிச்சை மற்றும் மரப்பயிர்கள் சாகுபடி செய்து வரும் இவர், மிகவும் குறைந்த செலவில் அதிக மகசூல் எடுத்து வருவதோடு... கரும்பு, பாரம்பர்ய நெல் ஆகியவற்றை மதிப்புக் கூட்டுவதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். பசுமை விகடன் ஏற்பாட்டில் கடந்த மார்ச் 25-ம் தேதி புளியங் குடியிலுள்ள அந்தோணிசாமி பண்ணையில் களப்பயிற்சி நடத்தப்பட்டது. இது குறித்துக் கடந்த இதழில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி இங்கே இடம் பெறுகிறது. முதலில் 20 ஏக்கர் பரப்பளவில் இருந்த எலுமிச்சைத் தோட்டத்துக்குச் சென்றோம். கொத்துக் கொத்தாக எலுமிச் சைகள் காய்த்துக் குலுங்கிய காட்சி, கண் கொள்ளாதது!

அடுத்து, அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மரப்பயிர்கள் தோட்டத்துக்கு விவசாயிகளை அழைத்துச் சென்றோம். 100 ஏக்கர் பரப்பில்... தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், வேங்கை, மலைவேம்பு உள்ளிட்ட 10 வகையான மரங்கள் ஆயிரக் கணக்கான எண்ணிக்கை அணிவகுத்து நின்றன. ஓங்கி உயர்ந்து நின்ற அந்த மரங்களைப் பார்த்து விவசாயிகள் வியந்தார்கள். அதற்குள் மதியம் 1.30 மணி ஆகிவிட்டது. உணவுக்குப் பிறகு, அங்கிருந்த தோட்டங்களை விவசாயிகள் பார்வை யிட்டனர். மீண்டும் 3 மணிக்கு மர நிழலில் விவசாயிகள் கூட்டமாக அமர்ந்தனர். மாலை 5.15 வரை தன் அனுபவங்களை அந்தோணிசாமி பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு பண்ணையும் வெவ்வேறு இடங்களில் இருந்ததால் அன்றைய களப்பயிற்சியில் விவசாயிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அப்போது அந்தோணிசாமியால் விரிவாக விளக்கம் அளிக்க இயலவில்லை. அதனால், அப்பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகள் முன் வைத்த கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் பலவற்றுக்கும் இங்கே விளக்கமளிக்கிறார் அந்தோணிசாமி.

முதலில் எலுமிச்சை சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விவரித்தார்.
“மண்ணை வளப்படுத்தணும். மண் வளமாகிட்டா மகசூல் தன்னால அதிரிக்கும். ஆண்டுக்கணக்குல ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி யிருந்ததுனால மண் மலடாகிப் போயிருக்கும். முதல்ல நிலத்தைக் குறைஞ்சது 4 முறையாவது உழவு செய்யணும். பல தானிய விதைப்பு செஞ்சு பூத்த நிலையில மடக்கி உழவு செய்யணும். 3 முறையாவது தொடர்ந்து பல தானிய விதைப்பு செய்யணும். தொழுவுரத் துடன் மண்புழு உரத்தை கலந்து அடியுரமா போட்டு, நிலத்துல உழவு செய்யணும். எடுத்த உடனே வளம் ஏறிடாது. மண் வளப்பட ரெண்டு வருஷமாவது ஆகும். இயற்கை இடுபொருள்களைத் தொடர்ந்து பயன் படுத்தும்போது மண் வளமாகும்.

களிமண்ணைத் தவிர, எல்லா மண்ணும் எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழை மாதங்கள்ல, எலுமிச்சை நடவு செய்றதை தவிர்ப்பது நல்லது. 10 நாள்கள் இடைவெளியில மூணு தடவை உழவு செய்யணும். குழிக்குக்குழி 16 அடி, வரிசைக்கு வரிசை 22 அடி இடைவெளியில 3 அடி ஆழ, அகலத்துல குழி எடுக்கணும். ஒவ்வொரு குழியிலயும் 25 கிலோ மட்கின தொழுவுரம், 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, ஒரு கிலோ மண்புழு உரம், 20 கிலோ இலைதழைகள் (நொச்சி, தும்பை, சணப்பை, கொளுஞ்சி, எருக்கு உள்ளிட்ட இலைகள்) போட்டு குழியை மூடிடணும். இதெல்லாம் நல்லா மட்கி, மண் வளமாகுறதுக்கு 40 நாள்கள் ஆகும். 41-வது நாள் கன்றுகளை நடவு செய்யலாம். ஒன்றரை அடி ஆழத்துல குழி எடுத்து கன்றுகள நடவு செய்யணும். 6 மாதங்கள் முதல் ஒரு வயசுடைய கன்றுகளை நடவு செய்யணும்.

நடவு செஞ்சதுல இருந்து, முதல் 6 மாசம் வரைக்கும் கண்ணும் கருத்துமா பார்க்கணும். வண்ணத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதைக் கவனிக்காம விட்டுட்டா இலைகளைத் தின்றுவிடும். இதைக் கட்டுப் படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேப்பங்கொட்டைக் கரைசலை தெளிக் கலாம். 6-வது மாதத்தில் இருந்து 15 நாள்களுக்கு ஒரு தடவை பயிர் வளர்ச்சியூக்கியாக 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீர்ல கலந்து விடணும். 20 நாளுக்கு ஒரு தடவை 10 லிட்டர் தண்ணீர்ல 300 மி.லி பஞ்சகவ்யா கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கணும். மாதம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து தெளிக்கணும். 4 மாசத்துக்கு ஒரு தடவை அடியுரமா தொழுவுரம் வைக்கணும். இதை மட்டும் செஞ்சா போதும்.

நான் கண்டுபிடிச்ச ஒட்டு ரக எலுமிச்சை, ரெண்டாவது வருஷத்துலயே காய்ப்புக்கு வந்துடும். மற்ற ரகங்கள் காய்ப்புக்கு வர 5 வருஷமாகும். எலுமிச்சை விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் கன்றைவிட, ஒட்டுக் கட்டிய கன்றுகளோட வளர்ச்சியும் மகசூலும் சிறப்பா இருக்கும். எலுமிச்சையைப் பொறுத்த வரைக்கும் கவாத்து செய்யவே கூடாது. காய்ந்த முட்களைத்தான் அகற்றணுமே தவிர, கவாத்து தேவையில்லை. ரசாயன முறை விவசாயத்தைவிட இயற்கை முறை விவசாயத்துல எலுமிச்சை மரத்தோட ஆயுசும் அதிகம். காய்க்கிற பழங்களோட எண்ணிக்கையும் அதிகம்” என்றார்.

அடுத்ததாக, கரும்பு சாகுபடி தொழில் நுட்பம் குறித்து விவரித்த அந்தோணிசாமி “கரும்பு சாகுபடிக்கு... இரண்டடி அகலம் கொண்ட பார் அமைக்கணும். பாருக்கு பார் 6 அடி இடைவெளி இருக்கணும். பார்களுக்கு இடைப்பட்ட பகுதிகள்ல தக்கைப்பூண்டு விதைக்கணும். ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தக்கைப்பூண்டு விதை தேவைப்படும். பாரின் இரு ஓரங்களிலும் கரும்பு விதைக் கரணை நடவு செய்யணும். 45-வது நாள் தக்கைப்பூண்டு பூத்த நிலையில, அச்செடி களைப் பிடுங்கி, கரும்புக்கு நடுவுல அங்கங்க மூடாக்காகப் போடணும். பார்களுக்கு இடைப்பட்ட பகுதிகள்ல மறுபடியும் தக்கைப்பூண்டு விதைக்கணும். அது வளர்ந்து பூத்த நிலையில, அந்தச் செடிகளைப் பிடுங்கி மறுபடியும் மூடாக்குப் போடணும். இது மாதிரி 45 நாள்களுக்கு ஒரு முறை மூடாக்குப் போடலாம். கரும்பு நடவு செய்த 90-ம் நாள், பயிர் வளர்ச்சி ஊக்கியாக 1 லிட்டர் மீன் அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்கலாம்.

120-ம் நாள் 100 லிட்டர் தண்ணீர்ல 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து தெளிக்கணும். 160-ம் நாள் கரும்பின் தோகையை உரிக்கணும். கரும்பின் நுனிப்பகுதியில உள்ள 4 தோகையை மட்டும் விட்டுவிட்டு மற்ற தோகைகளை மட்டும் உரிக்கணும். உரித்த தோகையைக் கரும்பின் வேர்பகுதியில போட்டு, அதுமேல மண்ணைப்போட்டு மூடணும். அதை விரைவாக மட்க வைக்க, ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம், ஜீவாமிர்தத்தைப் பாசன நீர்ல கலந்து விடணும். இதுமாதிரி 45 நாள்களுக்கு ஒரு முறை கரும்போட தோகையை உரிச்சு, அதோட வேர்ப் பகுதியில போட்டு ஜீவாமிர் தத்தைப் பாசனநீர்ல கலந்துவிடணும். 11-வது மாதத்தில் கரும்பு அறுவடை செய்யலாம். அதன் பிறகு மறுதாம்பு விளைச்சல் எடுக்கலாம். வேளாண் பல்கலைக்கழகமே ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமா 40 முதல் 45 டன் வரைதான் மகசூல் கிடைக்கும்னு சொல்லியிருக்கு. ஆனா, எனக்கு மறு தாம்பு லயே இரண்டு மடங்கு மகசூல் கிடைக் குதுன்னா அதுக்குக் காரணம் என்னோட மண் வளம்.

கரும்பு சாகுபடியைப் பொறுத்தவரை யிலும் முதல்முறை மட்டும்தான் செலவாகும். மறுதாம்புவில் ஒவ்வோர் ஆண்டும் பராமரிப்புச் செலவு குறையும். விவசாயி விவசாயியாக மட்டும் இருக்கக் கூடாது. மதிப்புக்கூட்டுபவராகவும், விற்பனை யாளராகவும் மாறணும். நான் உற்பத்தி செய்ற கரும்புல இருந்து சாறெடுத்துக் காய்ச்சி, நாட்டுச்சர்க்கரையும், உருண்டை வெல்லமும் தயார் செஞ்சு விற்பனை செய்யுறேன். அதினால் கூடுதலா லாபம் ஈட்டுறேன்’’ எனச் சொன்ன அந்தோணிசாமி, நிறைவாக,
“என்னோட ஒவ்வொரு பண்ணையிலயும் கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. எல்லாத்தையும் ஒரே நாள்ல முழுமையா விளக்கிட என்னால முடியாது. அப்படிச் சொன்னாலும் அத்தனையும் உள் வாங்கிக்கவும் முடியாது. அதனால, ஆர்வமுள்ளவங்க முன்கூட்டியே தகவல் தெரிவிச்சுட்டு என்னோட பண்ணைக்கு எப்போ வேணும்னாலும் வரலாம். ஒவ்வொருத்தருக்கும் அனுபவங்களை எடுத்துச ்சொல்ல நான் கடமைப்பட்டிருக்கேன்” என்று அழைப்பு வைத்தார்.
தொடர்புக்கு, அந்தோணிசாமி,
செல்போன்: 99429 79141

மானாவாரி நிலத்திலும் மரம் வளர்க்கலாம்!
அந்தோணிசாமியின் மகன் ஜேம்ஸ், ‘‘நீர்வளம் உள்ள பகுதிகளில் மட்டும்தான் மரப்பயிர்கள் வெற்றிகரமாகச் சாகுபடி செய்ய முடியும் என்பதல்ல. மானாவாரி நிலங்களிலும்கூட மரப்பயிர்கள் செழிப்பாக விளையும். தமிழ்நாட்டில் 40 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட நிலங்கள், மானாவாரி நிலங்கள்தான். எனவே, மானாவாரி நிலங்களிலும் மண்ணுக்கேற்ற மரங்களைச் சாகுபடி செய்தால், அதன் மூலம் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் நல்ல வருவாய் ஈட்ட முடியும். குறிப்பாக சந்தனம், செம்மரம், கொடுக்காப்புளி, இலுப்பை, வேம்பு, நாட்டுவாகை, நாவல், பலா போன்ற மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரும் திறன் கொண்டவை. இம்மரங்கள் வளர்க்க, வறண்ட பகுதிகளில் 6 - 8 சதவிகித மழைநீரே போதுமானது. ஆரம்பகாலங்களில் ஓரளவு பராமரித்தாலே உயிர் பிடித்து வளர்ந்துவிடும். இந்த மரங்களை மொத்தமாக நடவு செய்து மானாவாரி நிலங்களில் ஒரு தோப்பையே உருவாக்க முடியும்” என்றார்.

31 மறுதாம்பு எப்படி?
“கோ-86032 ரகக் கரும்பைச் சாகுபடி செய்திருக்கேன். கோயம்புத்தூர்ல உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனம்தான் இதை உருவாக்குனாங்க. இந்த ரகத்தை 1991-ம் வருஷம், வாசுதேவநல்லூர்ல உள்ள சர்க்கரை ஆலை மூலமா வயல் வெளி பரிசோதனைக்காக எனக்குக் கொடுத்தாங்க. அப்போ தொடங்கி இது வரையிலும் 31 மறு தாம்பு அறுவடை செய்திருக்கேன். ஆனா, 2000-ம் வருஷம்தான் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் இதை அதிகாரபூர்வமா வெளியிட்டாங்க. அதாவது, என்னை மாதிரி விவசாயிங்க, இது நல்ல ரகம். நல்ல மகசூல் கொடுக்குதுனு அனுபவத்தைச் சொன்னோம். அதன் பிறகுதான், நாடு முழுக்க உள்ள விவசாயிங்க சாகுபடி செய்யலாம்னு அறிவிச்சாங்க’’ என்கிறார் அந்தோணிசாமி.
தீ வைத்துக் கொளுத்தக்கூடாது!
“கரும்பு அறுவடை முடிந்த பிறகு பெரும்பாலான விவசாயிங்க, வேர் பகுதியில தீ வைக்கிறாங்க. அது தவறு. தீயிட்டுக் கொளுத்தறதால, மண்ணுல உள்ள நுண்ணுயிர்கள் அழிந்துபோகும். மறுதாம்பு விளைச்சல் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எக்காரணம் கொண்டும் தீ வைக்கக் கூடாது’’ என்கிறார் அந்தோணிசாமி.