நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஒரு ஏக்கர்... ரூ. 6,00,000... பிரமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்!

பீர்க்கன்
பிரீமியம் ஸ்டோரி
News
பீர்க்கன்

மகசூல்

ருவேல மரங்களும் உயர்ந்து நிற்கும் பனை மரங்களும் நிறைந்த பூமி ராமநாதபுரம். நீண்ட கடற்கரையைக் கொண்டதாக இருந்தாலும் குடிக்கக் காவிரித் தண்ணீரையும், பிழைக்க மழையையும் எதிர்பார்த்துக் கிடக்கும் மக்கள் வாழும் பகுதி.

ராமநாதபுரத்திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையின் இருபுறமும் களி, கரம்பை, செம்மண் எனக் கலந்துகிடப்பதால் முழுமையான தொழில் என்று எதையும் சொல்ல முடியாது. பருவத்திற்கு ஏற்பத் தொழில் நடக்கும். இதனாலேயே இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் பிழைப்புக்காக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.

பீர்க்கன்
பீர்க்கன்

தற்போது சிலர், வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு உள்ளூரிலேயே விவசாயம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் வெளிநாட்டு வேலையை விட்டு, சொந்த மண்ணில் விவசாயம் செய்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் கடுகுசந்தை சத்திரத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி நாகலிங்கம்.

ஆப்கானிஸ்தானிலிருந்துஅழைத்து வந்த ஆர்வம்

ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது கடுகுசந்தை சத்திரம். அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கட்டாளங்குளத்தில் இருக்கிறது நாகலிங்கத்தின் தோட்டம். அதிகாலை நேரத்தில் பந்தலில் பீர்க்கங்காய்களைப் பறித்துச் சாக்கு மூட்டை களில் சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த நாகலிங்கத்தைச் சந்தித்தோம். நம்மை அறிமுகம் செய்துகொண்டவுடனேயே அவர் முகத்தில் ஓர் இனம்புரியா மகிழ்ச்சி.

தோட்டத்தில் மனைவியுடன் நாகலிங்கம்
தோட்டத்தில் மனைவியுடன் நாகலிங்கம்

‘‘பி.காம் படிச்சுட்டு ஆப்கானிஸ்தான்ல இருக்க மிலிட்டரி கேம்ப்ல குக்கிங் டிபார்ட்மென்ட்ல 10 வருஷம் வேலை பார்த்தேன். ஓய்வு நேரங்கள்ல நம்ம ஊரு செய்திகளை ஆன்லைன்ல படிப்பேன். அப்படி படிச்சதுல என்னோட வாழ்க்கையைத் திருப்பிப்போட்டது பசுமை விகடன். இயற்கையாகவே விவசாயத்துல ஆர்வம் இருந்தாலும் அதுல ஈடுபடுறதுக்கு தயக்கமா இருந்துச்சு. ஏன்னா, எங்க ஊரு வானம் பாத்த பூமி. இங்க விவசாயம் செஞ்சு பொழைக்க முடியும்கிற நம்பிக்கை இல்ல. அந்த நம்பிக்கையை மாத்தி இந்தப் பூமியிலயும் விவசாயம் செஞ்சு சாதிக்க முடியும்னு வழி காட்டுனது பசுமை விகடன்தான்.

ஊக்கம் கொடுத்த நந்தகுமார் ஐ.ஏ.எஸ்

பசுமை விகடன் காட்டிய வழியை நம்பி வெளிநாட்டு வேலையை விட்டுட்டுச் சொந்த ஊருக்கு வந்தேன். என்னோட மனைவிக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தில விவசாயம் செய்ய முடிவு செஞ்சு நிலத்தில கால் வச்சேன். 2014-ம் வருஷம் இங்க கலெக்டரா இருந்த நந்தகுமார் சார் என்னோட முயற்சிக்கு ஊக்கம் கொடுத்தாங்க. ஒரு லட்சம் செலவுல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலமா, என்னோட நிலத்துல 20-க்கு 20 அடி அளவுல திறந்த வெளி கிணறு அமைச்சுக் கொடுத்தாங்க. முதல் கட்டமா ஒரு ஏக்கர் நிலத்தை 4 முறை உழவு செய்து 6 டன் குப்பையோட, வேப்பம் பிண்ணாக்கக் கலந்து மேட்டுப்பாத்தி முறையில ஒட்டு ரகப் பீர்க்கைப் பந்தல் சாகுபடியை தொடங்கினேன்.

முருங்கைக்காயுடன்
முருங்கைக்காயுடன்

20,000 கிலோ மகசூல்

தேவையான அளவுக்குத் தண்ணீர் தெளிக்கிற வகையில சொட்டுநீர்ப் பாசன முறையையும் ஏற்படுத்தினோம். அமுதக்கரைசலைச் சொட்டுநீர்க் குழாய் மூலமா கொடுத்தோம். தொடர்ந்து இயற்கை விவசாய உரங்களைப் பயன்படுத்துனோம். மனைவி அம்பேஸ்வரி, மகன்கள் பாரதிராஜா, இளமுருகன், மகள் ஜோதிமீனானு குடும்பமாச் சேர்ந்து உழைச்சதுக்கு நல்ல பலன் கிடைச்சது. ஆரம்பத்துல ஒரு நாளைக்கு 50 கிலோ வரை பீர்க்கங்காய் கிடைச்சது. நாளாக நாளாகத் தினமும் 200 கிலோ வரை பறிச்சோம். அதிகபட்சமா 300 கிலோ வரைக்கும்கூட பறிச்சிருக்கோம். சராசரியா தினமும் 200 கிலோ 100 நாள்களுக்குக் கிடைக்குது. அந்த வகையில 20,000 கிலோ கிடைச்சது. ஒரு கிலோ 25 ரூபாய் முதல் 45 ரூபாய் வரைக்கும் விற்பனையாச்சு. 30 ரூபாய்னே கணக்கு வெச்சுகிட்டாலும் ஒரு தடவை பீர்க்கன் சாகுபடி செஞ்சா 6 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல போக்குவரத்து, நடவுன்னு 72,500 ரூபாய் செலவு போக 5,27,500 ரூபாய் லாபமாகக் கிடைக்குது’’ என்றவர், விற்பனை வாய்ப்பு குறித்துப் பேசத்தொடங்கினார்.

அறுவடையான பீர்க்கங்காயுடன்
அறுவடையான பீர்க்கங்காயுடன்

‘‘பீர்க்கையை கடுகுசந்தை, சாயல்குடியில இருக்க சந்தைகளுக்குக் கொண்டு போய் விற்பனை செஞ்சோம். இது தவிர வீடுகளுக்கு நேர்ல போயும் விற்பனை செஞ்சோம். மதுரையில இருந்து வர்ற பீர்க்கையை விட எங்க தோட்டத்து பீர்க்கை பசுமையாவும் ருசியாவும் இருந்ததால நல்ல பேரு கிடைச்சது. இதனால எங்க தோட்டத்து பீர்க்கையை விக்கிறதை சில கடைக்காரங்க ரெகுல ராக்கிட்டாங்க. அந்தக் கடைகளுக்கு வர்ற வாடிக்கையாளர்களும் எங்க தோட்டத்து பீர்க்கையை விரும்பி வாங்கிட்டுப் போறாங்க. வருஷத்துல 5 மாசம் மட்டுமே பீர்க்கை விளைவிக்கிறோம்’’ என்றவர் பீர்க்கன் அறுவடையில் கவனத்தைச் செலுத்தினார்.

பூச்சிகளைக் கவர்ந்திழுக்க கருவாட்டுத் தண்ணீர்
பூச்சிகளைக் கவர்ந்திழுக்க கருவாட்டுத் தண்ணீர்

சற்று இடைவெளி விட்டு மீண்டும் பேசத் தொடங்கியவர், ‘‘ஆரம்பத்துல நிலத்தைச் சீர் செஞ்சு பந்தல் அமைக்க 2 லட்சம் லட்சம் ரூபாய் செலவானது. அதுல 80,000 ரூபாய் தோட்டக்கலைத்துறை மூலம் மானியமாக் கிடைச்சது. பீர்க்கை பருவம் முடிஞ்சதும் ரெண்டாம் போகமா தக்காளிச் சாகுபடியை ஆரம்பிச்சிடுவோம். தக்காளிச் செடிகளுக்கும் இயற்கை உரங்களையே பயன்படுத்துறோம். பீர்க்கைப் பந்தல் நிழலிலேயே தக்காளிச் செடி சாகுபடி செய்றதால நல்ல முறையில வளருது. அதனால அடுத்த 4 மாசம் தக்காளி மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். தக்காளி மூலம் வருஷத்துக்கு 2 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்குது’’ என்றவர் நிறைவாக,

பந்தல் செலவு நிரந்தரமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை.
பந்தல் செலவு நிரந்தரமானது என்பதால் இதில் சேர்க்கப்படவில்லை.

“தென்னை, முருங்கை மரங்களையும் வளர்த்துக்கிட்டு வர்றேன். என்னோட இயற்கை ஆர்வத்தைப் பார்த்த வேளாண் துறையினர் ஒரு ஏக்கர்ல கொய்யா நடவுக்கு உதவியிருக்காங்க. அதுவும் சீக்கிரம் மகசூல் கொடுக்க ஆரம்பிச்சிடும். தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமான பகுதியில இயற்கை விவசாயம் மூலம் நல்ல வருமானம் எடுக்குற என்னோட தோட்டத்தைப் பார்வையிடப் பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வர்றாங்க’’ என்றார் பெருமையோடு.

தொடர்புக்கு, நாகலிங்கம், செல்போன்: 97903 90998

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

றண்ட பூமியை வளமாக்கி வருமானம் ஈட்டும் நாகலிங்கம், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பீர்க்கன் சாகுபடி குறித்துக் கூறிய தகவல்கள் இங்கே...

ஒரு ஏக்கர்... ரூ. 6,00,000... பிரமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்!

பீர்க்கனின் வயது 180 நாள்கள். விதைக்கும் முன்பு நிலத்தை 3 முறை உழவு செய்ய வேண்டும். 6 டன் குப்பை, வேப்பம் பிண்ணாக்கை மண்ணில் தூவி கலந்து விட வேண்டும். நிலத்தைச் சுற்றிலும் வேலியாக கல் கம்பங்களை நிறுத்தி, அதில் கட்டுக் கம்பியினால் பந்தல் அமைக்க வேண்டும். அதன் பிறகு செடிக்குச் செடி 2 அடி, வரிசைக்கு வரிசைக்கு 4 அடி இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் பாசனம் செய்யலாம். செடி வளரத் தொடங்கிய பிறகு, 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் அமுதக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு, 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைச் சொட்டு நீர் வழியாகவும், தெளிப்பு வழியாகவும் பயன்படுத்த வேண்டும். இதுதவிர வீட்டில் கிடைக்கும் அடுப்புச் சாம்பலை ஒவ்வொரு செடிக்கும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துச் செடியிலிருந்து சற்று தள்ளித் தண்ணீர் விழும் இடத்தில் வைக்க வேண்டும்.

பூச்சிகளால் பீர்க்கன் கொடி மற்றும் காய்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பழைய குடிநீர் பாட்டிலில் கருவாட்டுத் தலைகளைத் தண்ணீரில் கலந்து பந்தலில் தொங்கவிட்டால், கருவாட்டு வாசத்தைத் தேடிவரும் ஈக்கள், பூச்சிகள் கருவாட்டுப் பொறியில் சிக்கிக் கொள்ளும். இதேபோல் சோப்பு எண்ணெய்க் கலந்த நீர் நிறைந்த சிறு பிளாஸ்டிக் தொட்டிகளின் மேல் இரவு விளக்குகளை எரியவிடுவதன் மூலம் பூச்சிகளைத் தடுக்கலாம். மேலும் வேளாண்மை துறையினர் வழங்கும் ஒட்டுண்ணி அட்டைகளைப் பயன்படுத்தியும் பூச்சிகள் தாக்கத்தைத் தடுக்கலாம். இது தவிர மூலிகைப் பூச்சிவிரட்டியைப் பயன்படுத்தினால் பூச்சி, நோய்ப் பாதிப்பு அதிகம் இருக்காது. அறுவடை தொடங்கி 100 முதல் 110 நாள்கள் வரை மகசூல் எடுக்கலாம்.

ஒரு ஏக்கர்... ரூ. 6,00,000... பிரமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்!

ஒரு ஏக்கர்... ரூ.6,00,000 பிரதமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்...!

என்ற கட்டுரை இந்த இதழில் அட்டைப்பட கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. ஊரடங்கு காலத்தில் வாசகர்கள் பண்ணையைப் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நேரலை நிகழ்ச்சி. கட்டுரையைப் படித்தபிறகு உங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களைப் பண்ணையாளரிடமே நேரடியாகக் கேட்டு விளக்கம் பெறலாம்.

இந்த லிங்க் மூலமும் கட்டணம் செலுத்தலாம் : https://bit.ly/2IhqJI3

மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் அப் எண் : 97909 90404

ஒரு ஏக்கர்... ரூ. 6,00,000... பிரமாதமான வருமானம் கொடுக்கும் பீர்க்கன்!

கட்டணம் செலுத்த இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யவும்.