Published:Updated:

ஏரி மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி - அரசாணை வெளியீடு!

தூர்வாரும் பணி
News
தூர்வாரும் பணி ( மாதிரி புகைப்படம் )

ஏரிகளில் தூர்வாரப்படும் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயிகள் தங்கள் சாகுபடி வயல்களில் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Published:Updated:

ஏரி மண்ணை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதி - அரசாணை வெளியீடு!

ஏரிகளில் தூர்வாரப்படும் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயிகள் தங்கள் சாகுபடி வயல்களில் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தூர்வாரும் பணி
News
தூர்வாரும் பணி ( மாதிரி புகைப்படம் )

மற்ற மாவட்டங்களுக்கு அனுமதியளித்ததைப் போன்று, இந்த ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்திலும் ஏரிகளில் தூர்வாரப்படும் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை விவசாயிகள் தங்கள் சாகுபடி வயல்களில் பயன்படுத்த அனுமதி வழங்கலாம் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் துார்வார தகுதிவாய்ந்த ஆரணியாறு மற்றும் கொசஸ்தலையாறு ஏரிகள் 426 மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஏரிகள் 44 என மொத்தம் 470 இடங்களில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தூர்வாரலாம் என திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏரி தூர்வாரும் பணி
ஏரி தூர்வாரும் பணி

எனவே, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள் 1959-ல் விதி எண் 12 (2)-ன் நிபந்தனைகளுக்குட்பட்டு மேற்குறிப்பிட்ட 470 நீர்நிலைகளில் சேர்ந்துள்ள களிமண், வண்டல் மண், சாதாரண மண், கிராவல் மண் போன்ற கனிமங்களை விவசாய பயன் பாட்டுக்காகவும். மண்பாண்ட தொழில் செய்பவர்களின் பயன்பாட்டுக்காகவும் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்காகவும் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று வெட்டி எடுத்துச் செல்ல வேண்டும்.

விவசாயிகள் களிமண், வண்டல் மண் துார்வாரி எடுத்துச் செல்ல அனுமதி கோரும் நீர்நிலைகள் உள்ள பகுதியானது, வேளாண் நிலம் அமைந்துள்ள அதே வருவாய் கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராம வரம்புக்குள் இருக்க வேண்டும்.

விவசாயப் பயன்பாட்டுக்கு 1 ஏக்கர் நன்செய் நிலத்துக்கு களிமண், வண்டல் மண் 75 க.மீ (25 டிராக்டர் லோடுகள்) என்ற அளவிலும், 1 ஏக்கர் புன்செய் நிலத்துக்கு களிமண், வண்டல் மண் 90 க.மீ (30 டிராக்டர் லோடுகள்) என்ற அளவிலும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இலவசமாக எடுத்துக்கொள்ள மாவட்ட கலெக்டரால் அனுமதி வழங்கப்படும்.

தூர்வாரும் பணி
தூர்வாரும் பணி

விவசாயப் பயன்பாட்டுக்காக களிமண், வண்டல் மண் பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் நபர், கிராம அடங்கல் பதிவேட்டின்படி தன் பெயரில் நிலம் வைத்துள்ளார் அல்லது குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறார் என்பதற்கும், அவருடைய நிலத்தின் வகைப்பாடு (நஞ்சை, புஞ்சை) மற்றும் விவசாய நிலத்தின் விஸ்தீர்ணம் குறித்தும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய சான்று பெற்று வட்டாட்சியர் அல்லது துணை இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாக விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.