பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 11-வது தவணை தொகை மே 31-ம் தேதி வங்கிக் கணக்கில் வைக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ரூபாய் 6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2,000 ரூபாய் எனப் பிரித்து மூன்று தவணைகளாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் 11-வது தவணை தொகையானது மே 31-ம் தேதி வங்கியில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும், பயிரிடும் நிலங்களைத் தங்கள் பெயர்களில் வைத்திருக்கும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு வேலை விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவில்லையெனில், பிரச்னை என்ன என்பதை pmkisan.gov.in என்ற வலைதளப் பக்கத்தில் பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல், பிரதம மந்திரி கிசான் கட்டணமில்லா தொலைபேசி எண் 18001155266, பிரதான் மந்திரி கிசான் ஹெல்ப்லைன் எண்கள் 155261, 011-24300606, 0120-6025109 மற்றும் லேண்ட் லைன் எண்களை 011—23381092, 23382401 தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம்.