மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

செலவு குறைவு; பலன்கள் அதிகம் பயோகாஸ், மாடித்தோட்டம்; காரைக்காலில் கலக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர்!

மகளுடன் மாடித்தோட்டத்தில் ராஜராஜ சந்திரமோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
மகளுடன் மாடித்தோட்டத்தில் ராஜராஜ சந்திரமோகன்

தற்சார்பு

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் வசித்து வருபவர் ராஜராஜ சந்திரமோகன். காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் இவர், தன்னுடைய வீட்டில் குறைந்த செலவில் அமைத்திருக்கும் பயோகாஸ் அமைப்பும் மாடித்தோட்டமும் கவனம் ஈர்க்கிறது. பயோகாஸ் அமைப்பின் மூலம் வீட்டுச் சமையலுக்குத் தேவையான எரிவாயு கிடைப்பதோடு, இதிலிருந்து வெளியாகும் கழிவுநீரானது... காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன் அளிக்கிறது.

இதைப் பார்வையிட ஒரு காலைப் பொழு தில் இவருடைய வீட்டுக்குச் சென்றோம். மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்த ராஜராஜ சந்திரமோகன், புன்னகையோடு நம்மை வரவேற்றார். நம் கண்களைப் பசுமையாக்கும் விதமாக... வெண்டி, கத்திரி, தக்காளி, கத்திரி, மிளகாய், வெள்ளரி, செடி அவரை என இன்னும் பல வகையான காய்கறிச் செடிகள் செழிப்பாகக் காட்சியளித்தன. எலுமிச்சை, ஆரஞ்சு, அத்தி, கொய்யா போன்ற பழ வகைச் செடிகள்... முளைக்கீரை அரைக்கீரை, மணத்தத்தக்காளி, பசலி, பொன்னாங்கன்னி உள்ளிட்ட கீரைகள்... துளசி, தூதுவளை, குப்பைமேனி, பிரண்டை, கரிசிலாங்கன்னி உள்ளிட்ட மூலிகைகள் என 100-க்கும் மேற்பட்ட செடிகள் வரிசையாக அணிவகுத்து நின்றன.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

‘‘எங்க வீட்டுக்குத் தேவையான எல்லாக் காய்கறிகளுமே இங்க கிடைச்சிடுது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்தாம, விளைவிக்கிறதுனாலயும், காய்களைப் பறிச்சவுடனேயே சமைக்குறதுனாலயும்... சாம்பார், துவையல் எல்லாமே கூடுதல் சுவையோடு இருக்கு. உடலுக்கு ஆரோக்கி யமும் கிடைக்குது. இங்க பல வகையான கீரைகள் பயிர் பண்றதுனால, தினமும் சாப்பாட்டுல ஏதாவது ஒரு கீரை வகையைச் சேர்த்துக்குறோம். மாடித்தோட்டத்தால கிடைக்குற சந்தோஷமான உணர்வையும் ஆரோக்கியத்தையும் நேரடியா அனுபவச்சுப் பார்த்தா மட்டும்தான் மத்தவங்களால உணர முடியும். எங்களோட தேவைக்குப் போக, கூடுதலாவே நிறைய காய்கறிகள், கீரைகள் கிடைக்குது. ஆனா, எதையும் வெளியில காசுக்கு விற்பனை செய்றதில்லை. என்னோட அண்ணன், அக்கா வீடுகளுக்குக் கொடுத் துடுவோம்’’ என்று சொன்னவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து்கொள்ளத் தொடங்கினார்.

தண்ணீர் ஊற்றும் பணி
தண்ணீர் ஊற்றும் பணி

‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஈடுபாடு அதிகம். விவசாயம் செய்யணுங்கற ஏக்கம் எனக்குள்ள இருந்து கிட்டே இருந்துச்சு. நம்மால விவசாயம்தான் செய்ய முடியலை... நம்ம பொண்ணை விவசாயம் சார்ந்த படிப்பையாவது படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சது மாதிரியே என்னோட மகள் ஜனனியை, காரைக்கால் அரசு வேளாண் கல்லூரியில இளநிலை வேளாண் பட்டப் படிப்பு படிக்க வச்சேன். என் மகளோட தூண்டுதலாலதான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி, இந்த மாடித்தோட்டத்தையும் பயோகாஸ் அமைப்பையும் உருவாக்கினேன். பயோகாஸ் மூலம் இரண்டு மடங்கு பலன் கிடைக்குது.

மகளுடன் மாடித்தோட்டத்தில் ராஜராஜ சந்திரமோகன்
மகளுடன் மாடித்தோட்டத்தில் ராஜராஜ சந்திரமோகன்

எங்க குடும்பத்துல மொத்தம் நாலு பேர், தினமும் ரெண்டு வேளை காபி போடுறதுக்கும், மூணு வேளை சமையல் செய்றதுக்கும் பயோ காஸ்தான் பயன்படுத்துறோம். சமையல் காஸ் சிலிண்டர் விலை எக்குத்தப்பா உயர்ந்து கிட்டு இருக்குற இந்தச் சமயத்துல, செலவே இல்லாம, எங்க வீட்டு சமையலுக்கு காஸ் கிடைக்குறதை நினைச்சா மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. காய்கறிக் கழிவுகள், மிச்சமாகுற உணவு... அரிசி, காய்கறிகள் கழுவுற தண்ணி உட்பட எல்லாத்தையுமே பயோகாஸ் உற்பத்திக்கான பிளாஸ்டிக் கேன்ல போட்டுருவோம்.

இடுபொருள்கள்
இடுபொருள்கள்

சந்தையில இருந்தும் காய்கறிக் கழிவுகளை அப்பப்ப வாங்கிக்கிட்டு வந்து மிக்சியில போட்டு கூழாக்கி, பயோகாஸ் உற்பத்தி டேங்க்ல போடுவோம். மாசம் ஒரு தடவை சாணக் கரைசலையும் ஊத்துவோம். பயோகாஸ் உற்பத்தியான பிறகு, கழிவுநீரா எஞ்சியிருக்கக்கூடிய சிலரியை, இங்கவுள்ள செடிகளுக்கு உரமா பயன்படுத்திக்குறோம். என்னோட மனைவி யும் மகளும்தான் பெரும்பாலும் இந்த மாடித்தோட்டத்துக்கான பரமாரிப்பையும், பயோகாஸ் உற்பத்திக்கான பணிகளையும் கவனிச்சிக்குறாங்க. நான் காவல்துறையில வேலை பார்க்குறதால, ஓய்வு நேரங்கள்ல மட்டும் பராமரிப்பு பணிகளைப் பார்ப்பேன்’’ என மகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார்.


தொடர்புக்கு, ராஜராஜ சந்திரமோகன், செல்போன்: 87786 21027.

காஸ்
காஸ்

பயோகாஸ் அமைப்பு முறை

இதை அமைக்க அதிகபட்சம் 1,500 ரூபாய்தான் செலவாகும். 200 லிட்டர் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் டேங்க் மொட்டைமாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே காற்று, மழைநீர் போக முடியாத வகையில் இந்த டேங்கின் மேல் பகுதி முழுமையாவும், நிரந்தரமாகவும் முடப்பட்டுள்ளது. மேல் பகுதியில 4 இன்ச் சுற்றளவு உள்ள குழாய் பொருத்தப்பட்டுள்ளது. குழாயின் மேல் முனையில மூடி உள்ளது. இந்த மூடியை திறந்துதான் சாணக் கரைசலையும், காய்கறிக் கழிவுகளையும் டேங்கின் உள்ளே போட வேண்டும். டேங்கில் உருவாகக்கூடிய எரிவாயுவை காஸ் அடுப்புக்குக் கொண்டு போக அரை இன்ச் சுற்றளவு உள்ள குழாய் அமைக்கப்பட்டுள்ளது. கழிவுநீரான சிலேரியை வெளியில் எடுக்க, திறப்பு அமைக்கப்பட்டுள்ளது.

மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்

100 லிட்டர் தண்ணீரில் 50 கிலோ சாணத்தைக் கரைத்து, டேங்கின் உள்ளே ஊற்றி, நன்கு மூடிவிட வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் எரிவாயு உருவாகிவிடும். அதன் பிறகு தினமும் 1 கிலோ காய்கறிக் கழிவுகளைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, டேங்கின் உள்ளே போட்டு, 3 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அரிசி கழுவிய தண்ணீர், மிச்சமாகும் சாதம் ஆகியவற்றையும் இதன் உள்ளே போடலாம். மாதம் ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ சாணத்தைக் கரைத்து டேங்கில் ஊற்ற வேண்டும். இதற்கு வேறு எந்த ஒரு பராமரிப்பும் கிடையாது. டேங்கில் அமைக்கப்பட்டுள்ள திறப்பின் வழியாக, தினமும் 3 - 4 லிட்டர் சிலரியை வெளியில் எடுத்து சேமித்து வைக்கலாம். தேவையான தருணங்களில் அதைத் தண்ணீரில் கலந்து செடிகளுக்குத் திரவ உரமாகப் பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டம்
மாடித்தோட்டம்

செடிகள் பராமரிப்பு

‘‘இந்த மொட்டை மாடியோட மொத்த பரப்பளவு 1,200 சதுர அடி. செடிகள் வளர்க்கும் பைகளையும் பிளாஸ்டிக் கேன்களையும் பயன்படுத்தி, 100-க்கும் மேற்பட்ட செடிகள் வளர்க்குறோம். வாரம் ஒரு முறை 1 லிட்டர் தண்ணிக்கு 100 மி.லி வீதம் சிலரி கலந்து தெளிப்போம். இது பயிர் வளர்ச்சி ஊக்கியா பலன் கொடுக்குது. 15 நாள்களுக்கு ஒரு தடவை, 1 லிட்டர் தண்ணிக்கு 50 மி.லி வீதம் மீன் அமிலம் கலந்து தெளிப்போம். பூச்சித்தாக்குதல் ஏற்பட்டா, 1 லிட்டர் தண்ணிக்கு 50 மி.லி வீதம் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல் கலந்து தெளிப்போம்’’ என்கிறார் ராஜராஜ சந்திரமோகன்.

மாடித்தோட்டத்தில்
மாடித்தோட்டத்தில்
தக்காளி
தக்காளி

எந்தவித அசம்பாவிதமும் நிகழாது!

‘‘பயோகாஸ் அதிகமா உற்பத்தியாகி, அதைப் பயன்படுத்தாமல் இருந்து அதனால ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுமோனு பயப்பட வேண்டியதில்லை. இதைப் பயன்படுத்தாம இருந்தா காஸ்ல வீரியம் குறைஞ்சுடும், அவ்வளவுதான். காரணம் இது, சிலிண்டர்கள்ல அடைக்கப்பட்ட எல்.பி.ஜி காஸ் மாதிரி கிடையாது. எல்.பி.ஜி காஸ் பயன்படுத்தி ஒரு மணிநேரத்துல செய்யக்கூடிய சமையல், பயோகாஸ் பயன்படுத்தினா இரண்டு மணிநேரத்துக்கு மேல ஆகும். காரணம் இதோட அடர்த்திக் குறைவு’’ என்கிறார் ராஜராஜ சந்திரமோகன்.