ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து சுமார் 200 கி.மீ நீளத்துக்கு கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளும் முழுக்க மண்ணால் கட்டப்பட்டதாகும். நீர்க்கசிவை தடுக்க வாய்க்காலின் இரு கரைகளிலும் கான்கிரீட் தளம் அமைக்க ரூ.750 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து கீழ்பவானி விவசாயிகள் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றனர். அதில், கீழ்பவானி வாய்க்காலின் கரைகளில் கான்கிரீட் தளம் அமைக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததுடன், மே 1-ம் தேதி முதல் காவல் துறை உதவியுடன் தமிழக அரசு பணியைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. அதேவேளையில், வாய்க்காலில் ஏற்படும் நீர்க்கசிவால் தங்களுக்கான உரிய நீர் கிடைப்பதில்லை. எனவே, கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கம், கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கீழ்பவானி வாய்க்காலில் மே 1-ம் தேதி முதல் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நீர்வளத் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி கூறுகையில், ``கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புத் திட்டம் 2020-ல் அரசாணை எண் 276-ன்படி அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் சீரமைப்புப் பணிகள் தொடங்கிய நிலையில், கீழ்பவானி ஆயக்கட்டுக்கு தொடர்பில்லாத சிலரால் இந்தப் பணிகள் முடக்கப்பட்டன. சீரமைப்புப் பணிகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் மட்டும் 4 முறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர்.
வாய்க்காலில் சீரமைப்பு பாசனப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் பாசன சபைகள் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு அரசாணை எண் 276-ன் படி கால்வாய் சீரமைப்புப் பணிகளை மே 1-ம் தேதி முதல் தொடங்க வேண்டும் எனக் கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி உத்தரவிட்டது.

எனவே, வரும் மே 1-ம் தேதி எவ்வித காலம் தாழ்த்தாமல் சீரமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் மே 5-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். எங்களின் கோரிக்கையை ஏற்று மே 1-ம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என நீர்வளத்துறை செயற்பொறியாளர் கண்ணன் உறுதியளித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளோம்" என்றார்.