தென்னையிலிருந்து தயாரிக்கப்படும் தென்னீரா என்ற நீரா பானத்தில் உடல் நலத்துக்குத் தேவையான தாதுப் பொருள்களும், அமினோ அமிலங்களும், வைட்டமின்களும், ஆக்ஸிஜனேற்ற மாற்றி போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. இதைப் பருகுவதன் மூலம் உடனடியாக ஆற்றல் மேம்பாடு அடைகிறது. மேலும், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களும் அனைத்து வயதினரும் இதை எடுத்துக்கொள்ளலாம்.

கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடத்தில் தயாரிக்கப்படும் தென்னீரா எனப்படும் நீரா பானத்தை முதல்முறையாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இந்த முதல் ஏற்றுமதி விழாவை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (அபேடோ) தலைவர் டாக்டர் எம்.அங்கமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து அங்கமுத்து பேசுகையில், `இந்தத் தென்னீரா பானம் தமிழகத்தின் தனித்துவமான தயாரிப்பு. இந்த ஏற்றுமதிக்கு அபேடா முழு ஆதரவு அளிக்கும். இதுபோன்ற முயற்சி அனைத்து மாநிலங்களிலும், எல்லா பொருள்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்திய பாரம்பர்ய பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்தி, கிராமங்களில் தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

தென்னீராவை 50 நாடுகளில் விற்க வேண்டும். லூலூ, வால்மார்ட் போன்ற மிகப்பெரிய பேரங்காடிகளில் பிரதான பானமாக விற்கப்பட வேண்டும் தற்போது இந்தத் தென்னீரா பானம் அபேடோ மூலம் அமெரிக்காவுக்கு இது ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை அதிக அளவில் ஏற்றுமதி செய்வதன் மூலம் அபேடா குழு மற்றும் விவசாயிகள் அதிக பயன் அடைவர். மேலும், தமிழக அரசுடன் இணைந்து இந்த ஏற்றுமதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறினார்.