உலக அரங்கில் இந்தியாவின் அடையாளம் ஆன்மிகம் மற்றும் விவசாயம் ஆகும். 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் உணவைத் தரும் உன்னத பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் வேளாண் பெருமக்கள். மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், பேராசிரியர், அறிவியலாளர் எனப் பல்வேறு படிப்புகளைப் படித்து முடித்துவிட்டு அது சார்ந்த பணியாற்றுபவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த வேலையைவிட்டு விலகிச் செல்லலாம். அவர்கள் செய்யம் தொழிலைவிட்டு விலகி வேறு தொழில் செய்யும் முடிவுக்கு வரலாம். ஆனால், ஒரு விவசாயியால் அப்படி செய்ய முடியாது. விவசாயம் என்பது ஒரு தொழிலல்ல. அது வாழ்வியல்தான். அதற்காகவே பிறந்தவர்கள் என்பது ஒவ்வொரு விவசாயிக்குள்ளும் சதா நேரமும் ஒடிக்கொண்டிருக்கும் எண்ணமாகும்.

விவசாயம் என்பது நிலம், நீர், சுற்றுச்சூழல், கால்நடைகள் மற்றும் மனிதர்களோடு சம்பந்தப்பட்டது. ஆனால், காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் மழையை மட்டும் எதிர்பார்த்து விவசாயம் செய்யப்பட்டது. காலப்போக்கில் மனிதர்களின் முயற்சியால் அந்த மழைநீர் தேக்கப்பட்டு, அதிலிருந்து வாய்க்கால்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆற்றுப்பாசனமாகவும், ஏரிகளில் நிரப்பி ஏரிப்பாசனமாகவும், நிலத்தடிக்குள் புகுந்த நின்ற நீரை கிணற்றுப்பாசனமாகவும், மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதுவே ஆழ்துளைக்குழாய் கிணறு பாசனமாக மாற்றம் பெற்று பல்லாண்டுகளாகச் சேகரித்து வைக்கப்பட்ட நிலத்தடி நீர் படிப்படியாக சுரண்டப்பட்டு வருகிறது.
இந்தியாவின் சாகுபடி பரப்பில் ஆறு மற்றும் ஏரிப்பாசனத்தின் மூலமே பெருமளவிலான நிலங்களில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணை முயற்சிகள் யாவும், மன்னர்கள் காலத்தில் மரத்தடுப்புகளாக உருவாக்கப்பட்டு அதில் குறைந்த அளவு நீர் தேக்கி வைக்கப்பட்டன. அவற்றிலிருந்து பெறப்படும் நீரை வயல்களுக்குக் கொண்டு செல்ல வாய்க்கால்களும் கிளை வாய்க்கால்களும் ஏற்படுத்தப்பட்டன. இதற்கான அடிப்படை கட்டமைப்புகள் மாமன்னன் ராஜராஜசோழன் காலத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்டன. தொழில்நுட்பம் வளர்ந்த பின்னர் மர அணைகள், கருங்கல் மற்றும் சிமென்டால் கட்டப்பட்டன. இப்படி கட்டப்பட்ட அணைகளின் பெரும்பகுதி இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட பொறியாளர்களில் சிலர் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்பு உணர்வுடனும், அயராது உழைத்து அணைகளைக் கட்டினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் சர் ஆர்தர் காட்டன் (Sir Arthur Thomas Cotton), மே 15, 1803 - ஜூலை 24, 1899) என்னும் பிரிட்டிஷ் பொறியாளரும் ஒருவராகும்.

இவர் தன் வாழ்க்கை முழுவதையும் இந்தியாவில் நீர்ப்பாசன வசதி செய்து தரவும், கால்வாய்களைப் புணரமைப்பதிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டதால் இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்றார். சர் ஆர்தர் காட்டன் இங்கிலாந்து நாட்டில் செஸ்ஷைர் என்ற ஊரில் ஹென்றி கால்வெலி காட்டனுக்கு 1803-ல் ஆண்டு மே 15 அன்று பத்தாவது மகனாகப் பிறந்தார். பொறியியலில் ஆர்வம் கொண்ட அவர் தன் 15-வது வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார். 1821-ல் சென்னை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளரானார். 1822-ல் கப்பல் போக்குவரத்துக்காக பாம்பன் நீரிணைப்பின் பணிகளில் அவரை ஆங்கிலேய அரசு அமர்த்தியது. 1825-ல் ஏரி பராமரிப்புத் துறையில் பணியாற்றிய கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு உதவியாளராக நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் உள்ள ஏரி, கண்மாய், குளங்களைப் பராமரித்து நீர் விநியோகம் செய்யும் பணி ஆர்தர் காட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் வீராணம் ஏரியும் ஒன்று. பின்னர் 1829-ல் காவிரி பாசனப் பகுதிக்கு தனிப் பொறியாளராக அரசு அவரை நியமித்தது.
பிரமிப்பு தந்த கல்லணை...
பதவியேற்றபின் 1830-ல் கல்லணைக்குச் சென்றவர் மணல் மேடுகளால் அதன் நீரோட்டம் தடைப்படுவதைப் பார்த்தார், அவற்றை அகற்றுவதே அதற்குரிய சரியான தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர்ந்தார். மாமன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருந்த கல்லணையின் தொழில்நுட்பம் புரியாததால் முதலில் தயங்கிவர் பின்னர் தைரியத்துடன், அதன் சிறு பகுதியைப் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் அடித்தளத்தைக் கண்டு வியந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறன் மற்றும் பாசன மேலாண்மையை உலகுக்கு எடுத்துக் கூறியதுடன், கல்லணைக்கு `கிராண்ட் அணைக்கட்டு’ என்ற பெயரையும் சூட்டியதுடன் இன்றைய காவிரி டெல்டாவை நெற்களஞ்சியமாக மாற்றி நம்மிடம் வழங்கினார்.

`ஆழம் காண முடியாத மணற்படுகையில் எவ்வாறு அடித்தளம் அமைப்பது என்ற தொழில்நுட்பத்தையும், அதை அடிப்படையாகக் கொண்டு பாலங்கள், அணைக்கட்டுகள் போன்ற நீரியல் கட்டுமானங்களை எவ்வாறு கட்ட முடியும் என்பதையும் தமிழர்களிடம் கற்றுக்கொண்டோம். இந்த மகத்தான சாதனையை செயல்படுத்திய அந்நாளைய மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்’ என்று கல்லணையில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை, டைரியில் பதிவு செய்திருந்தார்.
மேலணை மற்றும் கீழணை கட்டுமானம்...
1835-ல் முல்லை பெரியாறு அணை மற்றும் மேட்டூர் அணைக்கான வரைவு திட்டங்களை வழங்கியவர், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு கல்லணைக்கு மேற்கில் காவிரியும், கொள்ளிடமும் பிரியும் இடமான திருச்சி முக்கொம்பில் 1836-ல் ஓர் அணையைக் கட்டினார். இந்த அணை மூலம் காவிரி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக விரயமாகி கடலுக்குச் செல்வது தடுக்கப்பட்டதுடன், வெள்ளக் காலத்தில் காவிரி ஆற்றில் பெருகி வரும் உபரி நீரைக் கொள்ளிடத்தில் விடுவதற்கும் பயன்பட்டது. இதன் தொடர்ச்சியாகக் கல்லணைக்கு கிழக்கில், வீராணம் ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வடவாறு கால்வாய், வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள் மற்றும் கும்கி மண்ணியாறு பிரியும் இடத்தில் நீரை சேமிப்பதற்காக 1840-ல் அணைக்கரை என்ற ஊரில் மற்றோர் அணையைக் கட்டினார். கல்லணைக்கு மேற்கில் கொள்ளிடத்தின் தலைப்பில் கட்டப்பட்ட அணைக்கு மேலணை என்றும், கிழக்கில் கட்டப்பட்ட அணைக்கு கீழணை என்றும் பெயர் சூட்டச் செய்தார். கீழணை கட்டுமானத்துக்குப் பிறகு, கொள்ளிடம் ஆற்றில் கடலுக்குச் சென்ற எஞ்சிய நீரும் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டதுடன், வீராணம் ஏரிக்குத் தொடர்ந்து நீர் கிடைக்கவும் செய்தது. அதே ஆண்டு சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கான வடிவமைப்பையும் அளித்தார்.

மேட்டூர் அணைக்கான முயற்சி...
தொடர்ந்து வெண்ணாறு, வெட்டாறு முதலியவற்றில் விடப்பட்ட தண்ணீர் முழுமையான பாசனத்துக்கு பயன்படும் வகையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திய காட்டன், அடுத்ததாக மேட்டூரில் அணை கட்டுவதற்கான முயற்சியைத் திட்டமிட்டார். இதற்கான அனுமதி பெற மைசூர் சமஸ்தானத்துக்கு 1835-ல் சென்றார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்படவே அம்முயற்சி தடைபட்டது (அவரின் காலத்துக்குப் பிறகு, 1925-ல் அவரின் கோரிக்கை செயல்வடிவம் பெற்று 9 ஆண்டுக்கால கட்டுமானத்துக்குப் பின் 1934-ல் மேட்டூரில் அணை கட்டி முடிக்கப்பட்டது).
துறைமுகம் மற்றும் ரயில்வே பணிகள்...
தமிழக நீர் பாசனத்துறையைத் தாண்டி 1837-ல் சென்னை துறைமுகத்தின் தொடக்க கால பணியாகக் கடல் அரிப்பிலிருந்து துறைமுகத்தைக் காக்க பாறைகளைக் கொண்டு பாதுகாப்பு சுவர் அமைத்தவர், அதே ஆண்டு சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலிருந்து செங்குன்றம் வரையிலான முதல் ரயில்பாதையை அமைத்து ரயிலை இயக்கிய பெருமையையும் பெற்றார். 1844-ல் விசாகப்படினம் துறைமுகம் உருவாக்கத்திலும் பங்கேற்றார்.

தமிழகம் தாண்டிய பணிகள்...
தமிழகத்தைப் போல் ஆந்திரா மாநிலத்தில் 1849-ல் விஜயவாடா அருகில் பெசவாடாவில் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கு வடிவமைப்பு நல்கி கட்டுமான பணிகளையும் தொடங்கி வைத்தார். தற்போது இது பிரகாசம் பேரேஜ் என்றழைக்கப்படுகிறது. 1852-ல் கோதாவரி நதியின் குறுக்கே ராஜமுந்திரி பகுதியில் தவளேஸ்வரத்தில் மிக பிரம்மாண்டமான அணையைக்கட்டி ஆந்திரா மாநிலத்தை நெற்களஞ்சியமாக மாற்றி ஆந்திரா பூமியை செல்வம் கொழிக்கும் மாநிலமாக மாற்றினார். கோதாவரியில் அணை கட்ட அப்போதைய பிரிட்டீஷ் அரசின் மக்களவை முன் காட்டன் ஆஜராகி அணையின் முக்கியத்துவத்தை விளக்க வேண்டிவந்தது. அதே போல் இந்தியாவின் செயலராக இருந்தவருக்கும் ஆர்தர் ஒரு கடிதத்தை எழுதினார். அதன் இறுதி வரிகள் இவை `மை லார்ட், கோதாவரி நதியில் வெள்ள காலத்தில் ஒரு நாளில் ஓடும் நீரின் அளவு, லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வருடம் ஓடும் நீருக்கு சமம்’ இதைப் படித்த இந்தியாவுக்கான செயலரும், ஐக்கிய அரசும் இவரின் கோரிக்கையை ஏற்க கோதாவரி அணையை வெற்றிகரமாகக் கட்டி முடித்தார். 1853-ல் சென்னை மாகாண பொதுப்பணித் துறையின் தலைமை பொறியாளராகப் பதவி உயர்வு பெற்றவர். 1858-ல் ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை செயல் படுத்தினார். 1863-ல் மத்தியப் பிரதேசத்தில் சோனுநதியில் பாசன திட்டங்களுக்கு வழிகாட்டியவர், 1870-ல் துங்கபத்ரா நதியில் கால்வாய்கள் அமைக்க ஆலோசனைகளை வழங்கினார்.
இந்திய நதிகள் ஒருங்கிணைப்பு...
பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை முன்னெடுத்துச் சென்ற இவரே இந்திய நதிகளை ஒருங்கிணைப்பதற்காக முதன்முதவில் குரல்கொடுத்தவராவர். வெறும் குரல் மட்டுமன்றி அதற்கான திட்டத்தையும் தயாரித்து வழங்கினார். இந்தியா அதன் இயற்கை வளங்களான ஆறுகளையும் ஏரிகளையும் முழுமையாகப் பயன்படுத்தினாலே இந்திய மக்களும் விவசாயிகளும் தற்சார்புடன் பொருளாதார மேம்பாடு அடைய முடியும் என்பதை உணர்ந்து அன்றைய அரசுக்கு அதை உணர்த்தி அதைச் செயல்படுத்துவதையே தன் லட்சியமாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு இந்தியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிகளை உருவாக்கினார். இவ்வளவு பணிகளையும் அவர் சுலபமாகச் செய்துவிடவில்லை. சொல்லொணா துயரங்களையும் போராட்டங்களையும் அவமானங்களையும் சந்தித்தார். அந்நிய மண்ணில் பிறந்தாலும் நம் மண்ணையும் மக்களையும் நேசித்து செயல்பட்ட அவர் பணி ஓய்வுக்குப் பின் பல்லாண்டுகள் பல நாடுகளில் வசித்து 1899-ம் ஆண்டு ஜூலை 14 -ம் தேதி தன் 96-வது வயதில் காலமானார்.

விவசாயிகள் எதிர்பார்ப்பு...
சர் ஆர்தர் காட்டனின் பிறந்தநாளை நீர்ப்பாசன மேலாண்மை தினமாகத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அவரின் சீரிய பணியை சிறப்பித்து ஆந்திர மாநில அரசு அவருக்கு பல இடங்களில் சிலை அமைத்திருப்பது போல, சென்னை பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் அவர் கட்டிய அணைக்கட்டுகளில் அவரது உருவச்சிலையை நிறுவி போற்ற வேண்டும், பள்ளி பாடப்புத்தகத்தில் அவரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு மாணவர்களும் மற்றவர்களும் அறிய செய்ய வேண்டும். ஆந்திர மாநிலத்தின் ராஜமுந்திரி பகுதியில் தவளேசுவரம் அணைக்கட்டில் ஆந்திர அரசு அவருக்கு ஒரு அருங்காட்சியகம் அமைத்திருப்பதுபோல மேலணை, கீழணையில் ஓர் அருங்காட்சியகம் அமைத்து அந்த மகத்தான மனிதனின் சாதனையை வருங்கால சந்ததிகள் அறிந்துகொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
- இரா.நெடுஞ்செழியன்.