இலங்கையில் நூறு சதவிகிதம் இயற்கை விவசாயம் செய்வது என்கிற முடிவை அந்நாட்டு அரசு எடுத்தது அனைவரும் அறிந்ததுதான். இதனால் பொருளாதாரம் சரியும் என இலங்கையின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் ரசாயன உரத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தியதால், `நூறு சதவிகித இயற்கை விவசாயம்' என்கிற முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது இலங்கை அரசு.

இந்நிலையில், மண்புழு விஞ்ஞானியும் தமிழ் நாட்டின் மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதிநேர உறுப்பினரும் பேராசிரியருமான சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், இலங்கையின் இயற்கை விவசாயிகளுக்கான அமைப்பான லோம் (LOAM - Lanka Organic Agricultural Movement) அழைப்பின் பேரில் இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.
``ஜெர்மனியைச் சேர்ந்த இயற்கை விவசாய ஆர்வலரான பீட்டர் என்பவர், இயற்கை விவசாயம் தொடர்பான புராஜெக்ட்காக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தியா வந்திருந்தபோது என்னையும் சந்தித்து இயற்கை விவசாயம் குறித்து உரையாடினார். அதன் பிறகு, இலங்கை சென்ற அவர், லோம் (LOAM) அமைப்பிடம் `என்னை இலங்கைக்கு அழைத்து இயற்கை விவசாயம் தொடர்பான உரைகளை நிகழ்த்த வைக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து நான் இலங்கைக்குப் பயணமானேன். இது என் தனிப்பட்ட பயணம்" என்றவர், இலங்கையில் தான் உரையாற்றிய இடங்கள், அவற்றின் பலன்கள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.
``முதலில் பலதுறைகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் என்.ஜி.ஓ-க்கள் முன்னிலையில் லோமில்தான் இயற்கை விவசாயம் தொடர்பாக உரையாற்றினேன். `லோம்' என்றால் `நல்ல தோட்டத்து மண்' என்று அர்த்தம். அடுத்து கொழும்பில், அந்நாட்டின் வேளாண்மைத் துறையைச் சேர்ந்தவர்களுடன் இயற்கை விவசாயம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டேன். அங்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் இயற்கை வேளாண்மை பற்றி நான் நிகழ்த்திய உரையைக் கேட்ட அப்போதைய இலங்கை வேளாண்துறை அமைச்சர் ஷஷரேந்திர ராஜபக்ஷே, `இப்போதுதான் இயற்கை விவசாயம் தொடர்பான தெளிவு வந்திருக்கிறது. வருங்காலத்தில் உங்களுடைய உதவி எங்களுக்குத் தேவைப்படும்' என்றார். இதைத் தொடர்ந்து (University of Peradeniya) பெரதீனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விவசாயம் குறித்து உரையாற்றினேன்.

அடுத்து வவுனியாவில் இருக்கிற தமிழ் மக்கள், விவசாயத்துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் உரையாற்றினேன். கிளிநொச்சியிலும் இதுவே தொடர்ந்தது. கொலம்போ நகரைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஆன்லைனில் லெக்சர் கொடுத்தேன். இலங்கையில் நான் ஆற்றிய அத்தனை உரைகளிலும் கலந்துரையாடல்களிலும் இயற்கை விவசாயம் எப்படிச் செய்வது; நாட்டு விதைகளை எப்படிச் சேகரிப்பது; தற்சார்பு முறையில் மக்கள் எப்படி வாழ்வது என்பனவற்றுக்கான வழிமுறைகளையே எடுத்துரைத்தேன். குறிப்பாக, எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் திடீரென இயற்கை விவசாயம் மட்டுமே செய்வது என முடிவெடுத்தால், உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு வரும் என்பது பற்றிய கருத்துகளையே அதிகம் எடுத்துரைத்தேன். அதை இலங்கையின் வேளாண் அமைச்சரில் ஆரம்பித்து வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் வரை நன்கு உள்வாங்கிக் கொண்டார்கள். இலங்கையில் நான் கண்ட பல நல்ல விஷயங்களில் ஒன்று, மக்களின் ஆரம்பித்து அதிகாரிகள் அமைச்சர்கள் என அனைவருமே இயற்கை விவசாயத்திலும் தற்சார்பு வாழ்க்கையிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கேற்றபடி நீர்நிலைகளைச் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள்" என்றவர், இயற்கை விவசாயம் தொடர்பான தமிழ்நாட்டின் தொலைநோக்கு திட்டம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
``அடுத்த 20 வருடங்களில் தமிழ்நாடு முழுக்க ரசாயனமற்ற இயற்கை விவசாயம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிற திட்டம் நம்மிடமும் இருக்கிறது. நாமும் அதை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறோம். இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து இயற்கை வளங்கள் வரை அத்தனையையும் உருவாக்க வேண்டும்" என்றவர், இலங்கையில் தன்னை கவர்ந்த `அம்மாச்சி உணவகங்கள்' பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

``தமிழ்நாட்டில் அம்மா உணவகங்களைப்போல இலங்கையில் `அம்மாச்சி உணவகங்கள்' இயங்குகின்றன. இங்கு அரசே நடத்துகிறது. அங்கு அம்மாச்சி உணவகங்கள் உழவர் சந்தைப்போல இயங்குகின்றன. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை உழவர் சந்தை மூலம் நேரடியாக மக்களிடம் விற்பனை செய்வதுபோல அம்மாச்சி உணவகங்கள் செயல்படுவதால், உணவுகள் சுத்தமாகவும் சுவையாகவும் இருக்கின்றன. இந்த உணவகங்களுக்கான கட்டடங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. குழுவாகவோ, தனியாகவோ சமைத்து விற்பனை செய்கிறார்கள். அல்லது வீட்டிலேயே சமைத்துக் கொண்டு வந்தும் விற்பனை செய்கிறார்கள். அந்த இடத்துக்கான குறைந்தபட்ச வாடகையைக் கொடுத்துவிடுகிறார்கள். சைவம், அசைவம் என இரண்டு உணவு வகைகளும் கிடைக்கின்றன. நானும் சைவ, அசைவ உணவுகளை உண்டதோடு, தேங்காய்ப்பால் ஊற்றிய விளாம்பழச்சாறும் அருந்தினேன். விலையும் மலிவாகவே இருக்கிறது" என்கிறார் மகிழ்ச்சி முகமாகப் பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்.