மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

வாழை முதல் சிறுதானியங்கள் வரை... இயற்கை விவசாயத்தில் நிச்சய லாபம்....

வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்

சமூக ஊடகங்கள் மூலம் பயிற்சி அளிக்கும் புதுச்சேரி விவசாயி!

இயற்கை விவசாயத்தைத் தீவிரமாக நேசிப்பவர்கள், இதை மற்றவர்களிடம் பரவலாகக் கொண்டு செல்வதற்கும், இதற்கான தொழில்நுட்பங்களை கற்றுத் தருவதற்கும் சமூக ஊடகங்களை மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு உதாரண மாகத் திகழ்கிறார், புதுச்சேரி மாநிலம், பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வேணுகோபால். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், நேரடி பயிற்சிகள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஏராளமான விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியுள்ளார்.

புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர் சங்கம், தென்னிந்திய நெல் ஜெய ராமன் பாரம்பர்ய நெல் பாதுகாப்பு மையம் ஆகியவற்றின் நிர்வாகியான இவர், 50-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அவற்றில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் மற்றும் இதில் புதிதாக ஈடுபட விரும்புகிறவர்களையும் இணைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்
வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்

மேலும், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு... ஜூம், கூகுள் மீட் மூலம் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள், மாடித்தோட்டம் குறித்த பயிற்சிகளையும் அளித்து வருகிறார்.

இவருடைய இயற்கை விவசாய அனுபவங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள ஒரு பகல்பொழுதில் இவருடைய தோட்டத்துக்குச் சென்றோம். புதுச்சேரியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பி.எஸ்.பாளையத்தில் அமைந்துள்ளது வேணுகோபாலின் தோட்டம். மூன்றரை ஏக்கர் பரப்பு கொண்ட இத்தோட்டத்தில் முதன்மைப் பயிராக வாழையும்... ஊடுபயிராகக் கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேணு கோபால், மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார்.

‘‘இயற்கை விவசாயம் செய்றதுனால என்ன பிரயோஜனம்னு கேட்குறவங்களுக்கு என்னோட தோட்டத்துல உள்ள வாழையே பதில் சொல்லிடும். அடித்தண்டு எந்தளவுக்குப் பெருத்திருக்கு பாருங்க. இதுமாதிரி இருந்தால்தான், காற்று வேகமா வீசினாலும் வாழை கீழே சாயாது. முட்டுக்கால்கூட கொடுக்க வேண்டியதில்லை. அடிபாகம் நல்ல பெருசா இருந்தாதான் பூ நல்லா நீளமா உருவாகி, தார்கள்ல அதிக சீப்புகள் கிடைக்கும். என்னோட தோட்டத்துல உள்ள வாழைகள் நல்லா செழிப்பா இருக்குறதுக்கும், அடித்தண்டு இந்தளவுக்குப் பெருக்குறதுக்கும் முக்கியக் காரணம், நான் கொடுக்குற இயற்கை இடுபொருள்கள்தான். 15 நாள்களுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில பஞ்சகவ்யா, மீன் அமிலம், ஜீவாமிர்தம் கொடுக்குறேன். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் கரைசல் கலந்து, ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் வீதம் வேர்பகுதியில ஊற்றுவேன்’’ எனத் தெரிவித்தவர், தன்னைப் பற்றிய தகவல் களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்
வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்

“எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படிச்சிருக்கேன். நாங்க விவசாயக் குடும்பம். 1970-கள்ல பசுமைப் புரட்சி அறிமுகமான சமயத்துல, என்னோட அப்பாவும் ரசாயன விவசாயத் துக்கு மாறினார். ஆரம்பத்துல அதிக விளைச்சல் கிடைச்சாலும், நாளடைவுல பல விதமான பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டியிருந்துச்சு. ரசாயன உரங்களுக்கான செலவுகள் அதிகமானதோடு மட்டுமல்லாம, பூச்சி, நோய்த்தாக்குதல்கள் அதிகமாச்சு. அதைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிக்கு நிறைய செலவு செஞக்சுகிட்டே இருப்பார், என் அப்பா. அதேசமயம் மகசூல் குறைய ஆரம்பிச்சதுனால, நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை வந்துடுச்சு. அதனால என்னோட அப்பா ரொம்பவே நொந்துகிட்டே விவசாயத்தைத் தொடர்ந்தார். அப்படிப்பட்ட ஒரு சூழல்ல 1995-ம் வருஷம் விவசாயம் பண்ற பொறுப்பு எங்கிட்ட வந்துச்சு. அப்பதான் நான் ஆழமா சிந்திக்க ஆரம்பிச்சேன்.

அப்பெல்லாம் பெரியவங்க நிலத்துக்குப் போகும்போது வீட்ல இருக்கற சின்ன புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு போவாங்க. நிலத்தோட தன்மை, விவசாய முறை இதெல்லாம் சின்ன வயசுலருந்தே பார்த்து தெரிஞ்சுக்கணும்னு அப்படி ஒரு முறையைக் கடைப்பிடிச்சாங்க. நானும் அந்த மாதிரி போயிருந்ததுனால, தாத்தா செஞ்ச விவசாயத் தையும், அப்பா விவசாயத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். தாத்தா விதைச்சப்ப நல்ல விளைச்சல் கிடைச்சது. நிறைய லாபம் பார்த்தாரு. ஆனா, அப்பா விதவிதமா உரங்கள் போட்டும், ஏன் விளைச்சல் இல்லைனு சிந்திச்சேன். அப்போதான் ஒரு முடிவுக்கு வந்து பாரம்பர்ய விவசாய முறைகளைக் கடைப்பிடிக்க ஆரம்பிச்சேன். ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்துட்டு, மாட்டு எரு, ஆட்டு எரு, இலைதழைகளை மட்டுமே பயன்படுத்தி வெள்ளாமைச் செஞ்சேன். பெருமளவு செலவுகள் குறைஞ்ச துனாலயும்... பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இல்லாததாலயும் மகசூல் அதிகரிச்சதுனாலயும் லாபம் கிடைக்க ஆரம்பிச்சது. இப்போ வரைக்கும் கடன் இல்லாத வருவாயுடன் பாரம்பர்ய விவசாயம் பண்ணி கிட்டிருக்கேன்’’ என்று சொன்னவர், நம்மாழ்வார் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

வாழை இலை
வாழை இலை

இயற்கை விவசாயியான இருளன்சந்தை ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மூலம் என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட நம்மாழ்வார் ஐயா, 2002-ம் வருஷம் என் வீட்டுக்கு வந்தாரு. நான் நிலத்தில் இருக்கேன்னு வீட்டில் சொன்னதும், நிலத்துக்கே வந்துட்டாரு. நான் அவரை முன்னபின்ன பார்த்தது கிடையாது. அதனால ‘நீங்க யாருய்யா’னு அவர்கிட்ட கேட்டேன்.

‘என் பேரு நம்மாழ்வார். உங்க விவசாய முறையைக் கேள்விப்பட்டு உங்களைப் பார்க்க வந்தேன்னு அவர் சொன்னதும் எனக்கு ரொம்ப உற்சாகமாயிடுச்சு. அப்போ நான் மணிலாவும் கேழ்வரகும் போட்டிருந்தேன். நிலத்தைப் பெருக்கல், கூட்டல் குறியீடு வடிவங்கள்ல சுற்றிப் பார்த்தவர், அங்கங்க கொஞ்சம் மண்ணை எடுத்து வாயில போட்டுச் சப்பிப் பார்த்து துப்பிக்கிட்டே வந்தாரு. என்னடா இவரு மண்ணை வாயில் போட்டு சுவைக்கிறாரேனு வித்தியாசமா தோணுச்சு.

ஆனா, அப்போதைக்கு அவர்கிட்ட அதைப் பத்தி எதுவும் கேட்கலை. சுமார் இரண்டு மணி நேரம் என் நிலம் முழுக்க, ஒரு இடம் விடாம சுத்திப்பார்த்துக்கிட்டே இருந்தார். நான் கடைப்பிடிக்கக்கூடிய விவசாய முறை களையும் கேட்டுகிட்டாரு. கடைசியா கிளம் புறப்ப ‘விவசாய நிலத்துக்குத் தேவையான எல்லா விதமான அங்ககச்சத்துகளும் உங்க மண்ணுல இருக்கு. இயற்கை உரங்கள் மட்டும் பயன்படுத் தினதுனால, அதோட தன்மை உங்க மண்ணுல நல்லா தெரியுது. மண்ணைச் சுவைச்சுப் பார்த்தது மூலமா அதைத் தெரிஞ்சுகிட்டேன். யூரியா, பொட்டாஷ் மாதிரியான ரசாயன உரங்கள் பயன்படுத்தி யிருந்தா, மண்ணோட தன்மை வேற மாதிரி இருக்கும்னு சொன்னாரு. என்னோட இயற்கை விவசாய முறைகளை மேலும் மேம்படுத்த நிறைய ஆலோசனைகளையும் எனக்கு வழங்கினார். அதுக்குப் பிறகு வருஷத்துக்கு ரெண்டு, மூணு தடவை விவசாயிகளை என்னோட பண்ணைக்குக் கூட்டிக்கிட்டு வந்து இங்க பயிற்சி கொடுப்பாரு. அவர் மூலமா எனக்கு நிறைய விவசாயிகள் நண்பர்களாகியிருங்காங்க’’ என்று சொன்னவர், விவசாயத்தில் தான் கடைப்பிடிக்கும் வெற்றி சூட்சுமங்கள் குறித்துப் பேசினார்.

வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்
வாழைத்தோட்டத்தில் வேணுகோபால்

‘‘விவசாயத்துல நீடிச்ச, நிலைச்ச லாபம் கிடைக்கப் பயிற்சி சுழற்சி முறை ரொம்பவே அவசியம். தொடர்ச்சியா ரெண்டு வருஷம் வாழை சாகுபடி செஞ்சிட்டு, அடுத்த ஒரு வருஷம் சம்பா பட்டத்துல நெல் சாகுபடி செய்வேன். கோடைப்பட்டத்துல நிலத்தை ஆறு பகுதியா பிரிச்சு உளுந்து, பச்சை பயறு, துவரை, காராமணி, கேழ்வரகு, கம்பு சாகுபடி பண்ணுவேன். அப்போ ஒண்ணுல விளைச்சல் குறைஞ்சாலோ, விலை குறைஞ்சாலோகூட மொத்தமா கணக்கு பார்க்குறப்ப, மற்ற பயிர்கள் மூலம் நிச்சயம் லாபம் கிடைச்சுடும். ஒரு வருஷம் நெல், பயறு, எண்ணெய் வித்துப்பயிர், சிறுதானியங்கள் சாகுபடி செஞ்சு முடிச்ச பிறகு, மறுபடியும் வாழை சாகுபடி செய்வேன்.

பொதுவா மூணு, நாலு ஏக்கர்னு குறைவான பரப்புல வாழை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிங்க பெரும்பாலும்... பூவன், ரஸ்தாலி கற்பூரவள்ளி... இதுல ஏதாவது ஒரு ரகம், இல்லைனா... ரெண்டு மூணு ரகங்களைத்தான் ஒரே சமயத்துல சாகுபடி செய்வாங்க. ஆனா, நான் அப்படியில்லை. புடி மொந்தன், குரங்கு மொந்தன், நாட்டு ரக மொந்தன், ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி, ஏலக்கினு ஏழு வகைப் போட்டிருக்கேன். எல்லாமே நல்ல மகசூல் தருது. இதுமாதிரி பல ரகங்களையும் கலந்து பயிர் பண்றதுனால விற்பனை எளிதா இருக்கு.

இந்தத் தோட்டத்தோட மொத்த பரப்பு மூன்றரை ஏக்கர். அரை ஏக்கர்ல என்னோட மாடுகளுக்கான பசுந்தீவனம் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்கேன். மூணு ஏக்கர்ல 1,800 வாழை இருக்கு. வாழைக்குப் பொதுவா 6 அடிதான் இடைவெளி விடுவாங்க. ஏக்கருக்கு 1,200 வாழைமரங்கதான் சாகுபடி செய்வாங்க. ஆனா, நான் ஒவ்வொரு வாழைக்கும் தலா 10 - 15 அடி இடைவெளி விட்டு ஒரு ஏக்கருக்கு 600 வாழைதான் பயிர் பண்றேன். அதிக இடைவெளிவிட்டதுனால, காற்றோட்டம் சூரியவெளிச்சம் தாராளமா கிடைக்குது. இதனால் பூச்சி, நோய்த்தாக்குதல் இல்லாம நல்லா திடகாத்திரமா வளருது. ஒரு தாருக்கு 18 - 23 சீப்புகள் கிடைக்குது. ஒரு தாருக்கு சராசரியா 300 ரூபாய் வீதம் 1,800 தார்கள் மூலம் 5,40,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். மூணு ஏக்கர் வாழை சாகுபடி மூலம் ஒரு வருஷத்துக்கு எல்லாச் செலவுகளும் போக, குறைந்தபட்சம் 3,50,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

‘‘வாழைக்கன்றுகள் நடவு செஞ்சதுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஊடுபயிரா காய்கறிகள் சாகுபடி செய்வேன்.’’

வாழைக்கன்றுகள் நடவு செஞ்சதுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஊடுபயிரா காய்கறிகள் சாகுபடி செய்வேன். அடுத்த மூணு மாசம் வரைக்கும் உளுந்து, பச்சைப்பயறு, எள், கம்பு, கேழ்வரகு சாகுபடி செய்வேன். இதனால் உயிர் மூடாக்கு உருவாகுறதுனால களைகள் கட்டுப்படுத்தறதோடு, உபரி வருமானம் கிடைக்கும். ஊடுபயிர் சாகுபடி மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆக இந்த மூணு ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் விவசாயிகள் தங்களோட விளைபொருள் களைச் சந்தைப்படுத்துறதுதான் பெரிய சவாலான காரியமா இருக்கு. ஆனா, நான் உற்பத்தி செய்ற பொருள்களை வியாபாரிகள் கிட்டயோ, இடைத்தரகர்கள்கிட்டயோ கொண்டு போகவே மாட்டேன். என்னோட இடத்துலயே வச்சு நேரடியா விற்பனை செஞ்சுடுவேன். வாழையைப் பொறுத்த வரைக்கும் சீப்புகளா விற்பனை செய்றேன். நெல்லை அரிசியா மதிப்புக்கூட்டி விற்பனை செய்றேன். உளுந்து. பச்சைப்பயறு, கம்பு, கேழ்வரகு... இதையும்கூட மதிப்புக்கூட்டி பாக்கெட்ல விற்பனை செய்றேன்.

பண்ணையில்
பண்ணையில்

இயற்கை விவசாயத்துல எனக்குக் கிட்டத்தட்ட 25 வருஷ அனுபவம். எனக்குத் தெரிஞ்ச தொழில்நுட்படங்களையும், விற்பனை வியூகங்களையும் மற்ற விவசாயி களுக்கும், புதுசா விவசாயத்துக்கு வரக்கூடிய வங்களுக்கும் சொல்லித் தரணும்னு ஆசைப் பட்டேன். முகநூல், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் என்னோட எண்ணத்தை நிறைவேத்திக் கிட்டு இருக்கேன். நிறைய பேர் சந்தேகங்கள் கேட்குறாங்க. உடனடியா பதில் அளிக்கிறேன். எனக்கு நேரடியா போன் பண்ணக்கூடிய வங்களுக்கும் விளக்கம் அளிக்குறேன்.

இந்தக் குழுக்களில் உள்ள என்னை மாதிரி அனுபவம் உள்ள இயற்கை விவசாயிகளும் தங்களோட அனுபவங்களை வாட்ஸ் அப் குழுக்கள்ல பகிர்ந்துக்குறாங்க. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள்ல உள்ள தமிழர்களுக்குக் கூகுள் மீட், ஜூம் ஆப்கள் மூலம் இயற்கை விவசாயப் பயிற்சிகள் அளிக்குறேன்.

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளுக்குப் போயி, அங்கவுள்ள தமிழர்களுக்கு நேரடியாவும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் அளிச்சிட்டு வந்தேன்.

இயற்கை விவசாயத்துனால நான் பயன் அடைஞ்ச மாதிரி மற்றவங்களும் பயன் அடையணும்னுங்கறதுதான் என்னோட நோக்கம். அதை நிறைவேத்திக்கிட்டு இருக்கேன். இது எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்துக்கிட்டு இருக்கு. நம்ம மக்களுக்கான ஆரோக்கியமான உணவு உற்பத்திக்கு நாமளும் பங்களிப்பு செஞ்சுகிட்டு இருக்கோம்னு நினைக்குறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என உற்சாகமாகத் தெரிவித்தார்.


தொடர்புக்கு, வேணுகோபால்,

செல்போன்: 90035 48502

நேரடி விற்பனை!

“என்னோட தோட்டத்துல விளையுற வாழைப்பழங்களுக்கு இந்தப் பகுதி மக்கள்கிட்ட அதிக வரவேற்பு இருக்கு. அதனால என்னோட தோட்டத்துக்கே வந்து வாழைப்பழங்களை வாங்கிகிட்டுப் போயிடுறாங்க. வீட்ல வாசல்ல கடை போட்டும் விற்பனை செய்றேன். இயற்கை அங்காடிகள் நடத்துறவங்களும் என் தோட்டத்து வாழைத்தார்களை வாங்குறாங்க. அதனால சந்தையையோ, வியாபாரிகளையோ நான் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்கிறார் வேணுகோபால்.