
மகசூல்
குறைவான காலத்தில், எளிமையான பராமரிப்பில் உத்தரவாதமான லாபம் கொடுக்கக்கூடிய மரப்பயிராக சவுக்கு விளங்குகிறது. இந்நிலையில்தான் புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தனபதி 90 ஏக்கர் பரப்பில் சவுக்கு சாகுபடி செய்து வருவது கவனம் ஈர்க்கிறது. இவர், இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
ஒரு காலைப்பொழுதில் இவரை சந்திக்கச் சென்றோம். புதுக்கோட்டை, அண்டக்குளம் அருகேயுள்ள பாரதிபுரத்தில், சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காட்சி அளிக்கிறது பதி இயற்கை வேளாண் பண்ணை. ஆயிரக்கணக்கான எண்ணிக்கை யில் சவுக்கு, முந்திரி, மா, தேக்கு, வேங்கை, மருது, மகோகனி, வேம்பு, செம்மரம், புளியமரம், மகிழமரம், பூவரசு, இலுப்பை உள்ளிட்ட மரங்கள் செழிப்பாகக் காட்சி அளிக்கின்றன.
காமராஜர் காட்டிய வழி...
இங்கு நிலவிய பசுமையான சூழலும், குளிர்ச்சியான காற்றும் மனதை உற்சாகப் படுத்தியது. நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த தனபதி, மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். உற்சாகமாகப் பேசத் தொடங் கியவர், “இந்த ஊருக்கு பக்கத்துல இருக்குற தெம்மண்டாப்பட்டிதான் எங்களோட பூர்வீகம். விவசாயம்தான் எங்க குடும்பத்தோட வாழ்வாதாரம். என்னோட அப்பா, சபாபதி, சுதந்திர போராட்டத் தியாகி. முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு நெருக்கமான நண்பர். 1960-கள்ல தமிழ்நாட்டுல கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டப்ப, தரிசா கிடக்குற நிலங்களையெல்லாம் விவசாய நிலங்களாக மாத்தி உணவு உற்பத்தியை அதிகரிக்கணும்னு அப்போதைய முதலமைச்சர் காமராஜர், தமிழ்நாடு முழுக்கத் தீவிர பிரசாரம் செஞ்சுருக்கார். அவரோட கோரிக்கையை ஏற்று என்னோட அப்பா, வீட்டுல இருந்த நகைகளையும், எங்க குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டையும் விற்பனை செஞ்சு தரிசு நிலம் வாங்கும் முயற்சியில இறங்கியிருக்கார்.

அதுல தன்னோட நண்பர்கள் சிலரையும் ஒருங்கிணைச்சு, அவங்களையும் முதலீடு செய்ய வச்சு, நீண்ட காலமா தரிசாகக் கிடந்த இந்த 130 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கார். நெல், கரும்பு, வாழை உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் எல்லாம் சாகுபடி செஞ்சு, அதுல கிடைச்ச வருமானத்தை, நண்பர்களுக்குப் பிரிச்சு கொடுத்தார். என்னோட அப்பாவுக்குப் பிறகு நானும், என் தம்பி கோவிந்தசாமியும் இந்தப் பண்ணை யைப் பராமரிச்சுக்கிட்டு இருக்கோம். இந்தப் பண்ணைக்கு மொத்தம் 19 பேர் பங்குதாரர்கள். அவங்க வெளியூர்கள்ல இருக்காங்க. அவங்க ளோட முழு ஒத்துழைப்போடு நானும் என்னோட தம்பியும் இந்தப் பண்ணையை நிர்வகிச்சுக்கிட்டு இருக்கோம். பாசனத்துக்கு, திறந்த வெளி கிணறு 5 இருக்கு.
வேலையாள்கள் தட்டுப்பாடு...
2000-ம் வருஷம் வரைக்கும் உணவுப் பயிர்களைத்தான் அதிகமா சாகுபடி செஞ்சுகிட்டு இருந்தோம். விவசாய வேலையாள்கள் பற்றாக்குறை, உணவு தானியங்களுக்கு லாபகரமான விலை கிடைக்காதது, தண்ணீர் தட்டுப்பாடு... போன்ற காரணங்களால, உணவுப் பயிர்கள் சாகுபடியை பெருமளவு குறைச்சுட்டு, மரப்பயிர்களை அதிகமா சாகுபடி செய்ய ஆரம்பிச்சோம். 90 ஏக்கர்ல சவுக்கு, 10 ஏக்கர்ல மா, 5 ஏக்கர்ல தென்னை, 5 ஏக்கர்ல முந்திரி, 10 ஏக்கர்ல தேக்கு, வேங்கை, மருது, மகோகனி, வேம்பு, செம்மரம், புளியமரம், மகிழ மரம், பூவரசு, இலுப்பை உள்ளிட்ட மரங்களும் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கோம். 10 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்கள், கடலை, உளுந்து, காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பயிர்களும் சாகுபடி செய்றோம்.

பயிர் சுழற்சி
விவசாயத்துல வெற்றிகரமான மகசூல் எடுக்க... மண் உறக்கமும், பயிர் சுழற்சி முறையும் ரொம்ப அவசியம். ஒரு இடத்துல ஒரே பயிரையே தொடர்ந்து சாகுபடி செய்யக்கூடாது. இதுக்கு ஏத்தமாதிரிதான் சவுக்குச் சாகுபடியை திட்டமிட்டுருக்கேன். ஒவ்வொரு வருஷமும் 15-20 ஏக்கர் சவுக்கு அறுவடை செய்ற மாதிரி, பிரிச்சு நடவு செய்றோம். அடுத்த 4-5 வருஷங்கள்ல அந்தக் குறிப்பிட்ட 15-20 ஏக்கர் பரப்புல உள்ள சவுக்கை அறுவடை செஞ்ச பிறகு, அடுத்த நாலஞ்சு மாசத்துக்கு நிலத்தைச் சும்மா போட்டு வச்சுட்டு. அதுக்குப் பிறகு பலதானிய விதைப்பு செஞ்சு, பாரம்பர்ய நெல் ரகங்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள்னு சாகுபடி செய்வோம். அந்தப் பயிர்களை அறுவடை செஞ்சு முடிச்சதும், ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை கட்டி நிலத்தை நல்லா வளப்படுத்திட்டு, சவுக்குச் சாகுபடி செய்வோம்’’ என்று சொன்னவர், சவுக்குச் சாகுபடி குறித்த அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
40 ஏக்கரில் நாட்டுரகச் சவுக்கு...
50 ஏக்கரில் வீரி்ய ரகச் சவுக்கு...
‘‘இந்த பண்ணையில 5 திறந்தவெளி கிணறுகள் இருக்கு. ஆனா இது மூலமா கிடைக்கக்கூடிய தண்ணீர், 50 ஏக்கர் பரப்புக்குத்தான் போதுமானதா இருக்கு. இறவைப் பாசனத்துல 40 ஏக்கர்ல நாட்டுரகச் சவுக்கும்... மானாவாரியில 50 ஏக்கர் பரப்புல ஜூங்குனியானா (Junghuniana) வீரிய ரகச் சவுக்கும் சாகுபடி செய்றோம்.
நாட்டுரகச் சவுக்குக்குத்தான் எப்போதுமே மவுசு அதிகம். காரணம், இதுதான் நல்லா பெருத்து உறுதியா இருக்கும். வீரிய ரகச் சவுக்கை விட, இதுக்குத்தான் அதிக விலை கிடைக்கும். கட்டுமான பணிகள்ல, கான்கிரீட் மேற்கூரை களுக்குச் சென்டிரிங் அமைக்க, சவுக்கு மரக்களைத் தான் முட்டுக்கால்களா பயன்படுத்துறாங்க. அடர்த்திக் குறைவா இருக்கக்கூடிய சவுக்குக் கழிகளை வாழை விவசாயத்துக்கு முட்டுக்கால்களா பயன்படுத்துறாங்க. இறவைப் பாசனம் மூலம் நாட்டு ரகச் சவுக்குச் சாகுபடி செஞ்சோம்னா, அடுத்த மூன்றரை வருஷங்களுக்குப் பிறகு அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு சுமார் 45 டன் மகசூல் கிடைக்கும். சவுக்கு மரங்களை மூன்று பகுதிகளா பிரிச்சு, விற்பனை செய்யலாம். மரத்தோட மேல்பகுதி ரொம்ப மெலிசா இருக்கும்... அதை விறகுகளா விற்பனை செய்ய லாம். நடுப்பகுதி 1.5 - 2 அங்குலம் விட்டம் இருக்கும். அதை வாழை சாகுபடிக்கு முட்டுக் கால்களா விற்பனை செய்யலாம். மரத்தோட கீழ்ப் பகுதி, 2.5 - 3 அங்குலம் விட்டம் இருக்கும். அதைக் கான்கிரீட் சென்ட்ரிங் வேலைக்கு முட்டுக்கால்களா விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கர் நாட்டு ரகச் சவுக்குச் சாகுபடியில்13 டன் விறகு கிடைக்கும். ஒரு டன்னுக்கு 4,000 ரூபாய் வீதம், 13 டன்னுக்கு 52,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். வாழை சாகுபடிக்கான முட்டுக்கால்கள் 12 டன் கிடைக்கும். ஒரு டன்னுக்கு 6,000 ரூபாய் வீதம் 12 டன்னுக்கு 72,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சென்டிரிங்களுக்கான முட்டுக்கால்கள் 20 டன் கிடைக்கும். இதுக்கு ஒரு டன்னுக்கு 8,000 ரூபாய் வீதம் 1,60,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இது தவிர, தரையில இருந்து ஓர் அடி உயரம் வரைக்கும் உள்ள வேர்ப்பகுதிகளை வெட்டி விற்பனை செய்றது மூலமாகவும் வருமானம் பார்க்கலாம். ஒரு ஏக்கர்ல கிட்டத்தட்ட 10 டன் வேர்கள் கிடைக்கும். ஒரு டன்னுக்கு 3,500 ரூபாய் வீதம், 35,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆக மொத்தம் ஒரு ஏக்கர்ல நாட்டு ரகச் சவுக்கு சாகுபடி செய்றது மூலம் 3,19,000 வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு, வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவு எல்லாம் போக, 1,61,600 ரூபாய் நிகர லாபமா கிடைக்கும்.

மானாவாரியில 50 ஏக்கர் பரப்புல, ஜூங்குனியானா வீரிய ரகம் சவுக்குச் சாகுபடி செய்றோம். இது வறட்சி தாங்கி வளரக்கூடிய ரகம். ஆனா அதேசமயம், நாட்டுரகம் சவுக்கு அளவுக்கு இது உறுதியா இருக்காது. இதை காகித ஆலைகளுக்கு விற்பனை செய்யலாம். நடவு செஞ்ச 5 - 6 வருஷங்கள்ல இது அறுவடைக்குத் தயாராகிடும்.
ஒரு ஏக்கருக்கு 35 டன் மகசூல் கிடைக்கும். ஒரு டன்னுக்கு 7,000 ரூபாய் வீதம், மொத்தம் 2,45,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். 10 டன் வேர்கள் விற்பனை மூலம் 35,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆகமொத்தம் ஒரு ஏக்கர்ல வீரிய ரகச் சவுக்குச் சாகுபடி மூலம், 2,80,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். சாகுபடி செலவு, வெட்டுக்கூலி, பட்டை உரிக்க, போக்குவரத்து எல்லாம் சேர்த்து 1,57,900 ரூபாய்ச் செலவாகும். செலவு போக, 1,22,100 ரூபாய் நிகரலாபமா கிடைக்கும்.
ஒவ்வொரு வருஷமும் 15-20 ஏக்கர் நாட்டுச் சவுக்கு அறுவடை செய்றோம். 2019-ம் வருஷம் நடவு செய்த நாட்டு சவுக்கை, இப்போ 15 ஏக்கர்ல அறுவடை செய்திருக்கேன். இதன் மூலமா 24,24,000 ரூபாய் லாபம் கிடைச்சிருக்கு. இது நாட்டு சவுக்குல மட்டும் கிடைச்ச லாபம். வீரிய சவுக்கு அடுத்த வருஷம் அறுவடைக்கு வரும். இதுமாதிரி ஒவ்வொரு வருஷமும் 15 ஏக்கர்ல அறுவடை செஞ்சு விற்பனை செஞ்சுட்டு வர்றோம். சவுக்குக்கு அதிக பராமரிப்புக் கிடையாது. தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. சந்தை வய்ப்பு பிரகாசமா இருக்கு. இதனாலதான் சவுக்குச் சாகுபடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்’’ என்று சொல்லி விடைக்கொடுத்தார்.
தொடர்புக்கு: தனபதி,
செல்போன்: 94435 93339
மீட்டுருவாக்கம்
“2018-ம் வருஷம் அடிச்ச கஜா புயல், இந்தப் பகுதி விவசாயிகளோட வாழ்வாதாரத்தை மிகப் பெரிய அளவுல பாதிப்பு ஏற்படுத்திடுச்சு. எங்க பண்ணையிலயும் நிறைய பாதிப்பு. நல்லா காய்ச்சிக்கிட்டு இருந்த நிறைய மாமரங்கள் கீழ சாய்ஞ்சிடுச்சு. தென்னை, பலா, வேம்பு உட்பட இன்னும் பல மரங்களும் வேரோடு சாய்ஞ்சுப் போயிடுச்சு. கடுமையான நஷ்டம். ஆனாலும், நாங்க மனசு தளரல. அந்த இழப்புகளை ஈடுகட்ட, புதிய கன்றுகளை நடவு செஞ்சு, மீட்டுருவாக்கம் செஞ்சுருக்கோம்’’ எனத் தெரிவித்தார்.

இப்படித்தான் இறவை சாகுபடி
இறவைப் பாசனத்தில் ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டுரக சவுக்கு சாகுபடி செய்ய தனபதி சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் 20 கிலோ சணப்பு, தக்கைப்பூண்டு கலந்து விதைப்பு செய்ய வேண்டும். அது வளர்ந்த பிறகு, பூப்பூக்கும் சமயத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை கட்டி மீண்டும் உழவு ஓட்ட வேண்டும். 3 அடி அகலம், முக்கால் அடி உயரம் கொண்ட பார் அமைக்க வேண்டும். பாருக்கு பார் 1.5 அடி இடைவெளி இருக்க வேண்டும். இது வாய்க்காலாகப் பயன்படும். பாரின் ஒரு ஓரத்தில் மட்டும் சவுக்குக் கன்றுகள் நடவு செய்ய வேண்டும். முக்கால் அடி ஆழத்தில் குழி எடுத்து 250 கிராம் மண்புழு உரம் இட்டு கன்று நடவு செய்ய வேண்டும். கன்றுக்கு கன்று 3 அடி இடைவெளி இருக்க வேண்டும். கன்று நடவு செய்த அன்று, உயிர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப தண்ணீர் தர வேண்டும். தண்ணீரை சிக்கனப்படுத்துவதற்காகத்தான் பார் அமைக்கிறோம். இதனால் வாய்க்காலில் மட்டும் தண்ணீர் பாய்ச்சப்படும். பார்களில் ஊடுபயிர்களாக, நிலக்கடலை, உளுந்து சாகுபடி செய்து வருமானம் பார்க்கலாம்... அல்லது பசுந்தாள் விதைப்புச் செய்து உயிர் மூடாக்கு ஏற்படுத்தலாம்.
3-ம் மாதம் பார்களின் மீது பவர் டில்லர்மூலம் இடை உழவு செய்ய வேண்டும். கன்றுகளைச் சுற்றிலும் களைகள் இருந்தால், அவ்வப் போது கண்காணித்து, அவற்றைக் கைகளால் பிடுங்கி, அப்புறப்படுத்த வேண்டும். 6-ம் மாதம் மீண்டும் இடை உழவு செய்ய வேண்டும். ஓர் ஆண்டுக்குப் பிறகு, கவாத்துச் செய்ய வேண்டும். நீர் பாசனத்தைப் பொறுத்தவரை, கன்றுகள் நடவு செய்த முதல் ஆண்டு 15 நாள்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2-ம் ஆண்டிலிருந்து 20 நாள்களுக்கு ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதுபோல் இறவைப் பாசனத்தில் சாகுபடி செய்யப் படும் நாட்டுரகச் சவுக்கு மூன்றரை ஆண்டு களுக்குப் பிறகு, அறுவடைக்குத் தயாராகும்.

மண்ணுக்கு உரமாகும் மிளாறு
சவுக்கு அறுவடை செஞ்ச பிறகு, நிலத்துல கிடக்குற மிளாறு (சவுக்கு இலைகள்) அப்புறப் படுத்துறது விவசாயிகளுக்குச் சவாலான காரியமா இருக்கு. முன்னாடியெல்லாம், மக்கள் அடுப்பெரிக்க மிளாறு பயன்படுத்தினாங்க. அதனால விற்பனை செய்ய முடிஞ்சது. ஆனா, இப்ப சும்மா கொடுத்தாகூட யாரும் வாங்குறதில்லை. மறுசாகுபடிக்கு நிலத்தைத் தயார் செய்ய, உடனடியா அதை அப்புறப்படுத்தியாகணும். இதுக்கு நான் ஒரு மாற்றுவழியைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். மெஷின் மூலம் மிளாறை நல்லா தூளாக்கி, நிலத்துலயே போட்டுடுவேன். அது சீக்கிரத்துலயே மட்கி, மண்ணுக்கு உரமாயிடுது’’ எனத் தெரிவித்தார் தனபதி.
இப்படித்தான் மானாவாரி சாகுபடி
மானாவாரியில் ஒரு ஏக்கர் பரப்பில் ஜூங்குனியானா வீரிய ரகச் சவுக்குச் செய்வதற்கான செயல்முறைகள்...
மானாவாரி நிலங்களில் வீரிய ரகச் சவுக்குச் சாகுபடி செய்ய, பசுந்தாள் விதைப்பு, ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை ஆகியவை தேவை யில்லை. மழையை நம்பி மட்டுமே இதைச் சாகுபடி செய்வதால், அதிக மகசூல் எதிர்பார்க்க முடியாது. அதனால் இயன்றவரை செலவுகளைத் தவிர்க்க வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் மற்றும் மண்வளம் குறைவான நிலங்களைக் கொண்ட விவசாயிகள் அவற்றை மேற்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் முக்கால் அடி ஆழத்துக்கு நன்கு உழவு ஓட்டி, மண்ணைப் பொலபொலப்பாக்க மாற்ற வேண்டும். இதுபோல் செய்தால்தான் மழைநீர் நிலத்துக்குள் சேகரமாகும்.

உழவு ஓட்டிய பிறகு, வரிசைக்கு வரிசை 4.5 அடி, கன்றுக்கு கன்று 3 அடி இடைவெளியில் முக்கால் அடி ஆழம் கொண்ட குழி எடுத்து, 500 கிராம் மண்புழு உரம் இட்டு, கன்று நடவு செய்ய வேண்டும். கன்று நட்டவுடன், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து, உயிர் தண்ணீர் ஊற்ற வேண்டும். சவுக்கு வரிசைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் 3-ம் மாதம் இடை உழவு செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு கன்றைச் சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்பதற்கு ஏதுவாக, நான்கு பக்கமும் சிறு வரப்பு அமைக்க வேண்டும். இது, குழி கட்டுதல் என அழைக்கப்படுகிறது. 6-ம் மாதம் மீண்டும் இடை உழவு ஓட்ட வேண்டும். ஓர் ஆண்டுக்கு பிறகு கவாத்து செய்ய வேண்டும். மழைப்பொழிவை பொறுத்து, 5-6 ஆண்டுகளில் சவுக்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு வரும். ஏக்கருக்கு 35 டன் வீதம் மகசூல் கிடைக்கும்.
நாட்டு மாடுகள்... செம்மறி ஆடுகள்...
``உம்பளச்சேரி, புலிக்குளம், காங்கேயம் வகையைச் சேர்ந்த 72 நாட்டு மாடுகள் வளர்க்குறோம். 150 செம்மறி ஆடுகள் வளர்க்குறோம். இதோட கழிவுகளால, இந்தப் பண்ணையில ரொம்ப செழிப்பா விவசாயம் நடந்துகிட்டு இருக்கு’’ எனத் தெரிவித்தார் தனபதி.