ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.14 லட்சம்... தேங்காய்ப்பூ உற்பத்தியில் அசத்தும் புதுக்கோட்டை விவசாயி!

குமாரவேல்
பிரீமியம் ஸ்டோரி
News
குமாரவேல்

மதிப்புக்கூட்டல்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்த தென்னை விவசாயி குமாரவேல், தன்னுடைய தோட்டத்தில் விளையும் தேங்காய் களை, பிரத்யேக முறையில் 90 நாள்கள் வைத்திருந்து, அவற்றில் பூ உருவான பிறகு விற்பனை செய்கிறார். தேங்காய்ப்பூவுக்கு சமீபகாலமாக அதிக வரவேற்பு இருப்பதால், இதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். குமாரவேலின் இந்தப் புதிய முயற்சி, இப்பகுதி விவசாயிகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள, ஒரு காலைப்பொழுதில் குமாரவேலுவை சந்திக்கச் சென்றோம். கீரமங்கலத்தில் உள்ள அம்புலி ஆற்றங்கரையையொட்டி அமைந் திருக்கிறது இவருடைய தென்னந்தோட்டம். இங்கு செழிப்பாகக் காட்சி அளித்துக்கொண் டிருந்த தென்னை மரங்களை ரசித்தபடியே தோட்டத்துக்குள் நடந்து சென்றோம்.

தோட்டத்தின் நடுவே அமைக்கப்பட்ட நிழல் வலைக் கூடாரத்தில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த தேங்காய்களை வெளியில் எடுத்து மட்டைகளை உரிக்கும் பணியில் தொழிலா ளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதை மேற்பார்வை செய்துகொண்டிருந்த குமாரவேலு, மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். ‘‘இதெல்லாம் 90 நாள்களுக்கு முன்னாடி, இங்க அடுக்கி வைக்கப்பட்ட தேங்காய்ங்க. இதுக்குள்ளார பூ உற்பத்தியாகி இருக்கும். மட்டையை மட்டும் உறிச்சிட்டு விற்பனை செய்வேன். தேங்காயை உடைச்சா, உள்ளார பூ இருக்கும்’’ எனச் சொன்னவர், அதை உடைத்துத் தேங்காய்ப்பூவை வெளியில் எடுத்து நம்மிடம் சாப்பிடக் கொடுத்தார்.

குமாரவேல்
குமாரவேல்

‘‘கடந்த நாலஞ்சு வருஷமா தேங்காய்ப் பூவுக்கு மிகப்பெரிய வரவேற்பு உருவாகி யிருக்கு. இதுல நிறைய ஊட்டத்துகள் நிறைஞ்சிருக்கு. தேங்காய்ப்பூவை அப்படியே சாப்பிடலாம். உடல் உஷ்ணத்தைப் போக்கும். பூ உருவான ஒரு தேங்காய் 20 ரூபாய்னு நான் விற்பனை செய்றேன். இதை வாங்கிக்கிட்டு போற, வியாபாரிங்க பல மடங்கு கூடுதல் விலை வச்சு விற்பனை செய்றாங்க. திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில நிறைய வியாபாரிங்க, தள்ளுவண்டியில் வச்சு, தேங்காய்ப்பூ விற்பனை செய்றாங்க. அங்க ஒரு தேங்காய்ப்பூவோட விலை 50-80 ரூபாய். காரைக்குடியில் 70 - 90 ரூபாய்னு விற்பனை செய்றாங்க. விருதுநகர், சென்னை மாதிரியான ஏரியாக்கள்ல 100 ரூபாய்னு விற்பனை செய்றாங்க. என்னதான் விலை அதிகமா இருந்தாலும் பரவாயில்லைனு மக்கள் வாங்கிக்கிட்டு போறாங்க. குறிப்பா, காலை நேரத்துல நடைப்பயிற்சி போறவங்க, இதை ரொம்பவே விரும்பி சாப்பிடுறாங்க.

தமிழ்நாட்டுல இதுக்கு மிகப்பெரிய தேவை ஏற்பட்டுருக்கு. ஆனா, அதுக்கு ஏத்த உற்பத்தி இல்லை. தென்னை விவசாயிங்க, இதுல ஆர்வம் காட்டினா, ரொம்ப எளிதா இதை உற்பத்தி பண்ணி நிறைய சம்பாதிக்கலாம். எங்க பகுதியில உள்ள தென்னை விவசாயிங்க கிட்ட இதைப் பத்தி சொல்லிக்கிட்டேதான் இருக்கேன். ஆனா, பணம் பார்க்க 90 நாள்கள் காத்திருக்கணுமேங்கற தயக்கத்துனால, தேங்காய்ப்பூ உற்பத்தியில ஈடுபடத் தயங்குறாங்க. உடனடியா பணம் தேவைங் கறதுக்காக, தேங்காய்களைப் பறிச்ச உடனே வியாபாரிங்ககிட்ட நஷ்ட விலைக்கு விற்பனை செய்றதைவிட, மூணு மாசம் காத்திருந்து தேங்காய்ப்பூ விற்பனை மூலம் நிறைவான லாபம் பார்க்குறதுதான் சரினு நினைக்குறேன்’’ எனத் தெரிவித்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.

தேங்காயிலிருந்து தேங்காய்ப்பூ உற்பத்தி
தேங்காயிலிருந்து தேங்காய்ப்பூ உற்பத்தி

“கீரமங்கலம் பக்கத்துல இருக்க செரியலூர் இனாம்தான் எனக்கு சொந்த ஊரு. நாங்க பூர்வீகமா விவசாயக் குடும்பம். எங்களுக்கு செரியலூர்லயும் கீரமங்கலத்திலும் சேர்த்து மொத்தம் 15 ஏக்கர்ல தென்னந்தோப்பு இருக்கு. என்னோட அப்பாதான் விவசாயத்தைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார். நான் டிப்ளோமா இன் பார்மஸி படிச்சிட்டு, மெடிக்கல் ஷாப் நடத்திக்கிட்டு இருந்தேன். ஓய்வு நேரம் கிடைக்கும்போது என்னோட அப்பாவுக்கு உதவியா விவசாய வேலைகளும் செஞ்சு கொடுத்துக்கிட்டு இருந்தேன். 20 வருஷத்துக்கு முன்ன வரைக்கும் ரசாயன இடுபொருள்கள் கொடுத்துதான் தென்னை யைப் பராமரிச்சிக்கிட்டு இருந்தோம்.

விவசாயத்தை நானே முழுமையா கவனிச் சுக்க வேண்டிய சூழல் வந்தப்ப இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். வருஷத்துக்கு ஒரு தடவை, ஒரு மரத்துக்கு 140 கிலோ வீதம் எரு போடுவேன். மற்ற விவசாயிங்க மாதிரி மரத்தைச் சுத்தி பள்ளம் பறிச்சு எரு போடுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. வேர்கள் அறுபட வாய்ப்புகள் அதிகம்.

நிழல்வலை கூடாரத்தில் தேங்காய்ப்பூ உற்பத்தி
நிழல்வலை கூடாரத்தில் தேங்காய்ப்பூ உற்பத்தி

அதனால மரத்தைச் சுத்திலும் எருவை கொட்டி விட்டுடுவேன். மழை பெய்ஞ்சு, எரு கரைஞ்சு போனாலுமேகூட, அது என்னோட தோட்டத்துக்குள்ளேயேதான் மண்ணுல கலக்கும். வருஷத்துக்கு ஒரு தடவை, ஒரு ஏக்கருக்கு 10 லிட்டர் வீதம் மீன் அமிலத்தைப் பாசனநீர்ல கலந்து விடுவேன், இவ்வளவுதான். வேற எந்த இடுபொருளும் கொடுக்குறதில்லை.

ஒரு மரத்திலிருந்து ஒரு வருஷத்துக்கு 150 காய்களுக்கு மேல மகசூல் கிடைக்குது. கஜா புயலுக்கு முன்னாடி வரைக்கும், இந்த 15 ஏக்கர்ல மொத்தம் 1,500 மரங்கள் இருந்துச்சு. எல்லாமே 40 வருஷத்து மரங்கள். ஒரு வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் காய்கள் விற்பனை செய்வேன். அதுமூலமா 15 லட்சம் ரூபாய்க்கு மேல வருமானம் கிடைச்சுக்கிட்டு இருந்துச்சு. கஜா புயல் பாதிப்புல 1,000 மரங்கள் வேரோடு சாய்ஞ்சிடுச்சு. 500 மரங்கள் மட்டும்தான் மிச்சமிருந்துச்சு. வருமான இழப்பை எப்படி ஈடு செய்றதுனு ரொம்பவே கவலை ஆயிட்டேன். புதுசா தென்னங்கன்றுகள் நட்டு, அதெல்லாம் பெரிய மரங்களா வளர்ந்து காய்ப்பு கொடுக்க ஏழெட்டு வருஷங்களாவது ஆகும். இழப்பை ஈடுசெய்ய என்னதான் வழினு யோசனையில இருந்தேன்.

தேங்காய்ப்பூ உற்பத்தி
தேங்காய்ப்பூ உற்பத்தி

காரைக்குடிக்கு ஒரு நாள் சொந்த வேலையா போயிருந்தேன். அப்ப, சாலை யோரத்துல இருந்த ஒரு தள்ளுவண்டிக் கடையைப் பார்த்தேன். பரபரப்பா தேங்காய்ப்பூ வியாபாரம் நடந்துகிட்டு இருந்துச்சு. தேங்காய்ப்பூவோட அளவைப் பொறுத்து... 70 ரூபாய்ல இருந்து 90 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

பொதுவா எங்க தோட்டத்துல... முதிர்ச்சி அடைஞ்சு, தானா கீழ விழுந்து முளைச்சிப் போன தேங்காய்ங்க ஆங்கங்க நாலஞ்சு கிடந்துகிட்டே இருக்கும். அதை உடைச்சுப் பார்த்தா, பூ இருக்கும். ஆனா, அதை நாம கண்டுக்கிறதுகூட இல்லை. அதுக்கு இவ்வளவு மவுசு இருக்கேன்னு நினைச்சி, நானும் இதைத் தொழிலாகப் பண்ண முடிவு செஞ்சேன்.

நிழல்வலை கூடாரத்தில் தேங்காய்ப்பூ உற்பத்தி
நிழல்வலை கூடாரத்தில் தேங்காய்ப்பூ உற்பத்தி

2019-ம் வருஷம், சோதனை முயற்சியா தேங்காய்ப்பூ உற்பத்தியை ஆரம்பிச்சேன். மரக்கன்றுகள் வளர்ப்புக்காக, என்னோட தென்னந்தோட்டத்துல ஏற்கெனவே நிழல் வலை கூடாரம் போட்டு வச்சிருந்தேன். அந்தக் கூடாரத்துல, முதிர்ச்சி அடைஞ்ச தேங்காய்களை அடுக்கி வச்சு, அது மேல வைக்கோலை போட்டு வச்சேன். அடுத்த மூணு நாள்கள் கழிச்சு பார்த்தப்ப, நல்ல நீளமா குருத்து உருவாகி இருந்துச்சு. மட்டையை உறிச்சிட்டு, தேங்காயை உடைச்சு பார்த்தப்ப நல்லா பெரிய சைஸ்ல பூ உருவாகி இருந்துச்சு. பெருசா எந்தச் செலவும் இல்லை’’ என்று சொன்னவர், விற்பனை மற்றும் வருமானம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

தேங்காய்ப்பூ உற்பத்தி செய்ய ஆரம்பிச்ச சில நாள்லயே... திருச்சியில உள்ள ஒரு வியாபாரிகிட்ட தினசரி 100 தேங்காய்ப்பூக்கள் வீதம் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். அவர் எந்த வித சுணக்கமும் இல்லாம தொடர்ச்சியா வாங்கிக்கிட்டே இருந்ததோடு இன்னும் கூடுதலா கொடுத்தா வசதியா இருக்கும்னு சொன்னார். அடுத்த சில மாதங்கள்லயே உற்பத்தியை அதிகரிச்சி தினமும் 200 பூக்கள் வீதம் விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். போக்குவரத்துச் செலவுகூட எனக்குக் கிடையாது. வண்டியில ஏத்தி அனுப்பி வச்சா போதும்!

இப்ப ஒரு மாசத்துக்குக் குறைந்தபட்சம் 6,000 தேங்காய்ப்பூக்கள் வீதம் ஒரு வருஷத் துக்கு 72,000 தேங்காய்ப்பூக்கள் விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். ஒரு பூ 20 ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா, ஒரு வருஷத்துக்கு 14,40,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. மரங்களுக்கான பராமரிப்புச் செலவு, தேங்காய்களை நிழல் கூடாரத்துல அடுக்கி வைக்க, பூ உருவான பிறகு மட்டைகளை உறிச்சிட்டு, தேங்காய்களை வண்டியில ஏத்துறதுக்குனு கணக்குப் பார்த்தா, ஒரு தேங்காய்ப்பூவுக்கு 4 ரூபாய் வீதம், மொத்தம் 2,88,000 ரூபாய் செலவு போக, 11,52,000 ரூபாய் லாபமா கிடைக்கும்.

குமாரவேல்
குமாரவேல்

விருதுநகர், காரைக்குடி, மதுரை உட்பட இன்னும் பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரி களும் என்கிட்ட தேங்காய்ப்பூ கேட்குறாங்க. ஆனா, என்னால கொடுக்க முடியலை. எங்க பகுதியில மற்ற தென்னை விவசாயிகளை இதுக்கு ஊக்கப்படுத்திக்கிட்டு இருக்கேன்’’ எனத் தெரிவித்தார்.


தொடர்புக்கு, குமாரவேல்,

செல்போன்: 94435 87457.

தேங்காய்ப்பூ உற்பத்தி செய்யும் முறை

27 அடி நீளம், 27 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட நிழல்வலை கூடாரம் அமைக்க வேண்டும். தரையில் இலைதழைகள், தேங்காய் உரிமட்டை தூள், வைக்கோல் உள்ளிட்டவற்றைப் பரப்ப வேண்டும். நன்கு முதிர்ச்சி அடைந்து, தானாகவே மரத்திலிருந்து கீழே விழுந்து கிடக்கும் தேங்காய்களை எடுத்து வந்து, நிழல்வலை கூடாரத்துக்குள் வரிசையாக அடுக்க வேண்டும். அதன் மீது இலைதழைகள், தேங்காய் உரிமட்டை தூள், வைக்கோல் உள்ளிட்டவற்றைப் பரப்ப வேண்டும். இதுபோல் 5 அடுக்குகளாகத் தேங்காய்களை அடுக்கி, அதன் மீது, இலைதழைகள், தேங்காய் உரிமட்டை தூள், வைக்கோல் உள்ளிட்டவற்றைப் போட்டு விட வேண்டும். இந்த அளவில் 30,000 தேங்காய்கள் அடுக்கலாம்.

நிழல்வலை கூடாரத்தில் தேங்காய்ப்பூ உற்பத்தி
நிழல்வலை கூடாரத்தில் தேங்காய்ப்பூ உற்பத்தி

வாரம் ஒரு முறை தெளிப்பு நீர்ப் பாசனம் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்த 90 நாள்களில் குருத்து வெளியில் வந்திருக்கும். அப்போது தேங்காயின் உள்ளே, முழுமையாகப் பூ உருவாகி இருக்கும். வெளியில் உள்ள குருத்து பாதிக்கப்படாமல், மட்டையை மட்டும் உறித்துத் தேங்காய்களை விற்பனை செய்ய வேண்டும். தேங்காயில் குருத்து இருந்தால்தான், உள்ளே பூ இருக்கிறது என்ற நம்பிக்கையோடு மக்கள் வாங்கிச் செல்வார்கள்.

நான்கு கூடாரம்

‘‘தேங்காய்ப்பூ உற்பத்திக்காக, என்னோட தென்னந்தோட்டத்துல மொத்தம் 4 நிழல் கூடாரங்கள் அமைச்சிருக்கேன். 27 அடி நீளம், 27 அடி அகலம் 7 அடி உயரம்... இந்த அளவுல இரண்டு இடங்கள்ல நிழல் கூடாரங்கள் இருக்கு. இதைத் தவிர 30 அடி நீளம், 15 அடி அகலம், 7 அடி உயரம்... இந்த அளவுல ரெண்டு நிழல் கூடாரங்கள் இருக்கு’’ என்கிறார் குமாரவேல்.

தேங்காய்கள்
தேங்காய்கள்

கொப்பரை

‘‘பூ உற்பத்திக்காக நான் வைக்கக் கூடிய தேங்காய்கள்ல குறைந்தபட்சம் 5 சதவிகிதம் முளைப்பு இல்லாம போயிடும். அந்தத் தேங்காய்களை, நல்லா வெயில்ல காய வச்சு, கொப்பரையாக்கி, எண்ணெய் ஆட்டிடுவேன். அதுலயும் எனக்கு வருமானம் கிடைச்சிடுது’’ என்கிறார் குமாரவேல்.

பலா, எலுமிச்சை

‘‘என்னோட தென்னந்தோட்டத்துல 5 ஏக்கர் பரப்புல மட்டும் ஊடுபயிரா, 1,000 பலா மரங்களும், 500 எலுமிச்சை மரங்களும் பயிர் பண்ணியிருக்கேன். இது மூலமாவும் எனக்குக் கணிசமான வருமானம் கிடைச்சிக்கிட்டு இருக்கு.

பண்ணையில் பலா மரம்
பண்ணையில் பலா மரம்

100 கோழிகள்

என்னோட தோட்டத்துல 100 நாட்டுக் கோழிகள் வளர்க்குறேன். பலா, எலுமிச்சை மரங்கள்ல இருந்து விழக்கூடிய சருகுகளைக் கோழிகள் கிளறி விடுறதுனாலயும் அதோட எச்சங்கள் படுறதுனால, சருகுகள் ரொம்பச் சீக்கிரமா மட்கி உரமாகுது” என்கிறார் குமாரவேல்.