புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இருக்கிறது பாண்டிக்குடி கிராமம். இங்கு கிராமத்தின் எல்லைப் பகுதியில் பாண்டிக்குளம் 50 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இங்குள்ள குளத்தைச் சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் எங்கும் பசுமை போர்த்தியபடி பனை மரங்களாகக் காட்சியளிக்கிறது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட பனைமரங்கள் ஒரே இடத்தில் பனைமரக்காடாக வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றன. நுங்கு சீஸனின்போது சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பாண்டிக்குடியில் குவிந்துவிடுகின்றனர். பனைமரத்தின் முக்கியத்துவம் உணர்ந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி, இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அன்றே இந்தப் பனை மரங்களை நடவு செய்திருக்கின்றனர். இந்தப் பகுதியை பனைமரக்காடாக மாற்ற முக்கியக் காரணமாக இருந்தவர் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி திருப்பதிதான் என்று பெருமையுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். இங்குள்ள பனை மரங்கள் இந்தப் பாண்டிக்குடி ஊரின் அடையாளமாகத் திகழ்கின்றன.

விவசாயி திருப்பதியிடம் இதுபற்றி பேசினோம்.
``அந்தக் காலத்துல பனை மரத்தோட பயன்பாடு அதிகம். குறிப்பா பனை ஓலை, பனை உத்திரம், பனை சட்டம்லாம் வீடு கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகிச்சது. பதநீர், பனைவெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டுன்னு பல பொருள்கள் பனை மரத்திலிருந்து தயாரிக்கலாம். ஓலை மற்றும் மட்டைகளைக் கொண்டு விசிறி அழகு பொருள்கள் தயாரிப்பாங்க. இப்படி அதோட பயன்பாடு அதிகம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல தென்னை ஓலையைவிட, பனை ஓலைகள்லதான் குடிசை போட விரும்புவாங்க. ஆனாலும், பனை ஓலை குடிசை கட்டுறது பெரிய வேலை. பனைமரங்களை வெட்டி அழிச்சாலும். அதற்கேற்ப அப்போ நடவு செஞ்சிடுவாங்க. இப்பே பனைமரங்கள் ரொம்பவே குறைஞ்சு போச்சு.
அப்போ எங்க பகுதியில குறைவான பனைமரங்கள்தான் இருந்துச்சு. குளிக்கப் போயிட்டு வரும்போது மரத்திலிருந்து விழும் பனம்பழத்தை எடுத்துக்கொண்டு வந்து வீட்டில் வச்சு சுட்டுச் சாப்பிடுவேன். பல நாள் பனம்பழம்தான் என்னோட பசியாத்தியிருக்கு. நம்ம ஊர்ல எப்படியாவது அதிக அளவு பனைமரங்களை நடணும்னு ஆசை அப்பவே இருந்துச்சு.
அந்த நேரத்துலதான் எங்க ஊர்ல 1984-ல பாரதியார் நற்பணி மன்றத்தை ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட 40 இளைஞர்கள். அதுல, எனக்கு மட்டும்தான் கல்யாணம் ஆகியிருந்துச்சு. சங்கத்து மூலமா பொங்கல் விழா கொண்டாடுவோம். பொது காரியங்களும் செய்வோம். ஒரு நாள் சங்கக் கூட்டத்துல, நம்ம பாண்டிக்குளத்தைச் சுத்தி பனைமரங்களை நடவு செய்வோம்னு சொன்னேன். ஒண்ணு ரெண்டு பேர் மட்டும் ஆர்வம் காட்டுனாங்க. மத்தவங்க பெருசா ஆர்வம் காட்டலை அதோட விட்டுவிட்டேன். குளம் முழுசும் பனையை விதைப்பதற்கு மொதல்ல விதைகளைச் சேகரிக்கிறது முக்கியம். விதைகளைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். என்னோட சின்ன பிள்ளைங்களுக்கும் மிட்டாய் வாங்கிக்கொடுத்து விதை சேகரிக்கக் கூட்டிக்கிட்டுப் போவேன். ஆயிரக்கணக்குல தயாரான பிறகு, நடவு செய்ய ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல எங்க ஊர்க்காரங்க பலரும் வேலையத்த வேலை பார்க்கிறாருன்னு கேலியும் கிண்டலும் பண்ணாங்க. ஆனாலும், நான் முயற்சியைக் கைவிடலை. கொஞ்சமா நடவு செய்ய ஆரம்பிச்சேன். நட்ட பனைமரங்கள் எல்லாம் 3 மாசத்துல நல்லா துளிர்க்க ஆரம்பிச்சது. அதைப் பார்த்துட்டு அதற்கப்புறம்தான் எல்லாரும் என்னோட சேர்ந்து விதைக்க முன்வந்தாங்க.
வண்டிப்பாதையை விட்டுட்டு மத்த இடங்கள்ல நடவு செஞ்சோம். 1986-ல இருந்துதான் நடவு செஞ்சோம். இப்போ இந்த பனைமரங்களுக்கு 35 வயசாகுது. கிட்டத்தட்ட 25 ஏக்கர்ல 10,000 மரங்கள் ஒரே இடத்துல இருக்கு. வெளியூர்ல இருந்து நிறைய இளைஞர்கள் வந்து நுங்கு பறிச்சு சாப்பிட்டுட்டு போறாங்க. மட்டைகள், ஓலைகள் எல்லாம் எங்க மக்களுக்கு பயன்படுது. பொது இடம்ங்கிறதால நடவு செஞ்சாலும் எங்க யாருக்கும் உரிமை இல்லை. நாங்க யாரும் மரத்தை தெரியாம கூட வெட்ட மாட்டோம்.

இன்னைக்கும் எங்க ஊரின் அடையாளமாக இந்த மரங்கள் இருந்துக்கிட்டு இருக்கு. தொடர்ந்து பனை விதைகளை விதைச்சிக்கிட்டு இருக்கோம். அதோட, விதைகளும் கொடுத்துக்கிட்டு இருக்கோம். பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் ஒரே இடத்தில் இருந்தும் பனை சார்ந்த தொழில்கள் இங்கு இல்லை என்பதுதான் எங்கள் கவலை. பனை சார்ந்த தொழில்களைக் கொண்டு வரவும், புதிதாக பனை மரங்களை நடவு செய்யவும் அரசு உதவினால், ஆர்வமாக இப்போதுள்ள இளைஞர்களும் பனைமரங்களை வளர்ப்பார்கள்" என்றார்.