நாட்டு நடப்பு
Published:Updated:

நாட்டுக்கோழி வளர்ப்பு... கேள்விகளும் பதில்களும்! குஞ்சுகளாக விற்பது லாபமா, முட்டைகளாக விற்பது லாபமா?

நாட்டுக்கோழிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நாட்டுக்கோழிகள்

கால்நடை

நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பாக பலருக்கும் பலவிதமான கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தகையக் கேள்விகளைத் தொகுத்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும், செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியை முனைவர் க.தேவகி முன் வைத்தோம். “விவசாயிகளிடமிருந்து பெற்ற அனுபவங்கள் மூலமாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் பெற்ற தகவல்களைக் கொண்டு எல்லா கேள்விகளுக்கும் பதில் தருகிறேன். கோழிகளின் இனம், அவற்றின் தன்மை, வளர்க்கப்படும் சூழல், பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து முட்டை உற்பத்தி, கோழியின் எடை, விலை ஆகியவை மாறுபட வாய்ப்புள்ளன” என்றபடி தேவகி தந்த பதில்கள் இதோ...

தேவகி
தேவகி

முட்டையிடும் பருவத்துக்கு வந்த கோழி, ஒரு நாளில் எத்தனை முட்டையிடும்?

1 முட்டை.

எத்தனை நாள்களுக்குத் தொடர்ந்து முட்டையிடும், எத்தனை முட்டைகள் இடும்?

7 - 10 நாள்கள் வரை முட்டையிடும். பிறகு அடைக்கு உட்கார்ந்துவிடும். அடையில் 21 நாள்கள் இருக்கும். குஞ்சு பொரித்த பிறகு குறைந்தபட்சம் 2 வாரங்கள் இடைவெளி இருக்கும். ஒவ்வொரு கோழியின் இனத்துக்கு ஏற்பவும் தீவனத்துக்கு ஏற்பவும் இந்த இடைவெளி மாறுபடும்.

ஓராண்டில் இப்படி எத்தனை தடவை முட்டையிடும்?

ஒரு கோழியின் முட்டையிடும் காலம் 72 வாரங்கள் (சுமார் ஒன்றரை வருஷம்). வருஷத்துக்கு 8 - 10 தடவை முட்டைகள் இடும். இதன் மூலம் வருஷத்துக்குக் கோழியின் தன்மையைப் பொறுத்து 90 - 100 முட்டைகள் கிடைக்கும்.

அடை வைத்தால் எத்தனை நாள்களில் குஞ்சு பொரிக்கும்?

21 நாள்கள் அடையில் உட்காரும். 21 நாள்களுக்குப் பிறகு குஞ்சுகள் கிடைக்கும். இன்குபேட்டரில் வைத்தாலும் குஞ்சு பொரிக்க 21 நாள்கள் ஆகும்.

நாட்டுக்கோழிக் குஞ்சு, எத்தனை நாள்களில் முதிர்ச்சி அடைந்து, இனச் சேர்க்கையில் ஈடுபட்டு முட்டையிட தொடங்கும்?

6 மாதங்களுக்கு மேல் (24 வாரங்கள்).

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

கோழியை இறைச்சிக்காக விற்பனை செய்வதென்றால், எத்தனை நாள்களுக்குப் பிறகு விற்பனை செய்யலாம்?

பிராய்லர் கோழி என்றால் 45 நாள்கள். சிறுவிடை, பெருவிடை என்றால் 5 மாதங்கள் ஆகும். கலப்பின நாட்டுக்கோழிகள் என்றால் 3 - 4 மாதங்கள். சரிவிகித தீவனம், நல்ல பராமரிப்பு என்றால் பெருவிடையில் 100 நாள்களில் 1 கிலோ எடைக்கு வந்துவிடும். இறைச்சிக்காக வளர்ப்பது என்றால் தீவனத் தில் அதிக கவனம் செலுத்தி முன்கூட்டியே தரமான தீவனங்களை அளித்து வந்தால் விரைவில் எடைக்கு வந்துவிடும். சிறுவிடை கோழியை இறைச்சிக்காக விற்பதாக இருந்தால் நீண்ட நாள்கள் ஆகும்.

ஒரு கிலோ இறைச்சி... குறைந்தபட்சம் /அதிகபட்சம் என்ன விலை?

பொதுவாகக் கோழிகளை முட்டைக்காக விற்கப்படும்போது சிறுவிடை, பெருவிடை என்றால் 250 - 350 ரூபாய். கலப்பினக் நாட்டுக்கோழிகள் என்றால் 200 - 300 ரூபாய். பொதுவாகக் கோழிகள் இறைச்சிக்காக விற்கப்படும்போது ஜோடியாகத்தான் விற்பார்கள். எனவே, கோழிகளின் வளர்ச்சி யைப் பொறுத்து விலை மாறுபடும்.

ஒரு முட்டை குறைந்தபட்சம்/அதிகபட்சம் என்ன விலை?

கலப்பின நாட்டுக்கோழி முட்டை என்றால் 10 ரூபாய், சிறுவிடை, பெருவிடை கோழி முட்டை 15 ரூபாய். நாட்டுக்கோழி முட்டைக்கு அதிக தேவை உள்ளது.

முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில் லாபகரமான இனம் எது?

இறைச்சிக்காக என்றால்... நந்தனம், என்.பி-3, என்.என்.பி.-3 (தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள்).

முட்டைக்காக என்றால்... கிராமபிரியா, நிகோபாரி, என்.என்.என்.சி.-4 (தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக்கோழி இனங்கள்).

குஞ்சுகளாக விற்பது, முட்டையாக விற்பது, இறைச்சிக்காக விற்பது எது லாபகரமானது?

குஞ்சுகளாக விற்பதுதான் நல்ல லாபம் கொடுக்கும். எப்படியென்றால் ஒரு கோழி வருஷத்துக்கு 90 முட்டைகள் இடுகின்றன என்றால் சேதாரம் போக 80 முட்டைகள் தேறும். ஒரு முட்டை 15 ரூபாய் என்ற கணக்கில் 1,200 ரூபாய் கிடைக்கும். அதையே குஞ்சுகளாகப் பொரிக்க செய்தால் சேதாரம் போக 80 குஞ்சுகள் கிடைக்கும். ஒரு நாட்டுக் கோழி குஞ்சு 50 ரூபாய். அந்த வகையில் 4,000 ரூபாய் கிடைக்கும். இதையே இறைச்சியாக விற்பதென்றால் 20,000 ரூபாய் கிடைக்கும். ஆனால், தீவனச் செலவு, நோய்த்தாக்கம், 100 நாள்கள் பராமரிப்பு என எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழிகள்

கோழி வளர்க்க விரும்புபவர்கள் எத்தனை மாத குஞ்சுகளாக அல்லது கோழிகளாக வாங்க வேண்டும்?

இது தங்களால் இயன்ற முதலீட்டைப் பொறுத்தது. அதிகமாக முதலீடு செய்ய முடியுமென்றால்... நன்கு முட்டையிடும் 6 மாத கோழியாகப் பார்த்து வாங்கலாம். பணம் குறைவாக இருந்தால் 1 மாத குஞ்சுகளை வாங்கி அதை வளர்த்து முட்டைகளைப் பெறலாம். கோழி வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் பெரிய கோழிகளாகவே வாங்கலாம்.

கோழிகளை அடைக்குப் பயன்படுத்திய பிறகு, கழித்துவிடலாமா அல்லது மீண்டும் மீண்டும் முட்டையிட்டு அடை வைக்கப் பயன்படுத்தலாமா?

ஒரு கோழியை 72 வாரங்கள் வரை முட்டை உற்பத்திக்கும், அடைக்கும் பயன்படுத்தலாம். அதன்பிறகு கழித்துவிடலாம்.

கோழிகளைப் பாரம்பர்யமான முறையில் அடை வைப்பது நல்லதா... இன்குபேட்டர் மூலம் பொரிப்பது நல்லதா? எது லாபகரமானது?

சிறிய அளவில் செய்வதற்குப் பாரம்பர்ய முறையில் அடைக்கு விடலாம். 100 கோழிகளுக்கு மேல் வைத்திருப்பவர்கள்... இன்கு பேட்டர் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது சிறிய இன்குபேட்டர்களும் வந்து விட்டன. தேவைப்படுபவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழிகள்

கோழிகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்பது லாபகரமானதா, மேய்ச்சல் மூலமாக வளர்ப்பது லாபகரமானதா?

மேய்ச்சல் முறையில் லாபகரமானது. முட்டையும் நன்றாக இருக்கும். எடை நன்றாக இருக்கும். ஆனால், மேய்ச்சல் முறையில் குறைந்த அளவில்தான் வளர்க்க முடியும். 100-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்ப்பவர்கள் கூண்டுகள் பயன்படுத்துவது நல்லது. கூண்டுகளுக்குச் செலவு இருக்கும். ஆனால், கோழிகளைப் பிரித்து வளர்ப்பதற்குக் கூண்டுகள் உதவிகரமாக இருக்கும்.

நாட்டுக்கோழிகளுக்கான சந்தை வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?

நன்றாகவே இருக்கிறது. இறைச்சியின் தேவை அதிகமாக உள்ளது.

மேய்ச்சல் முறை என்றால், கோழிக்குத் தனியாகத் தீவனங்கள் தர வேண்டுமா அல்லது அவையே புழு, பூச்சிகளை உண்டு வளர்ந்துவிடுமா?

தனியாகக் கொஞ்சமாவது தீவனம் கொடுப்பது நல்லது. குறிப்பாக, மழைக் காலங்களில் மேய்ச்சல் முறையில் தீவனம் கிடைப்பது சிரமம். ஆகவே, முழுக்க மேய்ச்சலை நம்பியிருக்க முடியாது. கலப்புத் தீவனம் இருப்பது அவசியம்.

தீவனம் என்றால், கம்பு, அரிசி, கேழ்வரகு போன்ற தானியங்களைக் கொடுக்கலாமா அல்லது கடைகளில் விற்கும் தீவனங்களை வாங்க வேண்டுமா?

கம்பு, அரிசி, கேழ்வரகு, கோதுமை தானியங்களைக் கொடுக்கலாம். அதுவும் அரைத்து நொய் போன்று கொடுப்பது சிறப்பானது. இதோடு கடைத் தீவனம் வாங்கிக் கொடுத்தால் கோழிகளின் எடை விரைவாக அதிகரிக்கும்.

நோய்க்கண்ட கோழிகளை அடையாளம் காண்பது எப்படி?

சுணங்கிப்போய் ஒரே இடத்தில் இருக்கும். கண்களில் தண்ணீர் வடியும். மூக்கிலிருந்து சளி போன்ற திரவம் வடியும். பேதி இருக்கும். இதைத்தவிர கண்ணை மூடிக்கொண்டே இருக்கும். சுறுசுறுப்பாக இருக்காது. இறகை விரிக்கும். வாயை திறந்துகொண்டே இருக்கும். இந்த அறிகுறிகள் இருந்தாலும் கோழியை நோய் தாக்கியுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

என்னென்ன நோய்கள் கோழிகளைத் தாக்கும்?

வெள்ளைக் கழிச்சல், சளி, அம்மை நோய் உள்ளிட்ட நோய்கள் கோழிகளை அதிகம் தாக்கும்.

எந்தெந்த நோய்க்கு என்னென்ன தீர்வு?

நோய் வருவதற்கு முன்பே தடுப்பதுதான் சிறந்த வழி. கோடைக்காலம் தொடங்கு வதற்கு முன்பு பிப்ரவரியில் தடுப்பூசி போட வேண்டும். அதேபோன்று மழைக்காலத்துக்கு முன்பு ஒரு தடுப்பூசி போட வேண்டும்.

வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்து... தீவனத்தோடு கலந்தோ, தனி யாகவோ கொடுக்கலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துக் கோழிகளுக்கு நோய் வராமல் காப்பாற்றும்.

இயற்கையான மருந்துகளைக் கொடுத்தே குணப்படுத்தலாமா அல்லது கால்நடை மருந்தகத் தில் வழங்கப்படும் ரசாயன மருந்துகளைப் பயன் படுத்தலாமா?

கழிச்சல் நோய் பாதிக்காமல் தடுக்க, வரும் முன் காப்போம் நடவடிக்கையாக.... எலுமிச்சை பழச் சாற்றை தண்ணீரில் கலந்து வெயில் காலங்களில் கோழிகளுக்குக் கொடுக் கலாம். பெருநெல்லிச்சாறு, கீழாநெல்லி இலையை அரைத்துத் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். மணத்தக்காளி இலையை அரைத்தும் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். இவையெல்லாம் கோழிகளுக்கு கழிச்சல் வராமல் தடுக்கும்.

குளிர் காலங்களில் சளித்தொல்லை இருக்கும். மிளகு, துளசி, கற்பூரவல்லி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆறவைத்துக் கொடுக்கலாம். நோயைத் தடுப்பதற்குதான் இயற்கை வழி மருத்துவம் பெரும்பாலும் கை கொடுக்கிறது. வந்துவிட்டால் பி காம்ப்ளக்ஸ், ஆன்டி பயாட்டிக் மருந்துகள்தான் தீர்வு. ஏனென்றால் நோய் மற்ற கோழிகளுக்குப் பரவாமல் தடுக்க முடியும். வந்துவிட்டால் என்னுடைய அனுபவத்தில் ரசாயன மருந்துகள்தான் உடனடியாகப் பலன் கொடுக்கிறது.

நாட்டுக்கோழி
நாட்டுக்கோழி

தடுப்பூசி கட்டாயமா?

ஆம்...

ஆம்... என்றால், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?

நாட்டுக்கோழிகளுக்கு மூன்று தடுப்பு மருந்துகள் உள்ளன.வெள்ளைக் கழிச்சல் வராமல் தடுக்கக் குஞ்சு பொரித்த 7 நாள்களில் கண் மற்றும் மூக்கில் ஆர்.டி.எஃப்-1 என்ற தடுப்பு சொட்டுமருந்தை விட வேண்டும். 28-ம் நாளில் லசோட்டா வகைத் தடுப்பூசியைப் போட வேண்டும். 56-ம் நாள் ஆர்.டி.வி.கே/ஆர்.2 பி வகைத் தடுப்பூசியை இறக்கை பகுதியில் போட வேண்டும். எல்லாத் தடுப்பூசிகளும் வெள்ளைக் கழிச்சல், சளி வராமல் தடுப்பதற்காகத்தான்.

நாட்டுக்கோழி முட்டை, பிராய்லர் கோழிமுட்டை... இவற்றில் அதிக சத்துகள் நிறைந்தவை எவை?

நாட்டுக்கோழி, பிராய்லர் கோழி முட்டைகளில் புரதச் சத்துகளின் அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. தீவனத்தை எடுக்கும் முறையில்தான் முட்டைகளின் நிறம் மாறுபடுகிறது. ஒப்பீட்டளவில் நாட்டுக்கோழியின் முட்டையில் சுவை கூடுதலாக இருக்கும்.

தொடர்புக்கு, முனைவர் தேவகி,

செல்போன்: 94452 58978.