
பனை
பொங்கல் பண்டிகையில் பனங்கிழங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ராமநாதபுர மாவட்ட மக்களின் நீண்டகால வழக்கமாக இருந்து வருகிறது. தை முதல்நாள் சூரியனுக்குப் படைக்கப்படும் படையலில் சர்க்கரைப் பொங்கல், கரும்பு உள்ளிட்டவற்றின் வரிசையில் பனங்கிழங்கும் இடம்பெறுகிறது. திருமணமாகி சென்ற மகளுக்குப் பெற்றோர்கள் கொடுக்கும் பொங்கல் சீர்வரிசையிலும் பனங்கிழங்கு இடம் பெறுகிறது. இதனால் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இப்பகுதியில் மார்கழி மாதம் பனங்கிழங்கு அறுவடையும் விற்பனையும் படு மும்முரமாக நடைபெறும். பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் இதன்மூலம் கணிசமான வருமானம் பார்க்கிறார்கள்.
இம்மாவட்டத்தில் உள்ள கடலாடி, சிக்கல், முதுகுளத்தூர், பனைகுளம், சாயல்குடி, ரெகுநாதபுரம், கமுதி, கன்னிராஜபுரம், அடஞ்சேரி, நரிப்பையூர் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் தற்போது பனங்கிழங்கு அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்தான் இதைப் பார்வையிடச் சென்றோம். ரெகுநாதபுரம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பனங்கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயி தர்மராஜை சந்தித்தோம்.

‘‘நெல் விவசாயத்துக்கு நிகரா பனை சார்ந்த தொழில்களும் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு ரொம்பவே கை கொடுத்துக்கிட்டு இருக்கு. பனை மரங்கள் நீண்டகாலத்துக்கு உயிர் வாழக்கூடியது. இயற்கை, மனித குலத்துக்குக் கொடுத்த அரிய கொடை. என்னதான் கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் பட்டுப்போகாது. புயல் அடிச்சாலும் கீழ சாயாது. பெருசா சொல்ற அளவுக்குப் பூச்சி, நோய்த்தாக்குதல் களும் ஏற்படாது. எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமலே பல தலைமுறைகளுக்குப் பலன் கொடுக்கும். இந்தத் தோட்டத்துல இப்ப நீங்க பார்த்துக்கிட்டு இருக்குற பனை மரங்கள் எல்லாமே... எங்க முப்பாட்டன் காலத்துல உருவாக்கப் பட்ட மரங்கள். இதுல இருந்து கிடைக்கக்கூடிய ஓலை, நார், பதநீர், கருப்பட்டி, நுங்கு, பனம்பழம், பனங் கிழங்கு என எல்லாமே வருமானம் கொடுத்துக்கிட்டு இருக்கு’’ என்று சொன்னவர், பனங்கிழங்கு உற்பத்தி குறித்த தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
‘‘இங்கவுள்ள பனை மரங்கள்ல இருந்து கீழே விழக்கூடிய பனம் பழங்களை மொத்தமா சேகரிச்சு வச்சுக்குவோம். அதுக்கு பிறகு கொட்டைகளை மட்டும் தனியா பிரிச்செடுப்போம். 10 அடி நீளம், 10 அடி அகலத்துக்குப் பாத்தி கட்டிக் குவோம். கால் அடி ஆழத்துக்குப் பள்ளம் பறிச்சு, பனங்கொட்டைகளை நெருக்கமாக அடுக்குவோம் அதுமாதிரி ஒண்ணு மேல ஒண்ணா, மூணு அடுக்குகள் அமைப்போம். அதுக்கு மேல பரப்புல பரவலாக மண்ணைத் தூவி தண்ணி தெளிப்போம். பாத்தியோட நான்கு ஓரங்கள்லயும் மண் அணைப்போம். வாரம் ஒரு தடவை தண்ணி தெளிப் போம். இதுக்கு வேற எந்த வித பராமரிப்பும் கிடையாது. கிழங்கு முளைச்சு, அடுத்த 90 நாள்கள்ல முதிர்ச்சி அடைஞ்சு அறுவடைக்குத் தயாராகிடும். புரட்டாசி 20-ம் தேதிக்குப் பிறகு, பனங்கொட்டை களை விதைச்சு, மார்கழி 20-ம் தேதிக்கு மேல அறுவடை செய்றது வழக்கம்.

பனங்கொட்டைகளை விதைப்பு செஞ்சதுல இருந்து அடுத்த 90 - 110 நாள்களுக்குள்ளார கிழங்குகளை அறுவடை செஞ்சுடணும். அப்ப தான், அந்தக் கிழங்குகள் சாப்பிடுற பக்குவத்துல இருக்கும். அதுக்கு மேல தாமதிச்சோம்னா, கிழங்குல பீலி (இலை) வளர்ந்துரும். இந்தக் கிழங்கு சாப்பிடுறதுக்கு வழ வழப்பாகவும் சுவை குறைவாகவும் இருக்கும். குறிப்பா, சொல்லணும்னா, 90 - 100 நாள்கள்ல விளைஞ்ச கிழங்குகள்தான் சாப்பிடுறதுக்கு நல்ல சுவையாக இருக்கும். அதுவும் தேரி மணல் பகுதியான செம்மண் பூமியில விளையக்கூடிய பனங்கிழங்குக்கு இன்னும் ருசி அதிகம்’’ எனச் சொன்னவர், இதை வேகவைக்கும் முறை குறித்துப் பேசினார்.
‘‘தோலை நீக்கிட்டுதான் இதை வேக வைக்கணும். தென் மாவட்டங்கள்ல உள்ள மக்கள் பனங்கிழங்கு வேக வைக்கும்போது மஞ்சள் சேர்ப்பாங்க, நல்ல வசீகரமான நிறம் கொடுக்குறதுக்காகவும் சுவைக்காகவும்தான் மஞ்சள் சேர்க்கப்படுறதா, ஒரு பொதுவான கருத்து இருக்கு. ஆனா, அது மட்டும் காரண மில்ல. பனங்கிழங்குகள்ல ஏதாவது கிருமிகள் இருந்தா, அதைக் கட்டுப்படுத்துறக்காகதான் மஞ்சள் தூள் சேர்க்குற வழக்கத்தை முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்காங்க.

பனங்கிழங்கை வேக வச்ச பிறகு, இதோட நடுப்பகுதியில உள்ள தும்பை நீக்கிட்டு சாப்பிடணும். பனங்கிழங்குல நிறைய மகத்துவங்கள் நிறைஞ்சிருக்கு. உடல் உஷ்ணத் தைப் போக்கக்கூடியது. மலச்சிக்கலை தீர்க்கும். உடலுக்கு வலுசேர்க்கும். ஆனா, இதுல நார்த்தன்மை இருக்குறதுனால, இதைக் குழந்தைங்க விரும்ப மாட்டாங்க. பனங்கிழங்கை வேக வச்சு, சின்னச் சின்ன துண்டுகளா நறுக்கி, வெயில்ல நல்லா காயவச்சு, மாவாக்கி, கருப்பட்டி சேர்த்துக் கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்ப புடிக்கும். சின்ன வயசுல இருந்தே பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தா, உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் இங்கவுள்ள விவசாயிகள்ல பெரும்பாலானவங்க, தங்களோட வீட்டுத் தேவைக்காக, தோட்டங்கள்ல பனங் கொட்டைகளை விதைச்சு கிழங்கு உற்பத்தி செய்றாங்க. என்னை மாதிரி சில விவசாயிகள் விற்பனை நோக்கத்தோடு, பனங்கிழங்குகள் உற்பத்தி செய்றாங்க. நகர்ப்புறங்கள்ல வசிக்கக்கூடிய மக்கள் இதை வாங்குறாங்க. இதை உற்பத்தி செய்ய கொஞ்சம்கூட உரம் தேவையில்லை. இதை உற்பத்தி செய்ய ஒரு பைசாகூட செலவு கிடையாது. இதை அறுவடை செய்றதுக்கும்கூட செலவாகாது.
எனக்கு இந்த முறை நல்ல விளைச்சல் ஆகி இருக்கு. 50 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 150 ரூபாய்னு விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். என்கிட்ட 30 பனை மரங்கள் இருக்கு. இதுல இருந்து கிடைக்கக்கூடிய பனங்கொட்டைகள்ல இருந்து கிழங்கு உற்பத்தி செஞ்சு, மூணே மாசத்துல 40,000- 45,000 ரூபாய் லாபம் எடுக்குறேன்.
இதுபோக மத்த விவசாயிங்ககிட்ட இருந்தும் பனங்கிழங்குகளைக் கொள்முதல் செஞ்சு பெரிய வியாபாரிகள்கிட்ட விற்பனை செய்றேன். அது மூலமா எனக்கு 50,000 - 60,000 ரூபாய் லாபம் கிடைக்கும். துபாய், சிங்கப்பூர் உட்பட இன்னும் பல நாடுகளுக்குப் பெரிய வியாபாரிகள், பனங்கிழங்குகளை ஏற்றுமதி செய்றாங்க. வெளிநாட்டுக்கு அதிகமா அனுப்புறாங்க. ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் இங்கவுள்ள விவசாயிகளுக்கும் பனை மரங்களுக்குமான உறவு நீண்டகாலமா தொடர்ந்துகிட்டு இருக்கு. எல்லாத் தோட்டங்கள்லயும், வயல் வரப்புகள்லயும் பனை மரங்களைப் பார்க்கலாம். இது எங்க மண்ணோட பண்பாட்டு அடையாளம்’’ மகிழ்ச்சியுடன் விடைகொடுத்தார்.

பனங்கிழங்கு பலூடா!
ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு வாணி கிராமத்தைச் சேர்ந்தவர் கலைக்கதிரவன். இவர் பனங்கிழங்கில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். “எங்க வீட்டை சுத்தி நிறைய பனை மரங்கள் இருக்கு. எங்க வீட்டுத் தேவைக்காகதான் பனங்கிழங்குகள் உற்பத்தி செஞ்சுகிட்டு இருந்தேன். அறுவடை செஞ்சதுல இருந்து அதிகபட்சம் ஒரு வாரம் வரைக்கும் வச்சுக்க முடியும். அதுக்குள்ளார வேக வச்சு சாப்பிட்டாகணும். அதுக்கு மேல தாமதிச்சா கிழங்கு சுருங்க ஆரம்பிச்சு தரம் இழந்துடும். ஒவ்வொரு வருஷமும் பொங்கல் பண்டிகை சமயத்துல நாங்க பயன்படுத்தினது போக மீதியிருக்கும் கிழங்குகள் வீணாகிகிட்டு இருந்துச்சு. இதை இருப்பு வச்சு சாப்பிடுதற்கு ஏதாவது வழி இருக்குமானு யோசிச்சேன். பனங்கிழங்குகளைக் காய வச்சுப் பயன்படுத்திப் பார்க்கலாம்னு முயற்சி பண்ணினேன். அது ஓரளவுக்குக் கை கொடுத்தாலும்கூட, ரொம்ப நாள் தாங்கல, பூஞ்சணம் புடுச்சுடுச்சு. அடுத்தகட்ட முயற்சியில இறங்கினேன். இதை வெயில்ல காய வச்சு, மாவா அரைச்சு, அந்த மாவையும் வெயில்ல காய வச்சேன்.
அதுக்குப் பிறகு நல்லா சலிச்சு, டப்பாவுல அடைச்சு, காற்றுப் புகாத அளவுக்கு மூடி வச்சிருந்து தேவைக்கேற்ப பயன்படுத்திக்கிட்டோம். ரொம்ப நாள் ஆகியும் கெட்டுப் போகாம நல்லா இருந்துச்சு. பனங்கிழங்கு பவுடரை பால்ல கலந்து ஊட்டச்சத்துப் பானமா குடிச்சோம். ரொம்ப சுவையாவும் வாசனையாவும் இருந்துச்சு. இதை விற்பனை செய்யலாம்னு முடிவெடுத்தேன். கடந்த இரண்டு வருஷமா பனங்கிழங்கு பவுடர் விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். அடுத்தகட்ட முயற்சியா, இந்த பவுடரை பயன்படுத்தி... பனங்கிழங்கு - கருப்பட்டி காபி, பனங்கிழங்கு பலூடா உட்பட இன்னும் சில மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சுகிட்டு இருக்கேன். நிறைய பேர் ரொம்ப ஆர்வமா வாங்கிக்கிட்டுப் போறாங்க. இந்த வருஷம் பனங்கிழங்கை நல்லா வெயில்ல காய வச்சு சின்னச் சின்ன துண்டுகளா நறுக்கி கருப்பட்டியில ஊற வச்சு பனங்கிழங்கு சாக்லேட் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சிருக்கேன். இதுக்கும் மக்கள் மத்தியில நல்ல வரவேற்பு இருக்கு’’ என்றார் உற்சாகத்துடன்.
தொடர்புக்கு, கலைக்கதிரவன், செல்போன்: 75982 81238