நாட்டு நடப்பு
Published:Updated:

ஏற்றம் பெறும் முண்டுமிளகாய் புவிசார் குறியீடு, சிறப்பு மண்டலம்; இரட்டிப்பு மகிழ்ச்சியில் விவசாயிகள்!

மிளகாய்
பிரீமியம் ஸ்டோரி
News
மிளகாய்

சிறப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தின் தனித்துவ அடையாளமாகத் திகழும் முண்டு மிளகாய்க்குப் புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து 10.9.2022 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் “முண்டு மிளகாய்... ராமநாதபுரத்தின் தனித்துவ அடையாளம்! புவிசார் குறியீடு வழங்கப்படுமா” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்நிலையில்தான் தற்போது இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதே தருணத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி, ரூ.6 கோடியில் மிளகாய் சிறப்பு மண்டலம் அமைக்கப்படும் எனத் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள் ராமநாதபுரம் விவசாயிகளை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘வறட்சி மாவட்டம்’ ‘தண்ணி இல்லா காடு’ என்ற விமர்சனத்தை ஆண்டாண்டுக் காலமாக சுமந்து, கொண்டு அதேசமயம் சத்த மில்லாமல் பல சாதனைகளைப் படைத்து வருகிறது ராமநாதபுரம். தமிழ்நாட்டிலேயே இம்மாவட்டத்தில் மட்டும்தான் பல தலை முறைகளாகத் தொன்றுதொட்டு, முண்டு மிளகாய் அதிக பரப்பில் சாகுபடி செய்யப் பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்கள் மட்டுமல்லாமல்.... வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும்கூட ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் சர்வதேச அளவில் சட்ட பூர்வமான அங்கீகாரம் கிடைக்கும் விதமாக, இதற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது இப்பகுதி விவசாயிகளை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மிளகாய்
மிளகாய்

தமிழ்நாட்டிலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் கடல் பரப்பு அதிகம். இதன் காரணமாக இங்கு நிலத்தடிநீர் அதிக உப்புத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இதனால் மழையை எதிர்பார்த்து மானாவாரியில்தான் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாகத் தோட்டக்கலை பயிரான ‘முண்டு மிளகாய்’ சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்குக் காரணம், போதிய மழை இல்லாத தருணங்களில் இங்கு நெல் சாகுபடி என்பது கேள்விக்குறிதான். அதேசமயம், மழைப்பொழிவு பற்றாக் குறையாக உள்ள சமயங்களிலும்கூட முண்டு மிளகாய் வெற்றிகரமாக விளைந்து, விவசாயி களுக்கு கைகொடுக்கிறது. முண்டு மிளகாய் சாகுபடிக்கு தண்ணீர் தேவை என்பது மிகவும் குறைவு. இது வறட்சி தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டது. இம்மாவட்டத்தில் சுமார் 47,000 ஏக்கர் பரப்பில் மானா வாரியாகவும், 5,000 ஏக்கர் பரப்பில் இறவைப் பாசனத்திலும் முண்டு மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மிளகாய்
மிளகாய்

பலநூறு ஆண்டுகளாக, பல்வேறு சீதோஷ்ண நிலைகளை எதிர்கொண்டு, ராமநாதபுரம் முண்டு மிளகாய், தன்னுடைய இயல்புத்தன்மை கொஞ்சமும் மாறாமல் வெற்றிகரமாக விளைந்துகொண்டிருப்பதாக இப்பகுதியில் உள்ள வயது முதிர்ந்த விவசாயிகள் பெருமிதப்படுகிறார்கள். குச்சி மிளகாய் என்று அழைக்கப்படும் சம்பா மிளகாயைவிடவும், முண்டு மிளகாய் அதிக மகசூல் தருகிறது. முண்டு மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் சில விவசாயிகள் அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதியும் செய்கின்றனர். தற்போது, புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் விற்பனை வாய்ப்புகள் பல மடங்கு பெரும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய கமுதி கோரைப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர், “நான் கடந்த 20 வருஷங்களா முண்டு மிளகாய் சாகுபடி செஞ்சுகிட்டு வர்றேன். இப்ப 8 ஏக்கர்ல இயற்கை முறையில இதை பண்ணிக்கிட்டு இருக்கேன். முண்டு மிளகாயின் தனிச்சிறப்பே இதை இயற்கை முறையில்தான் சாகுபடி செய்ய முடியும். முண்டு மிளகாயோட முக்கியமான அடையாளம்... இதோட நிறமும், காரத் தன்மையும், மற்ற மிளகாய் ரகங்களைவிட கூடுதலா இருக்கும். செயற்கை உரங்கள் பயன் படுத்தினா, அந்தளவுக்கு அதிக நிறமும் காரத்தன்மையும் கிடைக்காது, மசாலா பொடி தயாரிப்பு நிறுவனங்கள்... தங்களோட மசாலா பொடி வகைகள், மிளகாய்த்தூள் தயாரிப்புக்கு, 80 சதவிகிதம் இந்த முண்டு மிளகாயைதான் பயன் படுத்துறாங்க. இதனால சந்தைகள்ல முண்டு மிளகாய்க்கான தேவை அதிகமா இருந்துகிட்டு இருக்கு. ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு உலக அளவுலயும் வரவேற்பு உண்டு. பல வெளிநாட்டு நிறுவனங்கள், ராமநாதபுரத்துக்கே நேரடியா வந்து முண்டு மிளகாயோட தரத்தை உறுதி செஞ்சுட்டு, டன் கணக்குல கொள்முதல் செய்யுது. போன வருஷம் நான் அமெரிக்காவுக்கு 12 டன் முண்டு மிளகாய் ஏற்றுமதி செஞ்சேன். இந்த வருஷம், 100 டன் மிளகாய் ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கேன். புவிசார் குறியீடு கிடைச்சுருக்குறதுனால, என்னை மாதிரி இன்னும் பல விவசாயிகள் முண்டு மிளகாயை வெளி நாடுகளுக்கு ஏற்றுதிமதி செய்றதுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ராமர்
ராமர்

ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்த தனித் தன்மையுடைய பொருள்களுக்கு ‘புவிசார் குறியீடு’ அளிக்கப்படுது. அந்தப் பொருளோட பிறப்பிடம் தனித்தன்மை ஆகியவற்றை அறிய, இந்தக் குறியீடு உதவும். விற்பனை வாய்ப்பு அதிகரிக்கும். அந்த வகையிலதான் ராமநாதபுரத்தோட தனித்துவ அடையாளமாக விளங்கும் முண்டு மிளகாய்க்கு ‘புவிசார் குறியீடு’ வழங்கணும்னு இந்தப் பகுதி விவசாயிகள் பல வருஷங்களா வலியுறுத்திக்கிட்டு இருந்தோம். இந்த நிலையிலதான் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ‘முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க, நறுமண பொருள்கள் வாரியத்துக்கு பரிந்துரை செய்து, இப்ப எங்களோட எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுருக்கு.

இதுக்கிடையில, இன்னொரு நல்ல விஷயமும் நடந்திருக்கு. தமிழக வேளாண் பட்ஜெட்ல 6 கோடி ரூபாய் செலவுல... ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கி மிளகாய் சிறப்பு மண்டலம் அமைக் கப்படும் என அறிவிக்கப்பட்டுருக்கு. இதனால், முண்டுமிளகாய் சாகு படியை ஊக்கப்படுத்துறதுக்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அரசு தரப்புல இருந்து கிடைக்க வாய்ப்புகள் ஏற்பட்டுருக்கு. கமுதி, முதுகளத்தூர், கடலாடி உள்ளிட்ட பகுதிகள்லதான் இது அதிக அளவு சாகுபடி செய்யப் படுது. இந்தப் பகுதி விவசாயிகள் உற்பத்தி செய்ற மிளகாய் வற்றல்களை சேமிச்சு வைக்க, நவீன கிட்டங்கிகள் அமைச்சு கொடுக்கணும்னு தமிழக அரசுக்கு கோரிக்கை வச்சுருக்கோம்’’ எனத் தெரிவித்தார்.

வறட்சி தாங்கி வளரக்கூடியது!

இம்மாவட்டத்தில் அமைந்துள்ள குயவன்குடியில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் நிலையத்தின் தோட்டக்கலை உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணியன், ‘‘தமிழ்நாட்டில் இதுவரை 53 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் ராமநாதபுரம் முண்டு மிளாயும் இடம்பெற்றிருப்பது, இப்பகுதி விவசாயிகளுக்குப் பல வகை களிலும் பேருவிதயாக இருக்கும். இதனால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கும். இந்திய அளவிலும் இதற்கான தேவை அதிகரிக்கும். சம்பா மிளகாயைக் காட்டிலும் முண்டு மிளகாயில் அதிக அளவு மிளகாய் பொடிகள் தயாரிக்க முடியும். அதன் காரணமாகத்தான் மிளகாய் பொடி உற்பத்தியாளர்கள் மத்தியில் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு அதிக வரவேற்பு உள்ளது.

பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்

மசாலா பொடி நிறுவனங்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு மிளகாய்களை வாங்கி அதில் பல்வேறு வகையான மசாலா பொடிகள், மிளகாய் ஊறுகாய், மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய் என மதிப்புக்கூட்டி சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை, சீனா போன்ற ஐக்கிய நாடுகளுக்கும், துபாய், சவுதி அரேபியா, கத்தார் போன்ற அரபு நாடு களுக்கும் ஏற்றுமதி செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர். முண்டு மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளைக் காட்டிலும், மொத்த வியாபாரிகளும், இதை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் நிறுவனங்களும்தான் அதிக அளவு லாபம் பார்த்து வருகின்றனர். இனி மிளகாய் விவசாயிகளும், மதிப்புக் கூட்டல் தொழிலில் ஈடுபட இந்த புவிசார் குறியீடு அவர்களுக்கு ஓர் உந்துதலாக இருக்கும். இதற்கு அரசின் உதவிகளும் கிடைக்கும்.

மிளகாய்
மிளகாய்

தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் இப்பகுதி விவசாயிகளை நெல் சாகுபடி கைவிட்டாலும் கூட, முண்டு மிளகாய் கைவிடுவதில்லை. இது 18 நாள்கள் வரையிலும் கூட தண்ணீர் இன்றி வறட்சி தாங்கி வளரக்கூடியது. இது அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மை. இதை, சாகுபடி செய்ய செலவும் குறைவுதான். முண்டுமிளாய் நாட்டு ரகம் அழியாமல் பாதுகாக்கவும், இதைப் பரவலாக்கம் செய்வதற்காகவும் விதைப் பண்ணை, விதைப் பாதுகாப்பு உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க... இப்பகுதி விவசாயிகள் சுமார் 200 ஆண்டுகளாக அடுத்தடுத்த சந்ததியினரும் முண்டுமிளகாய் நாட்டு விதைகளைப் பயன் படுத்தி சாகுபடி செய்ய வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு இன்று வரை அதில் கிடைக்கும் விதைகள் மூலம் சாகுபடியைத் தொடர்ந்துகொண்டு இருக்கின்றனர்’’ எனத் தெரிவித்தார்.

நாகராஜன்
நாகராஜன்

பரப்பளவு அதிகரிக்கப்படும்!

தோட்டக்கலை துறை துணை இயக்குநர் நாகராஜனிடம் பேசினோம். “தமிழக அரசு மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க ராமநாதபுரத்தை உள்ளடக்கி மிளகாய் மண்டலமாக அறிவித்துள்ளது. இதற்காக, 5.5 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம். தமிழக அரசு ஒதுக்கும் நிதியைக் கொண்டு, முண்டு மிளகாய் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்படும். மிளகாய் நாற்றுகள் இலவசமாக வழங்கி விவசாயிகள் ஊக்கு விக்கப்படுவார்கள். அறுவடை செய்யும் மிளகாய்களை பதப்படுத்தி பாதுகாப்பதற்கு ஏற்ற கிடங்குகள் அமைக்கப்படும். மிளகாய் விவசாயிகளை ஒன்றிணைத்து மிளகாய் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரிவித்தார்.