‘‘வானம் பார்த்த பூமிதான்... ஆனா, வறண்ட பூமியில்ல!’’ மருகுது தண்ணியில்லா காடு! ஓர் உண்மை அலசல்!

கோரிக்கை
‘தண்ணியில்லா காட்டுக்கு மாத்திட வேண்டியதுதான்’ என்கிற வசனம், ஒரு காலத்தில் ரொம்ப பிரபலம். வசனம் மட்டுமல்ல, நடைமுறையிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது. தவறிழைக்கும் அல்லது தங்களுக்குப் பிடிக்காத அதிகாரிகள் உள்ளிட்டோரை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தடாலடியாக மாற்றம் செய்துவிடுவார்கள். இது அவர்களுக்கான தண்டனை என்பதாகவே பார்க்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணமே... வறண்ட மாவட்டம், வானம்பார்த்த பூமி என்கிற வகையில் இந்த மாவட்டம் அழைக்கப்பட்டதுதான்.

காலங்காலமாக விளிக்கப்பட்டுவரும் ‘தண்ணியில்லா காடு’, ‘வறண்ட மாவட்டம்’ போன்ற அடைமொழிகளை இப்பகுதி மக்களும் விவசாயிகள் வெறுக்கத் தொடங்கி ஆண்டுகள் பலவாகின்றன என்பதுதான் இப்போதைய நிலை. “இந்த அவப்பெயரை நீடித்து நிலைக்கச் செய்வதன் மூலம் அதிகாரிகள் பல வகைகளிலும் குறுக்கு வழிகளில் பயன் அடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக எங்கள் மாவட்டமே பல பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது” என்று விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று சொன்னால் முதலில் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள்தான் நினைவுக்கு வரும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமாரி உள்ளிட்ட தென் மாவட்டங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் ஆச்சர்ய தகவல் என்ன தெரியுமா? தமிழ்நாட்டில் நெல் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று என்பதுதான். நெல்லுக்கு அடுத்தபடியாக, மிளகாய் மற்றும் பருத்தி விவசாயமும் செழிப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மதுரையில் புகழ்பெற்ற குண்டுமல்லி சாகுபடிக்குத் தேவையான நாற்றுகள் ராமநாதபுரத்தில்தான் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு அனுப்பப்பட்டு வருகிறது.

“இப்படி அனைத்துவிதமான பயிர்களும் செழிப்பாக விளையக்கூடிய மண்வாகு எங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்வளமும் இங்கு செழித்தோங்கித்தான் இருந்தது. காலப்போக்கில் ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவே, வறட்சி மாவட்டம் என்ற பெயர் சூட்டப்பட்டு நீடித்து வருகிறது” எனக் கொந்தளிக்கிறார்கள் விவசாயிகள்.
ராமநாதபுர மாவட்டம், வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.எஸ்.கே பாக்கியநாதன் இதைப் பற்றிப் பேசும்போது, “மாவட்டத்துல பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டுல 640 ஆற்றுப்பாசன கண்மாய்களும், 1,112 மானாவாரி கண்மாய்களும் இருக்கு. இதுமூலமா 1.37 லட்சம் ஹெக்டேர் பரப்புல நேரடி விதைப்பு மூலமா நெல் சாகுபடி செய்யப்படுது. 60,000 ஏக்கர்ல மிளகாய்... 25,000 ஏக்கர்ல சிறுதானியங்கள் பயிர் செய்யப்படுது.

பெரும்பாலான பகுதிகள், வானம் பார்த்த பூமிதான். ஆனா, வறட்சியான பூமி கிடையாது. சேதுபதி மன்னர் ஆட்சிக்காலத்துல இங்க நீர் மேலாண்மை சிறப்பா இருந்த சமயத்துல, எல்லாப் பகுதிகள் லயுமே விவசாயம் செழிப்பா நடந்துகிட்டு இருந்துச்சு. உலகமே வியக்குற அளவுக்கு மிகப்பெரிய நெற்களஞ்சியம் இங்க இருந்ததா, ஆய்வாளர்கள் சொல்றாங்க. போர்க்காலம், பஞ்சகாலம் போன்ற சமயங்கள்லகூட பசி, பட்டினி இல்லாமதான் வாழ்ந்திருக்காங்க.
வைகையும் குண்டாறும்தான் முக்கிய நீராதாரம். நாராயணன் காவேரி, ரகுநாத காவேரி, கூத்தன் கால்வாய், ராமநாதன் வாய்க்கால்ல... மழைக்காலத்துல பெருக் கெடுத்து ஓடக்கூடிய வெள்ளநீரைத் தடுத்துப் பயன்படுத்துறதுக்காக சிறப்பான திட்டங் களைச் செயல்படுத்தியிருக்காங்க. நிலத்தடி நீர் உப்பு நீரா இருந்ததால ஏராளமான ஊரணிகளை ஏற்படுத்தி நீரைப் பெருக்கி, குடிநீர், விவசாயம்னு பயன்படுத்தியிருக் காங்க. ஆனா, காலப்போக்குல வறட்சி மாவட்டம்னு சொல்ற அளவுக்கு நிலைமை தலைகீழா போனதுதான் துரதிர்ஷ்டம். நீர்நிலைகள் தனி நபர்களால ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு, அது இருந்ததுக்கான சுவடுகளே இல்லாம போயிடுச்சு. 202 கண்மாய் களுக்கு மட்டும்தான் வைகை அணையில இருந்து தண்ணீர் வருது. இதன்மூலம் பார்த்திபனூர், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம் என ஒரு பகுதிக்கு மட்டும் பாசனம் கிடைக்குது.

ஒவ்வொரு வருஷமும் ‘வழிகாட்டி’ங்கற ஊர்ல இருந்து வைகை தண்ணீர், ராமநாத புரம் மாவட்டத்துக்குத் திறக்கப்படுது. பார்த்திபனூர் மதகு அணைக்கட்டிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளான பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் பகுதிகள்ல உள்ள பாசன கண்மாய்கள்ல நிரப்பப்படுது. அதேசமயம், கூடுதலா வர்ற தண்ணி அப்படியே கடலுக்கு போகுது. இந்த வருஷமும் இந்த அவலம் நடந்துச்சு.
இந்தத் தண்ணீரை 36 கண்மாய்கள்ல நிரப்பி, அதை விவசாயத்துக்குப் பயன்படுத்தறதுக்கு ஏற்பாடு செய்யலாம். வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளுக்குத் தண்ணீர் விடணும்னு பல வருஷமா விவசாயிங்க கோரிக்கை வச்சிக்கிட்டு வர்றாங்க. ஆனா அதிகாரிகள் பொருட்படுத்துறதே இல்லை. பயிர்களைக் காப்பாத்த தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பாய்ச்ச வேண்டிய அவல நிலை நீடிக்குது.

தமிழ்நாட்டுல திருவாரூர் மாவட்டத்துக்கு அடுத்தபடியா நெல் சாகுபடி அதிகளவு செய்யக்கூடிய மாவட்டம், ராமநாதபுரம். மிளகாய், பருத்தி, சிறுதானியங்களும் அதிகளவு விளைவிக்கப்படுது. ஆனா, இது வறட்சி மாவட்டம், விவசாயத்துல பின் தங்கிய மாவட்டம்ங்கற பேர்ல புறக்கணிக்கப் பட்டுக்கிட்டே இருக்கு. மற்ற மாவட்ட விவசாயிங்களுக்குக் கிடைக்கக்கூடிய சலுகைகள் எங்களுக்குக் கிடைக்குறதில்லை. விவசாயக் கடன்கள் வாங்குறது பெரிய பாடா இருக்கு. வறட்சி மாவட்டங்கறதுனால, விவசாயக் கடன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாதுனு வங்கி அதிகாரிங்க சொல்றாங்க. டெல்டா மாவட்டங்கள்ல அதிக மழை பெய்ஞ்சு, பயிர்கள் பாதிக்கப்பட்டா... பயிர் இழப்பீடு, நிவாரணம் கிடைக்கும். எங்களுக்கு அப்படியில்லை. வறட்சி மாவட்டங்கற பேரை சொல்லிச் சொல்லியே எல்லாத்தையும் வஞ்சிக்கிறாங்க. விவசாய மின் இணைப்புக் கிடைக்குறதும்கூடக் குதிரை கொம்பாத்தான் இருக்கு.
வறட்சி மாவட்டம்ங்கற பேர் நீடிச்சாதான், அதிகாரிங்களும் ஆளுங்கட்சி பிரமுகர்களும் பல வகைகள்ல பயன் அடைய முடியுங்கறதால அந்தப் பேரை அப்படியே நீடிக்க வெச்சிருக்காங்க. விவசாயம் சாராத மற்ற துறைகளை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் ஏராளமான சிறப்புத் திட்டங்களை வழங்குது. இதுக்கு ஏராளமான நிதிகள் வழங்கப்படுது. இதெல்லாம் அதிகாரிகங்களுக்கும் ஆளுங்கட்சிக்காரங்களுக்கும் பல வகையிலயும் பயன் தருது. இந்த நிலை எப்ப மாறும்னு விவசாயிங்க மட்டுமில்ல, மாவட்டத்துல உள்ள ஒட்டுமொத்த மக்களுமே எதிர்பார்த்துக் காத்திருக்காங்க. வறட்சி மாவட்டம்கிற பெயர் சீக்கிரத்துல நீக்கப்படணும்’’ என்று அழுத்தம்கொடுத்துச் சொன்னார்.

உவர் மண் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் பிரபாகரனிடமும் பேசினோம். ‘‘மற்ற மாவட்டங்களைப் போன்று ராமநாதபுரம் மாவட்டம் இல்லை. மற்ற மாவட்டங்களில் ஓராண்டுக்கு சராசரியாக 100-ல் இருந்து 130 நாள்கள் மழை பெய்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சம் 20 முதல் 30 நாள்கள் வரை மட்டுமே மழை பெய்கிறது. அதேசமயம், மழையின் அளவு மற்ற மாவட்டங்களில் 100 நாள்களில் பெய்யக்கூடிய அளவைவிட இங்கு அதிகமாகவே பெய்கிறது. குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல் சீற்றங்களின்போது 180 மி.மீ வரை மழை பெய்யும். ஆனால் இந்த மழையால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தாழ்வான பகுதிகளுக்கு மழைநீர் ஓடிவிடும். சேமிப்பது கடினம். மற்ற மாவட்டங்களில் 5 மி.மீ., 10 மி.மீ. என அவ்வப்போது பெய்து வருவதால் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக உள்ளது. வடகிழக்குப் பருவமழையை நம்பி நேரடி நெல் விதைப்புச் செய்தாலும், பல நேரங்களில் அது கை கொடுக்காமல் போய், விவசாயிகள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடுகிறது.
மழை பெய்யும் நாள்களைக் கணக்கிட்டுதான் வறட்சியான பகுதியா, வளமான பகுதியா என்பது வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த மாவட்டத்தில் மழை நாள்கள் குறைவு. அந்த வகையில்தான் வறட்சி மாவட்டம் என அழைப்படுகிறது’’ என்று சொன்னார்.

விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸிடம் கேட்டபோது, “இந்த மாவட்டத்தில் நான் பொறுப்பேற்று சில மாதங்கள்தான் ஆகின்றன. மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக்கிரமிப்புகளில் இருக்கும் நீர்நிலைகள் மீட்கப்படுகின்றன. நீர் சேமிப்பை அதிகப்படுத்துவதற்காகவும், விவசாய நிலத்தின் வளங்களை பெருக்கவும் ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைகை நீர் செல்லும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கண்டறிந்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘வறட்சி மாவட்டம்’ என்ற பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடும்’’ என்று சொன்னார்.

விவசாயம் செழிப்பா நடந்துகிட்டு இருக்கு!
இது விவசாயத்துக்கு உகந்த மாவட்டம் இல்லை என்ற சித்திரிப்பு பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில்தான் இது செழிப்பான விவசாயப் பூமி என இம்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் நிரூபித்து வருகிறார்கள். அதில் ஒருவர்தான் எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி தரணி முருகேசன். அவரிடம் பேசினோம், ‘‘எங்க மாவட்டத்துல எல்லா வகையான பயிர்களுமே நல்லா செழிப்பா விளையும். ஆனா, இங்க ஏதோ வருஷம் முழுக்க வெயில் வாட்டியெடுக்கும்... மழையே இருக்காது... ஆற்றுப் பாசனத்துக்கும் வழி இருக்காதுனு வெளிமாவட்ட மக்கள் மத்தியில ஒரு எண்ணம் இருக்கும். ஆனா, ஆச்சர்யமான விஷயம் என்னென்னா... இங்க மலைப்பிரதேச காய்கறிகள், பழங்கள்கூட செழிப்பா விளைஞ்சுகிட்டு இருக்கு. நான் 72 ஏக்கர்ல விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். எட்டிவயல்லயும் தெற்கு தரவையிலயும் எனக்கு நிலங்கள் இருக்கு. நான் என்னோட தோட்டத்துல கேரட், பீட்ரூட், காலிஃப்ளவர் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். இதோடு தர்பூசணி, பூசணி, புடலை உள்ளிட்ட காய்கறிகளும் பயிர் பண்ணிகிட்டு இருக்கேன். எந்த ரசாயன உரங்களும் போடாம, இயற்கை விவசாயத்துல செழிப்பா விளைஞ்சுகிட்டு இருக்கு.

மாதுளை, பப்பாளி, கொய்யா, வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். 10 ஏக்கர்ல பாரம்பர்ய நெல் ரகங்களும் சாகுபடி செய்றேன். என்னோட தோட்டத்துல அஞ்சாறு இடத்துல குளங்கள் வெட்டியிருக்கேன். அதுல சேகரமாகுற மழைத் தண்ணியைப் பாசனத்துக்குப் பயன்படுத்திக்குறேன். இது தவிர, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறுகள் மூலமும் பாசனத்துக்குத் தண்ணி கிடைச்சுக்கிட்டு இருக்கு.


என்னை மாதிரி இன்னும் ஏராளமான விவசாயிங்க, எங்க பகுதியில செழிப்பா விவசாயம் செஞ்சுகிட்டு இருக்காங்க. அரசாங்கம் மனசு வச்சா, உடனடியா, ஆற்றுப் பாசனத்துக்கு வழி செய்ய முடியும். சுமார் 60 வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் எட்டிவயல், கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, சாலக்குடி உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளுக்கு வைகை ஆற்றுத் தண்ணி வந்துகிட்டு இருந்துச்சு. வாய்க்கால்கள், ஏரிகளை எல்லாம் முறையா பராமரிக்காததுனாலதான், அதெல்லாம் தூர்ந்து போயி, வைகை பாசனத்துக்கு வழியில்லாம போச்சு. அந்த வாய்க்கால் கட்டமைப்புகள் எல்லாம் இப்பவும் இருக்கு. தமிழக அரசு அதையெல்லாம் சீரமைச்சுக் கொடுத்தா, இங்க விவசாயம் இன்னும் செழிப்பா நடக்கும். ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, பரமக்குடி உட்பட இன்னும் பல பகுதிகள்ல வைகை ஆற்றுப் பாசனத்துனால அங்க விவசாயம் செழிப்பா நடந்துகிட்டு இருக்கு’’ எனத் தெரிவித்தார்.

பசுமையாகக் காட்சி அளிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள் செழிப்பாக வளர்ந்து, பசுமையாகக் காட்சி அளிக்கிறது. இங்கு வேம்பு, புங்கன், அரசு, ஆலம், நாவல் உள்ளிட்ட 40 வகையான மரங்கள் உள்ளன. ஆட்சியர் அலுவலகத்திற்குக் குறைகளைத் தெரிவிக்க வரும் பொது மக்களுக்கு இந்த மரங்கள் அனைத்தும் இயற்கை நிழற்குடைகளாகப் பயனளிக்கின்றன. மேலும் வனத்திற்குள் வந்த உணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்திவருகிறது. இந்த மரங்களை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பறவைகளின் வாழ்விடமாகவும் இந்த மரங்கள் இருந்து வருகின்றன.

சீமைக்கருவேல மரங்களிலிருந்து கரி உற்பத்தி
இம்மாவட்டத்தில் அதிகளவில் சீமைக்கருவேல மரங்கள் வளர்கின்றன. இவற்றிலிருந்து விறகு கரி தயாரிக்கப்பட்டு மும்பை, குஜராத், நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. விவசாயிகள் பலரும் கரிமூட்டம் போடுவதைக் குடிசை தொழிலாகச் செய்து வருகின்றனர். மற்ற பகுதி கரிகளைவிட ராமநாதபுரம் மாவட்ட கரிகளில் கார்பன் 80 சதவிகிதம் இருப்பதால், இது அதிக நேரம் எரியும் திறன் கொண்டது. இதனால்தான் இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கரிக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு உள்ளது. வெளிமாநிலங்களில் உள்ள ஹோட்டல்களில் கரி அடுப்புக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும் குளிர்பிரதேச மாநிலங்களில். அப்பகுதி மக்கள், தங்களைக் குளிரின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு நெருப்பு மூட்ட, இந்தக் கரியைதான் அதிகம் பயன்படுத்துகின்றனர். பரமக்குடி, தெளிச்சாத்தநல்லூர், பார்த்திபனூர் உள்ளிட்ட கிராமங்களில் கரி உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.