Published:Updated:

கால்நடைகளின் கற்பக விருட்சம் முருங்கை பசுந்தீவனம்... ஆராய்ச்சி முடிவுகளும் ஆச்சர்ய தகவல்களும்!

முருங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
முருங்கை

முருங்கை தொடர் -6

முருங்கை சார்ந்த பல்வேறு புதிய தொழில்கள் சர்வதேச அளவில் வெற்றிநடை போட்டு வருகின்றன. முருங்கை யின் மருத்துவ குணங்கள், உலகின் பல நாடுகளில் முருங்கையில் தயார் செய்யப்படும் பலவிதமான உணவு வகைகள் குறித்தும்... முருங்கையில் தயார் செய்யப்படும் பயோ டீசல் குறித்தும் கடந்த அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்தோம். கால்நடை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் முருங்கை சார்ந்த தொழில்கள் குறித்துப் பார்ப்போம்.

பால் உற்பத்தி...

இந்தியாவில் கால்நடை வளர்ப்பும், அதைச் சார்ந்து நடைபெறும் தொழில்களும் நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. மொத்த பால் உற்பத்தியில் 23.67 சதவிகிதம் இந்தியா பங்களிப்பு செய்கிறது. நம் நாட்டில் சுமார் 8 கோடி பேர் பால் உற்பத்தி தொழிலில் நேரடியாக ஈடுபடுகின்றனர். கால்நடை வளர்ப்பு சார்ந்த இன்னொரு முக்கியமான புள்ளி விவரத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முட்டை மற்றும் ஆட்டிறைச்சி உற்பத்தியில் இந்தியா, உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. எருமை இறைச்சி உற்பத்தியிலும் நம் நாடு முன்னிலையில் உள்ளது. மேலும், இறைச்சி ஏற்றுமதியிலும் இந்தியா பெரும்பங்கு வகிக் கிறது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வெளி நாடுகளுக்கு அதிக அளவில் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாடுகளுக்குத் தீவனம்
மாடுகளுக்குத் தீவனம்

இந்தியாவில் பால், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் உள்நாட்டு தேவை நாளுக்கு நாள் பெரும் அளவில் உயர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி பார்த்தால்... நம் நாட்டு மக்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரைப் படி, ஒரு நபர், ஓர் ஆண்டில் உண்ண வேண்டிய இறைச்சி மற்றும் முட்டையில் 50 சதவிகிதம் மட்டுமே உண்கிறார். காரணம் பற்றாக்குறை நிலவுகிறது.

குறிப்பாக, பால் மற்றும் பால் பொருள்களின் தேவை ஒவ்வோர் ஆண்டும் 6 சதவிகிதம் உயர்கிறது. எனவே, நம் நாட்டில் பால் மற்றும் இறைச்சி உற்பத்தித் திறனை அதிகப் படுத்துவதென்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதற்குப் போதுமான தீவனம் தேவை.

பசுந்தீவனம் பற்றாக்குறை...

நம் நாட்டில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம் என்பது, மொத்த வேளாண் நிலப்பரப்பில் 2 சதவிகிதத்துக்கும் குறைவு தான். கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களில் சுமார் 70 சதவிகிதம் பேர் சிறு, குறு விவசாயிகள். இங்கு வளர்க்கப்படும் மாடு களுக்கு போதுமான அளவுக்கு பசுந்தீவனம் கொடுக்கப்படாததால், பால் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. நியுசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் வளர்க்கப்படும் மாடுகளின் பால் உற்பத்தித் திறன் 50 சதவிகிதம் குறைவாக உள்ளது.

உதாரணமாக, மேலே குறிப்பிட்ட நாடு களில் ஒரு வருடத்துக்கு ஒரு மாடு 3,000 லிட்டரிலிருந்து 10,000 லிட்டர் வரைக்கும் பால் கொடுக்கிறது. ஆனால், இந்தியாவில் வெறும் 1,200 - 2,200 லிட்டர் வரை மட்டுமே பால் கறக்கப்படுகிறது.

சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தைகளை ஆராயும்போது பால், முட்டை, இறைச்சி மற்றும் இவற்றிலிருந்து தயார் செய்யப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களுக்குச் சந்தை வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் வளர்க் கப்படும் கால்நடைகளில் பெரும்பாலும் அதற்கேற்ற உற்பத்தித் திறன் இல்லாதது மிகப் பெரும் பின்னடைவாகும்.

மாட்டுக்கு முருங்கை
மாட்டுக்கு முருங்கை

கால்நடைகளின் கற்பக விருட்சம்...

இந்தத் தகவல்களுக்கும், முருங்கைக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். கால்நடைகள் நன்கு ஊட்டமாக வளர்ந்து... பால், இறைச்சி, முட்டை உற்பத்தித் திறன் அதிகரிக்க, முருங்கை பெரிதும் கைகொடுக்கும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் சுருக்கமாக சொன்னால்... கால்நடைகளின் கற்பக விருட்சமாகவே, முருங்கை திகழ்கிறது.

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளரான திக்விஜய் சிங், “முருங்கை ஒரு சிறந்த மாட்டு தீவனம். மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய, சத்துக்கள் நிறைந்த தீவனம் இது” என்கிறார்.

‘‘பசுந்தீவன தேவைக்காக, ஒரு விவசாயி முருங்கை சாகுபடி செய்தால், ஆண்டுக்கு 5 முறை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேரில் சுமார் 120 டன் முருங்கை பசுந்தீவனமாக அறுவடை செய்ய முடியும். மற்ற பசுத்தீவனத்துடன் இதைக் கலந்து நாள் ஒன்றுக்கு ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிலோ வரை கொடுக்கலாம். இந்த தீவனத்தில் புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்கள் இருப்பதால், அதிகளவில் பால் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் தரமானதாகவும் இருக்கிறது’’ என திக்விஜய் சிங் தெரிவிக்கிறார்.

மாடு வளர்ப்பு
மாடு வளர்ப்பு

தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம் முருங்கையினை ஒரு முக்கிய மாட்டுத் தீவனமாக, அதிலும் ஊட்டச்சத்து தீவனமாக மாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. கேரளாவின் மலபாரிலும், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் முருங்கையை மாட்டுத் தீவனமாக பயன்படுத்த பலவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முருங்கை பயிரிடுவதற்காக, கேரளாவின் மலபார் பால் கூட்டமைப்புக்கு 40 ஏக்கரும், ஜார்க்கண்ட் பால் கூட்டமைப்புக்கு 35 ஏக்கரும் கொடுக்கப்பட்டது. கால்நடைகளுக்கு முருங்கை இலையை தீவனமாகக் கொடுப்பதால் பால் கொள்முதல் அதிகரிப்பதுடன், அந்தப் பால் தரமானதாகவும் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்து குஜராத், பஞ்சாப், பீகார் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான முருங்கை வகைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.கே.எம்-1, பி.கே.எம்-2, மூலனூர் குட்டை, அரவக்குறிச்சி நெட்டை, கப்பல்பட்டி, பள்ளபட்டி பி.ஏ.வி.எம், வலையப்பட்டி உள்ளிட்ட முருங்கை ரகங்களாகும்.

முருங்கை
முருங்கை

இந்தோனேசியாவில் நடைபெற்ற
ஆய்வும், ஆச்சர்ய தகவல்களும்...

மேலும், இந்தோனேசியாவிலுள்ள ஹாஸனுதீன் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆய்வாளர்கள் சேர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்தனர். அதில் பால் கொடுக்கும் கால்நடைகளை இரண்டு பிரிவாக பிரித்தார்கள். ஒரு வகை பிரிவிற்குத் தினமும் யானைப் புல், வைக்கோல், உப்பு மற்றும் மினரல்ஸ் கொடுக்கப்பட்டது. மற்றொரு பிரிவு மாடுகளுக்கு அதே தீவனங்களுடன் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 500 கிராம் முருங்கை இலை பொடி (Supplements) கொடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், முருங்கை இலைப்பொடி தரப்பட்ட மாடுகள் ஒரு நாளைக்கு 14.25 லிட்டர் அளவில் பால் கொடுத்தது. மற்ற பிரிவு மாடுகள் வெறும் 11.51 லிட்டர் பால் மட்டுமே தந்தது. அதுமட்டுல்லாமல் முருங்கை தீவனம் எடுத்து கொண்ட மாடுகளின் பாலில் அதிக அளவில் புரோட்டின் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தோனேசியாவிலும் இதே போன்று பால் உற்பத்தியைப் பெருக்க பல ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஏனென்றால் இந்தோனேசியாவின் பால் தேவையில், ஏறக்குறைய 60 சதவிகிதம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோன்ற ஆராய்ச்சிகள் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

முருங்கை பசுந்தீவனத்தால் கால்நடைகளின் பால் அளவு அதிகமாவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது என பல முறை உறுதி செய்யப்பட்டது. ஆனால் இந்த தகவல் வேளாண் மக்களிடம் குறிப்பாக கால்நடை வளர்ப்போரிடம் முழுமையாக சென்றடையாதது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

இஸ்ரேல் நாட்டிலுள்ள நெபியார்க் ஆராய்ச்சி மையத்தில் ஆட்டுக்குட்டிகளுக்கு முருங்கை இலையினால் தயாரிக்கப்பட்ட தீவனங்களைக் கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வும் குறிப்பிடத்தக்கது. முருங்கைத் தீவனம் கொடுக்கப்பட்ட ஆடுகளின் இறைச்சி மிருதுவாகவும், கூடுதல் எடை உடையதாகவும் இருந்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகளில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு முருங்கை ஒரு சிறப்பு தீவனம் என்றும்... இதனால் பால், முட்டை, இறைச்சி உற்பத்தித் திறன் அதிகமாகும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. முருங்கையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதனால், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை குணப்படுத்தவும் இது கை கொடுக்கும் என நிரூபணமாகி உள்ளது. முருங்கையின் மகத்துவம் குறித்து பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்திருந்தாலும் கூட, கால்நடைகளுக்கான முருங்கை தீவனம் தயாரிப்பில் இறங்கியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தனியார் நிறுவனங்கள் முருங்கைத் தீவனம் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

தரமான கால்நடை தீவனங்களுக்கு ஏற்றுமதி மற்றும் உள்ளூர்ச் சந்தை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இதில் தமிழக வேளாண் மக்களும், தொழில் முனைவோர்களும் பங்குபெற்று பயன்பெற வேண்டும். இதற்கு மூன்று விஷயங்கள் முக்கியம். ஒன்று... ஆடு, மாடு, கோழி ஆகியவற்றுக்கான பிரத்யேக முருங்கை உணவு தயாரிப்புக்கான செயல்முறைகள் உருவாக்க வேண்டும். அதை சர்வதேச நாடுகள் எளிதாக ஏற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, சோதனை மையத்தின் வாயிலாக அதன் பயன்பாட்டினை தமிழக அரசு உறுதி (Validation) செய்ய வேண்டும். கால்நடை தீவனங்கள் உற்பத்தி செய்யும் விவசாய குழுக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இதற்கான அனுமதியை அரசு கொடுக்க வேண்டும். முருங்கை தீவனம் விற்பனை செய்ய, ஆரம்பநிலையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு... தமிழகத்தில் இருக்கும் அனைத்து வேளாண் வணிக மேம்பாட்டு மையங்களிலும் முன்னுரிமை தர வேண்டும். மேலும் இதற்கென, ஒரு பொதுவான வணிக மேம்பாட்டு மையத்தை (Common Business Development Facility Centre) அரசு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது செயல்படும் வரும் கால்நடை தீவன பெருநிறுவனங்கள் முருங்கை தீவன தயாரிப்பில் இறங்கினால், இதன் பயன்பாடு மிகப்பெரிய அளவில் விரிவடையும். இதனால் முருங்கை உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளும் பயன்பெறுவார்கள்.

-தழைக்கும்

கோழி வளர்ப்பு
கோழி வளர்ப்பு

கோழி வளர்ப்பில் தமிழ்நாடு...

பால் உற்பத்தியில் உத்தரப்பிரதேசம்...

இந்திய அளவில் பார்த்தால், பால் உற்பத்தியில் உத்தரப் பிரதேசம் முன்னிலை வகிக்கிறது. கோழி வளர்ப்பில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. முட்டைகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம், ஆந்திரப் பிரதேசம். உள்நாட்டுச் சந்தையில் பால் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றாலும், இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் நாம் இன்னும் தன்னிறைவு அடையவில்லை.

சிறப்பு பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் ஜார்க்கண்ட்டில் இயங்கும் கால்நடை மேய்ச்சல் நிலம் மற்றும் தீவனம் ஆராய்ச்சி நிலையத்தில் மூத்த விஞ்ஞானிகள் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. “கால்நடை தீவனம் தயாரிப்பதற்கு தற்போது பல்வேறு கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி, தீவன உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, வேளாண் வணிக மேம்பாட்டு மையங்கள் இதில் ஆர்வம் காட்ட வேண்டும். கால்நடை தீவன உற்பத்தி தொடர்பாக, தொழில்முனைவோர்களுக்கு குறிப்பாக, இளைஞர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும். காப்பீட்டு வசதியுடன் கடன் தரப்பட வேண்டும். இல்லையெனில் நம் நாட்டில் கால்நடை வளர்ப்பு என்பது கவலைக்குரிய நிலைக்கு செல்லும்” என்கின்றனர்.

தற்போதைய நிலையில் பசுந்தீவனம் 11.24 சதவிகிதமும், உலர் தீவனங்கள் 23.4 சதவிகிதமும், மதிப்புக்கூட்டப்பட்ட தீவனம் 29 சதவிகிதமும் பற்றாக்குறை உள்ளது. எனவே இத்துறையில் இளைஞர்களுக்கும் புத்துளிர் (STARTUP-ஸ்டார் அப்) நிறுவனங்களுக்கும் சிறந்த தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

 முனைவர் எம்.நாச்சிமுத்து
முனைவர் எம்.நாச்சிமுத்து

முருங்கை தீவனம் தயாரிப்பு...

பதப்படுத்தப்ப‌ட்ட‌ மக்காச்சோள தீவனத்துடன், முருங்கை பசுந்தீவனத்தை 70:30 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். சுவை மற்றும் மணம் அதிகப்படுத்த வேண்டுமென்றால் 10% நாட்டுச் சர்க்கரை அல்லது மொலாசஸ் சேர்க்கலாம். ஒரு மாட்டுக்கு தினமும் சுமார் 10 கிலோ வீதம், இத்தீவனம் கொடுக்கலாம்.

தனியாகவும் கொடுக்கலாம்...

நன்கு செழிப்பாக உற்பத்தி செய்யப்பட்ட முருங்கையின் இலை மற்றும் காம்புகளை 1-2 சென்டிமீட்டர் அளவுக்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கால்நடைகளுக்கு கொடுக்கலாம். ஒரு கிலோ முருங்கைத் தீவனம், சுமார் 800 கிராம் BIS வகையான தீவனத்திற்கு சமமாகும். பெல்லட் தீவனம் (குச்சி- உருண்டை வடிவத்திலான தீவனம்) என்று சொல்லப்படும் கால்நடை தீவனங்களில் 15 சதவிகிதம் வரை முருங்கை இலையை அரைத்து கூழாக்கி பெல்லட் தீவனங்களுடன் சேர்த்து கொள்ளலாம்.

(ஆதாரம்: NDDB- National Diary Development Board, திக்விஜய் சிங், 2021).