நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

மாதம் ரூ.85,000... துளசி முதல் வல்லாரை வரை... மூலிகை மதிப்புக்கூட்டலில் வளமான லாபம்!

ஜூஸ் கடையில் சசிகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூஸ் கடையில் சசிகுமார்

மதிப்புக்கூட்டல்

பாரம்பர்ய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் வரிசையில் மூலிகைகள் சார்ந்த உணவுப்பொருள்களுக்கும் மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருநாளூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சசிகுமார், அந்தப் பகுதி விவசாயிகள் மூலம் தூதுவளை, துளசி, வல்லாரை உள்ளிட்ட மூலிகைகள் உற்பத்தி செய்து, அவற்றை ஜூஸாகவும், பவுடராகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பயன் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் இயங்கி வருகிறது, சசிகுமார் நடத்தி வரும் இயற்கை ஜூஸ் ஸ்டால். கோடை வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த ஒரு பகல் வேளையில் இங்கு சென்றோம். தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வல்லாரை ஜூஸ் போட்டுக் கொடுத்துக்கொண்டிருந்த சசி, மிகுந்த உற்சாகத்தோடு நம்மை வரவேற்றார். ‘‘வெயில் நேரத்துல வந்துருக்கீங்க... சோர்வா இருப்பீங்க. எங்களோட மூலிகை ஜூஸ் குடிங்க... நல்லா புத்துணர்ச்சியா இருக்கும்’’ என உபசரித்தவர்... தன்னைப் பற்றிய தகவல்களையும் மூலிகை மதிப்புக்கூட்டல் குறித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

ஜூஸ் கடையில் சசிகுமார்
ஜூஸ் கடையில் சசிகுமார்

“ஆலங்குடி பக்கத்துல இருக்குற திருநாளூர் தான் என்னோட சொந்த ஊர். நாங்க விவசாயக் குடும்பம். எங்ககிட்ட குறைவான நிலம் இருந்ததுனாலயும், பாசனத்துக்கு வழியில்லாத மானாவாரி விவசாயம்ங் கறதுனாலயும், எங்க குடும்பம் ரொம்ப வறுமையான நிலையில இருந்துச்சு. நான் சின்ன வயசுலயே விவசாயக் கூலி வேலை களுக்குப் போவேன். காலையில 5 மணியில இருந்து 8 மணி வரைக்கும் மல்லிகைப் பூ பறிச்சுக் கொடுத்துட்டு, அதுக்குப் பிறகு அவசர அவசரமாகக் கிளம்பி ஸ்கூலுக்குப் போவேன். பள்ளிக் காலங்கள் எல்லாம் இப்படிதான் போச்சு.

பன்னிரண்டாம் வகுப்பு படிச்சு முடிச்சதும், மேற்கொண்டு விவசாயம் சம்பந்தமா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அந்த நேரத்துல எங்க குடும்பத்தோட பொருளாதார நிலைமை சரியில்லாததுனால, படிக்க முடியலை. வேலூர் பக்கத்துல இருக்குற ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். காபி தூள், நெய் உட்பட இன்னும் சில பொருள்களை விற்பனை செய்ற வேலை.

உழைப்புக்கேத்த ஊதியம் இல்லாததுனால அந்த வேலையில எனக்குக் கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. ஆனாலும், குடும்ப கஷ்டத்தால, ரெண்டு வருஷம் வரைக்கும் பல்ல, கடிச்சிக்கிட்டு வேலை பார்த்தேன். ஒரு கட்டத்துல அந்த வேலையை விட்டுட்டு, சொந்த ஊருக்கு வந்துட்டேன்.

ஜூஸ் கடையில் மூலிகை பவுடர்
ஜூஸ் கடையில் மூலிகை பவுடர்

அன்றாட வருமானத்துக்கு இங்கே சில வழிகள் ஏற்படுத்திக்கிட்டு, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்துல டிப்ளோமா ‘விவசாயப் பண்ணைத் தொழில்நுட்பம்’ படிச்சு முடிச்சேன். இதுக்கிடையிலதான் இயற்கை விவசாயம், பாரம்பர்ய வாழ்வியல் முறைகள் பத்தி தெரிஞ்சுக்கணும்ங்கற ஆர்வம் எனக்கு ஏற்பட்டுச்சு. புதுக்கோட்டை ஏ.மாத்தூர்ல செயல்பட்டுக்கிட்டு இருக்குற வள்ளலார் மாணவர் காப்பகத்துக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சேன். அங்கதான், வள்ளலார் மேற்கொள் காட்டிய பலவிதமான மூலிகைகளைப் பத்தியும், அதோட பயன் களையும் பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். எனக்கான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுக்க, வள்ளலார் சொன்ன மூலிகைக் குறிப்புகள்தான் ரொம்ப உறுதுணையா இருந்துச்சு.

எங்களுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. இதை வச்சு நாம என்ன செய்யலாம்னு யோசிச்சேன். கீழாநெல்லிக்கு விற்பனை வாய்ப்புகள் அதிகம் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். அதனால ஒரு ஏக்கர்ல அதைச் சாகுபடி செஞ்சேன். போதுமான விளைச்சல் இருந்துச்சு. மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகள்ல உள்ள மூலிகை மருந்து தயாரிக்குற நிறுவனங்கள், சோப்பு தயாரிக்குற நிறுவனங்களோடு ஆன்லைன் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக்கிட்டேன். என்னோட நிலத்துல கீழாநெல்லி உற்பத்தி பண்ணி, அந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வச்சேன். அடுத்த சில நாள்கள்லயே கீழா நெல்லி மட்டுமல்லாம... தூதுவளை, வல்லாரை உட்பட சில முக்கியமான மூலிகைகள் கொடுக்க முடியுமானு அந்த நிறுவனங்கள்ல இருந்து என்கிட்ட கேட்டாங்க. அவங்க கேட்கிற அளவுக்கு என்னால அந்த மூலிகை களை என்னோட நிலத்துல இருந்து உற்பத்தி செஞ்சு கொடுக்க முடியல. அதனால் எங்க பகுதி விவசாயிகளோட இணைஞ்சு செயல்பட முடிவெடுத்தேன்.

ஜூஸ் கடையில் மூலிகைப் பொருள்கள்
ஜூஸ் கடையில் மூலிகைப் பொருள்கள்

2011-ம் வருஷம், `டைம் பவுண்டேஷன்’ங்கிற பெயர்ல, இயற்கை விவசாயம் சார்ந்த சேவை மையம் ஆரம்பிச்சேன். ஏற்கெனவே நல்லா அறிமுகமான சில விவசாயிகளை நேரடியாகப் போய்ச் சந்திச்சு, இயற்கை முறையில் மூலிகைகள் சாகுபடி செய்யும் தொழில் நுட்பத்தை சொல்லிக் கொடுத்தேன். மூலிகைகள் உற்பத்தி செஞ்சு கொடுத்தா, நானே நல்ல விலைக்குக் கொள்முதல் செஞ்சுக்குறேன்னு உத்தரவாதம் கொடுத்தேன்.

ஆரம்பத்துல அந்த விவசாயிகள் ஆர்வம் காட்டவே இல்லை. மூலிகைகளுக்கு உரிய விலை கிடைக்குமாங்கிற பயம் அவங்ககிட்ட இருந்துச்சு. அதுக்கப்புறம், ரெண்டு விவசாயிங்க மட்டும் கொஞ்சம் தயக்கத் தோடவே மூலிகைகள் பயிரிட முன்வந்தாங்க. மூலிகை நாற்றுகளை நானே என்னோட நிலத்துல தயார் செஞ்சு விவசாயிகளுக்குக் கொடுத்தேன். தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு, சொட்டுநீர்ப் பாசனம், இயற்கை இடுபொருள்கள், பசுமைக் குடில் போன்ற சில உதவிகளும் கிடைச்சிச்சு. கீழாநெல்லி, வல்லாரை, தூதுவளை, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளின்னு பல வகை மூலிகைகளையும் உற்பத்தி செஞ்சு, அந்த கம்பெனிகளுக்கு அனுப்பினேன். விவசாயிகள் உற்பத்தி செஞ்சுக் கொடுத்த மூலிகைகளுக்கு லாபகரமான விலை கிடைச்சதாலயும், உரிய நேரத்துல பணம் பட்டுவாடா செஞ்சதுனாலயும், எங்க பகுதியில உள்ள நிறைய விவசாயிகள் மூலிகை சாகுபடியில ஆர்வம் காட்ட ஆரம்பிச்சாங்க. தொழில் ரொம்ப நல்லாவே போயிக்கிட்டு இருந்துச்சு.

ஆனா, அதுக்குப் பிறகு, சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வந்துச்சு. நான் அனுப்புற மூலிகைகளுக்கு, அந்த நிறுவனங்கள்ல இருந்து உரிய நேரத்துல பணம் வந்து சேரல. காலதாமதம் ஆகிக்கிட்டே இருந்துச்சு. ஆனா, அந்தக் காரணத்தை விவசாயிகள்கிட்ட என்னால சொல்ல முடியல. என்மேல அவங்க வச்சிருக்குற நம்பிக்கையும் மதிப்பும் பாதிக்கப்படும்ங்கறதுனால, விவசாயிங்க கொடுத்த மூலிகைகளுக்கு உரிய நேரத்துல பணத்தைக் கொடுத்துடுவேன்.

கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி

என்கிட்ட மூலிகைகள் வாங்கிக்கிட்டு இருந்த அந்த நிறுவனங்கள், அதுக்கான விலையைப் படிப்படியா குறைக்க ஆரம் பிச்சாங்க. 8 கிலோ வல்லாரை இலையை, வெயில்ல காய வச்சு உலர்த்தினோம்னா, 1 கிலோ உலர் வல்லாரை கிடைக்கும். ஒரு கிலோ உலர் வல்லாரைக்கு 200 ரூபாய் விலை கொடுத்துக்கிட்டு இருந்த அந்த நிறுவனங்கள் விலையைக் குறைச்சுக் கொடுக்கிறதுக்காகவே, தரம் சரியில்லைனு பொய்யான காரணங்களைச் சொல்ல ஆரம்பிச்சாங்க. இலை அதிகமா காய்ஞ்சு போயிருச்சு... சரியா காயவே இல்லைன்னு மாத்தி, மாத்தி பேசினாங்க. ஒரு கிலோ உலர் வல்லாரைக்கு 100 ரூபாய் கிடைக்குறதே சிரமம் என்கிற நிலைமை வந்துடுச்சு.

அப்பதான் ஒரு தீர்க்கமான முடிவெடுத் தேன். இனிமே நிறுவனங்களுக்கு மூலிகைகள் விநியோகம் செய்யக் கூடாது. மூலிகைகள் சார்ந்த மதிப்புக்கூட்டல் தொழில்ல இறங்கலாம்னு முடிவெடுத்து, அதுக்கான பயிற்சிகள்ல கலந்துகிட்டேன். தஞ்சாவூர்ல உள்ள உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பக் கழகம், கோயம்புத்தூர்ல உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல பணியாற்றக் கூடிய வல்லுநர்கள் எனக்கு உறுதுணையா இருந்தாங்க. வல்லாரை, தூதுவளை, துளசி உட்பட இன்னும் பல வகையான மூலிகை களையும் பவுடரா மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். என்னோட தொழிலை அடுத்தகட்டத்துக்கு விரிவுபடுத்த... வள்ளலார் பக்தரான சிலட்டூர் ஞானப்பிரகாசம் ஐயாவோட வழிகாட்டுதல் பேருதவியா அமைஞ்சது. மூலிகைகள்ல ஜூஸ், சூப், டீ தயார் பண்ணி விற்பனை செஞ்சா, மக்கள் ரொம்ப ஆர்வமா வாங்கிக் குடிப்பாங்கனு அவர்தான் எனக்கு யோசனை சொன்னாரு. 2016-ம் வருஷம், ‘இயற்கை ஜூஸ் ஸ்டால்’ என்ற பெயர்ல இந்தக் கடையை ஆரம்பிச்சேன்.

மூலிகைகள்ல நான் தயார் செஞ்சு விற்பனை செஞ்ச ஜூஸ், சூப், தேநீர் வகைகளுக்கு மக்கள் மத்தியில படிப்படியா வரவேற்பு அதிகரிக்க ஆரம்பிச்சது” என்று சொன்னவர், தற்போது தன்னுடைய கடையில் விற்பனை செய்யப்படும் மூலிகைகள் மதிப்புக்கூட்டல் பொருள்களின் பட்டியலை விவரித்தார்.

‘‘இப்ப என்னோட கடையில வல்லாரை ஜூஸ், தூதுளை ஜூஸ், புதினா ஜூஸ், துளசி டீ, மணத்தக்காளிக் கீரை சூப், வெள்ளரி ஜூஸ், கரிசலாங்கண்ணி ஜூஸ், பொன்னாங் கண்ணி ஜூஸ், வெண் பூசணி ஜூஸ், மஞ்சள் கரிசலாங்கண்ணி ஜூஸ், துளசி டீ, தேங்காய் பால் காபி, தூதுவளை டீ பவுடர், துளசி டீ பவுடர், தூதுவளை ரசப்பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பவுடர், கறிவேப்பிலை சாதப்பொடி, 5 வகையான மூலிகைகள் அடங்கிய பல்பொடி, வல்லாரை சூப், தூதுவளை சூப், சுண்டக்காய் வத்தல், மிதுக்கங்காய் வத்தல், பிரண்டை வத்தல் எல்லாம் தயார் செஞ்சு விற்பனை செஞ்சிகிட்டு இருக்கேன்’’ என்று சொன்னவர், இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்த விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஜூஸ் கடையில் மூலிகைப் பொருள்கள்
ஜூஸ் கடையில் மூலிகைப் பொருள்கள்

‘‘மூலிகை ஜூஸ் 250 மி.லி 30 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதுல கருப்பட்டி, பால் உள்ளிட்ட பொருள்கள் சேர்ப்போம். மூலிகை டீ 100 மி.லி 10 ரூபாய்னு விற்பனை செய்றேன். மூலிகை டீ-யில இஞ்சி, ஏலக்காய், வெல்லம், கருப்பட்டி சேர்ப்போம். தினமும் குறைந்தபட்சம் 3,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லாச் செலவுகளும் போக 1,500 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு மாசத்துக்கு 45,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்கள், இலக்கியக் கூட்டம் மாதிரியான பொது நிகழ்ச்சிகளுக்கு மூலிகை ஜூஸ், மூலிகை டீ கேட்டு நிறைய ஆர்டர்கள் வருது. இதுமூலமா, ஒரு மாசத்துக்கு 20,000 ரூபாய் லாபம் கிடைக்குது. தூதுவளை பவுடர், துளசி பவுடர், தூதுவளை ரசப்பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பவுடர், கறிவேப்பிலை சாதப்பொடி உள்ளிட்ட பொருள்கள் விற்பனை மூலம் ஒரு மாசத்துக்கு 20,000 ரூபாய் லாபம் கிடைக்குது. ஆக, மூலிகை மதிப்புக்கூட்டல் தொழில் மூலம் ஒரு மாசத்துக்கு 85,000 ரூபாய் லாபம் பார்த்துக் கிட்டு இருக்கேன்’’ எனச் சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, சசிகுமார்,

செல்போன்: 63858 86057

மூலிகைகளுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை...

அறந்தாங்கியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரரும் விவசாயியுமான மருதையன், “என்கிட்ட 2 ஏக்கர் நிலம் இருக்கு. கடந்த 3 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். தென்னை, எலுமிச்சை, மா, பலா உட்பட பலவிதமான பயிர்களைப் பயிரிட்டிருக்கேன். இதுல ஊடுபயிரா மிதுக்கங்காய் சாகுபடி செய்யச் சொல்லி, அதுக்கான நாற்றுகளை சசிகுமார் கொடுத்தார். 20 சென்ட் பரப்புல மிதுக்கங்காய் சாகுபடி செஞ்சேன். முதல் அறுவடையிலயே 100 கிலோ காய்கள் மகசூல் கிடைச்சது. சசிகுமாரே அதைக் கொள்முதல் பண்ணிக்கிட்டார். ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வீதம் விலை கிடைச்சது. இதுக்கு எந்த ஒரு பராமரிப்பும் தேவைப்படலை. அடியுரமா, குப்பை எரு வச்சது, தண்ணீர் கொடுத்தது தவிர, வேற எதுவும் செய்யல’’ எனத் தெரிவித்தார்.

சிட்டங்காட்டைச் சேர்ந்த விவசாயி, விஜயேந்திரன் இயற்கை விவசாயம் செய்வதோடு, மூலிகைகளை அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார். தூதுவளை, வல்லாரை, மஞ்சள் கரிசலாங்கண்ணி, சுண்டக்காய் உள்ளிட்ட மூலிகைகளைப் பயிர் செய்திருக்கிறார். விஜயேந்திரனிடம் பேசினோம், “ரெண்டு ஏக்கர்ல இயற்கை முறையில தென்னை சாகுபடி செஞ்சுகிட்டுருக்கேன். சசிகுமார் கேட்டதால, தென்னையில ஊடுபயிராக, சுமார் ஒண்ணேகால் ஏக்கர் பரப்புல... மஞ்சள் கரிசலாங்கண்ணி, தூதுவளை உள்ளிட்ட மூலிகைகள் சாகுபடி செஞ்சுகிட்டு இருக்கேன். மஞ்சள் கரிசலாங்கண்ணி முதல் எடுப்புல 100 கிலோ மகசூல் கிடைச்சது. ஒரு கிலோவுக்கு 70 - 100 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. தூதுவளை இன்னும் கொஞ்ச நாள்ல அறுவடைக்கு வந்திடும். மூலிகைகளைப் பொறுத்தவரைக்கும் அதிக பராமரிப்புத் தேவையில்லை. அடியுரமா மாட்டு எரு போட்டுட்டு, பயிர் வளர்ச்சி ஊக்கியாக, மாசம் ஒரு தடவை பாசனநீர்ல ஜீவாமிர்தம் கொடுத்துக்கிட்டு இருக்கேன். அவ்வளவுதான் வேற எந்தப் பராமரிப்பும் இல்லை” என்கிறார்.

வல்லாரை
வல்லாரை

வருமானத்துக்கு வல்லாரை பவுடர்

‘‘ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வீதம் விலை கொடுத்து, வல்லாரை இலை விவசாயிகள்கிட்ட இருந்து கொள்முதல் செய்றேன். 8 கிலோ இலையை சோலார் டிரையர்ல போட்டு உலர்த்தினோம்னா, 1 கிலோ உலர் வல்லாரை கிடைக்குது. சந்தையில இதோட விலை மதிப்பு 250 ரூபாய். 1 கிலோ உலர் வல்லாரையை பவுடராக மதிப்புக்கூட்டும்போது, 900 கிராம் வல்லாரை பவுடர் கிடைக்கும். 50 கிராம், 50 ரூபாய்னு விற்பனை செய்றோம். 900 கிராம் வல்லாரை பவுடருக்கு, 900 ரூபாய் கிடைக்கும். இதுல எல்லாச் செலவுகளும் போக, 400 - 500 ரூபாய் லாபம் கிடைக்கும். நல்லா பசுமையா உள்ள 1 கிலோ வல்லாரை இலையைப் பயன்படுத்தி 2 லிட்டர் ஜூஸ் போடலாம். என்னோட கடையில வல்லாரை ஜூஸ்தான் அதிகமா விற்பனையாகுது’’ என்கிறார் சசிகுமார்.

ஊர்தோறும் இயற்கை ஜூஸ்!

‘‘மூலிகைகள் மதிப்புக்கூட்டல் தொழில் மூலம் நான் மட்டுமே, வருமானம் பார்க் கணுங்கற எண்ணம் எனக்குக் கிடையாது. மூலிகை சார்ந்த உணவுப் பொருள்கள் மக்கள் மத்தியில பரவலாகணும். மூலிகை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளோட எண்ணிக்கையும் அதிகமாகணும். இதுதான் என்னோட நோக்கம். அதனால, இதுல ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு, மூலிகை மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்.

அடுத்த சில வருஷங்கள்ல தமிழகம் முழுவதும் ஒவ்வோர் ஊர்லயும் இயற்கை ஜூஸ் ஸ்டால் அமைக்கணும். மறந்து போன மூலிகைகளையும், நஞ்சில்லா உணவுப் பொருள்களையும் மறுபடியும் நம்ம மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்க்கணும்ங்கிறதுதான், என்னோட நீண்ட நாள் ஆசை. அதுக்கான முயற்சியிலயும் ஈடுபட்டுக்கிட்டு இருக்கேன்’’ என்கிறார் சசிகுமார்.

மருத்துவப் பயன்கள்

“மூலிகைகள்ல நிறைஞ்சிருக்குற மருத்துவக் குணங்கள் பத்தி சித்தர் பாடல்கள்ல நிறைய சொல்லப்பட்டுருக்கு. வல்லாரை, உடலுக்குக் குளிர்ச்சி கொடுக்கும், ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். வாய்ப்புண், தோல் நோய்களைப் போக்கும். புதினா... வயிற்று வலி, அஜீரணக் கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, தொண்டைகரகரப்பு, வாயுக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளைப் போக்கக்கூடிய அருமருந்து தூதுவளை. மஞ்சள் கரிசலாங்கண்ணி... ரத்தசோகை, மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும்’’ என மூலிகைகளின் மகத்துவங்களைப் பட்டியல் இட்டுக் கொண்டே போனார் சசிகுமார்.