சகாயம் ஐஏஎஸ்ஸை தலைமையாக வைத்து செயல்பட்டுவரும் மக்கள் பாதை இயக்கம் சார்பில், மாவட்டத்துக்கு ஒரு விவசாயியை இயற்கை விவசாயியாக மாற்றும் முயற்சி மேற்கொண்டிருப்பது, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. 'கலப்பைத் திட்டம்' என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் அந்தத் திட்டம், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் விவசாயிக்குச் சொந்தமான வயலில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

சகாயம் ஐஏஎஸ்ஸை தலைமையாக வைத்து செயல்படும் மக்கள் பாதை இயக்கம், தமிழகம் முழுக்க உள்ள விவசாயிகளை, இயற்கை விவசாயிகளாகவும் இயற்கைமீது ஆர்வம் கொண்டவர்களாகவும் மாற்ற பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது. 'கலப்பைத் திட்டம்' என்ற பெயரில், அதற்காக 20 திட்டங்களைச் செயல்படுத்த இருக்கிறார்கள். அதில் ஒரு திட்டமாக, மாவட்டத்துக்கு ஒரு விவசாயியை 'மருந்தில்லா விவசாயம்' என்ற பெயரில் இயற்கை விவசாயியாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, அந்தத் திட்டம் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் முதலைப்பட்டியில் உள்ள அன்னலட்சுமி என்ற பெண்ணின் ஒன்றேமுக்கால் ஏக்கர் நிலத்தில்தான், அந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மக்கள் பாதை இயக்கத்தின் நீதி திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கவேலிடம் பேசினோம். "சகாயம் சார், இயற்கையையும் இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்க, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த எங்களைப் பணித்துள்ளார். அதன்படி, 'மருந்தில்லா விவசாயம்' என்ற திட்டத்தை முதன்முதலில் கரூர் மாவட்டத்தில் உள்ள, அன்னலட்சுமி என்ற பெண் விவசாயியின் வயலில் செயல்படுத்தியுள்ளோம். அவரின் ஒன்றேமுக்கால் ஏக்கர் நிலத்தில், இந்தத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். அவரின் வயலில் நடவு செய்ய நாங்களே 20 கிலோ பூங்கார் என்ற நமது பாரம்பர்ய ரக நெல் விதையைக் கொடுத்தோம்.
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் முறையை அன்னலட்சுமிக்கு, வேலூர் மாவட்ட மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடவு நடப்பட்டது. அதற்கு உரமாக, மாடுகள் போடும் பச்சை சாணத்தை வயலுக்குள் போகும் நீரில் கரைக்கச் சொன்னோம். வயலில் பூச்சித் தாக்குதல் வந்தபோது, இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றின் சாற்றை வயல் முழுக்க தெளிக்கச் சொன்னோம். அதனால், வயலில் பூங்கார் ரக நெல் பயிர் நல்லா வளர்ந்திருக்கு.

அறுவடை ஆனதும், அதை நாங்களே கூடுதல் விலைக்கு விற்பனை செய்து, பெண் விவசாயி அன்னலட்சுமியிடம் தர இருக்கிறோம். தவிர, இதன் மூலமாக விவசாயி அன்னலட்சுமிக்கு, பெரிய மார்க்கெட்டிங் விங் எனப்படும் இயற்கை உற்பத்தி மற்றும் நுகர்வு விவசாயிகளின் தொடர்பு கிடைக்கும். இப்படியே தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு விவசாயியை இயற்கை விவசாயியாக மாற்றி, அதன்மூலமாக பல விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு திருப்ப இருக்கிறோம்.
இன்னைக்கு சிறு வயதிலேயே பலருக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கும், குழந்தைப் பேறு பலருக்கு தள்ளிப்போவதற்கும் காரணம், நஞ்சான உணவை உண்பதுதான். அதைத் தடுத்து, தமிழக விவசாயிகளை இயற்கை விவசாயிகளாக மாற்றி, நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்யவைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். சகாயம் சார் விரும்பும் அந்தக் கனவு உணவை, ஒவ்வொரு விவசாயியும் உற்பத்தி செய்பவராக மாறும் வரைக்கும், எங்களது இந்த முயற்சி விடாது தொடரும்" என்றார்.
அடுத்து பேசிய, விவசாயி அன்னலட்சுமி, "நான், எங்க நிலத்துல இதுவரை செயற்கை விவசாயம்தான் செய்துவந்தேன். அப்பதான், மக்கள் பாதை அமைப்பில் இருந்து வந்து, என்னை இயற்கை விவசாயியாக மாற்ற முயற்சி பண்ணினாங்க. 'உலக மக்களுக்கே சோற்றை உற்பத்தி பண்ணும் விவசாயி, இப்போது விஷத்தைக் கலந்து கொடுக்கிறான்'னு அவங்க சொன்னப்ப, எனக்குள்ள சுரீர்னு உறைச்சுது.

உடனே சம்மதிச்சுட்டேன். இப்போ என் வயல்ல நமது பாட்டன் பூட்டன் விளைவித்த பூங்கார்ங்கிற பாரம்பர்ய நெல்லு பயிர் நல்லா விளைஞ்சுருக்கு. இனி, நான் இயற்கை விவசாயம் மட்டுமே செய்வேன்" என்றார், உணர்ச்சிப் பெருக்கோடு!