
தமிழகத்தில் சந்தன மரங்களை வளர்ப்பதற்குத் தடை 2002-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுவிட்டது. அதனால் தாராளமாக வீட்டில், தோட்டத்தில் வளர்க்கலாம்.
சந்தன மரத்தின் மதிப்பு காரணமாக மக்களுக்கு அதன் மேல் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு என்றாலும், சந்தன மரத்தை வீட்டிலும் தோட்டத்திலும் வளர்க்கலாமா, வளர்த்தால் வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா, வளர்த்த மரத்தை விற்க முடியுமா போன்ற பல சந்தேகங்கள் உள்ளன. பெங்களூரில் உள்ள மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி சுந்தர்ராஜன், அதுகுறித்து அளித்த தகவல்கள் இங்கே...

தமிழகத்தில் சந்தன மரங்களை வளர்ப்பதற்குத் தடை 2002-ம் ஆண்டிலேயே நீக்கப்பட்டுவிட்டது. அதனால் தாராளமாக வீட்டில், தோட்டத்தில் வளர்க்கலாம். அதற்கு அரசு மற்றும் வனத்துறையிடம் முன் அனுமதி வாங்க வேண்டியதில்லை. ஆனால் சந்தன மரத்தை நட்ட பிறகு கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்து, அவரிடம் உள்ள பதிவேடான அடங்கலில் சேர்த்துவிட வேண்டும். அப்போதுதான் அந்த மரத்தை வெட்டும்போது வனத்துறையிடம் அனுமதி வாங்க இயலும். ஏனென்றால், சந்தன மரத்தை வெட்டும் முன் வனத்துறையிடம் அனுமதி வாங்குவது கட்டாயம்.
எங்கே வளரும்? எப்படி வளர்க்க வேண்டும்?
சந்தன மரம் களிமண் தவிர அனைத்து வகையான மண்ணிலும் வளரும். குறிப்பாக செம்மண் அல்லது கற்கள் நிறைந்த செம்மண்ணில் நன்றாக வளரும். சந்தன மரம் வளர அந்த நிலம் அதிகம் தண்ணீர் தேங்காததாக இருக்க வேண்டும். இரண்டு, மூன்று அடி ஆழம் உள்ள குழியில் சந்தன நாற்றை நட்டு, தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வந்தாலே மரம் நன்றாக வளர்ந்துவிடும். எந்தவொரு ரசாயன உரமும் தேவையில்லை. சுமார் 30 ஆண்டுகள் வளர்ந்த ஒரு சந்தன மரம், அது வளர்ந்த மண்ணின் தன்மையைப் பொறுத்து 70 - 100 கிலோ எடை வரும். 40 - 50 அடி வரை வளரும்.
சந்தன நாற்று எங்கே கிடைக்கும்?
சந்தன நாற்றுகள் மாவட்ட வனத்துறை அலுவலகங்களிலேயே கிடைக்கும். இதன் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கில் வனத்துறையினர் குறைந்த விலைக்கு இந்த நாற்றுகளை வழங்கிவருகின்றனர். மேலும் ஈஷா நர்சரிகளில் இதன் நாற்றுகள் குறைந்த விலைக்குக் கிடைகின்றன.

சந்தன மரம் விவசாயம் பற்றி..?
சந்தன மரங்களை விவசாயம் செய்ய விரும்பினால், 3 மீட்டர் இடைவெளியில் சிறு குழிகளை வெட்டி ஒரு ஏக்கருக்கு 400 மரங்களை வளர்க்க முடியும். இந்த மரம் தென்னை, சவுக்கு, குமிழ், மலைவேம்பு, மகோகனி போன்ற மற்ற மரங்களுடனும் வளரும். அதனால் ஊடுபயிராகக்கூட வளர்க்கலாம்
விற்பனை..?
உலக அளவில் அதிக விலை மதிப்பு கொண்ட மர வகைகளில் சந்தன மரம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. சந்தன மரத்தை அரசிடம் மட்டுமே விற்க முடியும். கர்நாடக மாநிலத்தில் இன்றைய சந்தை மதிப்பில் ஒரு கிலோ சந்தன மரக்கட்டை ரூ. 12,500. சுமார் 30 ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம் மண்ணின் தன்மையைப் பொறுத்து குறைந்தபட்சம் 70 கிலோ எடையுடன் வளர்ந்திருந்தால் ஒரு மரத்துக்கு எட்டு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். சந்தன மரங்களைப் பெருமளவில் வளர்க்கும்போது, 30 ஆண்டுகளுக்குப் பின்னர் கோடிகளில் வருமானத்தை ஈட்ட முடியும்.
எனவே, தயக்கமே வேண்டாம். நீங்கள் உங்கள் வீட்டில், தோட்டத்தில் தாராளமாக சந்தன நாற்றை நடலாம்!