
கண்டுபிடிப்பு
பூச்சிகள் எந்த அளவுக்குப் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்து கிறதோ, அதைவிட இரண்டு மடங்கு சேதத்தைப் பறவைகளும் விலங்குகளும் ஏற்படுத்துகின்றன. இதில், மானாவாரி விவசாயத்தைப் பொறுத்த வரையில் கம்பு, சோளக்கதிர்களில் பறவை களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதைக் கட்டுப்படுத்த விவசாயிகள் பல முறைகளைக் கையாண்டும் பாதிப்புகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்புப் பள்ளி மாணவர் அஜித்குமார், காற்றில் சுழலும் காற்றாடி இறக்கை ஓசையின் மூலம் பறவைகளை விரட்டும் எளிய கருவியை வடிவமைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது கே.துரைச்சாமிபுரம். ஊர் எல்லையிலேயே இருக்கிறது மாணவர் அஜித்குமாரின் தந்தை சிவகாமுவின் தோட்டம். காற்றாலை றெக்கையால் எழுப்பப்பட்ட ஒலி நம்மை வரவேற்றது. தோட்டத்தையொட்டி நடந்தபடியே பேசத் தொடங்கினார் அஜித்குமார், ‘‘நாகலாபுரத்துல உள்ள சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளியில 12-ம் வகுப்பு, முதல் குரூப்ல (கணக்கு உயிரியல்) படிச்சுட்டு வர்றேன். பாரம்பர்யமாவே நாங்க விவசாயக் குடும்பம்தான். தாத்தா, அப்பா எல்லாருமே மானாவாரி விவசாயம்தான் செய்துட்டு இருந்தாங்க. எங்க ஊரு சுத்து வட்டாரத்துல கம்பு, சோளம், உளுந்து, பாசிப் பயறு, மிளகாய், மக்காச்சோளம், இருங்குச் சோளம், எள், பருத்தி, சூரியகாந்தி பயிர்களைத்தான் பெரும்பாலும் விளைய வெப்பாங்க. கரிசல் மண்ணு நல்ல வளமா இருக்குறதுனால பெரும்பாலும் ஆட்டுக்கிடை, தொழுவுரத்தை மட்டும்தான் அடியுரமாப் போட்டு விவசாயம் செய்றாங்க.
இந்த வருஷம் எங்க நாலு ஏக்கர் காட்டுல கம்பு, சோளம், மக்காச்சோளத்தை விதைச்சுருக்கோம். மழையும் அதிகமாப் பெய்ஞ்சதுனால நல்லாவே வளர்ந்திருக்கு. என்னதான் விளைஞ்சு வந்தாலும், குருவிகள், மயில்களின் தாக்குதலால, கிடைக்குற மகசூல்ல ரொம்பவே நஷ்டமாயிடுது. கம்பு, சோளம் விதைச்சிருக்குற வயல்ல பால் பிடிச்ச பருவத்துல இருந்து அறுவடை வரைக்கும் படைக்குருவிகள் கூட்டம் கூட்டமா வந்து உட்கார்ந்து கொத்தித் தின்னுட்டுப் போயிடும். அந்த நாள்கள்ல தினத்துக்கும் (தினமும்) காலையிலயும், சாயங்காலமும் காட்டுக்கு வந்து சாப்பாடு சாப்பிடுற சில்வர் தட்டு மேல கரண்டியால தட்டுவாங்க. அந்தச் சத்தத்துல படைக் குருவிகள் ஓடிப் போகும். அதிகளவு நிலத்துல விதைச்சிருக்கிற விவசாயிங்க வெடி வெடிப்பாங்க.
எங்க காட்டுல நானும் அப்பாவோடு சேர்ந்து தட்டை வெச்சு தட்டி குருவிகளை விரட்டியிருக்கேன். போன வருஷமெல்லாம் தட்டை வெச்சு தட்டுனதுல பயங்கரமான கை வலி வந்துடுச்சு. இந்த வருஷம் கம்பு, சோளத்தை விதைச்சப்பவே ‘குருவியை விரட்டுறதுக்கு ஒரு வழி பண்ணணும்’னு யோசிச்சேன். காற்றாலைகளில் றெக்கைகள் சுத்தச்சுத்த மின்சாரம் உற்பத்தி செய்யுறதைப் பத்தி அறிவியல்ல படிச்சிருக்கேன். அதே றெக்கைகள் சுழலச் சுழல ‘சத்தம் எழுப்புறமாதிரி ஏதாவது செய்ய முடியுமா’ன்னு யோசிச்சேன். பழைய நோட்டை எடுத்து அதுல எப்படி வடிவமைக் கலாம்னு 15 மாடல் படம் வரைஞ்சு பார்த்து, ஒரு வழியா வடிவமைச்சேன்.
75 ரூபாய் போதும்
ஃபேன் றெக்கை, வெட் கிரைண்டர் கைப்பிடி, போல்ட், தகரத்துண்டு, இரும்புக்கம்பி என, இந்தக் கருவி தயாரிக்கத் தேவையான எல்லாப் பொருளும் எங்க வீட்லயே இருந்துச்சு. அதனால எந்தச் செலவுமில்ல. கடையில வாங்கிச் செய்தாலும் அதிகபட்சம் 75 ரூபாய்தான் ஆகும். இதே கருவியில் பேரிங் பொருத்தினா, காற்று அதிகம் இல்லாத நேரங்களிலும் சுழலும். எங்க காட்டைத் தாண்டிப் போறவங்க எல்லாரும் இந்த “டப்...டப்...” சத்தத்தைக் கேட்டு ஒரு நிமிஷம் நின்னு, என்னன்னு உத்துப் பார்த்துட்டுதான் போறாங்க. பக்கத்து காட்டுக்காரங்களும், ஊருல உள்ள மத்த விவசாயிகளும் ‘இதே மாதிரி காத்தாடிக் கருவியைச் செஞ்சுத் தாப்பா’ன்னு கேக்குறாங்க. இந்தக் கருவியை ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தாலே போதும். யார் வேணும்னாலும் செஞ்சுக்க முடியும்” என்றவர் நிறைவாக,
“மானாவாரி விவசாயத்துல அடுத்த சவால், களை எடுக்குறது. அந்தச் சவாலைச் சமாளிக்குறதுக்காக அடுத்ததா, சோலார் மூலமா தானியங்கி களை எடுக்குற கருவியை வடிமைக்குற திட்டத்துல இருக்கேன்” என்றார்.
பறவைகளை விரட்ட எளிய கருவியைக் கண்டுபிடித்த மாணவர் அஜித்குமாருக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடை பெற்றோம்.

இப்படித்தான் கருவி வடிவமைப்பு!
பழைய ஃபேன் றெக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 20 செ.மீ உயரமுள்ள இரண்டு இன்ச் பி.வி.சி குழாய் நடுவில் இரண்டு பக்கமும் துளையிட்டுக்கொள்ள வேண்டும். அந்தத் துளைக்குள் 15 செ.மீ இரும்புக் கம்பியைப் பொருத்தி, அதில் ஒரு முனையில் ஃபேன் றெக்கையைப் பொருத்த வேண்டும். மறுமுனையின் குறுக்கே 5 செ.மீ நீளமுள்ள சிறிய இரும்புக்கம்பியைப் பொருத்திக்கொள்ள வேண்டும். அதன் இரு முனைகளிலும் 5 செ.மீ நீளத்தில் கொடி கட்டப் பயன்படும் இரும்புக் கம்பியால் சின்னச் சின்ன வளையங்களாகக் கோர்த்து அதன் முனைகளில் அரை இன்ச் இரும்பு போல்ட்டை பொருத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், அதன் மட்டத்துக்கு 10 செ.மீ நீளம், 20 செ.மீ அகலத்தில் தகரத்துண்டைப் படுக்கைவாட்டில் (கிடை மட்டமாக) பொருத்திக்கொள்ள வேண்டும்.

பி.வி.சி குழாயின் அடிப்பகுதியில் வெட் கிரைண்டரில் மாவு அரைக்கப் பயன்படும் கல்லின் கைப்பிடியைச் சொருகி வைக்கலாம். இதன் வழியே மரக்கட்டையைச் செலுத்தி வேறொரு உயரமான கம்பு அல்லது இரும்புக் கம்புடன் கட்டி, தேவைப்படும் உயரத்தில் நட்டு வைக்கலாம். வீசும் காற்றில் முன்பகுதியில் உள்ள றெக்கை வேகமாகச் சுழலும். றெக்கை, சுழலச் சுழல பின்முனைப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு போல்ட்டுகள் தகரத்துண்டில் பட்டு டப்... டப்... டப்… என ஓசையை எழுப்பும். காற்றின் வேகத்தில் ஓசையின் அளவு அதிகரிக்கும். ஒரு ஏக்கருக்கு 25 சென்ட் இடைவெளியில் நான்கு இடங்களில் வைக்கலாம். நான்கு கருவிகளிலும் ஒரே நேரத்தில் ஓசை எதிரொலிப்பதால், இதைக் கேட்டுப் பறவைகள் அந்தப் பக்கமே வருவதில்லை.