மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

பயோ சார், சோர்ஸ், மரத்தூள்; அமெரிக்காவின் இயற்கை விவசாய நுட்பம்! நேரில் பார்வையிட்ட தமிழக விஞ்ஞானி!

அமெரிக்க பயணத்தில் உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அமெரிக்க பயணத்தில் உதயகுமார்

பக்கத்து வயல்

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் சார்பில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் விஞ்ஞானி முனைவர் அ.உதயகுமார். இவர் இயற்கை விவசாயத்தின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வாரோடு நெருங்கிப் பழகியவர்.

தமிழ்நாட்டில் உள்ள இயற்கை விவசாயிகளில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் இ.எம் என அழைக்கப்படும் திறன்மிகு நுண்ணுயிரி திரவத்தை இவர்தான் இங்கு அறிமுகம் செய்தார். விவசாயிகள் தங்களுடைய சுற்றுப்புறங்களில் அதிக செலவில்லாமல் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு, மிகவும் எளிய முறையில் வீரியமிக்க இடுபொருள்கள் தயாரிக்க அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

உதயகுமார்
உதயகுமார்

தற்போது தஞ்சாவூரில் உள்ள பொன்னையா ராமஜெயம் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேளாண் புலம் தலைவராகப் பணியாற்றி வரும் உதயகுமார், சமீபத்தில் அமெரிக்காவுக்கு வேளாண் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது குறித்தும், அங்கு நடைபெறும் பொதுவான வேளாண் செயற்பாடுகள் குறித்தும் இங்கே பகிர்ந்துகொள்கிறார் விஞ்ஞானி உதயகுமார்.

‘‘கடந்த காலங்கள்ல ரஷ்யா, ஹங்கேரி, ஹாலந்து, தாய்லாந்து, ஸ்விட்சர்லாந்து உட்பட இன்னும் பல நாடுகளுக்கு வேளாண் பயணம் போயிருக்கேன். அந்த வகையில, கடந்த 2021-ம் வருஷம் செப்டம்பர் மாசம் அமெரிக்கா போயி, அங்க கிட்டத்தட்ட ஒரு வருஷம் தங்கி இருந்துட்டு இப்பதான் திரும்பி வந்தேன். அங்கவுள்ள மெக்ஸிகோ, ஃபுளோரிடா மாகாணங்களைச் சேர்ந்த கிராமங்கள்ல மக்காச்சோளம் அதிகமா சாகுபடி செய்யப்படுது. அதுக்கு அடுத்து சோயாவும் அங்க அதிகமா பயிர் செய்றாங்க.

அமெரிக்க பயணத்தில் உதயகுமார்
அமெரிக்க பயணத்தில் உதயகுமார்

ரசாயன உரங்களை எந்தளவுக்குக் குறைக்க முடியுமோ, அந்தளவுக்குக் குறைக் கணும்ங்கறதுல அங்கவுள்ள விவசாயிகள் ரொம்பவே ஆர்வம் காட்டுறாங்க. முழுமையா இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளும் அங்க நிறைய பேர் இருக்காங்க. அந்த விவசாயிகளுக்குப் பயன் அளிக்கக்கூடிய வகையில சோர்ஸ் (sorce) என்ற பெயர்ல இயற்கை இடுபொருளை (மைக்ரோ ஆர்கனிசம்) ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு அறிமுகம் செஞ்சிருக்கு. ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர்ல ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) கலந்து தெளிச்சாலே மண்ணு நல்லா வளமாகி, அதிக விளைச்சல் கொடுக்குது. இதோட விலை ஒரு அவுன்ஸ் 1,120 ரூபாய். அதுல எந்த வித ரசாயன கலப்பும் கிடையாது. இயற்கை நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தி அந்த இடுபொருளை தயார் செய்றாங்க.

பயோச்சார்

அரிசோனா, ஃபுளோரிடா மாகாணங் களைச் சேர்ந்த பெரும்பாலான இயற்கை விவசாயிகள், தங்களோட நிலத்தை வளப்படுத்த, அடியுரமா, பயோச்சார் (Biochar) என்ற உயிர் கரிமம் பயன் படுத்துறாங்க. நிலத்துல 40 செ.மீ ஆழத்துல, ஒரு தடவை மட்டும் ஏக்கருக்கு 300 - 600 கிலோ இதை, உரமா கொடுத்துட்டா போதும். 100 வருஷங்களுக்கு மண்ணுல கரிமச்சத்து இருந்துகிட்டே இருக்கும். பயிர்கள் செழிப்பா வளர கரிமச்சத்து ரொம்ப அவசியம். இதனால் ஏற்படக்கூடிய மிக முக்கியமான நன்மை... மண்ணுல ஈரப் பதத்தைச் சேமிச்சு வைக்கும். விவசாயிகள் கொடுக்கக்கூடிய இடுபொருள்கள் மூலம் அவ்வப்போது கிடைக்கக்கூடிய சத்துக்களையும் சேகரிச்சு வைக்கும். நுண்ணுயிரிகள் பெருக்கத்துக்கும் இது துணை செய்யும்.

தக்காளி
தக்காளி


காற்றுக் கலக்காமல் பிரத்யேக முறையில மரக்கட்டைகளையும் விறகுகளையும் எரிச்சு உயிர் கரிமம் தயார் செய்றாங்க. பல விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உயிர் கரிமத்தை தாங்களே தயார் செஞ்சிக்குறாங்க. உயிர் கரிமம் உற்பத்தி மிகப்பெரிய தொழிலா கவும் அங்க நடந்துகிட்டு இருக்கு. அரிசோனா ரொம்ப வறட்சியான பகுதி. அங்க இயற்கை முறையில திராட்சை, உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், சோயா உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள், தங்களோட நிலங்கள்ல அடியுரமா உயிர் கரிமம் பயன்படுத்துறாங்க. ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த விவசாயிகளும் இதை அதிகமா பயன்படுத்துறாங்க.

தோட்டம்
தோட்டம்

சான்றிதழ் அளிக்கும் ஓம்ரி

ஓம்ரி (OMRI- organic material review institute) என்ற பெயர்ல ஒரு நிறுவனம் அங்க செயல்பட்டுக்கிட்டு இருக்கு. வாஷிங்டன் பக்கத்துல ஆரிகன் மாகாணத்துல செயல் படக்கூடிய இந்த நிறுவனம், இயற்கை விவசாய இடுபொருள் களை ஆய்வு செய்து, சான்றிதழ் கொடுக்கும். அந்த நிறுவனத்தோட சான்று பெற்ற இடுபொருள்களை அங்கவுள்ள விவசாயிகள் ரொம்ப நம்பிக்கையோடு வாங்குறாங்க.

இயற்கை விவசாயப் பயிற்சி

அமெரிக்காவுல உள்ள இயற்கை வேளாண் செயற்பாட்டாளர்களும், விஞ்ஞானிகள் சிலரும் சேர்ந்து, சர்வதேச உயிர் கரிம இயக்கம் என்ற பெயர்ல ஓர் அமைப்பு நடத்திக்கிட்டு இருக்காங்க. இயற்கை விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகள்ல ஈடுபட்டு அதை ஆவணப் படுத்துறதோடு மட்டு மல்லாம, அங்கவுள்ள விவசாயி களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சிகளும் அளிக்கிறாங்க.

வீட்டுத்தோட்டம்
வீட்டுத்தோட்டம்

50 சதவிகிதம் இயற்கை விவசாயம்

அமெரிக்காவுல உள்ள விவசாயி கள்ல கிட்டத்தட்ட 50 சதவிகிதம் பேர் இயற்கை விவசாயம் செய்றாங்க. 60 - 70 சதவிகிதம் மக்கள் உணவு விஷயத்துல அதிக விழிப்புணர்வு அடைஞ்சு, இயற்கை விவசாய விளைபொருள்களை தான் வாங்கிச் சாப்பிடுறாங்க. அங்கவுள்ள பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்கள்ல இதுக்குனு தனிப் பிரிவு இருக்கு. இயற்கை விவசாயத்துல விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள் எல்லாமே அங்க கிடைக்கும். ரசாயனத்துல விளைவிக்கப்பட்ட உணவுப் பொருள்களைவிட, இயற்கை விவசாய உணவுப் பொருள்கள் 10 சதவிகிதம்தான் கூடுதல் விலை’’ எனச் சொல்லி முடித்தார் உதயகுமார்.

தொடர்புக்கு,

முனைவர் அ.உதயகுமார்,

செல்போன்: 94425 42915.

மலர்கள்
மலர்கள்

நானும் நம்மாழ்வாரும்!

`இயற்கை விவசாயம்னு பேச்செடுத்தாலே, நம்மாழ்வார் நினைவு எனக்கு வந்துடும். 1992-ம் வருஷம் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்துலதான் நான் அவரை முதல் முறையா சந்திச்சேன். அதுக்கு முன்னாடி அவரைப் பத்தி கேள்விபட்டதுகூட கிடையாது. அந்தச் சந்திப்பு ரொம்ப யதார்த்தமா நடந்துச்சு. அப்ப வேளாண் அறிவியல் நிலையத்துல தொழில்நுட்ப வல்லுநரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இயற்கை விவசாயம் தொடர்பான ஆய்வுகள்லயும் பாரம்பர்ய நெல் ரகங்கள் மேலயும் எனக்கு ஈடுபாடு அதிகம். காந்திகிராம பல்கலைக்கழகத்தோட காந்திய சிந்தனை துறை இயக்குநராக இருந்த கருணாகரன், இயற்கை விவசாயம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தார். அதுக்கு என்னையும் கூப்பிட்டுருந்தார். அந்தக் கூட்டத்துல பல பேர் பேசினாங்க.

கத்திரிக்காய்கள்
கத்திரிக்காய்கள்

ஆனா, அதுல ஒருத்தரோட பேச்சு மட்டும் என்னை ரொம்ப ஈர்த்துச்சு. அவர்தான் நம்மாழ்வார். அவர்கிட்ட நானே போயி பேச்சுக் கொடுத்தேன். பாரம்பர்ய நெல் ரகங்களோட சிறப்புகள், பூச்சி, நோய்களை எதிர்கொள்ளக்கூடியதற்கான விஞ்ஞான பூர்வமான காரணங்கள் பத்தி அவர்கிட்ட சொன்னேன். என்னை அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சு. அந்தக் கூட்டத்துலயே என்னைப் பத்தி நம்மாழ்வார் பாராட்டி பேசினார். நான் சேகரிச்சு வச்சிருந்த நாட்டு ஆமணக்கு விதைகள், மலைப்பிரதேசத்துல விளையக்கூடிய நாட்டு ரகக் காய்கறி விதைகளை அவர்கிட்ட கொடுத்தேன். அதுக்குப் பிறகு, அவரோட அழைப்பை ஏற்று புதுக்கோட்டையில உள்ள கொழிஞ்சி பண்ணைக்குப் பல முறை போயிருக்கேன். அங்க தன்னோட செயல்பாடுகள் பத்தி என்கிட்ட காட்டி, அது சம்பந்தமா நிறைய பேசியிருக்கார்.

இயற்கை விவசாயக் கையேடு தயார் செய்ற துக்காக அவர் அமைச்ச குழுவுல என்னையும் இடம்பெறச் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், வல்லத்துல ஒரு தொண்டு நிறுவனத்துல அவர் வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்ப, இயற்கை விவசாயப் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செஞ்சு, அதுக்கு என்னையும் அழைச்சிருந்தார். அதுக்கு முன்னாடி தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அறிமுகம் ஆகாமல் இருந்த ‘இ.எம்’னு சொல்லப்படுற திறன்மிகு நுண்ணுயிரி திறவத்தை அங்கதான் முதல் முறையா அறிமுகம் செஞ்சேன்.

அமெரிக்க பயணத்தில்
அமெரிக்க பயணத்தில்

கொடைக்கானல் பகுதியில நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து நிலம் வாங்கி, இயற்கை விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டோம். அதுக்காக நாங்க ரெண்டு பேரும் பல இடங்களுக்கும் தேடி அலைஞ்சோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த மாதிரி நிலம் அமையவே இல்லை. பணி நிமித்தம் காரணமா சில வருஷங்கள் நாங்க ரெண்டு பேரும் சந்திக்காமலேகூட இருந்திருக்கோம். அந்த மாதிரியான ஒரு காலகட்டத்துலதான், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டுல நம்மாழ்வார் தலைமையில இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு கூட்டம் நடக்குறதா கேள்விப்பட்டு ரொம்ப சந்தோஷமாயிட்டேன். என்னோட சொந்த ஊரான தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள்தான் அந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. நம்ம ஊரு மக்களுக்குக்கூட, இயற்கை விவசாயத்துல ஈடுபாடு வந்துருக்கு... அதுவும் நம்மாழ்வாரை வச்சு நிகழ்ச்சி நடத்துறாங்கனு ரொம்ப சந்தோஷமாகி, அதுல கலந்துக்குறதுக்காகத் திண்டுக்கல்ல இருந்து கிளம்பிப் போனேன். அந்த நிகழ்ச்சியில பார்வையாளர் வரிசையில அமர்ந்திருந்தேன். மேடையில நின்னு பேசிக் கிட்டு இருந்த நம்மாழ்வார், என்னைக் கவனிச்சிட்டார். உடனே என்னை மேடைக்கு அழைச்சு, ‘இவரு பேரு உதயகுமார்... பெரிய விஞ்ஞானி. விவசாயத்துல நுண்ணுயிரிகளோட செயல்பாடுகள் பத்தி விரிவா பேசுவாரு’னு சொல்லி என்னை அறிமுகப்படுத்தினார். அதுல என்ன ஒரு நெகிழ்ச்சியான விஷயம்னா.. என்னோட சொந்த ஊரு தென்னமநாடு. ஆனா, எங்க ஊரு மக்களுக்கு என்னைத் தெரியாது. நம்மாழ்வார் மூலமாதான் நான் ஒரு வேளாண் விஞ்ஞானியா எங்க ஊர் மக்களுக்கு அறிமுகம் ஆனேன்’’ எனக் கடந்தகால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் உதயகுமார்.

இயற்கை உணவகம்

“அமெரிக்காவுல இயற்கை உணவகங்களும் நிறைய செயல்படுது. நியூஜெர்சி மாகாணத்துல உள்ள ஓர் இயற்கை உணவகத்துக்குப் போயிருந்தேன். அங்க என்ன ஒரு ஆச்சர்யமான விஷயம்னா, அந்த உணவகத்தை நடத்தக்கூடியவர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பக்கத்துல உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர். அவரோட பேர் தினேஷ். அந்த உணவகத்தோடு பேரு அம்மா உணவகம்.

ஆரோக்கியமான உணவு கொடுக்கணுங்கற நல்லெண்ணத்தோடு, அந்த இயற்கை உணவகத்தை அவர் நடத்திக்கிட்டு இருக்கார். தன்னோட உணவகத்துக்குத் தேவையான காய்கறிகளை, அவரே இயற்கை முறையில உற்பத்தி செஞ்சுகிறார். அவர்கிட்ட மொத்தம் 50 ஏக்கர் நிலம் இருக்கு. முருங்கை, புளிச்சக்கீரை, கத்திரி, வெண்டை, செடி அவரை, கொத்தவரங்காய், உருளைக்கிழங்கு, சோயா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்றார். மண்ணை இயற்கை முறையில வளப்படுத்த, மண்புழு உரம். உயிர் கரிமம், ‘வேம்’னு சொல்லப்படுற மைக்கோரைசா (Mycorrhiza) நுண்ணூயிரி திரவம் உள்ளிட்ட இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துறார். பயிர்களுக்கு இடையில உள்ள வெற்றிடத்துல மரத்தூள் போட்டு மூடாக்கு அமைக்குறார். அது மட்கி மண்ணுக்கு உரமாகவும் ஆயிடுது. 40 ஆடுகள், 25 கோழிகளும் வளர்க்குறார். ஒருங்கிணைந்த பண்ணையம் உருவாக்கணும்ங்கற திட்டமிடலோடு, தினேஷ் செயல்பட்டுக்கிட்டு இருக்கார்.

அமெரிக்க பயணத்தில்
அமெரிக்க பயணத்தில்

மலிவான விலை

நியூஜெர்சியில உள்ள மத்த உணவகங்களோடு ஒப்பிடும்போது, தினேஷ் நடத்தக்கூடிய உணவகத்துல விலை ரொம்பக் குறைவு. ஒரு இட்லி 1 டாலர் (80 ரூபாய்). ஒரு வடை 1 டாலர். ஆனா, மற்ற உணவகங்கள்ல இதெல்லாம் நாலு மடங்கு விலை அதிகம். இட்லி, தோசை, சாப்பாடு, பிரியாணி உட்பட எல்லாமே அங்க கிடைக்குது. தன்னோட உணவகத்துக்கு வரக்கூடிய மக்களை, தினேஷ் ரொம்ப அன்போடு உபரிசரிக்கிறார்’’ என்கிறார் உதயகுமார்.

அதிக புரதச்சத்துள்ள மக்காச்சோளம்

‘‘மெக்ஸிகோ மாகாணத்துல செயல்படக்கூடிய பன்னாட்டு உருளைக்கிழங்கு மற்றும் மக்காச்சோளம் ஆராய்ச்சி நிலையம், அதிக புரச்சத்துக் கொண்ட மக்காச்சோள ரகத்தை அறிமுகப்படுத்தியிருக்கு. மனித உடலுக்குப் புரதச்சத்து ரொம்ப அவசியம். ஆனா, தமிழ்நாட்டுல அது மாதிரியான உணவுக்கு வாய்ப்பு குறைவு. முன்னாடி தமிழ்நாட்டுல அதுக்காகவே சோயா அறிமுகம் செய்யப்பட்டுச்சு. ஆனால், அதோட சுவையும் வாசனையும் நம்ம மக்களுக்குப் பிடிக்கலை.

சோயா பயிர்ல சுணை ரொம்ப அதிகமா இருக்கும். இதுமாதிரி இன்னும் சில காரணங்களால் சோயா சாகுபடி முற்றிலும் இங்க கைவிடப்பட்டுச்சு. சோளம் காலங்காலமா நம்ம மக்களுக்குப் பழக்கப்பட்ட உணவுப் பொருள். ஆனால், இங்க புழக்கத்துல உள்ள சோளத்துல புரதச்சத்து அதிகம் இருக்காது. அதனால் அமெரிக்காவுல அறிமுகம் செய்யப்பட்டுள்ள அதிகப் புரதச்சத்து நிறைஞ்ச மக்காச்சோள விதைகளை இங்க கொண்டு வந்து பரீட்சார்த்த முறையில பயிர் செஞ்சு பார்த்துட்டு அதுக்குப் பிறகு இங்கவுள்ள விவசாயிகள்கிட்ட அதை அறிமுகம் செய்யணும்னு ஆசைப்பட்டேன். ஆனால், அதுக்குச் சட்டரீதியான அனுமதி வாங்குறதுல ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்கு’’ என்கிறார் உதயகுமார்.