மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மாதிரிப் பண்ணை; வாரச் சந்தை... வாட்ஸ் அப் குரூப்... சிவகாசியில் ஒன்றிணைந்த இயற்கை விவசாயிகள்!

பண்ணையில் கருப்பசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
பண்ணையில் கருப்பசாமி

விற்பனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் 2 கி.மீ தொலை வில் உள்ளது பாறைப்பட்டி கிராமம். இங்கு தான் அமைந்துள்ளது, தேன்கனி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாதிரிப் பண்ணை. இக்கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் இந்தப் பண்ணைக்குச் சென்றோம். இதன் ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

‘‘கரூர் மாவட்டத்துல நம்மாழ்வாரால் உருவாக்கப்பட்ட வானகத்துல 2011-ம் வருஷம் இயற்கை விவசாயப் பயிற்சி எடுத்துக் கிட்டேன். ‘விதைகளே பேராயுதம்’ங்கற புத்தகத்தை அந்த வருஷம்தான் ஐயா வெளியிட்டார். பாரம்பர்ய விதைகளோட மகத்துவத்தைப் பத்தி அதுல சொல்லப்பட்டு இருந்த விஷயங்கள் எனக்கு ரொம்ப ஆச்சர்யத்தையும் ஆதங்கத்தையும் ஏற்படுத் துனுச்சு. பாரம்பர்ய விதைகளை மீட்டெடுத்துப் பரவலாக்கம் செய்யணும்னு முடிவு செஞ்சு, அதுக்கான முயற்சியை 2014-ம் வருஷம் தொடங்கினேன்.

மர வகைகள்
மர வகைகள்

பாரம்பர்ய விதைகளைத் தேடி பயணம் போனால் மட்டும் போதாது... விதை உற்பத் திக்காகவும், இயற்கை விவசாயம் பத்தி இந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில விழிப்புணர்வை ஏற்படுத்துறதுக்காகவும் அதே வருஷம், இந்த ஒரு ஏக்கர்ல மாதிரி பண்ணையையும் உருவாக்கினேன். அடுத்த கட்டமா... விருதுநகர் மாவட்டத்துல இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்குற விவசாயிகள் 30 பேரை ஒருங்கிணைச்சு ‘தேன்கனி இயற்கை விவசாயக் கூட்ட மைப்பு’ங்கிற அமைப்பைத் ஆரம்பிச்சோம். இயற்கை விவசாயத்துல உற்பத்திச் செய்யப் பட்ட விளைபொருள்களை மட்டுமே விற்பனை செய்றதுக்கான ஒரு பிரத்யேக சந்தையைச் சிவகாசியில நடத்திக்கிட்டு இருக்கோம். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அந்தச் சந்தை செயல்படுகிறது’’ என்று சொன்னவர், பாரம்பர்ய விதைகள் மீட்பு குறித்துப் பேசினார்.

பண்ணையில் கருப்பசாமி
பண்ணையில் கருப்பசாமி

‘‘விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள்ல மானாவாரி விவசாயம் அதிகம். விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்தி குளம், ராமநாதபுரம், கமுதி ஆகிய பகுதிகள்ல அதிகமா சாகுபடி செய்யப்பட்டு, பிறகு காலப்போக்குல கைவிடப்பட்ட 35-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய சோள ரகங்களை மீட்டெடுத்து, எங்க பண்ணையில மறு உற்பத்தி செஞ்சிருக்கோம்.

அதுமட்டுமல்லாம... 15 வகையான தக்காளி, 15 வகையான கத்திரி, 11 வகையான வெண்டை, 8 வகையான அவரை, 8 வகையான மிளகாய், 7 வகையான சுரை, 4 வகையான தினை, 4 வகையான புடலை, 4 வகையான பீர்க்கன், 3 வகையான வரகு, 3 வகையான கம்பு உட்பட 100-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய ரக விதைகளை மீட்டெடுத்திருக்கோம். அந்த விதைகளை எங்க பண்ணையில விதைப்பு செஞ்சு, பல மடங்கா பெருக்கிட்டு வர்றோம். இதுல ரொம்ப அரிதான ரகங்களோட விதைகளை எங்க கூட்டமைப்புல உள்ள விவசாயிகள் தங்களோட நிலங்கள்ல பயிர் செஞ்சு, இருமடங்கா திருப்பித் தருவாங்க. அதிக முளைப்புத்திறன் கொண்ட நாட்டு ரக விதைகளை மலிவான விலையில மற்ற விவசாயிகளுக்கு விற்பனை செய்றோம். விருதுநகர் மாவட்டத்துல உள்ள பள்ளி, கல்லூரிகள்ல இதுவரைக்கும் 42 முறை விதைக் கண்காட்சிகள் நடத்தியிருக்கோம்’’ என்று சொன்னவர், இப்பண்னையில் நடத்தப்படும் பயிற்சிகள் குறித்துப் பேசினார்.

மீட்டெடுத்த சோள ரகங்கள்
மீட்டெடுத்த சோள ரகங்கள்

‘‘பண்ணை வடிவமைப்பு, மண் வளப் படுத்துதல், இயற்கை இடுபொருள் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, விளைபொருள்கள் மதிப்புக்கூட்டுதல், விற்பனை வாய்ப்புகள், மாடித்தோட்டம், மூலிகை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட தலைப்புகள்ல விவசாயிகளுக்கு இங்க பயிற்சி அளிக்குறோம். பொதுவா விவசாயிகள் எந்த ஒரு பயிரை சாகுபடி செஞ்சாலும், முடிஞ்ச வரைக்கும் செலவுகளைக் குறைச்சாதான் நிறைவான லாபம் பார்க்க முடியும். கொடி வகைக் காய்கறிகள் சாகுபடி செய்ய நம்ம விவசாயிங்க பந்தலுக்கு நிறைய செலவு செய்றாங்க. அந்தச் செலவை தவிர்க்க வேற ஒரு வழிமுறை இருக்கு. அதைக் கடைப்பிடிச்சா, இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதை நீங்களே கண்கூடா பாருங்க’’ என்று சொன்ன கருப்பசாமி... அவரை, புடலை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டிருந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

மீட்டெடுத்த சோள ரகங்கள்
மீட்டெடுத்த சோள ரகங்கள்

அங்கு பந்தலே இல்லை... முருங்கை, அகத்தி, கிளிரிசீடியா, கிளுவை உள்ளிட்ட சிறிய வகை மரங்களில் அவரை, புடலை, பாகல், பீர்க்கன் உள்ளிட்ட கொடிகள் படர்ந்து செழிப்பாகக் காட்சி அளித்தன. இதுகுறித்துப் பேசிய கருப்பசாமி, ‘‘பந்தல் அமைச்சு கொடி வகைக் காய்கறிகள் சாகுபடி செய்யணும்னா, அதுக்கு நிறைய முதலீடு தேவைப்படும். நீண்டகாலத்துக்குப் பலன் கொடுக்கணுங்கறதுனால, சில விவசாயிகள் கல்தூண்கள் அமைச்சு, நல்லா தரமான கம்பி களைக் கட்டி பந்தல் அமைக்குறாங்க. அதை விவசாயிகள் முடிஞ்ச வரைக்கும் தவிர்க்கணும்னு நம்மாழ்வார் சொல்லி யிருக்கார். ‘பாறையை உடைச்சுதான கல் தூண்களை உருவாக்குறாங்க. இதனால கல்குவாரிக்காரனும் கம்பி உற்பத்தி செய்யக்கூடிய கம்பெனிக்காரனும்தான் லாபம் அடைவான். விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் அதெல்லாம் தேவை யில்லாத செலவு. குறிப்பா, ஏழை விவசாயி களால அதுக்கெல்லாம் செலவு செய்ய முடியாது’னு வானகத்துல நடந்த ஒரு பயிற்சி வகுப்புல நம்மாழ்வார் ஐயா பேசினார். ‘பந்தல் இல்லாம எப்படிங்கய்யா கொடி காய்கறிகள் சாகுபடி செய்ய முடியும்’னு நான் கேள்வி கேட்டேன்.

இயற்கை உழவர்கள் சந்தையில்
இயற்கை உழவர்கள் சந்தையில்

அகத்தி மரத்துக்குப் பக்கத்துல என்னை அழைச்சுட்டுப் போனார். ‘இந்த அகத்திக்கு கீழ ரெண்டு, மூணு புடலை விதையை ஊன்றி வை. கொடி வீசுனதும் அகத்தி மேல படர விடு. புடலைக்கொடியை பந்தல்ல ஏத்தி விட்டாத்தான் படருமா? அகத்தி மேல விட்டா பூக்காதா, காய்க்காதா? அகத்திக்கும், புடலைக்கும் விதை மட்டும்தானே செலவு’ன்னு சிரிச்சபடியே சொன்னார். பயிற்சியில கலந்துகிட்டவங்க எல்லாருமே ஆச்சர்யப்பட்டாங்க.

அகத்தி மட்டுமல்ல ஆமணக்கு, கிளரி சீடியா, முருங்கை, கிளுவை யிலயும் படரவிடலாம்னு ஐயா சொன்னார். அதை சோதனை முறையில செஞ்சு பார்த்தேன். வெற்றிகரமா இருந்துச்சு. அதைத் தொடர்ந்து தான், இந்தப் பண்ணையில 25 சென்ட் பரப்புல, அகத்தி, முருங்கை, கிளுவை மரங்களை உருவாக்கி, அதுல அவரை, புடலை, பாகல், பீர்க்கன் உள்ள காய்கறிகளைப் பயிர் செஞ்சு, கொடிகளைப் படர விட்டுருக்கோம். அருமையா விளைஞ்சு கிட்டு இருக்கு. இது மூலமா கிடைக்குற காய்கறிகளை, எங்க கூட்டமைப்புல உள்ள விவசாயிகள் பகிர்ந்து எடுத்துக்குறோம்.

பண்ணையில்
பண்ணையில்

விவசாயிகள் இந்த முறையில கொடி வகைக் காய்கறிகள் சாகுபடி செஞ்சாங்கனா... அவரை, புடலை, பாகல், பீர்க்கன் மட்டு மல்லாம... வாரம் ஒருமுறை அகத்தி, முருங்கைக் கீரை பறிச்சி விற்பனை செய்ய லாம். முருங்கை காய்ப்புல இருக்கும்போது காய்கள் மூலமும் தனி வருமானம் பார்க்கலாம். அகத்தி, முருங்கை, கிளரிசீடியா இலைகளை ஆடு, மாடுகளுக்குப் பசுந்தீவன மாகவும் கொடுக்கலாம். ஆமணக்கு பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.

ஆமணக்கு விதைகளைச் சேகரிச்சு விற்பனை செய்யலாம். அந்த விதைகள்ல இருந்து விளக்கெண்ணெயும் உற்பத்தி செய்யலாம். அகத்தி, ஆமணக்கு, முருங்கை, கிளுவை, கிளரிசீடியா மரங்கள் 6 அடி உயரத்துக்கு மேல செல்லாதபடி கவாத்து செய்றதுனால, அந்தக் கிளைகளை உங்க நிலத்துலயே மூடாக்கா போட்டுக்கலாம். அது மட்கி, உரமாகி மண்ணை வளப்படுத்தும்’’ என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, கருப்பசாமி,

செல்போன்: 94435 75431.

இப்படித்தான் சாகுபடி

25 சென்ட் பரப்பில்... அகத்தி, முருங்கை, கிளிரிசீடியா, ஆமணக்கு ஆகிய சிறிய வகை மரங்களை உயிர் கால்களாக ஏற்படுத்தி, கொடி வகைக் காய்கறிகள் சாகுபடி செய்ய கருப்பசாமி சொல்லும் செயல்முறைகள்... இங்கே பாடமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

நாட்டு பீர்க்கன்
நாட்டு பீர்க்கன்

தேர்வு செய்யப்பட்ட நிலத்தில் 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவின்போது அடியுரமாக 500 கிலோ எரு இட வேண்டும். நிலத்தைத் தயார் செய்த பிறகு வரிசைக்கு வரிசை 10 அடி, விதைக்கு விதை 5 அடி இடைவெளியில் அரை அடி ஆழம், அரை அடி சுற்றளவு கொண்ட குழி அமைக்க வேண்டும். அகத்தி, ஆமணக்கு, முருங்கை, கிளுவை, கிளரிசீடியா விதைகளை... குழிக்கு ஒன்றாக ஊன்றி, தண்ணீர் விட வேண்டும். அடுத்த 10 நாள்களுக்குள் முளைப்பு தெரியும். 20-ம் நாளில் இருந்து 10 நாள்களுக்கு ஒருமுறை 50 லிட்டர் அமுதக்கரைசலை பாசனநீரில் கலந்து விட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து காய்ச்சலும் பாய்ச்சலுமாக அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மாதிரிப் பண்ணையில்
மாதிரிப் பண்ணையில்

5-வது மாதத்தில் அகத்தி, ஆமணக்கு, முருங்கை, கிளுவை, கிளிரிசீடியா ஆகியவை ஓரளவு வளர்ந்து மரமாகிவிடும். இந்த மரங்களின் வரிசைக்கு அருகில் கொடி வகைக் காய்கறி விதைகளை ஊன்ற வேண்டும். விதைக்கு விதை 2 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரு வரிசை முழுவதும் புடலை என்றால், அடுத்த வரிசை முழுவதும் பாகல், அதற்கு அடுத்த வரிசை அவரை என அமைக்க வேண்டும். கொடிகள் நீளமாகப் படர ஆரம்பித்ததும், அவற்றை அருகில் உள்ள கொடிக்கால் மரங்களின் மீது ஏற்றிவிட வேண்டும். அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மீன் அமிலம்... இவற்றை 20 நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பாசன நீருடன் கலந்து விட வேண்டும். 50 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் கரைசல் கலந்து பாசனநீரில் விடலாம். பூச்சி, நோய்த்தாக்குதலுக்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. அவ்வாறு ஏதும் தென்பட்டால் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் வீதம் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கொடிகள் மீது தெளிக்க வேண்டும். விதைப்பு செய்ததிலிருந்து 45-ம் நாள் பீர்க்கனும், 55-ம் நாளில் புடலை மற்றும் அவரையும், 60-ம் நாள் பாகலும் காய்ப்புக்கு வரும்.

நாராயணன்
நாராயணன்

வியாழக்கிழமை வாட்ஸ் அப் குரூப்

தேன்கனி இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நாராயணன், “சிவகாசியில உள்ள காரனேசன் பேருந்து நிறுத்தம் பக்கத்துலதான் எங்களோட வாரச்சந்தை இயங்குது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணியில இருந்து மதியம் 1 மணி வரைக்கும் செயல்படும். எங்க கூட்டமைப்புல உள்ள இயற்கை விவசாயிகள் தங்களோட விளை பொருள்களை அங்க கொண்டு வருவாங்க. வாரந்தோறும் வியாழக்கிழமை யார் யார் கிட்ட எவ்வளவு காய்கறிகள், கீரைகள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் இருக்குனு எங்களோட வாட்ஸ் அப் குழுவுல பகிர்வோம். இந்தத் தகவல்களை, நாங்க உருவாக்கி வச்சிருக்குற வாடிக்கையாளர்களுக்கான வாட்ஸ் அப் குழுவுல பகிர்ந்து, இதெல்லாம் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையில கிடைக்கும்னு தெரியப்படுத்துவோம்’’ என்றார்.

சிறகு அவரை
சிறகு அவரை

என்னென்ன கிடைக்கும்?

இச்சந்தையில் 20-க்கும் மேற்பட்ட பாரம்பர்ய அரிசி வகைகள், அவல், சிறுதானிய அரிசி வகைகள், பாரம்பர்ய திண்பண்டங்கள், செக்கு எண்ணெய், காய்கறிகள், மூலிகைகள், மூலிகைப் பொடி வகைகள், பருப்பு வகைகள், பாரம்பர்ய விதைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப் படுகின்றன. வாரம் ஒருநாள் மட்டும் விளைபொருளை விற்பனை செய்து முடிக்க முடியாது என்பதால் மற்ற நாள்களில் இயற்கை அங்காடிகளுக்கும் அனுப்புகிறார்கள்.