Published:Updated:

விதைப்பும் உழவும் ஒரே நேரத்தில்.... கைகொடுக்கும் விதைப்புக் கருவி!

விதைப்புக் கருவியுடன் தட்சிணாமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
விதைப்புக் கருவியுடன் தட்சிணாமூர்த்தி

கருவி

வழக்கமாக விதைத்துவிட்டு ஏர் கலப்பையிலோ, டிராக்டர் கலப்பையிலோ உழுவார்கள். தற்போது ஒரே நேரத்தில் விதைப்பும் உழவும் நடப்பது போன்று கருவிகள் வடிவமைக்கப் பட்டுச் சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அவை யாவும் டிராக்டர், மினி டிராக்டர் போன்ற கருவிகளில் மட்டுமே உள்ளன. இந்தக் கருவிகளை லட்சங்கள் செலவு செய்து வாங்க வேண்டியுள்ளது. அப்படியே வாங்கினாலும் அதிக பயன்பாடு இல்லாமையால் கருவிகள் செயலிழந்துவிடுகின்றன. இந்தச் சூழ்நிலையில் இரு சக்கர வாகனத்தின் பாகங்களைக் கொண்டு ஒரே ஆள் மூலமாக விதைப்பும் உழவும் நடக்கும் வகையில் சிறிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார் சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த கோவிந்தபாடியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்ற இளைஞர். இதன்மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்கள் ஆகியவற்றை விதைப்பதற்கு இதைப் பயன்படுத்தி வருகிறார்.

விதைப்பு இயந்திரம் குறித்துத் தெரிந்து கொள்ளத் தட்சிணாமூர்த்தியைச் சந்தித்துப் பேசினோம். “டிப்ளோமா மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கேன். விவசாயம் மீது அதிக ஈடுபாடு. படிச்சதை வெச்சு அப்பாவோட விவசாயப் பணிக்கு உதவி செய்ய முடியுமா என்ற எண்ணம் அடிக்கடி தோணும். அதனால அப்பாகிட்ட அடிக்கடி பேசுவேன். என்னோட அப்பா, ‘விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு. அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் செலவு அதிகமாகுது’னு அடிக்கடி வருத்தப்படுவாரு. மேலும் எங்க பகுதிகள்ல மழை குறைவாகத்தான் பெய்யும். வறட்சி நிலவும். அதனால வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை, அவரை, துவரைனு மானாவாரியில விதைச்சுதான் மகசூல் எடுப்போம். வருஷத்துக்கு ஒருமுறைதான் விதைப்பு. அதனால விதைப்புக்கும் உழவுக்கும் அதிக செலவு செய்ய வேண்டியதா இருந்துச்சு.

விதைப்புக் கருவியுடன் தட்சிணாமூர்த்தி
விதைப்புக் கருவியுடன் தட்சிணாமூர்த்தி

இவை அனைத்துக்கும் தீர்வு காண முடியுமானு யோசிச்சேன். அதன் விளைவு தான் இந்தக் கருவி. எங்க வீட்டுல பழைய மோட்டார் சைக்கிள் ஒண்ணு இருந்துச்சு. அதைப் பயன்படுத்தி இயந்திரம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனா, நான் நினைச்ச அளவுக்கு வரல. பல மாதங்களா, பலகட்ட சோதனைகளைச் சந்திச்சேன். அதன் பிறகுதான் இந்த உருவத்துக்கு இயந்திரத்தை உருவாக்க முடிஞ்சது. பழைய மோட்டார் சைக்கிளோட பாகங்களைப் பிரிச்சு இன்ஜின், பெட்ரோல் டேங்க், காலால் மிதிச்சு ஸ்டார்ட் செய்யும் ஸ்டாட்டர் இதோடு, தானியங்களை நிரப்பி வைக்க பிளாஸ்டிக்கால் ஆன டப்பா, தானியங்களை விதைக்க சல்லடை, தானியங்கள் சீராக நிலத்துல விழுற வகையில் கட்டுப்பாட்டுக் கருவி, இயந்திரத்தோட வேகத்தைக் கட்டுப் படுத்த கருவி, நிலத்தைப் பண்படுத்த அதாவது, உழுறதுக்கு சிறிய கலப்பையைப் பொருத்தினேன். பிறகு, நிலத்துல ஓட்டி விதைப்பும், உழவும் ஒரே நேரத்துல நடக்குற மாதிரி இந்த இயந்திரத்த செயல்பட வெச்சேன். இந்தக் கருவியை மிகக் குறைந்த விலையிலேயே உருவாக்கினேன். மொத்தம் 10,000 ரூபாய் செலவாச்சு.

விதைப்பு இயந்திரம் உருவாக்க 6 மாத கால முயற்சி தேவைப்பட்டுச்சு. நிலத்துல ஓட்டி பலகட்ட சோதனைகளுக்குப் பிறகுதான், இயந்திரம் முழுவடிவம் பெற்றுப் பயன்படுத்த முடிஞ்சது. பழைய மோட்டார் சைக்கிளோட உதிரி பாகங்களைக் கொண்டு உருவாக்கியதால, செலவு குறைவாத்தான் ஆச்சு. இது கிட்டத்தட்ட குறைஞ்ச விலையில உருவாக்கக்கூடிய நவீன இயந்திரம்தான்.

பொதுவா, சிறுதானியங்களை விதைக்கும்போது ஏற்கெனவே உழவு ஓட்டிய நிலத்தில் முதலில் தூவிவிடுவார்கள். பிறகு உழவு ஓட்டுவார்கள். ஆனால், இந்த இயந்திரத்தை ஒரே ஆள் உழுறதும் விதைக்குறதும் நடக்கும். டிராக்டர் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில தானியங்கள் விதைக்க சுமார் ஒரு மணி நேரமும், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை செலவும் ஆகும்.

ஆனா, இந்த விதைப்பு இயந்திரத்தில 1 - 2 லிட்டர் பெட்ரோல் ஊத்தினா போதும். டிராக்டர் விதைப்பு போலவே இதுவும் ஒரு மணிநேரத்தில பணிகளை நேர்த்தியா செய்யும். குறைஞ்ச விலையில தானிய விதைப்பு செய்றதோட, விதைப்புக்கு முன்னதா நிலத்தை உழவு ஓட்டவும் இந்தக் கருவியைப் பயன் படுத்தலாம். பழைய இரு சக்கர வாகன பாகங்கள் இருந்தா இதை சுலபமா உருவாக்கிடலாம்” என்று சொல்லி விடைகொடுத்தார்.


தொடர்புக்கு, தட்சிணாமூர்த்தி,

செல்போன்: 63748 97607.

விதைப்புக் கருவி
விதைப்புக் கருவி

இயந்திரத்தை இயக்குவது எப்படி?

விதைப்பு இயந்திரத்தில் அதற்கென உருவாக்கப்பட்டுள்ள டேங்கில் பெட்ரோலை நிரப்பிக்கொள்ள வேண்டும். பின்பு தானியங்கள் போடும் டப்பாவில் விதைகளை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். இயந்திரத்தை ஸ்டார்ட் செய்துவிட்டு எந்த வேகத்தில் இயக்க வேண்டுமோ அதே வேகத்தில் நிலத்தில் ஓட்டலாம். இதற்காகப் பிரத்யேகமாகக் கருவி ஒன்று வலது கைப்பிடி அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இயந்திரம் இயங்கத் தொடங்கியவுடன் விதைகள் சீராக நிலத்தில் விழும். சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் எனத் தானியங்களின் அளவுக்கு ஏற்றவாறு சல்லடையை மாற்றிக் கொள்ளலாம். உழவுக்குப் பயன்படுத்தும் கலப்பையைப் பொருத்தியிருப்பதால் இந்தக் கருவியைக் களை எடுக்கவும் பயன்படுத்திக்கலாம்.

நிதி உதவி தேவை!

விதைப்பு இயந்திரம்போலவே பல பயனுள்ள கருவிகளை உருவாக்குவதில் ஆர்வமாய் இருக்கிறார் தட்சிணாமூர்த்தி. இதுகுறித்து அவர் பேசியபோது, “எங்க பகுதியில கிடைக்கக்கூடிய கால்சியம் கற்களைக்கொண்டு வேதியல் முறை களுக்கு உட்படுத்திச் சமையல் எரிவாயு தயாரிக்குற ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருக்கேன். இப்போ கண்டுபிடிச்சிருக்கிற விதைப்புக் கருவியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போக நிதி ஆதாரம் தேவைப்படுது. அரசோ, தன்னார்வ அமைப்புகளோ ஊக்குவிச்சா உதவியா இருக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.