
நாட்டு நடப்பு
கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கடந்த ஜூலை 30 அன்று தமிழக உழவர் முன்னணி ஏற்பாட்டில் தமிழர் மரபு வேளாண்மை மாநாடு நடைபெற்றது. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் இயற்கை வேளாண்மையை அரசின் கொள்கை யாக அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசும் இதைக் கொள்கையாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இயற்கை வேளாண் அறிவியலாளர் ராம ஆஞ்சநேயலு, “ஆந்திரா அரசு இயற்கை விவசாயத்தை மிக வேகமாக முன்னெடுத்துச் செல்கிறது. 2024-ம் ஆண்டுக்குள் அங்குள்ள அனைத்து மாவட்டங்களையும் 50 சதவிகிதம் இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது எனவும் 2030-ம் ஆண்டுக்குள் முழுமையாக 100 சதவிகிதம் இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது எனவும் ஆந்திர அரசு இலக்கு நிர்ணயித்து இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி யுள்ளது. சிக்கிம் மாநிலம் 100 சதவிகிதம் இயற்கை விவசாயத்துக்கு மாறியது போல் நாமும் சாதித்துக் காட்ட வேண்டும் என்பதில் ஆந்திர அரசு உறுதியாக இருக்கிறது. ஆந்திரா, தெலங்கானா மாநில ஆட்சியாளர்கள் என்னைப் போன்ற இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் களுடன் நெருக்கமான நட்பு கொண்டு, அவ்வப்போது எங்களின் ஆலோசனை களையும் செயல்படுத்தி வருகிறார்கள்.

நாங்கள் மேற்கொண்ட இயற்கை வேளாண்மை செயல்பாடுகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு செல்ல இந்தி நடிகர் அமீர்கான், அனிமேஷன் படமாக எடுத்துள்ளார். தமிழகத்திலும் இதுபோன்ற முன்னெடுப்புகள் செய்யப்பட வேண்டும்’’ என்றார். இம்மாநாட்டில் ராம.ஆஞ்ச நேயலுக்கு ஜே.சி.குமரப்பா விருது வழங்கப் பட்டது.

வேளாண் பொருளியல் ஆய்வாளர் கி.வெங்கட்ராமன், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன், தாளாண்மை உழவர் இயக்கத்தைச் சேர்ந்த நடராஜன், பாமயன், பழமலை இயற்கை வழி வேளாண்மை கூட்டமைப்பின் கோட்டேரி சிவக்குமார், சுயாட்சி இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், தமிழ்க் காடு இயற்கை வேளாண்மை இயக்கத் தின் ரமேஷ் கருப்பையா, தமிழக உழவர் முன்னணியைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட பலர் உரையாற் றினார்கள். இம்மாநாட்டில் இடம் பெற்ற மரபு விதைக் களஞ்சியம், உணவுத் திருவிழா, அடுப்பில்லா சமையல் செயல் விளக்கம், இயற்கை எரிவளி (பயோ கேஸ்) செயல் விளக்கம் ஆகியவை பார்வை யாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.