மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

மானியத்தில் கிடைத்த சூரிய ஒளி கொப்பரை உலர்த்தி! கூடுதல் லாபம் தரும் செக்கு எண்ணெய்

சூரிய ஒளி கொப்பரை உலர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
சூரிய ஒளி கொப்பரை உலர்த்தி

உற்பத்தி

தென்காசி மாவட்டம் கடையநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது புதுக்குடி கிராமம். இங்கு, சூரிய ஒளி உலர்த்தியை (சோலார் டிரையர்) பயன்படுத்திக் கொப்பரை உற்பத்தி செய்து வருகிறார் சர்ச்சில்.

அவரைச் சந்திப்பதற்காகப் பயணமானோம். ஊரின் தொடக்கத்திலேயே உள்ளது சர்ச்சிலின் தென்னந்தோப்பு. அங்குள்ள கூடத்தில் மரச்செக்கில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து கொண்டிருந்த சர்ச்சிலைச் சந்தித்தோம்.

‘‘பூர்விகமே விவசாயம்தான். அப்பா மாடசாமி 20 வயசுலயே சொந்தமா டிராக்டர் வாங்கி ஓட்ட ஆரம்பிச்சார். நெல், தென்னை விவசாயம்தான். ஆரம்பத்துல அடியுரமா மட்கின தொழுவுரத்தை மட்டும் போட்டு விவசாயம் செஞ்சிருக்காங்க. ‘பசுமைப்புரட்சி’க்குப் பிறகு எல்லா விவசாயிகளையும் போல அப்பாவும் ரசாயன முறைச் சாகுபடிக்கு மாறிட்டார். ‘ஸ்கூல், காலேஜ்’ படிக்குற காலத்திலேயே அப்பாகூட விவசாய வேலைகளைச் செய்வோம்.

‘எம்.இ அப்ளைய்டு எலக்ட்ரானிக்ஸ்’ முடிச்சதும், சென்னையில ‘இன்ஜினீயரிங் காலேஜ்’ல உதவிப் பேராசிரியரா 10 வருஷம் வேலை பார்த்தேன். அதுக்குப் பிறகு கத்தார்ல ‘அசிஸ்டென்ட் இன்ஜினீயரா’ 8 வருஷம் வேலை பார்த்தேன். என்னோட அண்ணன் மங்களதுரை 15 வருஷமா ஓமன்ல வேலை பார்த்துட்டு இருக்கார். அவர், பசுமை விகடனோட தீவிர வாசகர். லீவுல ஊருக்கு வரும் போதெல்லாம், ‘இயற்கை முறையில விவசாயம் செய்யுங்கப்பா’ன்னு சொல்வார். ஆனா, அப்பா கேட்கல. இயற்கை விவசாயம் செய்யுற நாலஞ்சுப் பண்ணைகளுக்கு அழைச்சுட்டும் போனார்.

மரச் செக்கில்
சர்ச்சில்
மரச் செக்கில் சர்ச்சில்

எங்க தோட்டத்துக்கு வந்த ஒருத்தர், ‘தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகள்ல விளையுற தேங்காய் கொப்பரையில 60 முதல் 65 சதவிகிதம் வரை எண்ணெய் கிடைக்கும். கொப்பரைக்காகத்தான் இங்க இருந்து தேங்காயை வியாபாரிங்க வாங்கிட்டுப் போயி எண்ணெய் மில்லுகள்ல வித்துடுறாங்க’ன்னு சொன்னார். அந்த நேரத்துலதான், நாமளே தேங்காய் எண்ணெய் உற்பத்தி செஞ்சா என்னன்னு ஒரு யோசனை வந்துச்சு’’என்றவர் எண்ணெய் உற்பத்திபற்றிச் சொல்லத் தொடங்கினார்.

தென்னை
தென்னை


அதுல ஒரு தோட்டத்துல செழுமையா இருக்குற தென்னை மரங்கள், மண் வளத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார் அப்பா. அந்தத் தோட்டத்துக்காரரே ரசாயன முறை விவசாயத்துல அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும், இயற்கை விவசாயத்துனால கிடைக்குற திருப்தியையையும் எடுத்துச் சொன்னார். முதல் கட்டமா ஒரு வருஷமா மண்ணை வளப்படுத்தி மாப்பிள்ளைச்சம்பா சாகுபடி செஞ்சார் அப்பா. சுமாரான மகசூல் கிடைச்சுது. அடுத்தடுத்த முறையில நல்ல மகசூல் கிடைச்சுது.

அப்பாவோட அனுபவம் கடந்த 25.4.21 தேதியிட்ட பசுமைவிகடன்ல ‘குழிமுறை சாகுபடி! தென்னைக்கு ஊடுபயிராக மாப்பிளைச்சம்பா’ங்கிற தலைப்புல வெளியானது. அது பலரோட பாராட்டையும் எங்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கு.

இந்த 5 ஏக்கர் நிலத்துல 450 நாட்டுரகத் தென்னைகள் இருக்கு. இதுல 400 தென்னைகள் நல்ல நிலையில இருக்கு. இதுல இருந்து கிடைக்குற நெற்றுகள்ல இருந்து உரிக்கிற தேங்காயை வியாபாரிகள்ட்ட கொடுத்துட்டு இருந்தோம்.

சூரிய ஒளி உலர்த்தி
சூரிய ஒளி உலர்த்தி

‘‘மழைக்காலங்கள்ல கொப்பரையில பூஞ்சை தாக்கும். இதைக் கட்டுப்படுத்த ‘சல்பர்’ உள்ளிட்ட ரசாயனத்தைக் கொப்பரை மேலத் தெளிக்கிறாங்க. ரசாயனம் தெளிக்காம பூஞ்சையில இருந்து கொப்பரையைப் பாதுகாக்க என்ன வழின்னு யோசிச்சப்போதான் ‘சோலார் டிரையர்’ல காய வைக்காலம்கிற யோசனை கிடைச்சுது. இது சம்பந்தமா இணையதளத்துல தேடிப் பார்த்தேன். கடையநல்லூர் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்துக்குப் போயி உதவி செயற்பொறியாளர்களிடமும் சந்தேகத்தைக் கேட்டேன். என்னோட முயற்சியை வரவேற்றுப் பேசுனவங்க, அதுக்கான வழிமுறைகளைச் சொன்னாங்க. அந்த அலுவலகம் மூலமாகவே ‘என்.ஏ.டி,பி’ திட்டம் மூலம் 1,029 சதுர அடியில ‘சோலார் டிரையரை’ (சூரியக்கூடார உலர்த்தி) அமைச்சேன். 1,000 சதுர அடிக்குத்தான் மானியம். மீதிக்கு கைக்காசை போட்டு அமைச்சிட்டேன்.

உடைச்ச தேங்காயை இந்த ‘சோலார் டிரையர்’ல 78 மணி நேரம் வெச்சாப் போதும். உயர்தரமான கொப்பரையா மாறிடும். சோலர் டிரையர்ல 8,000 எண்ணிக்கை வரை வைக்கலாம். ஒரு குச்சியை வெச்சே தேங்காய் ஓட்டிலிருந்து கொப்பரையை எளிதாகப் பிரிச்சுடலாம். ஒருமுறை உலர்த்தினாலே போதும். மழைக்காலங்கள்ல தேவைப்பட்டா கூடுதலா 10 மணி நேரம் வரைக்கும் வைக்கலாம்.

தென்னை மர மட்டை உள்ளிட்ட எல்லாக் கழிவுகளையும் தென்னைக்கே மூடாக்காகப் போடுறோம். தேங்காய் உரிச்ச மட்டைகள மிஷின்ல தூளாக்கி, மண்புழு உரம் தயாரிச்சு அதையும் உரமாப் போடுறோம்” என்றவர் மரச்செக்கில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறித்துச் சொன்னார்.

சுரிய ஒளி உலர்த்தியின்
வெளிப்புற தோற்றம்
சுரிய ஒளி உலர்த்தியின் வெளிப்புற தோற்றம்

‘‘இந்த மரச்செக்கு 16 கிலோ புடிக்கும். இதுல சோலார்ல காய வெச்ச 15 கிலோ கொப்பரையைப் போட்டுச் ‘சுவிட்ச்’ போடணும். உடைஞ்சு நொறுங்குற கொப்பரைகள் அரைப் படுறதுக்காகக் குழவிப் பகுதிக்குள்ள விட்டுகிட்டே இருக்கணும். 15 நிமிடத்தில எண்ணெய் வழியும். 30 முதல் 35 நிமிடத்தில எண்ணெய் முழுமையா கிடைக்கும். கொப்பரையை மட்டும்தான் செக்கில போட்டு ஆட்டுறோம். வாசனைக்காக சீரகம், ஏலக்காய் எதுவும் சேர்க்கல. நிறம், மணம், மாறாத எண்ணெய் கிடைக்குது. தேங்காய் எண்ணெய் உற்பத்தியில தரமான கொப்பரைத் தேங்காயைவிடப் பூஞ்சை படராம பார்த்துக்கிறதுதான் பெரிய சவால். அந்தச் சவாலைச் சோலார் டிரையர் மூலமா சமாளிக்கிறேன்’’ என்றவர் வருமானம் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.

கொப்பரைக்கான தேங்காய்கள்
கொப்பரைக்கான தேங்காய்கள்

‘‘இப்போ ஒரு வருஷமாத்தான் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்துட்டு இருக்கேன். அதனால, மாசத்துல 20 நாள்கள் மட்டும்தான் உற்பத்தி நடக்குது. தினமும் காலை, மதியம் என ரெண்டு முறை உற்பத்தி. ஒரு முறை 15 கிலோ கொப்பரைத் தேங்காய் போட்டு எண்ணெய் உற்பத்தி செய்தால் 11 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்கிது. தினமும் 22 லிட்டர் கணக்கில 20 நாளுக்கு 440 லிட்டர் எண்ணெய் உற்பத்தியாகுது. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் 320 ரூபாய்னு விற்பனை செய்றேன். அந்தக் கணக்கில மாசத்துல 1,40,800 ரூபாய் வருமானமாக் கிடைக்குது. இதுல, லிட்டருக்கு 240 ரூபாய் வரைக்கும் உற்பத்திச் செலவாகுது. ஆக, செலவு 1,05,600 ரூபாய் கழிச்சாலும், 35,200 ரூபாய் லாபமாக் கிடைக்குது. இதுதவிர, 450 கிலோ வரை தேங்காய்ப் புண்ணாக்கு கிடைக்குது. ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகுது. அந்த வகையில 15,750 ரூபாய் கூடுதல் வருமானம்தான்.

இதுவரைக்கும் எந்தக் கடைக்கும் போயி நான் எண்ணெயை விற்பனை செய்யல. உள்ளூர்லயும், நண்பர்களுக்கும்தான் விற்பனை செஞ்சுட்டு இருக்கேன். சில நண்பர்கள் பரிந்துரையாலதான் நாலஞ்சு ‘ஆர்கானிக்’ கடைக்காரங்க எங்கிட்ட எண்ணெய் கேட்டிருக்காங்க. உற்பத்தியை இன்னும் அதிகப்படுத்தி விற்பனை செய்யலாங்கிற யோசனையில இருக்கேன். அதே மாதிரி எள்ளு, நிலக்கடலை சாகுபடி செஞ்சு அதையும் எண்ணெயா மதிப்புக்கூட்டலான்னு முடிவு பண்ணியிருக்கேன்” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, சர்ச்சில்,

செல்போன்: 84288 78313.

சூரியக் கூடார உலர்த்தி அமைக்க மானியம் பெறுவது எப்படி?

தென்காசி, வேளாண் பொறியியல் துறையின் உதவிச் செயற்பொறியாளர் சங்கரிடம் பேசினோம். “விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை அப்படியே விற்பதைக் காட்டிலும், அதனை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். பெரும்பாலான விவசாயிகள், திறந்தவெளியில் விளைபொருட்களை உலர்த்தி, பின்னர் அதனை சந்தைப் படுத்துகின்றனர். மண் தரையிலோ, சாலையிலோ காய வைப்பதால் பொருளின் நிறம் மங்குகிறது. கல், மண் போன்றவை கலந்து அதன் தரமும் குறைகிறது. இதைக் கருத்தில் கொண்டும், சூரியசக்தி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் பொருட்டும் வேளாண் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், (NADP-Nationla Agriculture Development Programme) விவசாயிகளுக்கு சூரியக்கூடார உலர்த்தி (Solar Dryer) அமைத்திட அரசு மானியம் வழங்குகிறது. சூரியக்கூடார உலர்த்தி அமைத்திட விரும்பும் விவசாயிகள், ஒவ்வொரு வருவாய் உட்கோட்டத்திலும் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்துக்குச் சென்று இதற்கென உள்ள விண்ணப்பத்தினை நிரப்பி, பயன்பெற விரும்பும் விவசாயியின் நிலப் பட்டா, வரைபடம், அடங்கல் போன்ற நில ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

சங்கர்
சங்கர்

விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, சூரிய கூடார உலர்த்தி அமைத்திட அனுமதி அளிக்கப்படும். 1,000 சதுர அடி பரப்பளவில் சூரிய கூடார உலர்த்தி அமைக்க ரூ.7,34,706 மட்டும் தொகையாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் ரூ.2,85,600 விவசாயிகளுக்கு மானியமாக செலுத்தப்படும். அதிக வெப்பத்தினால் குறைந்த நேரத்தில் விளைபொருட்கள் காய்ந்து விடுகிறது. மேலே கூடார அமைப்பு இருப்பதால், காற்று, மழை போன்றவற்றிலிருந்து பாதிப்பு இல்லாமல் பாதுகாக்கலாம். நிலக்கடலை, கொப்பரை தேங்காய், கறிவேப்பிலை, மிளகாய், வாழைப்பழம், மக்காச்சோளம், கொத்தமல்லி, முந்திரி, கீரை வகைகள் போன்றவற்றை உலர்த்தலாம்” என்றார்.

தொடர்புக்கு, உதவிச் செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், தென்காசி. 04633 290181