மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

கரும்பு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு... விவசாயிகளுக்குப் பலன் கொடுக்குமா?

கரும்பு வயலில் கோவிந்தராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
கரும்பு வயலில் கோவிந்தராஜ்

அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் கரும்புச் சாகுபடிக்கு 10 ஏக்கர் வரை வழங்கப்படும் கடன் உச்சவரம்பு 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வேளாண் சாகுபடிக்கு, 12 - 15 மாதங்களுக்கு உட்பட்ட குறுகிய காலப் பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்துள்ள, பதிவு செய்த கரும்பு விவசாயிகளுக்கு, 10 ஏக்கர் வரை கரும்புப் பயிர் சாகுபடிக்கு, 1.60 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

அந்த உச்சவரம்பை தற்போது, 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தி, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பயிர் கடனுக்கு 7 சத விகிதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. குறித்த காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்தி விட்டால், வட்டி தள்ளுபடி செய்யப்படும். தமிழகக் கூட்டுறவுத் துறையின் தற்போதைய அறிவிப்பு குறித்து, கரும்பு விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள். இதனால் விவசாயிகளுக்குப் பலன் கிடைக்குமா? யதார்த்த நிலைதான் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம், தோழகிரிப்பட்டியைச் சேர்ந்த கரும்பு விவசாயி கோவிந்தராஜ்:

‘‘கிசான் கார்டு வைத்திருக்கும் விவசாயி களுக்கு, நெல் உள்ளிட்ட எந்தப் பயிராக இருந்தாலும் அதிகபட்சம் 1.60 லட்சம் வரை வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. இது கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகள் அனைத்துக்கும் பொருந்தும். ஆனால், நெல்லுக்கு அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரைதான் கொடுக்கப்படுகிறது.

கரும்பு வயல்
கரும்பு வயல்

கரும்புக்கான கடன் என்பது, சர்க்கரை ஆலையும், விவசாயியும் ஒப்பந்தம் செய்து கொண்டு கடன் வாங்குவதாலும், கரும்பு அறுவடை செய்ததும் அதற்குரிய பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதாலும் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது.

ஆனால், இதைப் பெரும்பாலான வங்கிகள் கடைப்பிடிப்பதே இல்லை. 1.60 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வேண்டுமென்றால், சொத்துப் பத்திரத்தை பிணையமாகக் கேட்கிறார்கள். ஒரு சில கூட்டுறவு வங்கிகள், விவசாயிகளின் நலன் கருதி, அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் கடன் தொகையைப் பகிர்ந்து வழங்குகிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் இதே நிலைதான். கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சம் 1.60 லட்சம் ரூபாய்தான் கடன் வழங்கப்படும் என்பது, விவசாயிகளை வஞ்சிக்கக்கூடியதாக இருந்தது. காரணம் கரும்பு உற்பத்தி செய்ய ஏக்கருக்கு 75,000 - 90,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் அரசாங்க கணக்குப்படி, கடந்த மூன்று ஆண்டுகளாக, 50,000 ரூபாய்தான் உற்பத்தி செலவாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்தக் கணக்குப்படி பார்த்தால்கூட, 10 ஏக்கர் கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிக்கு 5 லட்சம் ரூபாய் கடன் தேவைப்படும். ஆனால், 1.60 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போதைய தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் கரும்பு கடனுக் கான உச்சவரம்பை மூன்று லட்சமாக உயர்த்திருப்பது, கரும்பு விவசாயிகளுக்குப் பெரிதும் ஆறுதல் அளிப்பதாகும். அதேசமயம் இந்த அறிவிப்பை கூட்டுறவு வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டும். இதைத் தமிழக அரசு முறையாகக் கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

ஒரத்தநாடு வட்டார கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பொறுப்பாளர் கக்கரை சுகுமாறன்:

‘‘கரும்புச் சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்வதற்காகவே தமிழக அரசு, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கரும்புக்கான கடன் உச்ச வரம்பை உயர்த்தியுள்ளது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியம் இல்லை. காரணம் கரும்புச் சாகுபடி என்று சொன்னாலே விவசாயிகள் வெறுத்துப் போய் இருக்கிறார்கள். விதைக்கரும்பு, உழவு, இடுபொருள்கள், களையெடுப்பு உள்ளிட்டவைகளுக்கான செலவுகள், கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளது. வெட்டுக்கூலி, போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவையும் அதிகரித்துள்ளன. ஒரு டன் கரும்புக்கு 3,500 - 4,000 ரூபாய் விலை கிடைத்தால்தான், விவசாயிகளின் உழைப்புக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற வகையில் ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும்.

சுகுமாறன்
சுகுமாறன்

ஆனால், தற்போது டன்னுக்கு 2,850 ரூபாய் விலை வழங்கப்படுகிறது. இது ஒருபுற மென்றால், சர்க்கரை ஆலைகளின் நிர்வாகச் சீர்கேடு களாலும் கரும்பு விவசாயிகள் கடுமை யாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

அறுவடைக்குத் தயாரான கரும்பை, உரிய நேரத்தில் அறுவடை செய்யாமல், தாமதப்படுத்துவதால், கரும்பு வெயிலில் காய்ந்து போய், சர்க்கரை கட்டுமானம் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அரவை செய்த கரும்புக்கு 15 நாள்களுக்குள் விவசாயிக்குப் பணம் வழங்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணத்தை வழங்காமல் பல மாதங்கள் இழுத்தடிக்கின்றன. பழைய கடன் நிலுவையில் இருப்பதால் விவசாயிகளுக்கு அடுத்த சாகுபடிக்கான புதிய பயிர் கடன் கிடைப்பதில்லை. கரும்புச் சாகுபடி செய்யும் விவசாயிகள் இப்படிப் பல வகைகளிலும் வஞ்சிக்கப்படுதால்தான் தமிழ்நாட்டில் கரும்புச் சாகுபடி பரப்பு மிக மோசமாகச் சுருங்கிக்கொண்டே வருகிறது.

தஞ்சாவூர் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில், முன்பு 6,000 ஏக்கர் பரப்பில் கரும்புச் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் இந்த ஆலையில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. ஆனால், தற்போது இந்த ஆலைக்கு உட்பட்ட பகுதிகளில் 1,500 ஏக்கர்தான் கரும்புச் சாகுபடி செய்யப்படுகிறது.

கரும்பு வயல்
கரும்பு வயல்

இந்த ஆலையில் தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் டன் கரும்பு தான் அரவை செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் இது மேலும் குறையும்.

தமிழ்நாடு முழுவதுமே இதுதான் நிலை. கரும்புக்கு உரிய விலை கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளின் நிர்வாகச் சீர்கேடு களாலும், விவசாயிகள் கரும்புச் சாகுபடியை கைவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அரவைக்குப் போதுமான கரும்பு கிடைக்காத தாலும் நிர்வாகச் சீர்கேடுகளாலும் பல சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 சர்க்கரை ஆலைகள் இயங்கிக்கொண்டிருந்த நிலையில் தற்போது 16 ஆலைகள் மட்டுமே செயல் படுகின்றன. இவற்றிலும்கூட பெரும் பாலனவை மரணத் தறுவாயில்தான் உள்ளன. எனவே, கரும்புக்கான கடன் உச்சவரம்பை உயர்த்துவதால் எந்தப் பலனும் இல்லை’’ எனத் தெரிவித்தார்.கரும்புக் கடனுக்கான உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்திருப்பது, கரும்பு விவசாயிகளுக்குப் பெரிதும் ஆறுதல் அளிப்பதாகும்.