நாட்டு நடப்பு
மகசூல்
Published:Updated:

டிரோன்கள் இயக்க பயிற்சி, இலவச தென்னங்கன்றுகள், மாலைநேர உழவர் சந்தை வேளாண் பட்ஜெட்டின் அறிவிப்புகள்!

நிதிநிலை
பிரீமியம் ஸ்டோரி
News
நிதிநிலை

அறிவிப்பு

2022-23-ம் ஆண்டுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை, இரண்டாவது முறையாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மார்ச் 19-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் இங்கே இடம் பிடிக்கின்றன.

* தோட்டக்கலைத்துறை மூலம் தமிழ்நாடு அங்கக வேளாண் இயக்கம் (Tamilnadu Organic Farming Mission) 30 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

* திண்டிவனம், தேனி, மணப்பாறையில் ரூ.381 கோடியில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப் படும்.

* கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும்.

* மல்லி, சம்பங்கி, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி போன்ற மலர்களின் சாகுபடியை அதிகரிக்க 5.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* உள்நாட்டு மீன் வகைகளின் உற்பத்தியை ஊக்கப்படுத்த 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்சார துறைக்கு 5,000 கோடி ரூபாய் வழங்கப்படும்.

* கைப்பேசியால் இயங்கும் தானியங்கி பம்பு செட் அமைக்கும் கருவிகள் 50% மானிய விலையில் 5,000 ரூபாயில் வழங்க ஏற்பாடு.

* பண்ணை இயந்திரமாக்கலை ஊக்குவிக்க 150 கோடி ஒதுக்கீடு.

* மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்புக் கூடம், பனை ஏறும் இயந்திரம் வழங்க 75% மானியம்.

* 8 கோடி ரூபாய் செலவில் தேன் வளர்ப்புக் கூடங்கள் அமைக்கப்படும்.

* டிரோன்கள் மூலம் பூச்சிமருந்து தெளிக்க உழவர் பயிற்சி நிலையங்களில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

* சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களைக் கொண்டு `பயறு பெருக்க சிறப்பு மண்டலம்’ உருவாக்கப்படும்.

* `தமிழ் மண் வளம்’ என்ற பெயரில் வேளாண் பல்கலைக்கழகம் மூலம் சிறப்பு இணையதளம் உருவாக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் பகுதியின் மண்வளத்தை அறிந்துகொள்ள முடியும்.

நிதிநிலை
நிதிநிலை


* கிராமங்களில் வீடுகளுக்கு தென்னங்கன்று வழங்கும் திட்டம் 300 கோடி ரூபாயில் செயல் படுத்தப்படும்.

* பயிர் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த 2,339 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* 5 கோடி ரூபாய் செலவில் 60,000 விவசாயி களுக்கு தார்ப்பாய் வழங்கப்படும்.

* 71 கோடி ரூபாய் செலவில் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்த மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்தப்படும்.

* மாவட்டத்தின் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள் விற்பனை.

* விவசாய தொழிலாளர்களை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும்.

வேளாண் பட்ஜெட் 2022-23 அறிவிப்புகள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா ?

விவசாயிகளின் மிக முக்கியமான கோரிக்கைகள் நிறைவேறியதா, விவசாயிகளே எதிர்பார்க்காத ஆச்சர்ய அறிவிப்புகள் ஏதேனும் இடம்பெற்றுள்ளனவா, விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் இருக்கிறதா? என்பன குறித்து விவசாயச் சங்க பிரதிநிதிகள் சிலரிடம் கேட்டோம்.

பி.ஆர்.பாண்டியன், தலைவர், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு.

‘‘இயற்கை வேளாண்மைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கோடு அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பட்ஜெட்டாகவும் இது அமைந்துள்ளது. பயிர்வாரி முறையை அமல்படுத்தி உற்பத்தியை ஊக்கப்படுத்துதல், சிறுதானிய சாகுபடியை அதிகப்படுத்துதல், மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட மருத்துவக் குணமுள்ள வேளாண் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும், காய்கறிகளைச் சந்தைப்படுத்துவதற்கும், சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு இயந்திரப் பயிற்சி, வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகை இயந்திரங்கள் வழங்குதல், சந்தை வசதிகளை உருவாக்குதல் எனத் தொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

அதேசமயம், விவசாயிகளின் மிக முக்கியமான எதிர்பார்ப்புகளான...நெல்லுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.’’

வரதராஜன், செயலாளர், தமிழ்நாடு இயற்கை உழவர் இயக்கம்.

``தமிழ்நாட்டில் மற்ற தொழில்களுக்கெல்லாம் தொழிற்பேட்டைகள் உள்ளன. ஆனால், வேளாண்மை சார்ந்த தொழிற்பேட்டை இதுவரையிலும் இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாகத்தான், திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் விளைபொருள்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. எனக்குத் தெரிந்த வரையில் இந்தியாவில் வேறு எங்கும் விவசாயத் தொழிற்பேட்டை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில், தமிழ்நாடு, இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழப்போகிறது.

திருவாரூர் மாவட்டம், நெல் சாகுபடியை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய மாவட்டம். நெல்லை விற்பனை செய்ய இந்த மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்கள். இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வேறு தொழில்களுக்கும் வாய்ப்பில்லை. இந்நிலையில், இங்கு வேளாண் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்கப்படுவது, இப்பகுதி விவசாயிகளுக்குப் பல்வேறு வகையான புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், மலர்கள் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுவார்கள். இங்கு அமைக்கப்படவுள்ள வேளாண் தொழிற்பேட்டையில், மதிப்புக் கூட்டும் தொழிற்கூடங்கள், நவீன வேளாண் கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள், விவசாயிகளுக்கு `ஆன்லைன்’ வர்த்தகம் தொடர்பான பயிற்சி மையம் உள்ளிட்டவை அமையும் என எதிர்பார்க்கிறோம். இந்த வசதிகள் எல்லாம் இருந்தால்தான், வேளாண் தொழிற்பேட்டையால் விவசாயிகள் பயன் அடைய முடியும்.’’

பி.ஆர்.பாண்டியன், சுகுமாறன், வரதராஜன்
பி.ஆர்.பாண்டியன், சுகுமாறன், வரதராஜன்

சுகுமாறன், தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த விவசாயி,

``காவிரி டெல்டா விவசாயிகளின் தலைமையிடமாகத் தஞ்சை மாவட்டம் இருந்தாலும், இங்க வேளாண் அறிவியல் நிலையம் இல்லாதது மிகப் பெரிய குறை. முன்பு தனியார் கே.வி.கே இருந்தது. தற்போது அது செயல்படவில்லை. ஆகையால், மீண்டும், கே.வி.கே கொண்டு வர வேண்டும். இது தொடர்பா வேளாண் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்துல, இது தொடர்பா வலியுறுத்தி இருந்தோம். ஆனா, அறிவிப்பு வரல. இது எங்களுக்கும் ஏமாற்றம்.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கும் கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்கணும்னு கோரிக்கை வச்சிருந்தோம். அதுவும் நிறைவேற்றப்படல. தஞ்சை மாவட்ட விவசாயிகள் நெல்லை மட்டுமே நம்பியிருக்காங்க. மாற்றுப் பயிர்கள் சாகுபடியை ஊக்கப்படுத்தவும், தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுக்கவும் தமிழக அரசு சார்பில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைக்கணும்ங்கற கோரிக்கையும் நிறைவேற்றப்படல.’’