மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

இயற்கையைச் சிதைக்கும் அரசாணை!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘பணம், சொத்துக்களைவிட சூழலைப் பாதுகாக்க வேண்டும்’’ என்று நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா (தி.மு.க) முழங்கினார்.

கூடவே ‘‘யானை வழித்தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது’’ மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் (தி.மு.க) தன் பங்குக்குக் குரல் கொடுத்தார்.

இந்த இருவரும் நாடாளுமன்றத்தில் பூவுலகைக் காக்க பூபாளம் பாடிக்கொண்டிருந்தபோது, ‘‘காப்புக்காடுகளைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள், குவாரிகள், சுரங்கங்கள் செயல்படலாம்’’ என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டு சூழலுக்கு வேட்டு வைத்துள்ளது.

‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்பதுபோல உள்ளது தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க அரசின் கொள்கை. தன் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பசுமைப் போராளிகளாகப் போராடச் சொல்லிவிட்டு, கொஞ்ச, நஞ்சம் உள்ள காப்புக் காடுகளைக் கபளீகரம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.

‘இயற்கையை அழிக்கக்கூடியது. காப்புக்காடுகளையொட்டிய பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் எந்த வகையான குவாரிகளையும், சுரங்கப் பணிகளையும் அமைக்கக் கூடாது’ என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதே அரசுதான் ஆணை பிறப்பித்தது. ஓர் ஆண்டுக்குள் ஏன் இந்த மாற்றம்?

தடை விதிக்கப்பட்ட ஒரு கிலோமீட்டர் பகுதியில் செயல்படாமல் முடங்கிவிட்ட கல் குவாரி உரிமையாளர்களின் விருப்பத்தையும், அரசுக்குக் கிடைக்கக்கூடிய வருமானத்தையும் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசாணையில் சொல்லியிருப்பதுதான் இன்னும் வேதனையாக உள்ளது.

காப்புக்காடுகளில் வாழும் பல்லுயிர்களின் பாதுகாப்பைவிட கல்குவாரி முதலாளிகளின் நலனும் அரசுக்கு அதிக வருவாயும் அவசியம் என்று சொல்வது, நல்ல அரசுக்கு அழகு அல்ல. இயற்கையைச் சிதைக்கும் இந்த அரசாணையை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

- ஆசிரியர்

கார்ட்டூன்
கார்ட்டூன்