
சுற்றுச்சூழல்
நாட்டின் மிகப்பெரிய தேயிலைத் தொழில் கூட்டுறவு அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது இண்டுகோசர்வ் (INDCOSERVE) அமைப்பு. நீலகிரியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு தேயிலை விவசாயிகள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஆங்கிலேயர்கள் நீலகிரியில் அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பயிர்களில் ஒன்று தேயிலை. காடுகளையும் மரங்களையும் அழித்தே தேயிலைப் பயிர் செய்யப்பட்டது. மேலும், தேயிலைத்தூள் உற்பத்தி செய்யவும் அதிகளவு மரங்கள் வெட்டப்பட்டு விறகாக எரிக்கப்படுகின்றன. இதனால் மலைப்பகுதியின் பாரம்பர்ய மரங்களும் புற்கள் இனங்களும் அழிந்து வருவதாகச் சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.
இதைத் தனியார் பெருந்தேயிலைத் தோட்டங்கள் ஒப்புக்கொள்ள மறுத்து வருகின்றன. ஆனால், அரசு தேயிலைத் தோட்டங்கள் வனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ‘இண்டுகோசர்வ்’ கட்டுப்பாட்டில் இயங்கும் இரண்டு தேயிலைத் தொழிற்சாலைகள், அதன் வளாகத்தைச் சூழலியலோடு ஒத்த தன்மையுடன் மாற்றும் முன்மாதிரி பணியில் களமிறங்கியுள்ளது.

இந்தப் புது முயற்சி குறித்துப் பேசிய இண்டுகோசர்வ் தலைமை நிர்வாக அதிகாரியும் நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹு, “தேயிலைத்தூள் தயாரிக்க அதிகளவு மரங்களை எரிக்க வேண்டி இருப்பது உண்மைதான். இதிலிருந்து வெளியேறும் புகையும் சாம்பலும் அருகில் உள்ள நீரோடைகளையும் பாதிக்கிறது. இதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
முதல் முயற்சியாகத் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கட்டபெட்டு மற்றும் மாகாலிங்கா ஆகிய இரண்டு தொழிற்சாலை வளாகத்தில் ஆக்கிரமித்துள்ள களைத்தாவரங்களை அகற்றிவிட்டு, நீலகிரி மலைப்பகுதியின் பூர்வீக மரங்களை மரங்களை நடவு செய்திருக்கிறோம்.
இதோடு நீலகிரியின் பூர்வீக புல் வகைகளையும் நட்டுள்ளோம். இந்தப் பகுதியில் காணப்படும் பறவைகளை ஓவியமாக வரைந்துள்ளோம். இதைக் காண்பதற்குத் தொழிற்சாலைக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைக்கிறோம். இதன் மூலமாகச் சூழலியல் சார்ந்த நேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.
கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலையின் இந்தச் செயல், சூழலியல் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.