
மரம் வளர்த்தால்... பணம் விளையும்... அனுபவமும் அறிவும் கைகோக்கும் தொடர்-4
வேளாண் காடுகள் என்பது தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. விவசாயி களால் நீண்டகாலமாகவே இது உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்பெல்லாம், வீட்டுச் சமையலுக்கான எரிபொருள் தேவைக்காகவும், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களுக்காகவும்... அதற்குரிய மரப்பயிர்கள் வேளாண் காடுகள் முறையில் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், இப்போது அப்படியல்ல. பல்வேறு வகையான தொழிற்சாலைகளுக்குத் தேவையான மரங்களை, வேளாண் காடுகள் மூலம் உற்பத்தி செய்கிறோம்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் பொருளா தார ரீதியாக விவசாயிகளுக்குப் பயனளிக்கக் கூடியவை என்று 30 விதமான மரங்களைப் பட்டியலிட்டுள்ளோம். தடிமரம், ஒட்டுப் பலகை, காகிதக்கூழ், எரிசக்தி, எண்ணெய் வித்து எனப் பயன்பாட்டின் அடிப்படையில் பல வகையான மரங்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க வணிகம் சார்ந்தது. தொழில் நிறுவனங்களுக்கு என்னென்ன மரங்கள் தேவையோ, அதை விவசாயிகள் மூலம் வளர்த்து சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். அன்றைக்கு மரத்தையும், வேளாண் பயிரையும் இணைத்துவிட்டாலே வேளாண் காடுகள் என்பார்கள். இன்றைக்குத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வதுதான் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் என்கிறோம்.

தமிழ்நாட்டில் 7 வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலம்... சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு மண்டலம்... தஞ்சை, திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மண்டலம்... கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட வடமேற்கு மண்டலம்... கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடகிழக்கு மண்டலம் ஆகிய பகுதிகளில் தான் வேளாண் காடுகள் திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மலைப்பிரதேசம் மற்றும் அதிக மழைப் பொழிவு உள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகளிடம் வேளாண் காடுகள் திட்டத்தை நாங்கள் ஊக்கப்படுத்துவ தில்லை. காரணம் மலைப்பிரதேசங்களில் வளர்க்கப்படும் மரங்களை அறுவடை செய்ய, வனத்துறை தொடர்பான விதி முறைகள் உள்ளன. அதனால் விவசாயிகள் சிரமப்படக்கூடும்.
மழைப்பொழிவு அதிகமுள்ள கன்னியா குமரி போன்ற மாவட்டங்களில் மரங்கள் அல்லாத மற்ற பயிர்களைச் சாகுபடி செய்து விவசாயிகள் குறுகிய நாள்களில் நிறைவான வருமானம் பார்க்க முடியும். இதுபோன்ற காரணங் களால்தான்... மலைப்பிரதேசம் மற்றும் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் இருக்கக்கூடிய விவசாயிகளிடம் வேளாண் காடுகள் திட்டத்தை ஊக்கப்படுத்துவதில்லை.

வேளாண் காடுகள் திட்டத்தின் மூலம்... தடிமரம், ஒட்டுப்பலகை, காகிதக்கூழ், எரிசக்தி, எண்ணெய் வித்து எனப் பயன் பாட்டின் அடிப்படையில் பல வகையான மரங்கள் வளர்க்கலாம். இவற்றில் தடிமரங் களின் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் குறித்துதான் இந்த அத்தியாயத்தில் விரிவாக அலசப்போகிறோம். தேக்கு, மகோகனி, குமிழ், சிசு ஆகிய மரங்கள் தடி மரத்துக்கு (கட்டில், நாற்காலி, மேஜை, பீரோ, ஜன்னல், கதவுகள் உள்ளிட்டவை செய்வதற்கான மரங்கள்) ஏற்றவை. தடிமரத்தில் வணிகரீதி யாக மிகப்பெரிய சந்தையைக் கொண்டது தேக்குதான். முன்பெல்லாம் வனப்பகுதிகள் மற்றும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளின் கரைகள் உள்ளிட்ட மற்ற பகுதிகளில்தான் தேக்கு மரங்கள் அதிகமாக விளைவிக்கப்பட்டன. அவற்றை வெட்டுவதற்கு காலநிர்ணயம் கடைப்பிடிக்கப்பட்டன. விவசாயிகளின் தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் வளர்க்கப்பட்ட தேக்கு மரங்களுமேகூட, அதன் முதிர்ச்சித் தன்மைக்காகச் சுமார் 30 ஆண்டுகள் காத்திருந்துதான் அறுவடை செய்யும் நிலை இருந்தது.
அதாவது, பொருளாதார அவசர தேவை ஏற்பட்டாலுமே கூட, அவற்றைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்ய மாட்டார்கள். ஆனால், இப்போது அப்படியல்ல. குறிப்பாக வேளாண் காடு முறையில் வளர்க்கப்படும் தேக்கு மரங்களை, அவற்றின் சுற்றளவை மட்டும் கணக்கிட்டு, பல்வேறு தேவைகளுக் காக விற்பனை செய்ய முடியும். 2 அங்குலம் சுற்றளவு இருந்தால், எரிபொருள் தேவைக் காகவும்... 5 அங்குலம் சுற்றளவு இருந்தால் காகிதக்கூழ், 18 அங்குலம் இருந்தால் ஒட்டுப் பலகை மரமாகவும், 24 அங்குலம் சுற்றளவு இருந்தால் தடிமரமாகவும் விற்பனை செய்யலாம். சந்தை நிலவரத்தைப் பொறுத்து ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான விலை கிடைக்கும். சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க, அதற்கு ஏற்ப கூடுதல் விலை கிடைக்கும்.

2.5 ஏக்கருக்குக் கீழ் நிலம் உள்ள சிறு விவசாயிகள், தங்களுடைய நிலத்தின் வரப்பு ஓரத்திலேயே உயிர்வேலியில் தேக்கு மரங்களை வளர்த்து வருமானம் பார்க்க முடியும். மரத்துக்கு மரம் 6 அடி இடைவெளி விட்டாலே போதும். நிலத்தின் உள்ளே, தேக்கு சாகுபடி செய்து, அதற்கிடையே வேறு ஏதேனும் ஊடுபயிர்கள் சாகுபடி செய்து அவ்வப்போது வருமானம் பார்க்க வேண்டும் என விவசாயிகள் விரும்பினால்... தலா 12 அடி இடைவெளியில் தேக்கு நட வேண்டும். சிறு விவசாயிகளுக்கு ஊடுபயிர் மிகப்பெரிய வாழ்வாதாரமாக இருக்கும். அதற்குதான் 12 அடி இடைவெளி விடுகிறோம். ஊடுபயிர் களுக்குக் கொடுக்கப்படும் தண்ணீரும் இடுபொருள்களும் தேக்கு மரங்களை நன்கு பெருக்கமடையச் செய்யும். நன்கு ஊடுபயிர் செய்ய வேண்டுமென்றால் 12 அடிக்கு மேலும் இடைவெளி விடலாம்.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்... தேக்கு மரங்களுக்கு இடையே ஊடுபயிராகக் கறிவேப்பிலை சாகுபடி செய்கிறார்கள். சில பகுதிகளில் மலர்கள் சாகுபடி செய்கிறார்கள். இவ்வாறாக, விவசாயிகள் தேக்கு சாகுபடி செய்து... இதில் ஊடுபயிராக, தங்களுக்குத் தேவையான தோட்டக்கலை பயிர்கள், கால்நடை தீவனம் என்ற எது வேண்டுமானாலும் பயிர் செய்யலாம். சிலர், ஊடுபயிரே வேண்டாம்... நிலம் முழுவதுமே தேக்கு மரங்களை மட்டுமே சாகுபடி செய்து, இதைத் தோப்பாக உருவாக்க விரும்பினால்... தலா 6 அடி இடைவெளியில் தேக்கு நடலாம். ஒரு ஏக்கரில் 1,200 மரங்கள் நட முடியும். இதுபோல் அதிக எண்ணிக்கையில் அடர்த்தி யாக நடும்போது... தேக்கு மரங்கள் நன்கு உயரமாகவும் வளைவு, நெளிவு இல்லாமல் செங்குத்தாகவும் வளரும்.

3 - 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு வரிசை விட்டு, ஒரு வரிசை அறுவடை செய்து காகித தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யலாம். முட்டுக்கால் பயன்பாட்டுக்கும் விற்பனை செய்யலாம். அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சற்றுத் தரம் குறைவான மரங்கள் மற்றும் பலவீனமான மரங்களை அறுவடை செய்து விற்பனை செய்யலாம். அதன் பிறகு, மீதமுள்ள மரங்கள் தரமாக வளரும். 8 - 10 ஆண்டுகளில் மரத்தின் சுற்றளவும் 24 அங்குலத்துக்குப் பெருத்திருக்கும். அவற்றை ஆண்டுக்கு ஒரு முறை கவாத்து செய்ய வேண்டும். கவாத்து செய்யப்பட்ட இடத்தில் பூஞ்சை மற்றும் பூச்சித்தாக்குதல்கள் ஏற்படாமல் தடுக்க, வேப்ப எண்ணெய் தடவ வேண்டும்.
மண் நன்கு வளமாக இருந்து, பராமரிப்பும் நல்ல முறையில் இருந்தால், சுமார் 15 - 20 ஆண்டுகளில் 24 - 48 அங்குலம் சுற்றளவு, 20 - 30 அடி உயரத்துக்கு மரங்கள் நன்கு செழிப்பாக விளைந்திருக்கும். குறைந்தபட்சம் 15 ஆண்டுகளில் அறுவடை செய்யப்படும் ஒரு தேக்கு மரத்திலிருந்து குறைந்தபட்சம் 15 கன அடி தடி மரத்துண்டுகள் கிடைக்கும். ஒரு கன அடிக்குக் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் விலை கிடைத்தாலே, ஒரு மரத்துக்கு 22,500 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்.
தடிமரத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக் குத் தேவையான 70 - 80 சதவிகிதம் வெளிநாடு களிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒருகாலத்தில் நாம் அதிக அளவு ஏற்றுமதி செய்த நிலை மாறி, இப்போது இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். சந்தைகளில் கானா தேக்கு, தென்ஆப்பிரிக்கா தேக்கு, நைஜீரியா தேக்கு, பர்மா தேக்கு, மினி பர்மா தேக்கு என விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தைகளில் தேக்குக்கு அடுத்த படியாக, மகோகனிக்கு நன்கு வரவேற்பு உள்ளது. இதில் புதிய ரகங்கள் பல வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கும் அதிக சந்தை வாய்ப்புகள் உள்ளன. இதேபோல் குமிழ் தேக்குக்கும் சந்தை வாய்ப்புப் பிரகாசமாக உள்ளது. நடவு செய்த 8 ஆண்டுகளிலேயே குமிழ்தேக்கு அறுவடை செய்ய லாம். மூன்று மரம் சேர்ந்தாலே ஒரு டன் கிடைத்துவிடும். டன்னுக்கு ரூ.8,000 – ரூ.10,000 கிடைக்கும்.

நம் நாட்டில் சிசு பெரிய அளவில் பிரபலம் ஆகவில்லை. ஆனால், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அதைப் பரவலாகப் பயன் படுத்த தொடங்கியுள்ளனர். அதில் தற்போது புதிய ரகங்கள் வெளியாகிக்கொண்டிருக் கின்றன. வேளாண் காடுகள் திட்டத்தில் தோதகத்தி மரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். பந்தல் மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுவாக, தடிமரங்களில் அடர்த்தி அதிகம் இருப்பதால் எரியும் திறன் சிறப்பாக இருக்கும். அதைக் கருத்தில் கொண்டுதான், இவற்றைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்து, தொழிற்சாலைகளின் எரிபொருள் தேவைக்கு அதிக அளவில் பயன்படுத்து வதற்கான சாத்தியக்கூறு ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்தியாவில் உள்ள பெரும் தொழிற் சாலைகள் தங்களுடைய எரிபொருள் தேவைக்கான மரங்களை வெளிநாடுகளில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கின்றன. இந்நிலையில்தான் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், நம்முடைய விவசாயிகளுக்குக் கைக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் இதற்கான செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். தமிழ்நாட்டில் சுமார் 1,00,000 விவசாயிகள் வேளாண் காடுகளை வெற்றி கரமாக வளர்த்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 75,000 ஹெக்டேர் பரப்பில், வேளாண் காடுகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
வேளாண் காடுகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் மரங்களை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்வதற்காக, தற்போதுவரை 80 தொழிற்சாலைகளை விவசாயிகளுடன் இணைத்துள்ளோம். தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மரங்களுக்கான கொள்முதல் விலையை முன்கூட்டிய அறிவிக்கச் செய்கிறோம். விருப்பப்பட்ட விவசாயிகளை அதில் இணைய வைக்கிறோம்.
வரும் காலத்தில் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தைப் போல விவசாயிகள் ஒன்றிணைந்து எங்களிடம் இவ்வளவு தேக்கு இருக்கிறது. விலை இவ்வளவு என்று தொழிற்சாலைகளுடன் பேசும் நிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
வேளாண் காடுகள் வளர்ப்பில் ஈடுபட விரும்பும் விவசாயிகளில் சிலர், இதற்கான தொழில்நுட்பம், என்னென்ன மரங்கள் நடலாம். எந்தெந்த மரங்களுக்குச் சந்தை வாய்ப்புகள் நன்றாக உள்ளது, எதற்கு அதிக விலை கிடைக்கும் என்ற தகவல்களைத் தெரிந்துகொள்ளாமலே இதில் ஈடுபடுகிறார்கள்.
இதனால் தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, வனத்துறை மற்றும் வன ஆராய்ச்சி நிறுவனங்களின் வல்லுநர் களிடம் முறையாகக் கலந்தாலோசித்து இதில் ஈடுபட்டால், வெற்றி நிச்சயம். நிறைவான லாபம் பார்க்க முடியும்.
- கிளைகள் படரும்
அனுமதி அவசியம்...
தேக்கு, தோதகத்தி ஆகியவற்றைப் பயிர் செய்தவுடன், வருவாய்த்துறை அடங்கலில் பதிவு செய்துவிட வேண்டும். மரத்தை வெட்டும்போது மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பம் கொடுத்தால் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்துவிட்டு அனுமதி கொடுத்துவிடுவார்கள்.
பதப்படுத்திக் கொடுக்கிறோம்...
தடிமரத்துக்கான தேக்கில், அதன் அடர்த்தி மிகவும் முக்கியம். ஒரு கன மீட்டருக்கு 660 கிலோ எடை இருந்தால் அது நல்ல தேக்கு என்று அர்த்தம். இது ஒருபுறமிருக்க, தேக்கு மரத்தில் கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை செய்யும்போது, அதன் ஈரப்பதத்தைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். சில வீடுகளில் உள்ள கதவுகளை மழைக்காலத்தில் திறக்கவே முடியாது. வெயில் காலத்தில் இலகுவாக இருக்கும். இது தரத்தில் ஏற்படும் பிரச்னை. மரத்தின் தன்மையைப் பொறுத்துப் பதப்படுத்தினால் நெகிழ்வுத்தன்மை பிரச்னை இருக்காது. ஈரப்பதத்தை 12 சதவிகிதம் அளவுக்குக் குறைப்பது அவசியம். அதேபோல் பதப்படுத்திக் கொடுக்கும் தொழில்நுட்ப வசதியும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புக்கு,
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தொலைபேசி: 04254 222010.

தடிமரத்துக்கான தேக்கில், அதன் அடர்த்தி மிகவும் முக்கியம். ஒரு கன மீட்டருக்கு 660 கிலோ எடை இருந்தால் அது நல்ல தேக்கு என்று அர்த்தம். இது ஒருபுறமிருக்க, தேக்கு மரத்தில் கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை செய்யும்போது, அதன் ஈரப்பதத்தைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும். சில வீடுகளில் உள்ள கதவுகளை மழைக்காலத்தில் திறக்கவே முடியாது. வெயில் காலத்தில் இலகுவாக இருக்கும். இது தரத்தில் ஏற்படும் பிரச்னை. மரத்தின் தன்மையைப் பொறுத்துப் பதப்படுத்தினால் நெகிழ்வுத்தன்மை பிரச்னை இருக்காது. ஈரப்பதத்தை 12 சதவிகிதம் அளவுக்குக் குறைப்பது அவசியம். அதேபோல் பதப்படுத்திக் கொடுக்கும் தொழில்நுட்ப வசதியும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் உள்ளது. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தொடர்புக்கு,
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தொலைபேசி: 04254 222010.
- முனைவர் பார்த்திபன்