கிராமப் பொருளாதார முன்னேற்றத்தில் மிகச்சிறப்பான பங்களிப்பை செய்யும் வேளாண்மையும், வேளாண் சார்ந்த தொழில்களும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியமானதாகும். அத்தகைய வேளாண்மையில் தொழில்நுட்பமும், புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பும் விவசாயிகளுக்கு உதவுவதோடு, சாகுபடியிலும் உற்பத்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரங்களை கண்டுபிடிப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில், வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரத்தை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குநர் முகமது அஸ்லம், வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது,
வேளாண்மை துறை மூலம் மாநில அளவில் புதிய உள்ளூர் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்கும் ஒரு விவசாயிக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில், இயந்திரத்தை புதிதாகக் கண்டுபிடிக்கும் ஒரு விவசாயிக்கு ரூ. 1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனத்துக்கு...
போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் விவசாயி உழவர் செயலி மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முறையாக நிறைவு செய்து நுழைவு கட்டணமாக ரூ. 100 -ஐ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் செலுத்தி விண்ணப்ப படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விவசாயிகளின் கண்டுபிடிப்புகள், அவரது சொந்த கண்டுப்பிடிப்பாக இருக்க வேண்டும்.
இந்த கண்டுப்பிடிப்பு அல்லது தொழில்நுட்பமானது இதற்கு முன்னதாக வேறு எந்தப் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றதாக இருக்கக் கூடாது.
பங்கேற்பாளர் தனது சாதனை குறித்து விளக்கத்தை செயல் விளக்கங்கள், புகைப்படம் அல்லது வீடியோ ஆகியவற்றுடன் விளக்க வேண்டும்.
இந்த உள்ளூர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு விலை குறைவாகவும், அதே சமயம் விவசாயிகளின் வேளாண்மைச் செலவைக் குறைக்கக் கூடியதாகவும் இருக்கவேண்டும்.
அதிக விளைச்சலை தரக்கூடிய வகையில் பயனுள்ள கருவியாக இருக்க வேண்டும்.
மனித உழைப்பைக் குறைத்து நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும்.
கூடுதல் தகவலுக்கு, தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம்.