கழனிகளை உழ, நிலத்தை சமமாக செப்பனிட என்று டிராக்டர், ரொட்டவேட்டர் என்று எவ்வளவோ நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன. ஆனால், நம் முன்னோர்கள் கழனியை உழ மாடுகள் கொண்டு கலப்பை வழியாகவும், சேறு நிறைந்த நிலத்தை சமப்படுத்த மாடுகளைப் பூட்டி பரம்படிக்கும் முறை மூலமாகவும் விவசாயம் பார்த்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் விஞ்ஞானம் விவசாயத்தை ஆக்ரமித்துவிட்டப் பிறகு, ஏர் கலப்பையும், பரம்படிக்கப் பயன்படுத்தும் மட்டப்பலகையும், மாடுகளைக் கொண்டு வயலை செப்பனிடும் முறைமையும் கிட்டத்தட்ட வழக்கொழிந்தே போய்விட்டன.

ஆனால், கரூரைச் சேர்ந்த இயற்கை விவசாயியான சிவக்குமார், பழைமையை விடாமல், தனது வயலில் காங்கேயம் காளைகளைக் கொண்டு, பனை பலகையை வைத்து, பரம்படிக்கும் பழைய தொழில்நுட்பத்தில் நிலத்து சேறை மேடு, பள்ளம் இல்லாமல் சமப்படுத்தி வருகிறார்.
கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். அடிப்படையில் கட்டுமான பொறியாளரான இவர், தற்போது திருமாநிலையூர் கிராமத்தில் உள்ள அவரது மூன்று ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பழைமையை மறக்காமல் தனது வயலில் மாடுகட்டி பரம்படித்துக்கொண்டிருந்த சிவக்குமாரைச் சந்தித்துப் பேசினோம்.

``கரூரில் உள்ள ஒரு கல்லூரியில் தாளாளராகப் பணிபுரிந்து வந்தேன். கடந்த மூணு வருஷமா இயற்கை விவசாயம் மீதுள்ள ஆர்வத்தால், முழுநேர விவசாயியா மாறிட்டேன். இன்னைக்கு டிராக்டர், ரொட்டவேட்டர், நடவு நடும் இயந்திரம், கதிர் அறுவடை செய்யும் இயந்திரம்னு விவசாயம் 90 சதவிகிதம் நவீனமயமாயிட்டு. நான் இயற்கை விவசாயம் செஞ்சாலும், பல விசயங்களுக்கு இயந்திரங்களைத்தான் பயன்படுத்துகிறேன். காரணம், ஆள் பற்றாக்குறை, விவசாய வேலைகளை விரைவாக செய்யக்கூடிய சூழல் ஆகியவைதான். ஆனால், சில விஷயங்களில் இயந்திரங்களைவிட, நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பழைமையான தொழில்நுட்பத்தை மட்டுமே பயன்படுத்துகிறேன். அதில் ஒன்றுதான், மாடு கட்டி பரம்படிப்பது. நடவு நடும் வயலில் தேவையான அளவு சேறு அடித்தபின், மேடு, பள்ளமாக இருக்கும் சேறை சமமாக மாற்ற பயன்படுத்தும் முறைதான் பரம்படிக்கும் முறை.
டிராக்டர், ரொட்டவேட்டரில் சேறை வயல் முழுக்க சமப்படுத்த முடியாது. விரைவாகச் செல்வதால், எங்கே மேடு, எது பள்ளம்னு சரியா இனம்காண முடியாது. ஆனால், வி வடிவத்தில் உள்ள பனை மர பரம்புப் பலகையில் கயிறு மூலம் மாடுகளைப் பூட்டி, அதில் ஓர் ஆள் ஓட்டிச் செல்லும்போது, பள்ளமாக இருக்கும் இடத்தில் தரையில் நடந்தும், மேடாக இருக்கும் பகுதியில் பலகை மீது ஏறி நின்றும், பரம்படிக்கும்போது, வயல் முழுக்க 100 சதவிகிதம் மேடு பள்ளத்தை சரிபண்ண முடியும்.
அதுவும், இயற்கை விவசாயம் பண்றதால, மாடு கட்டி பரம்படிப்பதன் மூலம் வயலை சமப்படுத்துவதால், வயலுக்கு கொடுக்கக்கூடிய அத்தனை இயற்கை இடுபொருள்களும் 100 சதவிகிதம் பயிர்களுக்கு போய்ச் சேரும். இது நமது முன்னோர்களின் பாரம்பர்ய தொழில். இந்தப் பரம்படிக்கும் முறை தற்போது அழிந்துபோய்விட்டது. அதை மீட்டெடுக்கும் முயற்சியாகத்தான் என் வயலில் இந்த முறை மூலம் சமப்படுத்தி வருகிறேன்.

அதோடு, காங்கேயம் காளைகளை வைத்துக்கொண்டு தொழில் ஏதும் இல்லாமல் தவித்த 60 வயது முனியப்பன்ங்கிற கூலித் தொழிலாளிக்கும் இதன் மூலம் நான் அவ்வப்போது வேலை தர முடியுது. கண்பார்வையில் முனியப்பன் வயல்ல உள்ள மேடு பள்ளங்களை அழகா சமமாக்குகிறார். என்னைப்போல இந்த பரம்படிக்கும் முறையை விவசாயிகள் பயன்படுத்தினா, பழைமையை மீட்டெடுத்த மாதிரியும் இருக்கும், முனியப்பன் மாதிரியான கூலி ஆட்களுக்கு வேலை கிடைத்த மாதிரியும் இருக்கும். இப்போ உள்ள சின்ன பசங்க, இதை ஆச்சர்யமா பார்க்குறாங்க.
இப்போ உள்ள தலைமுறை அதை மறந்துட்டுனுதான் அர்த்தம். இப்போ, நான் பரம்படித்து தயார் பண்ணிக்கிட்டு இருக்கிற வயல்ல பாரம்பர்ய நெல் ரகத்தை பயிரிடப் போகிறோம். `காட்டுயானம், பால்குடல்வாழை, ரத்தசாளி, தங்கசம்பா, மாப்பிள்ளை சம்பா, கறுப்புக் கவுனி உள்ளிட்ட பயிர் ரகங்களை நடவு செய்ய இருக்கிறேன். கடந்த முறையும் பாரம்பர்ய ரகங்களைப் பயிரிட்டிருந்தோம். என்னைப் பார்த்துட்டு, என்னோட நண்பர்கள் சிலர் விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதை நிறுத்தியிருக்காங்க.

இப்போ, நான் மாடு கட்டி பரம்படிக்கிறதைப் பார்த்துட்டு, அவங்களும் இதே முறையில் வயலை சமப்படுத்த முடிவு பண்ணியிருக்காங்க. என்னோட வயலுக்குப் பக்கத்துலதான் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் போற தேசியநெடுஞ்சாலை போகுது. கூப்பிடு தொலையில் கரூர் மாநகராட்சி இருக்கு. `இப்படிப்பட்ட இடத்தை பிளாட் போடாம இயற்கை விவசாயம் செய்றீயே, உனக்கு பைத்தியமா?'னு பலரும் கேட்கிறாங்க. ஆமாம், இயற்கை விவசாய பைத்தியம். நம் உடல் நலமாக இருக்க இயற்கை விவசாயம் அவசியம்.
இந்த பரம்போட அமைப்பை பார்த்தீங்கன்னா, பனைமரத்தை வி ஷேப்ல கட் பண்றாங்க. அதுல கலப்பைக்கு இருக்கிற நீட்ட மூங்கில் கம்பு வச்சு பொருத்துறாங்க. அதை நுகத்தடியில் வச்சு கலப்பையை பூட்டுற மாதுரி கயிறை வச்சு பூட்டுறாங்க. அதேபோல், மாட்டு கழுத்துல இருக்கிற நுகத்தடியில இரண்டு கயித்தைக் கட்டி, அதைத் தன்னோட கையில் பிடிச்சுக்கிட்டு, பரம்பு பலகையில் ஏறி நின்னு போகும்போது பேலன்ஸுக்காகவும், பிடிமானத்துக்காகவும் பயன்படுத்துறாங்க. அந்த பின்னாடி கட்டையில் ஏறி நிக்கும்போது, லேசா பின்னாடி சாய்ஞ்சுக்கணும். இல்லைன்னா, சேறு வழுக்கி தடுமாற நேர்ந்தா, பேலன்ஸ் இல்லாம முன்னாடி விழ வாய்ப்பிருக்கு.

இப்படி, பின்னாடி லேசா சாய்ஞ்சு நிப்பதன்மூலம் அதைத் தடுக்க முடியும். இதன்மூலம், எளிதா வயல்ல லோடை கொடுக்கலாம், லோடை எடுக்கலாம். மண்ணை ஏத்தலாம், மண்ணை இறக்கலாம். பனைமரத்துல ஏன் பரம்பு செய்றாங்கன்னா, எவ்வளவு தண்ணிப் பட்டாலும் பனை பலகை ஒண்ணும் ஆகாது. இந்த வயலை உழுவதற்கு முன்பு பலதானியம் விதைச்சு அது வளர்ந்ததும் மடக்கி உழுதேன். இதன்மூலம் முழுமையான தழைச்சத்து கிடைக்கும். கூடுதலாக எருக்கந்தழைகளைக் கொண்டு வந்து வயல்ல போட்டு, மறு உழவு உழுதேன்.
இதனால், போரான் சத்து அதிகம் கிடைக்கும். அதன்பிறகு, இரண்டு உழவு ஓட்டணும். இரண்டு நாள் விட்டுட்டு, இரட்டிப்புனு சொல்வோம், அதாவது மறுபடியும் இரண்டு உழவு இரண்டு டேரக்ஷன்ல உழணும். அதன்பிறகு, இந்த பரம்பை அடிச்சோம்னா, வயல் முழுக்க சமமாயிரும். பரம்படிக்கிறதோடு இன்னொரு நன்மை என்னன்னா, ஒரே சமமா வயல் மாறுறதால, நெல்மணியும் ஒரே சமமா முளைத்து வளரும். களை எடுக்கவோ, உரம் தெளிக்கவோ, அறுவடை பண்ணும்போதோ. பயிர் வரிசை முறையில் இருப்பதால், எல்லா வேலைகளும் சுலபமா இருக்கும்.

இந்தப் பரம்படிக்கும் முறைக்கு காங்கேயம் மாடுகள் உகந்தது. மாலை வரை ஓட்டினாலும் அசராமல் சேற்றில் நடக்கும். பரம்படித்தல், மாட்டு வண்டி போன்ற விசயங்கள் அருகியதால் தான், நாட்டுமாடுகள் வளர்ப்பது நம்மிடையே குறைந்து போய்விட்டது. பழையபடி விவசாயத்தில் பரம்படிக்கும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், நாட்டுமாடுகள் வளர்ப்பையும் ஊக்குவிக்க முடியும்" என்றார்.