மகசூல்
நாட்டு நடப்பு
Published:Updated:

முத்தான லாபம் கொடுக்கும் முந்திரி... ஆண்டுக்கு ரூ.80,000

முந்திரி
பிரீமியம் ஸ்டோரி
News
முந்திரி

மகசூல்

‘தரிசு நிலத்தின் தங்கம்’ எனச் சொல்லப்படும் முந்திரிதான் அரியலூர் மாவட்ட விவசாயிகள் வாழ்க்கையில் படியளந்து கொண்டிருக்கிறது. இந்த முந்திரி விவசாயம் தான் எங்க குலதெய்வம், அதுதான் எங்க கற்பக விருட்சம் என்று கட்டியம் கூறுகிறார், அரியலூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன்.

அரியலூர் மாவட்டம், கடுபொய்யூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டே விவசாயத்தையும் செய்து வருகிறார். இவருடைய வரகுச் சாகுபடி குறித்த கட்டுரை, 25.01.2018-ம் இதழில், ‘மானாவாரியில் விளைந்த வரகு! - பள்ளி ஆசிரியரின் இயற்கைச் சாகுபடி!’ என்கிற தலைப்பில் பசுமை விகடனில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். தற்போது அவருடைய தோட்டத்தில் இயற்கை முறையில் முந்திரி விவசாயம் செய்வதாகவும் அதில் கணிசமான வருமானம் கிடைப்பதாகவும் கேள்விப் பட்டோம். அரியலூர் - கள்ளக்குறிச்சி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோழன்குறிச்சி கிராமத்தில் உள்ளது ரவிச் சந்திரனின் தோட்டம். ஒரு விடுமுறை நாளில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ரவிச்சந்திரனைச் சந்தித்தோம்.

முந்திரி தோட்டத்தில்
 ரவிச்சந்திரன்
முந்திரி தோட்டத்தில் ரவிச்சந்திரன்


‘‘அரியலூர், மிகவும் வறட்சியான மாவட்டம். மழையை நம்பிச் செய்யுற மானாவாரி விவசாயம்தான் இங்க அதிகம். பெரும்பாலும், சிறுதானியங்கள், முந்திரி விவசாயம்தான். பாரம்பர்யமான விவசாயக் குடும்பம் எங்களோடையது. உளுந்து, கம்பு, சோளம், வரகு, முந்திரியை மானாவாரில சாகுபடி செய்றோம். முந்திரிக்கு ஊடுபயிரா சில காய்கறிகளையும் போடுறோம். நானும் பள்ளிக்கூடத்துல படிக்கிற காலத்துலேயே விவசாய வேலைகளைச் செய்ய ஆரம்பிச் சுட்டேன். பத்தாவது படிக்கிறப்போ, பொதுத் தேர்வு சமயத்துலகூட, விடியற்காலையில முந்திரிப்பழம் பறிச்சிட்டுப் பரீட்சை எழுதப் போயிருக்கேன். அந்தளவுக்கு நாங்க விவசாய வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். நாங்க சின்னப் புள்ளையா இருக்கும்போது முந்திரி சாம்பார், முந்திரி ரசம்னு சாப்பாட்டுக்கு அதிகமா முந்திரி சேர்த்துக் கிட்டோம். அந்த அளவுக்கு எங்க குடும்பத்துல முக்கிய இடம் பிடிச்சது முந்திரி. ஆசிரியர் பணி செஞ்சாலும் இப்போ வரைக்கும் விவசாயத்தை விடாம செஞ்சுகிட்டு இருக்கேன். எங்களுக்குச் சொந்தமா 3 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல முந்திரி காய்ப்புல இருக்குது. ஊடுபயிராக உளுந்து போட்டு இப்போதான் அறுவடையை முடிச்சிருக்கேன்” எனச் சொன்னவர், முந்திரி வருமானம் பற்றிப் பேசத் தொடங்கினார்.

முந்திரி அறுவடை
முந்திரி அறுவடை



“இந்த 3 ஏக்கர் நிலத்துல 120 முந்திரி மரங்கள் இருக்கு. காய்ப்புக்கு வந்து 3 வருஷம் ஆகுது. இதுல போன வருஷம் 850 கிலோ முந்திரி கிடைச்சது. ஆசிரியர் பணியையும் பார்த்துக்கிட்டு விவசாயத் தையும் கவனிக்கிறது சிரமம்தான். இருந்தாலும் சாகுபடிக்குத் தண்ணீர் இல்லாம மழையை மட்டும் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கிறது அதைவிட சிரமமா இருக்கு. போன வருஷம் கிடைச்ச 850 கிலோ முந்திரியை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்தேன். முந்திரி வியாபாரிகளே நேரடியா தோட்டத்துக்கு வந்து வாங்கிட்டுப் போயிடுறதுனால சந்தைப்படுத்துறது எனக்கு எளிமையா இருக்குது. 850 கிலோ முந்திரி விற்பனை மூலமா 85,000 ரூபாய் வருமானமாக் கிடைச்சது. இதுல ஊடுபயிரா போட்ட உளுந்து 650 கிலோ மகசூல் கிடைச்சது. அதை ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்றதுல 52,000 வருமானம் கிடைச்சது. ஆக மொத்தம் 1,37,000 ரூபாய் வருமானமாகக் கிடைச்சது. இதுல 57,000 ரூபாய் செலவுபோக மீதம் 80,000 ரூபாய் லாபமாக் கிடைச்சிருக்கு’’ என்றவர் நிறைவாக,

செலவு- வரவு
செலவு- வரவு



‘‘நிலத்துல போர் போட்டு ஒரு மாசம்தான் ஆகுது. இனி வரும் காலத்துல முந்திரி மரங்களுக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன். அதுல இதைவிட மூணு மடங்கு அதிக மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். அதே நேரத்துல வருஷத்துக்கு மூணு தடவை அறுவடை செய்யலாம். உழவு, முந்திரிக்கன்று, நடவுக்கூலி இதெல்லாம் முதல் முறை மட்டும்தான் செலவு. அடுத்தடுத்தடுத்த வருஷங்கள்ல வெறும் பாராமரிப்பு மட்டும்தான் செலவு. அதுலயும், ஊடுபயிரா போடுறதுனால அந்த வருமானம், செலவை சமாளிச்சுக்கும். பெருசா எந்தவிதப் பராமரிப்பும் இல்லாம வருசத்துக்கு 80,000 ரூபாய் லாபம் கிடைச்சது எனக்கு மகிழ்ச்சிதான்” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு, ரவிச்சந்திரன்,

செல்போன்: 99439 04121.

இப்படித்தான் முந்திரிச் சாகுபடி

முந்திரிச் சாகுபடி குறித்து ரவிச்சந்திரன் சொல்லிய தகவல்கள், இங்கே பாடமாக இடம் பெறுகின்றன.
முந்திரிச் சாகுபடி செய்ய செம்மண், சரளை கலந்த செம்மண், மணல் சார்ந்த நிலம் ஏற்றது. இறவைப் பாசன சாகுபடியில் முந்திரியை நடவு செய்ய ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் ஏற்றவை. மானாவாரிச் சாகுபடியில் முந்திரியை நடவு செய்ய, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்கள் ஏற்றவை. எந்தப் பட்டத்தில் நடவு செய்ய இருக்கிறோமோ, அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, நிலத்தை ஒருவார இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, குழி எடுக்க வேண்டும். 2 அடி ஆழம் மற்றும் 2 அடிச் சுற்றளவில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கர் பரப்பில் அடர்நடவு முறையில் முந்திரிச் சாகுபடி செய்ய வேண்டும் என்றால் ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடைவெளி 17 அடி, ஒரு குழிக்கும் அடுத்தக் குழிக்குமான இடைவெளி 17 அடி இருக்க வேண்டும். முந்திரிக்குள் ஊடுபயிர் சாகுபடி செய்ய நினைத்தால், வரிசைகளின் இடைவெளி மற்றும் குழிகளின் இடைவெளி 25 அடி என்ற கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அறுவடைக்கு தயாரான முந்திரி
அறுவடைக்கு தயாரான முந்திரி

ஒவ்வொரு குழிக்குள்ளும் 20 கிலோ தொழுவுரம் போட வேண்டும். 10 நாள்களுக்கு ஒரு முறை மண்ணையும் தொழுவுரத்தையும் மண்வெட்டியால் நன்கு கலந்து விட வேண்டும். ஒரு மாதத்தில் இப்படி 3 முறை மண்ணையும் தொழுவுரத்தையும் கலக்கி விட வேண்டும். இப்படிச் செய்து வந்தால் தொழுவுரத்தின் வெப்பம் தணியும். பிறகு, கன்று நடவு செய்யலாம். முந்திரிக்கு ஊடுபயிராக உளுந்து, கடலை, கேழ்வரகு, தினை, கம்பு, சோளம் ஏற்றவை. 6 முதல் 8 மாதங்கள் வரையுள்ள கன்றுகளை நடவு செய்யத் தேர்வு செய்ய வேண்டும். கன்று நட்டதிலிருந்து ஒரு மாதம் வரை வாரம் ஒரு தண்ணீர் விட வேண்டும். பிறகு, 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டாலே போதுமானது. கன்று நட்ட 15-ம் நாள், ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தம் விட்டால் போதும். 20 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யாவைக் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

முந்திரி
முந்திரி

கன்று நடவு செய்ததில் இருந்து 10-ம் மாதத்தில் குருத்து தென்படும். இந்த நேரத்தில் முந்திரியை ஒரு குழந்தையைக் கண்காணிப்பதுபோல கண்காணிக்க வேண்டும். குருத்துத் தென்படும் நேரத்தில் முந்திரி மர குருத்தின் நுனி லேசாகக் கருகி இருந்தாலோ, பிசின் போல் பருவெடித்து இருந்தாலோ முந்திரியில் பச்சைநிறச் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்கியிருக்கிறது எனத் தெரிந்துகொள்ளலாம். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 250 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டியைக் கலந்து, கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். பூப்பூக்கும் நேரத்தில் பூவைக் கையில் பிடித்து இன்னொரு கையில் தட்டினால், பூக் கொத்துக்குள் சிவப்பு நிற வண்டு பறப்பதைப் பார்க்கலாம். அந்தத் தாக்குதலைக் கட்டுப்படுத்த, பூச்சிவிரட்டியை 20 நாள்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும்.

அறுவடையான முந்திரிக் கொட்டைகள்
அறுவடையான முந்திரிக் கொட்டைகள்

முந்திரி ஆண்டுக்கு மூன்று முறை காய்க்கும். தென்பகுதி முதலில் காய்ப்புக்கு வரும். மரத்தின் மேல்பகுதி இரண்டாவது காய்ப்புக்கு வரும், மரத்தின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி மூன்றாவது காய்ப்புக்கு வரும். மரத்தை அசைத்துப் பழம் பறிக்கக் கூடாது. இதில், பழத்துடன் பூவும், பிஞ்சும் உதிரும். அதனால் பழுத்து தானாகக் கீழே விழுந்த பழத்தை எடுக்கலாம். கன்று நட்டதில் இருந்து ஓர் ஆண்டுக்குப் பிறகு பழங்ளைப் பறிக்க ஆரம்பிக்கலாம். அப்போது ஒரு கன்றுக்கு அரைக்கிலோ வீதமும், இரண்டாவது வருடத்தில் 3 முதல் 5 கிலோ வரையிலும், 3-வது வருடம் 8 முதல் 12 கிலோ வரையிலும், 4-வது ஆண்டு முதல் மகசூல் அதிகரிக்க ஆரம்பிக்கும்.

நாட்டு ரக முந்திரி மரத்தை முறையாகப் பராமரித்து வந்தால் தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். இதற்கு வயதுவரம்பு இல்லை. ஒட்டு ரகமாக இருந்தால் 15 ஆண்டுகள் வரை நல்ல மகசூல் எடுக்கலாம்.